Friday, 1 December 2017

கார் காலம் - நாவல்

 அதிகாரம் 17 - மூடுவிழா

கார் காலம் ஆரம்பமாகிவிட்டது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து மொட்டையாகின. தெருக்கள் எங்கும் சருகுகள் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டன. வானம் எப்பொழுதும் இருண்டபடி முகில் கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது. அடிக்கடி மழை வேறு பொழிந்தது.

ஹெவினின் மனைவி இருதய வால்வு ஒப்பரேஷன் செய்து வைத்தியசாலையில் இருந்தாள். இது அவளிற்கு இரண்டாவது ஒப்பரேஷன். அந்த நாட்களில் வேலை இழந்ததும் மனைவியின் சுகவீனமுமாகச் சேர்ந்து ஹெவினின் மன்நிலையை இறுக்கமடையச் செய்தது. சிலநாட்கள் கழித்து ஆலினை பிறைய்ரன் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்திருந்தார். ஹெவினுக்கு நான்கு இலட்சங்கள் வழங்கிய நிர்வாகம் ஆலினுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. ஒழுங்காக வேலைக்கு வராமை, தொழிற்சாலை லீஸ் காரை பலமுறை விபத்துக்குள்ளாக்கியமை போன்ற பல்வேறு காரணங்களை இதற்கு முன்வைத்திருந்தது நிர்வாகம்.

 ஹெவின் பிரைய்ரன் என்ற  இட்த்திலிருந்துதான் வேலைக்கு வந்து சென்றவர். அது தொழிற்சாலைக்கு மிகவும் தூரத்தில் இருந்தது. ஆலின் குறிப்பிட்ட நாளில் ஹோட்டலிற்குச் சென்றிருந்தாள். கணிசமானதொரு தொகை பணத்தை ஹெவின் அவளிற்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதுவே அவர்களின் கடைசிச் சந்திப்பாக இருந்தது. அப்போது ஆலினுடன் இன்னுமொரு ஆடவனும் அங்கே போயிருந்தான். அவன் காரிற்குள் ஒழித்து இருந்தான். அவன் அவளது முதல் கணவன் தான். மாயாவின் அப்பா.

அந்த நிகழ்ச்சியின் பின்னர் ஹெவின் தனது மனைவியுடன் தனது எஞ்சிய காலத்த நிம்மதியாகக் கழித்தார்.

ஆலின் அவர் கொடுத்த காசு கரையும் மட்டும் கும்மாளம் அடித்தாள்.

பெளசரின் வெற்றிடத்தை நிரப்ப உடனடியாக நேர்முகப்பரீட்சை வைத்து எடுத்தார்கள். இன்னொரு குறூப்பிலிருந்து ஒரு ரீம் மெம்பர், ரீம் லீடராகப் பதவி உயர்வு பெற்று வந்தான். ஹெவினின் இடம் பல மாதங்களாக நிரப்பப் படாமல் இருந்தது. பின்னர் அதற்கும் நேர்முகத்தேர்வு நடந்தபோது, பலத்த போட்டியின் மத்தியில் நந்தன் குறூப் லீடராகத் தெரிவு செய்யப்பட்டான். முதன்முதலாக ஒரு தமிழன் தொழிற்சாலையில் குறூப் லீடராகத் தெரிவு செய்யப்பட்ட சரித்திரம் அது. நந்தனின் இடத்திற்கு ஃபுங் வந்தாள்.

அவுஸ்திரேலியாவில் கார்த் தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இதனையும் மூடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நிர்வாகத்தினர் தள்ளப்பட்டிருந்தார்கள். உலகச் சந்தையில் காரின் விலை வீழ்ச்சி, காரை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைந்தமை, உலகச் சந்தையில் அவுஸ்திரேலியா நாணயத்தின் பெறுமதி உயர்ந்தமை, ஊழியர்களின் உயர்ந்த சம்பளம் போனற பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக இருந்தன. அவுஸ்திரேலியாவில் கார் உற்பத்தி ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது. இனிமேல் கார்த் தொழிற்சாலை என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.


கார்த் தொழிற்சாலைகளுடன் அதற்கு உதிரிப்பாகங்கள் செய்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளையும் மூட வேண்டி வந்தது. கொமடோர், ஹம்ரி, ஃபோர்ட் பல்கன் போன்ற கார்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களில் ஐம்பது சதவிகித்த்திற்கு மேலானவை இங்கேயே செய்யப்படுகின்றன. அதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது வேலைகளை இழக்கவேண்டி வந்தது. அவுஸ்திரேலியாவின் கடைசிக் கார் உற்பத்தி 2017 என முடிவு செய்யப்பட்டுவிட்டது.
●●

தொழிற்சாலையை இழுத்து மூடுவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தன. ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. வீட்டுக்கடன்,  பிள்ளைகளின் படிப்பு, புதிய வேலை தேடுதல். இளையவருக்கு வேலை இலகுவில் கிடைத்துவிடும், ஐம்பதைத் தாண்டியவர்களுக்கு கஷ்டம்தான்.

அதைவிட இன்னுமொரு பிரச்சினை சிலருக்கு –

|வீட்டிலே குடும்பம் மனைவி/புருஷன் பிள்ளைகள் குட்டிகளை வைத்துக் கொண்டு, இங்கே கள்ளக்காதல் புரிந்து சரசமாடுபவர்களுக்கு ஒரு சங்கடமான பிரச்சினை.|

மீண்டும் எங்கே சந்திப்பது? திரும்பவும் ஒரே இடத்தில் வேலை கிடைக்குமா?

“தொழிற்சாலையை மூடியதும் நீ என்ன செய்யப் போகின்றாய்?என்று ஃபுங்கிடம் கேட்டான் நந்தன்.

நான் ஏற்கனவே பகுதி நேரமாக ஹெயர்றெஷிங் படித்து வருகின்றேன். படித்து முடிந்ததும் வீட்டோடை beauty parlour வைக்கப் போகின்றேன். உனக்கும் தலைமயிர் வெட்டி விடுவேன்.

“ஒவ்வொரு கிழமையும் வருவேன். பரவாயில்லையா?

“வாழ்நாள் பூராவும் வெட்டிவிடுவேன். மொட்டந்தலைக்கும் எப்படி வெட்டுவது என்று படித்திருக்கின்றேன்.

அவளே சொல்லிவிட்டாள். பிறகென்ன?
●●●

அதன் பின்னர் தானாக முன் வந்து வேலையிலிருந்து விலகுபவர்களை voluntary package விலகச் சொன்னார்கள். வயது போனவர்கள் சிலர் வீட்டுக்குப் போனார்கள். அவர்கள் விலகும்போது விருந்து வைத்தார்கள்.  அவர்களில் கிறீக் நாட்டைச் சேர்ந்த ஜானி என்பவன், முப்பத்தைந்து வருடங்கள் வேலை செய்திருந்தான். எழுபத்தைந்து வயதிலும் ஐம்பதின் தோற்றத்தைக் கொண்டிருப்பான். அழகன், சுறுப்பாக வேலை செய்வான். அவனுக்கு எழுபத்தைந்து வயது என்றால் படைத்த பிரம்மனும் நம்பமாட்டான்.

அவன் ஒரு Panel beater. கத்தி கரண்டி கம்பி பூமராங் போன்ற பல ஆயுதங்களை ஒரு பையிற்குள் கொண்டு திரிவான். அவற்றை வைத்துக் கொண்டு தனது கைத்திறனைக் காட்டுவான். அவனது தொழிலுக்கு நெளிவு சுழிவுகள் தேவை. என்ன ஒரு கெட்ட பழக்கம் அடித்து நொருக்க வேண்டிய இடத்தை எச்சில் போட்டு தனது கையினால் துடைத்துப் பார்ப்பான். அந்தக் கையாலே இனிப்பு சொக்கிளேற் கொடுப்பான். அங்கு வேலை செய்யும் பெண்களே அந்த அதிட்டத்திற்கு உள்ளாவார்கள். பெண்களைத் தேடித் தேடி இனிப்பு வழங்குவான். அழகிலும் ஒரு அருவருப்பு இருக்கலாம் என்பதற்கு அவன் ஒரு உதாரணம்.

ஒருநாள் எல்லாரும் நினைத்துப் பார்த்திருக்காத வேளையில் இரவு எட்டு மணியளவில் ஜானி வேலைத்தலத்திற்கு வந்தான். வேலையை விட்டு நீங்கியவர்களில் அவன் ஒருவந்தான் திரும்பவும் வேலை செய்யுமிடம் வந்து எல்லோரையும் நலம் விசாரித்தான். அதற்கு அவனுக்கு மேலிடத்தில் செல்வாக்கு இருந்ததும் ஒரு காரணம். காணும் பெண்களையெல்லாம் வயது வித்தியாசம் பாராது கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தான். மற்றவர்களுக்கு கைலாகு கொடுத்தான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை.

“என் முகத்தில் அவன் பொசுக்கென்று தந்த முத்தம், ஈரம் கலையாமல் அரைமணி நேரம் கிடந்தது. ‘எபோலாவோ தெரியாதுஎன்று சொல்லிச் சிரித்தாள் புங். அதன்பின்பு அரைமணி நேரம் வரை தொழிற்சாலை எங்கும் சுற்றித் திரிந்தான்.

அந்த நிகழ்வு நடந்து இரு வாரங்களில் – வீட்டில் படுக்கையில் இறந்து கிடந்தான் ஜானி. இயற்கை மரணம். அடல்ற் டெத். தொடர்ந்து வேலை செய்த ஒருவன் வேலையிலிருந்து நீங்கியபோது – கவலை, தனிமை, சோர்வு, உடற்பயிற்சி இன்மை போன்ற காரணங்களால் இறப்பு ஏற்பட்டிருக்கலாம். ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தை சடுதியாக நிற்பாட்டும் போது என்ன விளைவுகள் ஏற்படுமோ அப்படித்தான்.

அறுபத்தெட்டு வயதிலேயே ஓய்வு எடுத்துவிட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க் கழித்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டார்கள் சிலர். எதுவுமே சொல்வதற்கில்லை.

●●●●

இன்னும் வரும் ...

No comments:

Post a Comment