Sunday, 22 April 2018

கங்காருப் பாய்ச்சல்கள் (28)


மின் இணைப்பு

அவன் அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தான். வீட்டின் முன்புறத்தில் ஒருவர் கார் கழுவிக் கொண்டிருந்தார்.

|பெரியவரே, நீங்கள் எந்தக் கம்பனியின் மின் இணைப்பைப் பாவிக்கின்றீர்கள்?|

ஈரம் சொட்ட நின்ற அந்த வீட்டு மனிதர், அந்தப் பையனை நிமிர்ந்து பார்த்தார். தோளிலே ஒரு சீலைப்பை. கையில் ஒரு ஃபைல்.

|அதை நான் உனக்கு சொல்லப் போவதில்லை.| மூச்சிரைக்கச் சொன்னார் அவர். கார் கழுவுதல் என்பது இலகுவான வேலையல்ல. தனது வேலைக்கு இடையூறு தருகின்றானே என்பது அவர் கோபம்.

|எல்லா வழங்குனர்களையும்விட உங்களுக்கு மிகவும் குறைவான விலையில் நாம் தருவோம்.|

|கெதியிலை இந்த இடத்தை விட்டுப் போய்விடு. எனக்கும் உனக்கும் சண்டை வரப்போகுது.|

|நீங்கள் எங்களுடன் 2 வருடங்கள் contract sign பண்ணினால், 50$கள் இலவசமாகத் தருவோம்.|

|அது சரி… நீங்கள் இரண்டு மாதத்திலை rate ஐக் கூட்டுவியள். தாற 50 டொலரையும் இரண்டு வருஷத்திற்கு பிச்சுப் பிச்சுத் தருவியள். மாதத்துக்கு 2 டொலர் வரும். அதுவும் ரக்‌ஸ் போக ஒண்டரை டொலராகும்.|

|ஓம் எண்டு சொன்னீர்கள் என்றால் பத்து நிமிடங்களிலை படிவங்களை நிரப்பிவிடலாம்.|

|எனக்கு படிவங்களை வாசிக்கவே அரை மணித்தியாலம் போதாது. என்ரை நேரத்தை வீணாக்காமல் இந்த இடத்தைவிட்டுப் போய்விடும் தம்பி.|

|எல்லாரும் உப்பிடி சொன்னா நாங்கள் என்ன செய்யிறது? தொழிலை ஆரம்பிக்கிறதுக்கு இப்பிடித்தானே இஞ்சை தொடங்கவேண்டிக் கிடக்கு.|

|தம்பி ஒருநாளைக்கு உமக்கு எவ்வளவு கிடைக்கும்?|

|75$. அதைவிட சேர்த்துக் கொடுக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 10$ கூடுதலாகக் கிடைக்கும்.|

அந்த மனிதர் அவசர அவசரமாக ஈரம் சொட்டும் கால்களுடன் வீட்டிற்குள் சென்றார்.

“இந்தாரும் பிடியும் இருபது டொலர்கள். இடத்தை விட்டுக் காலி பண்ணும்” அவனுடைய கைகளுக்குள் காசைத் திணித்தபடியே!

1 comment:

  1. அருமையான கதை
    தொடருங்கள்

    ReplyDelete