Wednesday 19 August 2020

நிலவோ நெருப்போ? - எனக்குப் பிடித்த சிறுகதை

 

நா.சோமகாந்தன்

புகையிலைக் கன்றுகள் கொய்யா இலைக் கூட்டை உடைத்துக் கொண்டு கூவத்தொடங்குகிற சேவல் அளவுக்கு வளர்ந்து, தலையை வெளியே எட்டிப் பார்க்கிற காலம். நெல்லியடிச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் றோட் டில் அரைக் கட்டை தூரத்தில் தெருவோரமாக கிளை பரப்பில் சடைத்து வளர்ந்திருக்கிறது, ஒரு சொத்திப் பூவரச மரம். அதனடியில் மாலை தோறும் குழைக்கடை கூடுவது வழக்கம். புகையிலை பயிராகும் போகத்தில் இந்தக் குழைக் கடையில் வடமராட்சித் தமிழ் வழக்கு பிறந்த மேனியாகக் காட்சி தரும்! சனசந்தடியும், சரளமான விரசப் பேச்சும் இரைச்சலும் சேர்ந்து நெல்லியடிக் கறிக்கடையை ஞாபக மூட்டும்! மேற்கிலும் கிழக்கிலும் இரண்டு மூன்று கட்டை தூரத்துக்கப்பாலிருந்தே குடியானவப் பெண்கள் பாவட்டங் குழையையும், குயிலங் குழையையும் கட்டுகளாகக் கட்டித் தலையிற் சுமந்து கொண்டு வந்து குழைக்கடையில் பரப்புவார்கள். வளர்ந்து வரும் புகையிலைக் கன்றுகளுக்கு 'அட்டம்" தாழ்க்க பாவட்டங் குழையும் குயிலங் குழை யும் வாங்குவதற்காக ஊர்க் கமக்காரர்கள் அங்கு வந்து கூடுவார்கள்.

குழைக்கடை கூடிவிட்டால் முருகேசபிள்ளைதான் அங்கு முடிசூடா மன்னர் - கடந்த ஏழு வருடங்களாக இவர் தான் அங்கு தரகர். இவருக்கு எதிராக ஒரு பொடிப் பயல் கூட. அங்கு வாலாட்ட முடியாது. குழைக் கடை மாத்திரம் இல்லை, அந்தச் சுற்றுவட்டாரமே இவருடையகுடும்பத்துக்கு குத்தகைச் சொத்து மாதிரி. கிராமச் சங்கத் தலைவர் இவருடைய பெரிய தகப்பன், விதானை யார் இவருடைய ஒன்றுவிட்ட சகோதரன்; இவருடைய தாத்தாவின் அப்பா அவருடைய காலத்தில் இரு மரபுத்துய்ய வந்த பெரு நிலக்கிழார். இவரோ தனது காலத்தில் எடுப்புச் சாய்ப்பான ஆம்பிளை, ஊர் நாட்டாண்மைக்காரார்.

 

ஜன இரைச்சலை அமுக்கிக் கிழித்துக் கொண்டு கேட்கக் கூடிய சிம்மக்குரல். வேட்டைத் திருவிழாக் குதிரை வாகனம் போல மேலெழுந்து எட்டிப் பார்க்கிற மூக்கு. சொந்த ஊர்ப் புகையிலையில் சுருட்டிய சுத்தைப் பிரத்தியேகமாகச் சப்பிச் சப்பி உமிழ்ந்தபடி இருக்கும் வாய், குறைவெறியில் கொதித்து மின்னிக்கொண்டிருக்கும் பெரிய கண்கள். வாய்க்கால் ஒரமாக அடர்ந்து வளரும் அறுகம் புல்லுப் போல உரோமம் படர்ந்த நெஞ்சுக்கட்டு. பரணி பிடித்த புகையிலையின் கருமை காட்டும் உடம்பு, கள்ளு முட்டி போல வயிறு; சற்றுத் தாழக்கட்டிய புழுதி மண்டிய வேட்டி; மேலே வரிந்து சுற்றிய சவுக்கம். இவற்றோடு நெற்றியில் சந்தனப் பொட்டும் அணிந்திருந்தாரென்றால் அன்று நிச்சயமாக ஒரு வெள்ளிக்கிழமையாக இருக்கும். இவர்தான் தரகர் முருகேசபிள்ளை.

குழைக்கட்டு ஒன்றுக்குத் தரகுக் கூலி ஐந்து சதம்தான். ஆனாலும் கள்ளுச் செலவுக்கும், காலை மாலைச் சாப்பாட்டுக்கும் எப்படியும் அவருக்கு நாளாந்த வரும்படி நாலு ரூபாவுக்குக் குறையாது. குழைக்கடைக் காலம் முடிந்தால் மாட்டுத் தரகு வரும். அது முடிந்தால் ஒலைத் தரகு. இதற்கிடையில் புகையிலை பயிராகிவிடும். பிறகு புகையிலைத் தரகு.

 

தரகருக்கு வருவாய்க்கு வற்றில்லை. ஆனாலும் அன்றாடச் சம்பாத்தியம் அவருக்கு அன்றைக்கே சரி. முருகேசபிள்ளை நாளையைப் பற்றி இன்றைக்கே கவலைப் படாத பேர்வழி!

குழைக்கடையில், புதிய குழைகள் வந்தபடியும் தரகர் தீர்த்துவிட்டவை தோட்டங்களை நோக்கித் தலைச் கமையாகச் சென்ற படியும் இருக்கின்றன.

 

குழைகொண்டு வந்த குடியானவப்பெண்களுக்கும் தரகருக்குமிடையில் பேரம் தொடங்கி விட்டது.

 

“எங்கை செல்லாச்சி! நீயும் மற்ற அஞ்சுபேரும் சுப்பிரமணிய நயினாரோடை போறியளே?. ரெண்டே கால் போட்டிருக்கு."

 

“நம்மாணையாக்கும் கழுத்து அமத்த அமத்தச் சுமந்தந்த நோ மாறயில்லை. நாம் இந்தப் பெரிய கட்டுகளுக்கும் ரெண்டே கால் போடுது...”

 

“குயில் எண்டால் சூடுதான். நீங்கள் பாவட்டையைக் கொண்டந்திட்டு. உம் உம். ரெண்டு பணத்தைக் கூட வைச்சு வேண்டுங்கோ. இந்தா... தூக்கு...”

 

குழைக்கட்டுக்களைச் செல்லாச்சியின் தலையில் எடுத்து விடுகிறார் முருகேசபிள்ளை.

 

மேலும் புதிய குழைக்கட்டுக்கள் வந்து இறங்குகின்றன. பொன்னியும் அவள் அயல் வீட்டுக் கூட்டாளிப் பெண்களும் கொண்டு வந்தவற்றவற்றைக் கட்டுக் கட்டாகத் தூக்கிப் பார்க்கிறார் தரகர். பெண்கள் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்ளுகிறார்கள்.

 

“ஓ! பொன்னுவோ? உன்ரை விலைப்பருவங்கள் எப்பிடி?’’- தரகரின் கேள்வியில் சிலேடை சாயல் காட்டுகிறது.

 

தலைமயிரை அவிழ்த்துச் சிலுப்பி, கோதிமுடிந்தபடி பொன்னி தரகரை நிமிர்ந்து பார்க்கிறாள்.

 

முருகேசபிள்ளையின் முகத்தில் பதற்றம் இழையோடி மறைந்து, இலேசாக மலர்ச்சி விரிகிறது.

 

“உன்ரை கட்டுக்கு ரெண்டரை போடுறன். மற்ற வையின்ரை சிறிசு. ரெண்டேகால்தான். சரியே?"

கேள்வியையும், குறைச் சுருட்டையும் சேர்த்து எறிந்து விட்டு, உடனே வராத பதிலைத் தேடுவதற்காகக் கண்களைச் சட்டென்று பொன்னியின் முகத்தில் வீசுகிறார் தரகர். அப்பொழுதும் பதில் தயங்குகிறது. தரகரின் பார்வை சற்றுக் கீழே நகர்கிறது. பொன்னியின் கருங்காலிச் செதுக்குடம்பைக் கவ்விக் கிடக்கும் குறுக்குக்கட்டுக்கு மேலே மொழு மொழுவென்றிருக்கும் வழுக்கு மேனியில் அவர் கண்கள் மேய்கின்றன. அவள் கன்னத்தில், தோளில், புஜத்தில், இலையான் உட்கார்ந்தால் கூட நழுவி விழுந்து விடும்!

 

“நமக்குத் தெரியுந்தானே. மற்றக்கட்டுகளுக்கும் நாயமாப் போடவாக்கும்." - பொன்னியின் வாய்மட்டு மல்ல. அவளுடைய கண்களும் இந்த வார்த்தைகளைப் பேசுகின்றன.

வெற்றிலைக் காவியேறிய ஈச்சங்கொட்டைப் பற்கள் கெஞ்சுகின்றனவா? கேலிசெய்கின்றனவா?

 

“நம்மைத்தானுக்கும். என்ரையையும் தீர்த்துவிடவன். கறிக்கடைக்கும் போகவேணும். இருளுது" எதிர்ப் புறமிருந்து ஒரு குரல் இறைஞ்சுகிறது.

 

“என்ன துடிக்கிறாய்? பிள்ளை கிணத்துக்கட்டிலிலையோ?”

“நமக்கு எப்பவும் பகிடிதான்.மத்தியானமும் சமைக் கேல்லை.அவர் பனை இடுக்கிப்போட்டு வந்து சத்தம் போடப்போறார். கொஞ்சம் கெதிப்பண்ணிவிட. வெள்ளெனக்கூட இதிலை இருக்கிறன்"

 

“உம். சரி, சரி. பொன்னு! மற்றவையின்ரைக்கு இன்னும் ஒரு பணத்தை வைச்சுத் தீர்த்திருக்கு..... கொண்டு போங்கோ.... இஞ்சாரும் வேலுப்பிள்ளை காசைக் குடுத்து அதுகளை வெள்ளென அனுப்பிவிடும்”

 

வேலுப்பிள்ளையைத் தொடர்ந்து பொன்னி முன் நடக்க மற்ற ஐந்து கூட்டாளிப் பெண்களும் தொடர்கிறார்கள்.

 

“என்ரை மகராசன் கடவுள் போலை; சுணக்கமில்லா மல் சுறுக்காத் தீர்த்துவிட்டுட்டுது."

 

சென்ற இரண்டு மூன்று கிழமைகளாக பொன்னி மீதும், அவளோடு வருபவர்கள் மீதும், முருகேசபிள்ளைக்கு. விசேஷ அக்கறை தான். குழைக் கடையில் அவர்கள் அதிகம் சுணங்குவதில்லை.

 

பொன்னி சின்னப்பெண்; குழைக்கடைத் தொழிலுக்குப் புதுசு மேற்சட்டையைக் களைந்துவிட்டு, குறுக்குக் கட்டு கட்டத் துவங்கி முழுசாக நாலு மாசங்கூட இன்னும் ஆகவில்லை!

 

பருவத்தைத் தாண்டி, நீண்டுவளர்ந்து, ‘கெட்டு" வெடித்து, பூத்து, மிதந்து நிற்கும் புகையிலைச் செடிகள் வம்சவிருத்திக்கான வித்து விளைப்பதற்குத் தான் பயன்படும். இலைகள் சூம்பியும் விடும்; “குருமன்’ பூச்கி பிடித்த புகையிலைச் செடிகளோ, “வெளுறிப்போய் விடும் இப்படிப்பட்ட புகையிலைச் செடிகளைக் கூட பதப்படுத் உருசிபார்த்த அனுபவங்கள், இந்த ஏழு வருடத் தரகர் தொழிலில் முருகேசபிள்ளைக்கு ஏராளம்!

 

இளமையென்ற செழுந்தரையில் காலூன்றி, வாளிப்பாக வளர்ந்து, எழில் நிறைந்து, முறுவலித்து நிற்கும் பொன்னியைக் கண்டபோது, முருகேசபிள்ளைக்கு மதாளித்து வளர்ந்து, முறுக்கேறி, பாணி பிடித்த இலைகளைப் பரப்பிக் கொண்டு திறம் விளைச்சலுக்கு உதாரணமாகத் திகழ்ந்து நிற்கும் புகையிலைச் செடிதான் தோற்றங் காட்டிற்று.

மாலை வெய்யிலின் மஞ்சளை வெற்றுத் தோளில் போர்த்தி நீலச்சேலையை நெஞ்சில் குறுக்கே கட்டி பசுமையான குழைக்கட்டைத் தலையில் ஏந்தி, வெற்றிலைச்சாறு உதட்டைச் சிவப்பாக்க பொன்னி நடந்து வந்த ஒய்யாரத்திற்கு, தரகர் முருகேசபிள்ளையின் தாபமுற்ற நெஞ்சம் தாளம் போடுகிறது. பொன்னி குழையை இறக்கு முன்பே, தரகர் குழையத் தொடங்கி விடுகிறார்.

 

“வலுவான கட்டு. களைச்சிருப்பியே!. இப்பிடிப் பாரத்தைச் சுமக்கிறதோ?” - அனுதாபம் உதடெல்லாம் வழிய தனக்கு இல்லாத உரிமையை வலிய வரவழைத்துக் கடிந்து கொள்கிறார்.

 

இறால் எறிகிறார்! சுறா இன்னும் கவ்வவில்லை!!

 

பொன்னிக்கு வெற்றிலைத் தாகம், குறுக்குக் கட்டின் இடுக்கிலிருந்த கொட்டைப் பெட்டியை, விரலைச் செலுத்தி எடுத்து விரிக்கிறாள். கொழுந்து வெற்றிலை முருகேசபிள்ளையின் கண்களைக் குத்துகிறது; கிறுக்கேற்றுகிறது.

 

“இஞ்சை பிள்ளை; பொன்னு. வாயெல்லாம் புளிக்குது எனக்கும் எப்பன் வெத்திலை தா.”

 

பொன்னி முருகேசர் கையில் வெற்றிலை வைக்கிறாள்.

 

“கதையோடைகதை. இண்டைக்கு உன்ரை குழையை நான்தான் எடுக்கப் போறன் பொன்னு. தம்பியின்ரை தறைக்கு குழை வைக்க வேணுமெண்டவன் உன்ரை நல்லாயிருக்கு. மற்றவையின்ரை போகட்டும். நீ கொஞ்சம் பொறு.”

 

“பின்னைச் சரியாக்கும்; நயினார்.”

 

பொன்னி கொடுத்த வெற்றிலையையும், வரப்போகிற ஏதோ இன்பத்தின் கற்பனையையும் சேர்த்து, தரகர் ஒரு கணம் அசை போடுகிறார்.

 

செல்லாச்சி கொஞ்சம் துடுக்குக்காரி.

 

“என்னவாக்கும் நாங்கள் வீட்டை போறேல்லையே?"

முருகேசபிள்ளை சமாளித்துக் கொண்டு, தரகில் விரைவு காட்டுகிறார்.

 

குழைகள் செல்லுகின்றன. புதுக்குழைகள் வருகின்றன:

அந்தி சரிந்து கொண்டிருக்கின்றது.

பொன்னி இருக்கிறாள்.

 

குழைக்கடை கலைந்து முருகேசபிள்ளை புறப்பட, பொழுது மைம்மலாகி விட்டது. அரைச் சவுக்கத்தை அவிழ்த்து உடம்பு வியர்வையைத் துடைத்துவிட்டு, உதறித் தோளில் போட்டுக் கொண்டு, அவர் முன்னே செல்ல, பொன்னி குழைக்கட்டோடு பின்னே நடந்தாள். பெருந்தெருவிலிருந்து இறங்கி, வெள்ளவாய்காலூடாக நடந்து தோட்டத்துப் பெருவரம்பில் கால் எடுத்து வைக்கும் பொழுது மேற்குப்புறப் பனை வட்டுக்குள்ளிருந்து முருகேசபிள்ளையின் பொட்டல் விழுந்த வழுக்கைத் தலை போல வளர்பிறை தன் களங்கத் திட்டுக்களுடன் எட்டிப் பார்த்தது பனை வட்டுக்குள் இரண்டு நுங்குக் காய்கள் தேனிலவில் மின்னுகின்றன.

 

தோட்டம் வந்து விட்டது.

 

“இதிலை இறக்கு"

 

அவள் குழைச்சுமையை சரிந்து இறக்கினாள்.

அந்த அவசரத்தில்...

அவள் குறுக்குக்கட்டு அவிழ.

பனைவட்டு....

தேனிலவில் மின்னும் நுங்குகள்...

முருகேசபிள்ளையின் குதிக்காற் குருதி குபிரென்று சீறிச் சிரசிலடிக்கிறது.

அவர் உணர்ச்சிகளும் கட்டவிழ...

 

“சீ! கையை விட...”

தோளில் நெளிந்த பாம்பை உதறி எறிகிறாள்.

தீயைத் தொட்ட கை `சுரீ’ரென்று சோர்ந்தது.

அடுத்து என்ன என்ற தீர்மானம் தோன்றாத இரண்டு கணங்கள் தீய்ந்து அமுங்குகின்றன.

 

“பொன்னு. பொன்னு." கேரலாகக் குரல் கரகரக்கிறது.

 

"துT. நிலவையுங் கிழித்துக் கொண்டு பொன்னி என்ற நெருப்புச் சுடர் விர்ரென்று விரைந்து மறைகிறது.

 

அடுத்த நாள் குழைக்கடையில் தரகர் பொன்னியைத் திரும்பியும் பார்க்கவில்லை. பொன்னியின் குழை மைம்மல் வரை காத்திருக்கிறது. மாலையில் வாடிச் சோர்ந்து வீடு செல்கிறது.

 

அன்றிரவு பொன்னி வீட்டில் அடுப்பெரியவில்லை.

 

இரண்டாவது நாள்.

 

பொன்னியின் குழைக்கட்டு வருகிறது. போகிறது. வீட்டில் அடுப்புத் தூங்குகிறது.

 

மூன்றாவது நாள்.

 

நிலைமை மாறவில்லை.

 

நாலாம் நாள்.

 

கூடவந்த நாலு பெண்களுக்கும் பொன்னி நடந்ததைச் சொல்லிவிட்டாள்.

 

குழைக்கட்டுகளை இறக்கும் பொழுதே அந்த நாலு பெண்களும், பொன்னியுடைய குழைக்கட்டும் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தரகரிடம் விடுத்தார்கள்.

 

முருகேசபிள்ளை முடியாது என்று மூர்த்தண்ணியமாக

மறுத்துவிட்டார்!

 

முடிவு? ஐந்து குழைக்கட்டுகள் அன்று விலைபோக வில்லை.

 

விளைவு? ஐந்து குடும்பங்கள் அன்று பட்டினி! மறுநாள் அந்த ஐந்து குழைக்காரிகளின் கூட்டாளிப் பெண்களுக்கும் விஷயம் தெரிந்து விட்டது. பலன்? அத்தனை பேரும் அன்று பட்டினி!

அத்தனை பேருக்கும் விசாரங்கள் வேறு; இரசனைகள் வேறு; உணர்வுகள் வேறு ஆசைகள் வேறு. ஆனால்... அவர்களெல்லோருக்கும் வயிறு ஒன்று; பசி ஒன்று.

 

பசி, இயக்கமாகிறது, இயக்க மூலதனமாகிறது; இயக்க சக்தியாகிறது.

 

குழைக்கடையில் தரகர் காத்திருக்கிறார். கமக்காரர்கள் காத்திருக்கிறார்கள். குழைக்கட்டுகள் வருகின்றன. அவற்றின் சொந்தக்காரிகள் அவற்றுக்கெதிரில் வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். தரகர் தனித்தனியாக விலை தீர்க்க முயல்கிறார்.

 

“பொன்னியின் குழைக்கட்டை முதலில் விலை தீர்க்க வேணும்."

ஒரு பெண் குரல் எழுகிறது.

 

“இல்லாவிட்டால் ஒருத்தரும் விக்கமாட்டோம்."

 

“நாளேலையிருந்து ஆரும் இந்தச் சந்தைக்குக் குழை கொண்டர மாட்டோம்."

பெண் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. குழை வாங்க வந்த சிறுகமக்காரர்கள் தரகர் முருகேசபிள்ளையின் முகத்தைப் பார்த்தனர். முதல் நாளும் அவர்களுக்குக் குழை கிடைக்காத ஏமாற்றம்.

 

“முருகேசண்ணை. கோவத்தைப் பாராமல் தீர்த்து விடுங்கோ.பாவம், கொண்டு வந்த குழையை அதுகள் திருப்பிக் கொண்டுபோறதே?”

ஒரு கமக்காரர் பாவம் பார்க்கும் தோரணையில் பரிந்து பேசுகிறார்.

 

தரகர் மெளனியாயிருக்கிறார்.

 

“உழைப்பாளிகளோடை ஏன் பகைப்பிடிப்பான்? சமாதானமாய்த் தீர்த்து விடுங்கோ.”

 

தரகர் தலையசைக்கவில்லை.

 

“வாருங்கோ போவம்!.நாளைக்கு அடுத்த சந்தைக்குப் போவம்.”

 

குழைக்கட்டுகளைத் தூக்கிக் கொண்டு அந்தப் பெண்கள் புறப்பட்டு விட்டார்கள்.

 

கமக்காரர்கள் திகைத்து நிற்கிறார்கள். இந்தக் குழைக் கடைக்குக் குழை வராவிட்டால், நாலு கட்டைக்கு அப்பாலிருக்கிற அடுத்த சந்தையிலிருந்து கொண்டுவர கூலி அதிகமாகும். அதிகமானால் -விளைச்சல் நஷ்டமானால். வயிறு? பசி?

 

“தரகர் கிடக்கிறார். குழைக்காரிகளைக் கூப்பிடுங்கோ...”

 

ஓர் இளங்கமக்காரன் முதல் குரலெடுக்கிறான். வேறு குரல்களும் சாதகமாக ஒலிக்கின்றன.

 

“பொன்னி! செல்லாச்சி! வாருங்கோ! எல்லாரும் திரும்பி வாருங்கோ.”

 

நாட்டாண்மைத் தரகர் நாவடங்கி நிற்கிறார்.

 

அத்தனை கமக்காரர்; அவர்களுக்கு உணர்வுகள் வேறு இரசனைகள் வேறு; ஆனால் வயிறு ஒன்று; பசி ஒன்று.

 

பசி வந்துவிடுமே என்ற பயத்தில் கட்டுண்டு அவர்கள் சேர்ந்து நிற்கிறார்கள்.

 

அந்தப் பயத்துக்குப் பயந்து, நாட்டாண்மைத் தரகர் நாடியொடுங்கி நிற்கிறார்.

 

(தினகரன் - 1962)

 

No comments:

Post a Comment