Friday, 20 July 2018

ஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்

 

அண்டனூர் சுரா எழுதிய ‘முத்தன் பள்ளம்’ நாவலை முன்வைத்து.

’மேன்மை’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட அண்டனூர் சுரா (சு.ராஜமாணிக்கம்) எழுதியிருக்கின்றார். நாவலுக்குள் நுழைவதற்கு முன்னர், அதன் சமர்ப்பணத்தை ஒரு தடவை பார்த்து விடுவோம்.

‘முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கு ஒழுகாத கூரை, பருவப்பெண்களுக்கேனும் ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்கு பட்டா, அங்காடி, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துபோக ஒரு பொதுவழிப்பாதை, ஓர் அச்சமுமில்லாமல் பெண் எடுத்தல் – கொடுத்தல், மழைக்காலங்களில் கூரைத்தண்ணீர் ஒழுகியோட விலைக்கேனும் ஒரு சாண்நிலம், வெயில் காலங்களுக்கு ஓர் ஒட்டகம், மழைக்கு பரிசல், வாழும் சந்ததியினருக்கு குறைந்தபட்ச மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம் இவற்றில் ஒன்றேனும் இக்கிராம மக்களுக்குக் கிடைக்க யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின் அவரது திருவடிக்கு….!’

சமர்ப்பணம் இப்படியென்றால், இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய நாஞ்சில் நாடன் இன்னும் ஒருபடி மேலே போய் – ‘அந்த ஒருவரின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் திருநீறாகவோ திருமண்ணாகவோ அணிய நாமும் சித்தமாக இருப்போம்’ என்கின்றார்.

கே.பாலசந்தரின் திரைப்படங்களில் எழுத்தோட்டம் பகுதியில் - இவர்களுடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் ரெலிபோன், மூக்குகண்ணாடி…. என்று வருவதுபோல் - இங்கே கதைசொல்லியுடன் முதன்மைப்படுவது ஸ்மாற்போன் மற்றும் சில சிலைகள், பல ‘பதாகைகள்’.
சாண்டில்யன் நாவல்கள் போல், இந்திராகாந்தி மகாத்மாகாந்தி அம்பேத்கர் சிலைகளையும் – கந்தர்வகோட்டை காந்திசிலை முக்கம் பகுதியையும் நம் முன்னே கொண்டுவருவதற்கு எத்தனையோ பக்கங்களை – அதுவும் ஆரம்பத்திலேயே – ஒதுக்கிவிடுகின்றார் ஆசிரியர். ஆனாலும் எள்ளல் நிறைந்த ஆசிரியரின் நடை, நம்மை வேகமாக அந்தப் பக்கங்களைத் தாண்ட வைக்கின்றது.

போக்கிமான், காந்திசிலை முக்கத்திலிருந்து புறப்படுகின்றது. காந்திசிலை முக்கம் என்பது புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்ச்சாலைகளின் முச்சந்தி. அதிலிருந்துதான் கதைசொல்லி போக்கிமான் கோ விளையாட்டை விளையாட ஆரம்பிக்கின்றார். கூகிள்வரைபடம் போக்கிமான்பூச்சி இருக்கும் திசையைக் காண்பிக்கின்றது. போக்கிமான் பூச்சியைத்தேடி - கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, வேலாடிப்பட்டி, அண்டனூர், வெள்ளாளவிடுதி, வலச்சேரிப்பட்டி, கல்லாகோட்டை, அம்புக்கோயில் எனப் பல ஊர்களினூடு பிரயாணம் செய்கின்றார் கதைசொல்லி.

இந்த நாவல் இரண்டுபகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. முதலாம்பாகம் போக்கிமான் பொம்மை ‘முத்தன் பள்ளம்’ பகுதியைச் சென்றடையும்வரை சொல்கின்றது. கதைசொல்லியை வழிநடத்துவது போக்கிமான் என்றால், கூடவே பாட்டுப்பாடி நடனமாடும் தாரகைகளாகப் பலவிதப் பதாகைகள். சிலைகளையும் சாலைகளையும் மூடிநிற்கும் அவை பல ஆயிரம் கதைகளைச் சொல்லிச் செல்கின்றன.

முத்தன்பள்ளத்திற்குப் போகும் பாதை – மாட்டுவண்டில் தடம், ஒற்றையைப்பாதை, மேடு, பள்ளம், குழி, புதர், காடு, குளம், குட்டை என பதினெட்டாம் நூற்றாண்டை நினைவுபடுத்தும். ஒரு ஏரியின் மறுகரையில் முத்தன்பள்ளம். மழைக்கு அந்த இடம் ஏரி, வெய்யிலுலுக்கு பாளம் பாளமாக வெடித்துப்போன பாலைவனம்.

பிள்ளைகள் சேற்றுச்சகதிக்குள் முக்குளித்து பள்ளிக்கூடம் போகும் காட்சியும், பாம்புக்கடிக்கு ஆளாகும் மனிதர்களை மந்திரிப்பதற்காக (கவனிக்க : மருத்துவத்திற்கு அல்ல) ஒரு கட்டிலின் மேல் போட்டு பதகளித்தபடி தண்ணீருக்குமேலால் தூக்கிச் செல்லும் காட்சியும் நெஞ்சைப் பதற வைப்பவை. முத்தன்பள்ளத்தில் அங்காடி, பெட்டிக்கடை, வீடுகளுக்கு கழிப்பறை, ஆண்களுக்கு மேலாடை இல்லை. பெண்கள் தலைவிரி கோலம்.

கதை, முத்தரையர்கள் என்னும் இனக்குழுமத்தைப் பற்றியது. அரையர் என்றால் நாடாள்வோர். முத்துக்களைக் கொண்டு நாட்டை ஆண்டதால் முத்தரையர் ஆயினர். முத்தரையர்களின் தலைமையிடம் நியமம் என்கின்ற கிராமம். இவர்களில் 35 இனக்குழுக்கள் இருந்திருக்கின்றார்கள். முத்தரையர்களின் ஆட்சிக்காலம், அதன்பின்னர் பாண்டியர்/முத்தரையர் கூட்டுக்கும் பல்லவர்/விசயாலயன் கூட்டுக்குமிடையேயான போர், போரில் தோல்வியுற்று முத்தரையர் சிதறுண்டு போன வரலாறு என விரிகின்றது நாவல்.

’தோப்பவிடுதி’ ஊர்த்தலை, வயற்காடுகளை காவல் காக்க முத்தன் என்பவரை இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் குடிவைக்கின்றார். முத்தனைப் போல அவனது மகன் பாட்டனும் ஊர்த்தலைக்கு எடுபிடி வேலை செய்கின்றான். ஒரு தடவை காட்டினூடு பயணிக்கையில் ஊர்தலைமீது பாயும் நரியிடமிருந்து அவரைக் காப்பாற்றி தோள்மீது தூக்கிச் செல்கின்றான் பாட்டன். அதுமுதற்கொண்டு பாட்டன் மீது ஊர்த்தலைக்கு தீராத பிரியம் ஏற்படுகின்றது. ஆனால் ஊர்க்காரர்களுக்கு பாட்டனுடன் ஒத்துவரவில்லை.

ஊர்த்தலை இறந்ததன் பிற்பாடு, அவரின் பேரன் மூலமாக பாட்டனை வெளியேற்றுகின்றார்கள் ஊர்மக்கள். ஊர்த்தலையின் பேரன் கோயில் திருவிழாவிற்கு சிலோனிலிருந்து அம்மாவுடன் வந்திருந்ததாகச் செய்தியொன்றும் பகிரப்பட்டுள்ளது. ஊரைவிட்டு வெளியேறிய பாட்டன் தனது அண்ணனின் வீட்டிற்கு வருகின்றான். வாழ்ந்த ஊரையும் குலதெய்வத்தையும் விட்டு வந்ததில் அண்ணனுக்கு உடன்பாடு இல்லை. கவலையுடன் அங்கிருந்தும் வெளியேறுகின்றான் பாட்டன். கால்போன போக்கில் போகும்போது வழியில் ஒர் குடிசை. அங்கிருந்த பெண் முத்தாயியிடம் தாகத்திற்கு நீர் வேண்டிக் குடிக்கின்றான். தாகம் தணிந்ததும் சோறு. பசி அடங்கியதும் உறக்கம். அப்புறம் பாட்டனுக்கும் முத்தாயிக்கும் இடையே காதல். கடைசியில் ஊடலும் முடிய முத்தாயியிடம் சொல்லிக்கொள்ளாமலே புறப்பட்டுவிடுகின்றான் பாட்டன்.

சிறிது காலத்தின் பின்னர் பாட்டன் முத்தாயியை திருமணம் செய்துகொள்கின்றான். அவர்களுக்கு நான்கு மகன்மார்கள்.  அவர்கள் வாழ்ந்த இடம் தான் இந்நாளில் முத்தன் பள்ளம். இன்று அவர்களின் வழித்தோன்றல்களாக இருபது குடும்பங்கள் வரையில் அங்கே வாழ்ந்து வருகின்றார்கள்.

இடையில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு அதிபதியான ராஜ மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் பற்றிய கிளைக்கதை. இவர் தான் பாட்டனுக்கு நூறு குடியையும், அவர்கள் வாழ்ந்துவந்த நிலப்பகுதியையும் பட்டயமாக எழுதிக் குடுத்தவர். அந்தப் பட்டயத்தை பாதுகாப்பாக வைக்கத் தெரியாமல் பாட்டன் ஒரு ஜமீனுடன் குடுத்து ஏமாந்தது ஒரு துயரக்கதை. இப்படியாகக் கதை நகர்கின்றது.

அதுசரி! போக்கிமான்பூச்சி எங்கே ஒளிந்திருந்தது என்று சொல்லவில்லையே? அதையும் சொன்னால் உங்களுக்கு சிரிப்பு வரும், இல்லாமல் மனம் நொந்தால் அழுகை வரும். அப்புறம் ‘முத்தன்பள்ளம்’ இன்னும் அம்மணமாகிவிடும்.

சில வருடங்களுக்கு முன்னர் போக்கிமான் விளையாடிய ஒரு பெண்மணி தன்னை மறந்து, தனது வீட்டிலிருந்து தொலைதூரம் போய் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டு, இறங்குவதற்கு தத்தளித்தார் எனப் பத்திரிகையில் படித்திருந்தேன். இங்கே முத்தன்பள்ளத்திற்குள் நாம் புகுந்து வெளியே வரமுடியாமல் அல்லாடுகின்றோம்.

No comments:

Post a Comment