Friday 24 May 2019

விழுதல் என்பது எழுகையே (2)


தவம் அகதி முகாமை விட்டுபோய் மூன்றாம் நாள்---ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் வந்திருந்தார். சீலனை தான் இருக்கும் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். போகும் வழியில் மீண்டும் அம்மாவுடன் சீலன் கதைத்தான். அடுத்தமுறை ரெலிபோன் கதைக்க வரும்போது தங்கைச்சியையும் கூட்டி வரும்படி சொன்னான். கலாவின் மீதான காதல் தங்கைச்சிக்குத் தெரிந்தே இருந்தது. அம்மாவிற்குத் தெரிந்திருந்தால் எப்போதே கொன்று போட்டிருப்பார்.

தவம் இருக்கும் வீடு ஐந்து நிமிட பஸ் ஓட்டத்தில் இருந்தது. பஸ்சில் போய் வருவதற்கான வழிமுறைகளை தவம் சீலனுக்குக் கற்றுக் கொடுத்தார். கலாவைப்பற்றி சீலனிடம் எதுவும் பேசவில்லை. ஏதாவது தெரிந்தால் அவனாகவே சொல்லுவான் என்பது தவத்திற்குத் தெரியும்.

”எப்ப பாத்தாலும் ஒரே கேள்வி ஒரே பதில். சொல்லிச் சொல்லியே வாழ்க்கை சலிச்சுப் போச்சு. காம்ப் வாழ்க்கை கழிஞ்சதே பெரிய கண்டம் கழிஞ்சமாதிரி. இப்பதான் சுவிஸ் நீரோட்டத்திலை கலந்திருக்கிறன். றெஸ்ற்ரோறண்ட் ஒண்டிலை வேலை கிடைச்சிருக்கு. கொஞ்சம் தூரம்தான். தூரத்தைப் பாத்தா ஒண்டும் செய்யேலாது. பத்து மணித்தியால வேலை” சொல்லிக் கொண்டே விசுக்கு விசுக்கென்று நடந்தார் தவம். பச்சைப் புல்வெளியையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடியே அவரின் பின்னால் விரைந்தான் சீலன்.

“வேலைக்குப் போன இடத்திலைதான் உன்னைப் போல ஒரு நண்பன் கிடைச்சான். சின்னப் பெடியன்தான். இப்ப அவன்ரை வீட்டிலைதான் இருக்கிறன். அவன்ரை அப்பாவும் தங்கைச்சியும் அங்கை கூட இருக்கினம்.”
”அண்ணை... ஏன் அண்ணை என்னைக் காணேக்கை சில பள்ளிக்கூடப் பிள்ளையள் ஆட்டுக்குட்டி மாதிரிக் கத்துறவை?”

“அதையேன் கேட்குறாய்... எங்களைப்போல வந்த பெடியன்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து ஆடு ஒண்டை களவாப்பிடிச்சு, ரெலிபோன் கதைக்கிற இட்த்துக்கிட்ட வைச்சு வெட்டி இறைச்சியைக் கொண்டு வந்து பிறிச்சுக்கை வைச்சிட்டு கம்முன்னு இருந்திட்டாங்கள். நாங்கள் நினைக்கிறது நாங்கள்தான் வலு கெட்டிக்காரர் எண்டு. பிறகு சுவிஸ் பொலிஸ் வந்து ஆக்களை அப்பிப் போட்டான்கள்.”

வீட்டிற்குச் சென்று சப்பாத்துக்களைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது, வீட்டோடு சேர்ந்திருந்த டெக் ஒன்றினுள் இருந்த மனிதர் ஒருவர் கை தட்டி அங்கே வரும்படி கூப்பிட்டார்.

“அங்கிள்... அங்கிள்... வரச்சொல்லிக் கூப்பிடுகிறார். என்ரை ஃபிறண்டின்ரை அப்பா...” தவம் சொல்லிக் கொண்டே மேலுக்கு ஏறத் தொடங்கினார்.

“தவம்... சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வாரும். தம்பிக்கும் எடுத்துக்கொண்டு வாரும். தம்பி.... நீர் இஞ்சை வாரும். தவம் எல்லாம் உம்மைப்பற்றிச் சொல்லிப் போட்டான். என்ரை பெயர் ராமலிங்கம். உம்முடைய பெயர் சீலன்.”

தொடக்கமே சீலனுக்கு கலகலப்பாக இருந்தது. தவத்திற்கு ஏற்ற ஆள்தான் அவர் என்று முடிவெடுத்தான் சீலன். வயது அறுபது மட்டிடலாம். அவருக்குப் பக்கத்தில் சாப்பாட்டுக் கோப்பை, பாதி காலியான ’சுவாஸ் ரீகல்’ போத்தல், ஒரு றேடியோப்பெட்டி. சீலன் அங்கிருந்த இருக்கையில் அமரும் முன்னே கதையைத் தொடங்கிவிட்டார் அவர். அரசியல், இனக்கலவரம், போர், இயக்கம், வதைகள், கொலைகள்...

“அப்பா.... இப்பதான் அவர் வந்திருக்கிறார். அதுக்கிடையிலை அவரைப் போட்டு அறுக்காதையுங்கோ!” கதவைத் திறந்து எட்டிப் பார்த்துச் சொன்னாள் ஒரு சின்னப்பெண்.

“உவள் என்ரை கடைசிப்பிள்ளை. வேலை செய்துகொண்டு இப்ப கொம்பியூட்டரும் படிக்கிறாள். கெதியிலை கலியாணம் நடக்கப் போகுது. மாப்பிள்ளை ஒரு டொக்ரர் பெடியன். மகன் உதிலை பிள்ளையின்ரை கலியாண அலுவலாத்தான் போயிருக்கிறான். வந்திடுவான். எனக்குக் கொஞ்சம் மறதிக்குணம். இப்பவே சொல்லிப்போட்டன். தவத்தோடை நீரும் கலியாணவீட்டுக்கு வாறீர், என்யொய் (Enjoy) பண்ணிறீர்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே தவம் இரண்டு பிளேற்றுகளில் சாப்பாட்டைப் போட்டு எடுத்து வந்துகொண்டிருந்தார். மகள் தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனாள்.

“சரி.... நான் இனிக் குழப்பேல்லை. இரண்டுபேரும் வடிவாச் சாப்பிடுங்கோ” சொல்லிக் கொண்டே ரேடியோவை முறுக்கினார் ராமலிங்கம். அதிலிருந்து இரைச்சல்தான் வந்தது. அதைத் தலைகீழாகத் தூக்கிப் பிடித்தார். சரித்துப் பிடித்தார். பின்னர் மேசையிலை தொப்பெண்டு போட்டார். சீலன் சாப்பாட்டின் ஒரு கவளத்தை எடுத்து வாயிற்குள் வைத்திருக்கமாட்டான்.

“உது எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கிழவன் தான். கிழவனாலை வந்த வினை” என்றார் ராமலிங்கம். தவத்திற்கு புரக்கடித்தது. சீலனுக்கு சாப்பாடு மேலுக்கும் போகாமல் கீழுக்கும் போகாமல் நடுவில் தொண்டைக்குழிக்குள் நின்றது. ”இந்த சென்ரஸ்சை நான் ஐம்பது தரத்துக்கு மேலை கேட்டிட்டன்” ராமலிங்கத்திற்குக் கேட்காதவாறு, சீலனின் காதிற்குள் குனிந்து தவம் சொன்னார்.

“தவம் அண்ணை... உவரின்ரை கூத்தைப் பாருங்கோ.... குடியிலை நேற்று அம்மாவின்ரை துவசத்தை மறந்து போட்டார்” மீண்டும் மகள் எட்டிப் பார்த்து சொல்லிவிட்டு கதவுடன் ஒட்டி நின்றாள்.

“நான் ஒண்டும் மறந்து போகேல்லை. சைவச்சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு மரத்துப் போச்சு தம்பி” அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘சுவாஸ் ரீகல்’ மணம் காற்றில் தவழ்ந்து வந்தது. மகள் உள்ளே போனதும் தவம் அவருக்கு அருகே போய் அமர்ந்தார்.

“ஏன் அங்கிள் அப்பிடிச் செய்தனியள்?”

“தம்பி.... நான் ஆவிகளை அதிகம் என்ரரெயின்ற் பண்ணுறேல்லை” அவரின் பதிலில் சீலன் உதட்டை விரித்துச் சிரித்தான். சாப்பாடு வெளியே சிந்தியது. சீலன் சுவிற்சலாந்து வந்து மகிழ்ச்சியாக இருந்தது இன்றுதான். ராமலிங்கத்தின் மகன் சற்று நேரத்தில் வந்துவிட்டான்.

”என்ன மணவறை சரிவந்திட்டுதோ?”

“ஓம்...ஓம்... இஞ்சை நான் படுகிற கஸ்டம் உங்களுக்கு எங்கை தெரியப்போகுது. ஜென்ரில்மன் மாதிரி உதிலை இருங்கோ” தகப்பனின் கேள்விக்கு மகன் சலித்தான்.

”நான் ஜென்ரில்மன் தான். பின்னை உங்களைப்போல அகதியாவே வந்தனான். அதிதியா நேர்வழியிலை பயப்பிடாமல் வந்தனான்.”

“இஞ்சை பாருங்கோ தவம் அண்ணை. நான் அகதியா வந்து எவ்வளவு கஸ்டப்பட்டு உவரையும் தங்கைச்சியையும் கூப்பிட்டனான். உவரோடை கதைச்சுப் பிரயோசனமில்லை” மகன் அவ்விட்த்தைவிட்டு எழுந்து போய்விட்டான்.

மூன்று மணியளவில் திரும்பவும் சீலனை அகதி முகாமிற்குக் கொண்டுவந்து விட்டுச் சென்றார் தவம்.

சீலன் தினம்தோறும் அம்மாவின் கடிதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆறுமாதத்திற்கான தற்காலிக வதிவிட அனுமதி கரைந்து கொண்டிருந்தது. அகதிமுகாமில் மேலும் சில தமிழர்களைச் சந்தித்துக் கொண்டான். மொழியைப் படிப்பதில் தீவிரமாக இருந்தான். படிப்பதில் சிரமம் இருக்கவில்லை. ஒன்றரை மாதங்களில் சிறிய கட்டுரை எழுதுமளவிற்குத் தேர்ச்சி பெற்றுவிட்டான். அவனது கட்டுரை ஒன்று புகைப்படத்துடன் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளிவந்திருந்தது.

ராமலிங்கம் வீட்டுக் கலியாணவீட்டு ஆராவாரத்தினால் தவம் சீலனிடம் வருவது குறைந்திருந்தது. இடையில் இரண்டொரு தடவைகள் தான் இருக்கும் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். அப்பொழுது மாப்பிள்ளை இலங்கையிலிருந்து வந்துவிட்டதாகச் சொன்னார்.

மாலை வகுப்பு முடிவடைந்து ஷொப்பிங் செய்துவிட்டு இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தான் சீலன். முகாமின் கேற்றின் முன்பாக சிறுவர்கள் ஒரு பந்துக்காக அடிபட்டுக்கொண்டு நின்றார்கள். ஒரு தமிழ்ச்சிறுவனும் இன்னொரு சிறுமியும் கட்டிப்புரண்டு பந்துடன் மல்லுக்கட்டினார்கள். அவர்களிற்குக் கிட்டவாக நின்ற சுவிஷ் பிரஜைகள் சிலர் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர்.

“கேற்றுக்கு உள்ளுக்கை போய் நிண்டு விளையாடுங்கோ. வெளியிலை வரப்படாது” சிறுவர்களைக் கலைத்தான் சீலன். உள்ளே ஓடியவர்கள் பனிக்குவியல்களை அள்ளி எறிந்து விளையாடத் தொடங்கினார்கள். அந்தச் சிறுமி பந்தை நெஞ்சோடு இறுக அணைத்தபடி கேற்றுக்கு உட்புறமாக ஒளிந்து நின்று “இல்லை... இல்லை... என்ரை என்ரை” என்று தமிழில் கத்தினாள். அப்போதுதான் சீலன் அந்தச்சிறுமியைக் கவனித்தான். அவள் தமிழ்ச்சிறுமியே அல்ல! ஒரு பொஸ்னியப் பெண்ணாகவோ அல்லது சேர்பியப் பெண்ணாகவோ இருக்க வேண்டும். அந்தச் சம்பவம் சீலனை நெகிழ வைத்தது. சிந்தனையைத் தூண்டியது. சீலனின் வாழ்க்கை அவனுடையதும் பலருடையதுமான சம்பவங்களாக விரிந்து செல்கின்றது.
ராமலிங்கம் வீட்டுக் கலியாண்வீட்டிற்குப் போயிருந்தான் சீலன். சிறிய ஹோல். நூறுபேர் வரையில் இருந்தார்கள். தவம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார். தாலி கட்டியாயிற்று. மணமக்களுக்கு அட்சதை போடுவதற்காக பலர் வரிசையில் நின்றார்கள். அவர்களை வாழ்த்துவதற்காக தவம் சீலனைத் தன்னுடன் வரும்படி கூப்பிட்டார். மணமகனுக்கு சீலன் கை குடுத்தான். அவன் சிரித்தான்.

“என்னடாப்பா... இஞ்சை நீ நிக்கிறாய்?”

அவனை சீலனால் அடையாளம் காணமுடியவில்லை.

“என்னை உனக்குத் தெரியாதுதான். நான் அப்ப கடைசி வருஷத்திலை இருந்தேன். நீ முதல் வருஷம். பூசா கீசா எண்டெல்லாம் கலக்கிய தேசத்தொண்டன் அல்லவா நீ. எப்படி இருக்கிறீர்? அது சரி ... என்னமாதிரி... பத்மகலா கனடா போய்ச் சேர்ந்திட்டாவோ?” சீலன் அடியும் நுனியும் புரியாமல் மலங்க முழித்தான்.

“உனக்கு ஒண்டுமே தெரியாது போல. கொழும்பிலை நான் நிக்கேக்கை ஒருநாள் பத்மகலாவை வெள்ளவத்தையிலை சந்திச்சனான். அப்பதான் தான் கனடா போகப் போறதாகச் சொன்னா”

எல்லாவற்ரையும் கேட்டுக்கொண்டே மணப்பெண் தலை குனிந்து நின்றாள்.

“சீலன் லைன்லை கனபேர் நிக்கினம். உனக்குக் கலா கிடைச்சிட்டாள்தானே! பிறகு மாப்பிள்ளையோடை கதைப்பம். அவர் ஒண்டும் ஓடிப் போகமாட்டார்தானே” என்று சொன்ன தவத்தை நிமிர்ந்து பார்த்தாள் மணப்பெண். தவம் அவளுக்குக் கையைக் காட்டிக் கண் சிமிட்டினார்.

சீலனுக்குக் அந்தக் கட்டடமே சுழல்வதுபோல இருந்தது. மறைவாக இருந்த ஒரு கதிரையில் இருந்துகொண்டான். சாப்பாடு ‘ரெடி’ என்று சத்தமிட்டார்கள். வேண்டா வெறுப்பாக ஒரு பிளேற்றில் சிறிதளவைப் போட்டுக்கொண்டு ஓரமாக ஒதுங்கினான்.

மாலை நேரம். சீலன் தவத்துடன் ஹோலில் இருந்து ராமலிங்கம் வீட்டிற்கு வந்திருந்தான். மணமகனின் உறவினர்கள், றெஸ்ரோறண்டில் வேலை செய்பவர்கள் என வீடு மகிழ்ச்சியில் கரைபுரண்டது. அந்த மகிழ்ச்சியில் ஒன்றினைய முடியாமல் சீலன் தவித்தான். வீட்டின் மத்தியில் கம்பளம் விரிக்கப்பட்ட செற்றியில் மணமக்கள் நடுநாயகமாக வீற்றிருந்தார்கள். அவர்கள் கதைத்ததையோ சிரித்துக் கழித்ததையோ காண முடியவில்லை. மீண்டும் ஒருதடவை கலாவைப்பற்றி மாப்பிள்ளையிடம் விசாரித்தான். அவன் சொன்னதையே மீண்டும் சொன்னான். வேறு எந்த விபரமும் தனக்குத் தெரியாது என்று கையை விரித்தான். மாப்பிள்ளையுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது மணமகள் மொபைல் போனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆக்கள் மெல்லக் கலைந்து போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் அவள் எழுந்து தனது றூமுக்குள் நுழைந்தாள். மாப்பிள்ளை ஆந்தைக்கண் முழியால் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து உள்ளே போய் கதவைச் சாத்தினார்.

சற்று நேரத்தில் உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. மணப்பெண் டெக் பக்கம் இருந்த கதவினூடாக வெளியே பாய்ந்தாள். தன் குதியுயர்ந்த செருப்புகள் இரண்டையும் கழற்றிப் புல்வெளிக்குள் எறிந்தாள். டெக்கினுள் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தவர்களும், அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராமலிங்கமும் திகைத்து விடுபடமுன் வீட்டு வாசலை நோக்கி ஓடினாள். சடுதியாக ஒரு கார் கிரீச்சிட்டு வாசலில் வந்து நின்றது. ஒரு காப்பிலி காருக்குள் இருந்து இறங்கி அவளின் கையைக் கோர்த்தான். இருவரும் பாய்ந்து காருக்குள் ஏறினார்கள். வாசலை நோக்கி ஓடிவந்தவர்களுக்கு, இருவரும் கையைக் காட்டியபடியே பறந்தோடினார்கள்.
 


“என்ன தம்பி... என்ன நடந்தது?” மாப்பிள்ளையைப் பார்த்துக் கேட்டார் ராமலிங்கம்.

“நான் ஒண்டும் செய்யேல்லை மாமா! கத்தி ஒண்டை நீட்டினபடி – கிட்ட வராதை, தொடாதை, குத்துவன் எண்டாள். பிறகு கதவைத் திறந்து ஓடீட்டாள்” திகைப்பில் இருந்து நீங்காதவராக மாப்பிள்ளை நின்றார்.

”சீலன் நீ இனியும் இஞ்சை இருப்பது நல்லதல்ல. வா போவம்” என்றார் தவம்.

“அண்ணை... இந்த நேரத்திலை நீங்கள் இஞ்சை இருக்கவேணும். எனக்கு இப்ப தனியப் போகத் தெரியும்” வீட்டைவிட்டு வெளியேறினான் சீலன். வீட்டு வளவிற்குள் போன தவம், திரும்ப ஏதோ நினைத்தவராக சீலனைக் கூப்பிட்டபடி பின்னால் ஓடி வந்தார்.

”சீலன் ஒண்டுக்கும் ஜோசியாதை. மின்னாமல் முழங்காமல் எண்டு சொல்லிறது இதைத்தான்” சொல்லிவிட்டு திரும்பி நடந்தார் தவம். தவம் சொன்னது மணப்பெண்ணைத்தான் என்றாலும் அது கலாவுக்கும் பொருந்தி வருவதாகவே சீலன் உணர்ந்தான். பஸ் ஸ்ராண்டை நோக்கி எட்டி நடை வைத்தான். நேரத்திற்குப் போகாவிட்டால் முகாம் பொறுப்பாளரின் கோபத்திற்கு ஆளாகலாம். ஆனால் எங்கும் ஒரே இருளாக இருந்தது.



'விழுதல் என்பது எழுகையே' என்ற தொடர் 16.5.2014 முதல் 10.7.2015 வரை, பத்து இணையத்தளங்களில் வெளிவந்தது.

கதையில் தமிழ் அகதியாக இடம் பெயர்ந்த ஒரு பல்கலைக்கழக இளைஞனின் கதையை உலக எழுத்தாளர்கள் 26 பேர்கள் இணைத்து எழுதினார்கள்.

1. திரு.கல்லாறு சதீஸ் – சுவிற்சலாந்து

2. திரு.ஏலையா க.முருகதாசன் - ஜேர்மன

3. திருமதி. நிவேதா உதயராயன் - லண்டன்

4. திரு.வண்ணை தெய்வம் - பிரான்ஸ்

5. திரு.நோர்வே நக்கீரா – நோர்வே

6. திரு.கே.எஸ் சுதாகர் – அவுஸ்திரேலியா

7. திரு பண்ணாகம் இ.க.கிருஸ்ணமூர்த்தி – ஜேர்மனி

8. திருமதி.ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா – கனடா

9. திரு. லெ. முருகபூபதி – அவுஸ்திரேலியா

10. திரு. குரு அரவிந்தன் - கனடா

11. திரு. நயினை விஜயன் - ஜேர்மனி

12 .திரு. விக்கி நவரட்ணம். – சுவிற்சலாந்து

13. திரு. கே.எஸ்.துரை (கே.செல்லத்துரை) – டென்மார்க்

14. திருமதி. தேனம்மை லக்ஸ்மணணன் - கைதராபாத், இந்தியா

15. திரு.எம்என்எம். அனஸ் (இளைய அப்துல்லா) - லண்டன்

16. திரு.பன்னிருகரம் ஜெயக்கொடி (பொலிகை ஜெயா) - சுவிற்சலாந்து

17. திரு. சசிகரன் பசுபதி - இங்கிலாந்து

18. திரு. இணுவையூர் சத்தியதாசன் - டென்மார்க்

19. திரு.மதுவதனன் மௌனசாமி – டென்மார்க்

20. திரு. காசி. வி.நாகலிங்கம் - ஜேர்மனி 21. திரு.ஜெயராமசர்மா – அவுஸ்திரேலியா

22. செல்வன். குலராஜா மகேந்திரன் - பிரான்ஸ்

23. திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க்

24. திருமதி.மாலினி மாலா – ஜேர்மனி

25. திரு.நித்தியானந்தன் சகாதேவன்துரை – யாழ்ப்பாணம், இலங்கை

26. திருமதி.அருண் விஜயராணி – அவுஸ்திரேலியா






No comments:

Post a Comment