Friday, 20 September 2019

எப்படிப் போனீர்கள்? – சிறுகதை


அது என்ன மாயமோ தெரியவில்லை. விளையாட்டு தொடங்கிய நேரம் முதல், பந்து அவுஸ்திரேலியா அணியினருடன் கூடச் சென்றுகொண்டிருந்தது. சக்கர நாற்காலியின் இரண்டுபக்கச்சில்லுகளையும் தம் கைகளால் உந்தித் தள்ளி சமநிலையுடன் உறுதி தளராமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கப்டன் பந்தைச் சுழன்று சுழன்று பிடித்து, லாவகமாகக் கூடைக்குள் எறிந்தபடி இருந்தார். விளையாட்டு முடிய இரண்டுநிமிட அவகாசம் இருக்கையில் இறுதிப்பந்தை கூடைக்குள் போட்டு விளையாட்டை முடிவிற்குக் கொண்டு வந்தார் கப்டன். கரகோஷ ஒலி வானைப் பிழந்து எங்கும் எதிரொலித்தது.

பரா ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட அணியின் அவுஸ்திரேலியாக் குழுவிற்கு தமது நிறத்தில் இருந்த ஒருவர் தலைமை தாங்குவதையிட்டு ஆசிய நாட்டவர்கள் பெருமிதம் கொண்டார்கள். தமது நாட்டினரின் குழு வெற்றிபெறவில்லை என்பதையும் அக்கணத்தில் மறந்து, ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியை அவுஸ்திரேலியா அணியிருக்கு வெளிக்காட்டினார்கள். சக்கரநாற்காலியுடன் மைதானத்திற்குள் வட்டமிட்டபடி, முகமெல்லாம் பல்லாக தனது கரங்களை உயர்த்தி வேகவேகமாக ஆட்டினார் கப்டன். கப்டனைத் தவிர குழுவில் இருந்த ஏனைய பதினொரு விளையாட்டுவீரர்களும் வெள்ளையினத்தவராக இருந்தார்கள்.

மைதானத்தை விட்டு வெளியேறும்போது கூட கப்டனின் புன்னகை மாறவில்லை.

விளையாட்டில் தனது முழு முயற்சியையும் அன்று செலவழித்துவிட்ட அயர்வில் கப்டனும், அவரது உதவியாளரும் சிறிது வைன் அருந்தியபடி ஹோட்டலில் அன்றைய போட்டியைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

”இவனால் இனி ஒன்றுமே செய்ய முடியாது. இவன் முடங்கிப் போய்விட்டான் என்றுதான் அப்போது சிலர் சொன்னார்கள். எனக்கு இந்த உலகில் அந்த சிலரைத்தான் பிடிக்கும். முயன்றால் உலகில் எதுவுமே இல்லை என்பதை அவர்கள்தான் ஆரம்பித்து வைக்கின்றார்கள்” கப்டன் தன் உதவியாளரைப் பார்த்தபடி சொன்னார். உதவியாளர் மறுபேச்சின்றி அவர் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தார்.

“அதென்னவோ தெரியவில்லை… விளையாட்டு ஆரம்பிக்கும்போது எழும் ‘டுமீல்’ என்ற துப்பாக்கிச்சத்தம் என் மூளையை உற்சாகப்படுத்திவிடும்”

கப்டனின் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் அலையாடியது.

‘டுமீல்’ என்ற துப்பாக்கிச்சத்தம்.

கப்டன் தனது பால்ய காலத்தின் கனவுகளுக்குள் தாவினார். தனக்குள்ளே அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் அசை போட்டு ரசித்துக் கொள்வதில் அவருக்கொரு திருப்தி. அந்த எண்ணங்களில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார்.

சிலவேளைகளில் கதைப்பதும், சிலவேளைகளில் மெளனமாக மனதிற்குள் சிரிப்பதுமாக அவர் இருந்தார்.

| அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். முயல் வேட்டை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலவேளைகளில் பள்ளி முடித்து மாலைவேளைகளிலும் முயல் வேட்டைக்குச் செல்வோம்.

ஒரு கோடைவிடுமுறை. காடுகள் சூழ்ந்த மலையும் பள்ளமுமான அயல்கிராமம் ஒன்றிற்கு நானும் எனது கசின்மாரும் சென்றோம்.

வெற்றுத்துப்பாக்கி என நினைத்து விளையாடிக்கொண்டிருந்த கசினின் துப்பாக்கியிலிருந்து சன்னமொன்று சீறிப் பாய்ந்தது. ‘டுமீல்’ என்ற சத்தத்துடன் எழுந்த அந்தத் துப்பாக்கிச் சன்னம் என் இடுப்புப்பகுதியைத் தாக்கியது. ‘ஐயோ’ என்ற எனது குரல் ‘சுவான் மலையடிவாரம்’ எங்கும் எதிரொலித்தது. என்ன நடந்தது என்று ஒருவருக்குமே தெரியவில்லை. இரத்த வெள்ளத்தில் பற்றைகளின் நடுவே விழுந்து கிடந்தேன் நான். பற்றைகளுக்குள் இருந்த நான்கு முயல்கள் பறந்தோடி, அங்குமிங்கும் விளையாட்டுக் காட்டிவிட்டு எங்கோ ஓடி மறைந்தன. அப்போதுதான் துப்பாக்கியினுள் சன்னமொன்று தவறுதலாக விடுபட்டிருந்ததை நான் உணர்ந்தேன். அந்தத் துப்பாக்கி என்னுடையது.

உள்ளூர் வைத்தியசாலையில் ஒன்றும் செய்யமுடியாது போகவே ஒஸ்ரின் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது நிறவெறிக் கொள்கை அமுலில் இருந்தாலும் என்னை நன்றாகவே அவர்கள் கவனித்துக் கொண்டார்கள்.  இருப்பினும் எனக்கு இடுப்பிற்குக் கீழான அவயவங்கள் செயலிழந்து போயின.

வைத்தியசாலையின் புனர்வாழ்வுத் திட்டத்தில் இருக்கும்போதுதான் எனக்கு இந்த கூடைப்பந்தாட்டம் சொல்லித் தரப்பட்டது. | கப்டன் சுவைபட தன் வாழ்வனுபவத்தைச் சொன்னார்.
w

பரா ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து பலரும் நாடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். கப்டன் தன் உதவியாளர் சகிதம் அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

எயாப்போட் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

“சேர்! எங்கள் பின்னால் ஒரு சிறு தொகையின மக்கள் எங்களைத் துரத்தியபடி வருகின்றார்கள்” வீல்செயரை உருட்டியபடி உதவியாளர் கப்டனிடம் சொன்னார்.

“தள்ளாதே! நிற்பாட்டு. அவர்கள் நேற்று முந்தினம் எனது விளையாட்டை இரசித்திருக்கலாம்” அவர்கள் தன்னைப் பாராட்டுவதற்காக வருகின்றார்கள் என எண்ணிக் கொண்ட கப்டன் உதவியாளரிடம் சொன்னார்.

வீல்செயர் உருளுவது நின்றது. பலர் கீயா மாயா என்று இரைச்சலிட்டபடி அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஆசியநாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள்.

கப்டனுக்கு அன்று ஒரு சுவையான அனுபவம் காத்திருந்தது.

“சேர்! நீங்கள் எப்படி அவுஸ்திரேலியா நாட்டிற்குப் போனீர்கள்?” பின் தொடர்ந்து வந்தவர்களின் கேள்வியினால் நிலை குலைந்து போனார் கப்டன்.

கப்டன் அவர்களின் நிறத்தை ஒத்திருந்ததால், அவர்கள் கப்டனைத் தமது நாட்டவரில் ஒருவர் என நினைத்து பின் தொடர்ந்திருக்கின்றார்கள்.

அவர்களின் கேள்வி கப்டனைத் திகைப்படைய வைத்தது. மனம் சலித்தபடி அவர்களைப் பார்த்தார். கேள்வி கேட்டவன் சற்றுப் பின் வாங்கினான். அவனைக் கிட்ட வரும்படி சைகை செய்தார் கப்டன்.

”நான் அவுஸ்திரேலியா நாட்டின் அபொறியின்ஸ். எந்த நாட்டைப் பிரதிதித்துவப்படுத்தி விளையாடினேனோ, அந்த நாட்டின் குடிமகன் நான். நாமே அவுஸ்திரேலியா நாட்டின் சொந்தக்காரர்கள். அந்த நிலம் நம்முடையது. அதன் மணம் எமக்குரியது” அந்தக்கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார் கப்டன். பின் உதவியாளரின் பக்கம் திரும்பி,

”நீ கொஞ்சம் வேகமாகத் தள்ளு. இல்லாவிடில் நாம் ஃபிளையிற்றை கோட்டை விட்டுவிடுவோம்” என்றார்.

உதவியாளன் தள்ள கப்டன் போவதைப் பார்த்தபடி திகைப்புடன் நின்றார்கள் அவர்கள்.

w
தினக்குரல் (04.08.2019)

No comments:

Post a Comment