Wednesday, 1 November 2017

கார் காலம் - நாவல்


14. அவனேதான் இவனே! இவனேதான் அவனே!!

ஆலின் இப்போது தினமும் மனவள நிலையத்திற்கு சிகிச்சைக்காகப் போய் வருகின்றாள். அதன் பிற்பாடு அவளது நடவடிக்கைகளில் சிறிது மாறுதல்கள் தென்பட்டன. உடல் சோர்வு, பலகீனம், டிப்ரஷன் என்பவற்றிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாள்.

"நான் ஓவர் டைம் செய்து விட்டு, லேட்டாக வீட்டுக்குப் போனால் பாட்னருக்கு கோபம் வருகிறது. என்னையே நெடுகலும் பார்த்துக் கொண்டு இருக்க வேணும் போல கிடக்கு என்கின்றார். இப்படியும் ஆக்கள் இருக்கின்றார்களா?" ஒருநாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென நந்தனிடம் இப்படிக் கேட்டாள் ஆலின்.

"யார் இந்தப் பாட்னர்? உவள் புதுக்கவொரு பாட்னரைப் பிடிச்சிட்டாள் போல" ஆச்சரியப்பட்டான் நந்தன்.

அவளின் கேள்விக்கு பதிலைச் சொல்லாமல், இதுதான் தருணம் என நினைத்து ஆலினிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினான் நந்தன்.

"ஏன் இன்னும் நீர் டென்ஞ்சர் போடேல்லை?"

"அவர்கள் இப்பொழுது எல்லாப் பற்களையும் புடுங்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்." முப்பத்தைந்து வயதிற்குள் கிழவியாகிப் போய் விட்டாள் அவள்.
"ஹெரோயின் எப்பிடி இருக்கும்? நீ எப்படி ஹெரோயினை எடுக்கிறாய்? ஊசியா? அல்லது புகைப்பதாலா?"

"சும்மா ஒரு வெள்ளைத்தூள், சிலவேளை மண்ணிறமாகவும் இருக்கும். இதைப்பற்றி எல்லாம் மறந்து கொண்டு வருகின்ற நேரத்தில், இப்ப போய் இதையேன் கேட்கின்றாய்?"

சும்மாதான் கேட்கின்றேன். போதைப் பொருட்களைப் பாவிக்கும்போது எப்படிப்பட்ட உணர்ச்சி வருகின்றது?

“உனக்குச் சொன்னால் என்ன! சிலவேளைகளில் யாரையாவது பிடிச்சுக் கொல்லவேணும் போலவும் இருக்கும் அவள் சொல்வதைக் கேட்டுப் பயந்துவிட்டான் நந்தன்.
"இன்னும் ஆறுமாதத்தில் கிறடிற் கார்ட் தருவோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். அதுக்குப் பிறகு வீட்டு லோன் எடுத்து வீடு ஒண்று கட்டப் போறன். அதுக்குப் பிறகு என்ரை பிள்ளையையும் கூட்டிக் கொண்டு வந்து வைச்சிருக்கப் போறன்."

தினமும் வேலைக்கு வரும்போது ரென்ஷனுடன் வருகின்றாள். 'போய் ஃபிரண்ட்' தினமும் தொந்தரவு தருகின்றான் என்று தனக்குத் தெரிந்தவர்களிடம் முறைப்பாடு செய்தாள்.

"அப்படியெண்டால் அவனை 'வெட்டி விடு' " என்றான் நந்தன்.

"அப்படிச் செய்ய முடியாது. அவனைத் துரத்த முடியாது. ஏனென்றால் அவன்தானே மாயாவின் அப்பா!"

நந்தனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நந்தனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவளிற்கு மனநோய் முற்றி விட்டதோ என்ற ஐயம் உண்டானது.

"அப்படியெண்டா அவனா உனது முதல் கணவன்?"

"ஆமாம்!"

"அப்படியெண்டா உன்னை வேண்டாம் என்றுவிட்டுப் போனவனா இவன்?"

"அவனேதான். இப்போது நோயாளியாகி திரும்ப வந்திருக்கின்றான், பாவம் அவன்."

"அப்படியெண்டா உன்னுடைய முதல் கணவன் இப்போது போய் ஃபிரண்ட்?"

"யெஸ் கரெக்ட்"

"அவன் என்ன வேலை செய்கின்றான்?"

"ஒன்றுமில்லை. அவனால் ஒன்றும் செய்ய முடியாது. நோயாளி ஆகிவிட்டான். நானே அவனுக்கு இப்ப எல்லாம். என் குழந்தையின் அப்பா உயிரோடு இருக்கின்றான். ஆனால் உரத்தோடு இப்ப இல்லை!

"உனக்கு எவ்வளவு பட்டும் புத்தி வரவில்லை. அவனை வைச்சிராதே! உன் கனவுகள் எல்லாம் குழம்பிப் போகும்" நந்தன் சலித்துக் கொண்டான்.
இதென்ன உலகம்!

ஒரு பெண்ணின் அடி ஆழத்தில் இருக்கின்ற ரகசியங்கள் ஒருபோதும் வெளிவருவதில்லை. அவற்றைப் பேர்சனல் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கின்றார்கள் அவர்கள்.

நான் உழைக்க வேண்டும். ஒரு புறம் மகள்; இன்னொரு புறம் மகளின் தந்தை. நான் உழைத்தே ஆக வேண்டும்என்றாள் ஆலின்.

எவ்வளவுதான் வாழ்க்கையில் நாம் அவதானமாக இருந்த போதும், சிலவேளைகளில் நம்மையும் அறியாமல் சில நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.

ஆலினும் சிறுவயதில் அவதானமாகத்தானே இருந்திருப்பாள்.



இன்னும் வரும் ...

No comments:

Post a Comment