4.
அடுத்தநாள் வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில்
ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு, 9.30 மணியளவில் ஃபத்தேப்பூர் சிக்ரி (Fatehpur
Sikri) என்னுமிடத்தை அடைந்தோம். ஜெய்ப்பூரைச் சுற்றிக்காட்டிய சுற்றுலா வழிகாட்டி
அங்கேயே தங்கிவிட, புதியதொரு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் இணைந்து கொண்டார். அவர்
முன்னையவரைவிட வயதில் மூத்தவரும், நகைச்சுவை மிக்கவருமாக இருந்தார்.
சுற்றிலும் எங்கும் சூனியமாக இருந்தது. அங்கிருந்து
ஏழேழு பேர்கள் போகக்கூடிய வாகனங்கள்
எங்களுக்காகக் காத்திருந்தன. அவற்றை `ஜீப்’ என்று அழைத்தார்கள். ஒவ்வொரு
ஜீப்பிற்கான கட்டணத்தையும் ஏழு பேர்களும் பங்கிட்டுக் கொண்டோம். ஜீப் வருடம்
பூராகப் பயணம் மேற்கொண்டு கிழண்டிப் போயிருந்தது. இருக்கையில் இருந்து சற்றே
எழும்பி, மேலே தொங்கும் கம்பி ஒன்றைப் பற்றிக் கொண்டோம். ஜீப் வளைவுகள், சந்து
பொந்துகளைத் தரிசித்தபடி மேல் நோக்கிக் கிழம்பியது. ஆக்ரா கோட்டையை அடைந்தோம். இடையில் மனிதக் குடியிருப்புகள், கடைகள்
எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவாறு இருந்தது. ஒரு ஜீப்பே போகமுடியாத பாதை
இடைவெளியில் எப்படிக் கல், மண்ணைக் கொண்டு சென்று அங்கே கோட்டையை அமைத்தார்கள்
என்பது வியப்புக்குரியதாக இருந்தது.
“மொகலாயப் பேரரசின் கடைசி மன்னன் யார்?” என்று
கேள்வியெழுப்பினார் சுற்றுலா வழிகாட்டி.
”ஒளரங்கசீப்” என்றேன் நான். அவர் சிரித்துவிட்டு
”முதலாம் பகதூர் ஷா” என்றார். மொகலாய சரித்திரத்தை ஒரு அலசு அலச வேண்டுமென
நினைத்தேன். அதன் பின்னர் அலசியதில் முதலாம் பகதூர் ஷா என்பவருக்குப் பின்னாலும்
பல மன்னர்கள் இருந்திருக்கின்றார்கள் எனத் தெரியவந்தது.
மன்னர் அக்பர், முஸ்லிம் கிறிஸ்தவ இந்துப் பெண்களை
மணமுடித்து, அவர்களுடன் நட்பைப் பேணி தனது எல்லைகளை விரிவுபடுத்தி மொகலாயப்
பேரரசின் புகழ்வாய்ந்த மன்னராகத் திகழ்ந்தார்.


அக்பருக்குப் பிறந்த இரட்டை மகன்கள் மழலைப் பருவத்திலேயே
இறந்துவிட்டார்கள். சேக் சலிம் சிஷ்தி என்ற ஞானியின் ஆலோசனையின் படி, தலைநகரை
ஆக்ராவில் இருந்து ஃபத்தேப்பூர் சிக்ரிக்கு மாற்றினார் அக்பர். அங்கே பல
பிரார்த்தனைகளின் பின்னர் ஜஹாங்கிர் பிறந்தார். ஜோதாபாய் ஜஹாங்கிரின் தாயாவார்.
அம்பேரின் (ஜெய்ப்பூர்) ஹிந்து ராஜபுத்திர இளவரசியான ஜோதாபாய், ராஜா பிஹார்
மல்லின் (பார்மல்) மூத்த மகளாவார். மரியம் உசு சமானி / ஜோதாபாய் (Hira Kunwari, Harkha Bai and Jodha Bai) எல்லாம் ஒருவரையே குறிக்கும்.
ஃபத்தேப்பூர் சிக்ரியில் அக்பர் தனது மூத்த
மனைவிமார்களுக்கு அரண்மனைகளையும், செயற்கை ஏரிகளையும் உருவாக்கிக்
கொடுத்திருந்தார். ஒவ்வொரு திக்கிலும் அமைந்த அரண்மனைகளைச் சுற்றிக்காட்டி, “இது
அந்த மனைவிக்கு, இது இந்த மனைவிக்கு” என்ற வழிகாட்டி துள்ளல் நடையில் அங்கும்
இங்கும் ஓடித் திரிந்தார். “எல்லாம் இருந்தும் இங்கே நீர் வசதிகள் போதுமானதாக
இல்லாததால், அக்பர் தலைநகரத்தை மீண்டும் ஆக்ராவிற்கு மாற்றிக் கொண்டார்” என்று
சிரித்தபடியே சொன்னார் அவர்.
Fatehpur Sikri இலிருந்து 40 கி.மீ தூரத்தில் ஆக்ரா
கோட்டை (Agra Fort) அமைந்திருக்கின்றது. அங்கிருந்து புறப்பட்டு, ஏறத்தாழ 11.30
அளவில் ஆக்ரா கோட்டையை அடைந்தோம்.
பயணம் தொடரும்…….
No comments:
Post a Comment