Tuesday 7 September 2021

தி.ஞானகிராமனும் சினிமாவும்

 


முருகா முருகா முருகா.....

வருவாய் மயில் மீதினிலே

வடிவேலுடனே வருவாய்

தருவாய் நலமும் தகவும் புகழும்

தவமும் திறமும் தனமும் கனமும்

முருகா முருகா முருகா.....

இந்தப் பாடலை நான் சிறுவயதில், சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் கேட்டிருக்கின்றேன். லண்டனில் இருக்கும் முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் மிகவும் அழகாக அதைப் பாடியிருந்தார். இற்றைவரைக்கும் இந்தப் பாடல் அந்த நிகழ்ச்சியில் தான் முதன்முதலாகப் பாடப்பட்டது என்றே நினைத்திருந்தேன். ஆனால் `நாலு வேலி நிலம்’ என்ற திரைப்படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராயன் ஏற்கனவே பாடியிருக்கின்றார். பாடலை எழுதியவர் சுப்பிரமணிய பாரதியார் என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது.

இந்த வருடம் முழுவதும் எழுத்தாளர் தி.ஞானகிராமன் (ஆனி 28, 1921 – கார்த்திகை 18, 1982) நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர் தொடர்பான `நாலு வேலி நிலம்’ , `மோகமுள்’ என்ற இரண்டு சினிமாக்களைப் பார்த்திருந்தேன். தி.ஞானகிராமன் எழுதிய `நாலு வேலி நிலம்’ என்ற நாடகமும், `மோகமுள்’ என்ற நாவலும் திரைப்படமாக வந்தவை. இந்த இரண்டு படங்களுமே வணிக ரீதியில் வெற்றிபெறாவிட்டாலும், பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டன.



`நாலு வேலி நிலம்’ 1959 ஆம் ஆண்டு வெளிவந்தது. தி.ஞானகிராமன் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.வி.சகஸ்ரநாமம் தயாரித்தார். முக்தா சீனிவாசன் அதன் இயக்குனர். எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.வி.சுப்பையா, குலதெய்வம் ராஜகோபால், முத்துராமன், எஸ்.என்.லக்சுமி, பண்டரிபாய், மைனாவதி, தேவிகா போன்றோர் நடித்திருந்தார்கள். சொந்தமாக நாலு வேலி நிலத்தை (27 ஏக்கர் காணி) வாங்கிவிட வேண்டும் எனக் கனவு காணும் கண்ணுச்சாமி என்பவரைப்பற்றிய கதை இது. தஞ்சை மாவட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு – கோவில், வயல், தோட்டம் எனப் பயணிக்கின்றது. இந்தப் படத்தின் பல பாடல்கள் எனக்கு விருப்பமனவை. பாரதியார் பாடல்களான முருகா முருகா, நம்பினார் கெடுவதில்லை, காணி நிலம் வேண்டும் போன்றவற்றுடன் எனக்கு மிகவும் விருப்பமான `ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே’ என்ற நாட்டுப்புறப்பாடலும் இடம்பெற்றிருக்கின்றது. `நம்பினார் கெடுவதில்லை’ பாடலை ஏ.எல்.ராகவனும், ஏ.ஆண்டாளும் ; `ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே’ பாடலை திருச்சி லோகநாதன், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருக்கின்றார்கள். காதலர்களுக்கிடையே ஒருவர் மாறி ஒருவரென போட்டி போட்டுக்கொண்டு பாடும் `வாது கவி’ பாடல் வகையைச் சார்ந்தது இது. காதலன் தான் ஒரு உருவம் எடுத்து உன்னை நாடி வருவேன் எனச் சொல்ல, காதலியோ தான் இன்னொரு உருவம் எடுத்து ஓடித்தப்பி விடுவேன் என்கின்றாள். இப்படியே மாறி மாறிச் சொல்லிச் செல்லும் காதலர்கள், இறுதியில் `ஆரா மரமுறங்க அடிமரத்தில் வண்டுறங்க, உன்மடியில் நானுறங்க என்ன தவம் செய்தேனடி’ என `உனக்கு நான், எனக்கு நீ’ என்று உடன்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்.

இன்னொரு செய்தியாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் முதுபெரும் கவிஞர், ஓவியர் எஸ்.வைத்தீஸ்வரனும் இதில் ஒரு சிறுவேடமாக இன்ஸ்பெக்டராக நடித்திருப்பது சிறப்பாகும். இவர் எஸ்.வி. சகஸ்ரநாமம் அவர்களின் சகோதரி மகன் (மருமகன்) என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி,ஜாவின் நாவலை மூலக்கதையாக வைத்து 1995 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் `மோகமுள்’. ஞான ராஜசேகரன் இயக்கிய முதல் திரைப்படம் இது. ஜமுனாவிற்கு பத்து வயது குறைந்தவன் பாபு. அவன் அம்மாவின் இடுப்பில் இருந்ததைவிட, ஜமுனாவின் இடுப்பிலேயே அதிகம் தொங்கிக் கொண்டிருப்பான். அந்தணர் குலத்தில் பிறந்த அவனுக்கு, கர்நாடக சங்கீதம் என்றால் உயிர். ஜமுனாவின் குடும்பத்தினரும், பாபுவின் குடும்பத்தினரும் சினேகிதர்கள். ஏழ்மை என்றாலே திருமணம் எங்கே நடக்கின்றது. அதுவும் வைப்பாட்டி பெண் ஜமுனா. அப்பா அந்தணர், அம்மா மராட்டி. ஜமுனாவின் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போகின்றது. கிளைக்கதையாக பாபுவின் வீட்டின் கீழ் தங்கம்மா என்றொரு இளம்பெண், இரண்டாம்தாரமாக ஒரு கிழவனைத் திருமணம் செய்துகொண்டு இருக்கின்றாள். அவளுக்கு பாபுவின் மேல் ஆசை. ஆசை கைகூடாததினால் ஆற்றில் விழுந்து இறந்துவிடுகின்றாள். ஏழ்மை ஒரு பெண்ணுக்கு கிழவனையும், இன்னொரு பெண்ணுக்கோ வயதில் மிகவும் குறைந்தவனையும் பரிசாகக் கொடுக்கின்றது. காலத்தோடு ஜமுனா மீது ஆசையை வளர்த்துவந்த பாபு, இறுதியில் அவளைத் திருமணம் செய்கின்றான். ஜமுனாவாக அர்ச்சனா ஜோக்லேக்கரும், பாபுவாக அபிஷேக்கும், சங்கீதவித்துவான் ரங்கண்ணாவாக நெடுமுடி வேணுவும் நடிக்கின்றார்கள். இடையே வெண்ணிற ஆடை மூர்த்தி முகம் காட்டிவிட்டுச் செல்கின்றார். விவேக்கிற்கு குணச்சித்திர வேடம்.

இளையராஜாவின் இசையும், சன்னி ஜோசப் / தங்கர்பச்சன் இருவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகவும் கைகொடுக்கின்றது. சங்கீதம் படம் முழுக்க இழையோடுகின்றது. `சொல்லாயோ வாய் திறந்து’ பாடல் முணுமுணுக்க வைக்கின்றது. படத்திலே இரண்டு தடவைகள் வருகின்றன. அருண்மொழியும் எஸ்.ஞானகியும் தனித்தனி பாடியிருக்கின்றார்கள். கும்பகோணம், காவரிக்கரை, கோவில் என படம் முழுவதும் தஞ்சையின் இயற்கையை கமரா சுற்றி வருகின்றது.

தி,ஜா நூற்றாண்டுகள் கழிந்தும் கொண்டாடப்படுவதற்கு அவரது படைப்புகளே காரணமாக இருக்கின்றது.

`வெற்றிமணி’ என்ற பெயர் ஒலித்து, இன்று 70 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அய்ரோப்பாவில் 300 இதழ்கள் மணம் பரப்பி, 27 வருடங்களாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கோயில் மணியின் ஒலி அதன் சுற்றுவட்டாரங்களுக்கும் கேட்பதுபோல், இந்த மணியின் ஓசை கடல் கடந்தும் பல தேசங்களுக்கும் செல்கின்றது. அதன் ஓசை நூற்றாண்டுகள் கடந்தும் பயணிக்க, `தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும்’ என முருகனை வேண்டி நிற்கின்றேன்.


நன்றி: வெற்றிமணி

No comments:

Post a Comment