Thursday 27 January 2022

`மூத்த அகதி’ நாவல் குறித்தான சில கருத்துகள்

ஈழத்தின் நயினா தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழகத்தில் வாழ்ந்து வருபவருமான வாசு முருகவேல் எழுதிய நாவல் `மூத்த அகதி’. `எழுத்து’ பிரசுரமாக வந்திருக்கும் இந்த நாவல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் தமிழரசி அறக்கட்டளை நடத்திய நாவல் போட்டியில் (2021) இரண்டாவது பரிசு பெற்றது.

இந்தக்கதை சொல்லப்படும் முறைமை தமிழ் எழுத்துப்பரப்பிற்கு சற்றே வித்தியாசமானது. தமிழ்ச் சினிமாவில் பல படங்கள் கதாநாயகன் அல்லது நாயகியைச் சுற்றி வருபவை. சில படங்களில் பல நாயகன்கள், நாயகிகள் இருப்பார்கள். பாலைவனச்சோலை, வானமே எல்லை, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள். இந்த நாவலும் பலரைப் பின்னிப் பிணைந்து, சம்பவக் கோர்வைகள் சேர்ந்து ஒரு முழுநாவலாகப் பரிணமித்திருக்கின்றது. நாவலை வாசித்த போது சினிமா ஏன் குறுக்கே வந்து விழுந்தது என்றால், சினிமாவைப் போலவே கடைசியில் சிவசிதம்பரம் என்றொரு பாத்திரம் வருகின்றது. இடையே ஒருதடவை வந்திருந்தாலும், கதையுடன் பெரிதும் ஒட்டாமல் வந்து கொலையுடன் முடிவடைகின்றது. அப்பொழுது நாவலில் ஒருபோதுமே பெய்திராத அடைமழை ஒன்று பொழிந்து தள்ளுகின்றது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் ஒரு அரசியல் கட்சிக்கூட்டத்தோடு ஆரம்பிக்கும் நாவல் இன்னொரு அரசியல் கூட்டத்தோடு முடிகின்றது. இன்னொரு விதமாகச் சொன்னால் ஒரு கலியாணவீட்டுடன் ஆரம்பித்து ஒரு இயற்கை மரணம், ஒரு கொலையுடன் முடிவடைகின்றது.

கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், விருகம்பாக்கம், நெசப்பாக்கம் போன்ற இடங்களைச் சுற்றி நடைபெறுகின்றது கதை. துவாரகன், மதி, வாசன், ஈசன், கே.கே. நகரின் மூத்த அகதி பாலன், கமல், ரூபன், கோபி, மோகன், வாசனின் அப்பா அம்மா, வர்சா, வர்சாவின் பாட்டி, கீர்த்தனா, ஜீவலட்சுமி என்று ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆரம்பத்தில் நினைவில் வைத்துக்கொள்ளக் கொஞ்சம் கஸ்டமாகவிருந்தது. அத்தோடு கே.பாலசந்தர் படங்களில் வருவது போன்று இங்கே ஒரு `சோனி எரிக்சன்’ மொபைல் போன். இவர்களுடன் அம்மன் கோவில், ஐயப்பன் கோவில், நெற்சென்ரர்கள், கெஸ்ற் கவுஸ், பொலிரோ கார் ஓட்டுதல், கொத்து பரோட்டா, டாஸ் மாக், வைன்ஷாப்,  ஈழத்து அகதிகள் வீடு வாடகைக்கு எடுப்பதன் சிரமம் என ஈழத்து அகதிகளின் வாழ்க்கையைச் சுவைபடச் சொல்கின்றது நாவல். எல்லாப் பாத்திரங்களும் அவர்களின் இயல்புக்கு ஏற்றவாறு வந்து போகின்றன. குடியும் கூத்தும் நகைப்பும் காமமும்  நோயும் வலியும் வேதனையும் என. பெரிதாக இயக்கங்கள் பற்றியும் ஈழத்து இராணுவம் பற்றியும் கூறாதது இங்கே கவனிக்கத்தக்கது. இப்போது ஈழத்து அகதிகளின் முன்னால் உள்ள தேவைகள் என்ன என்பதுதான் நாவலின் அடிநாதம்.

குறைபாடென சில எழுத்துப் பிழைகள், பன்மையில் தொடங்கி ஒருமையில் முடியும் வாய்க்கியங்கள், ஈசன் என்ற பாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் பக்கம் முழுவதும் தீசன் என்றாகிவிட்டது (பக்கம் – 230) போன்றவற்றைக் குறிப்பிடலாம். நாவலில் அடிக்கடி வரும் பஞ்சுமரம் என்பது இலவமரத்தைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஏவெறி, குரக்கேறுதல் போன்ற சொற்கள் மயக்கத்தைத் தருகின்றன.  ஏவெறி (ஏவறை அல்லது ஏப்பம்), குரக்கேறியது (புரக்கேறியது) என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

இலகுவான தமிழ் நடை, குட்டிக்குட்டி அத்தியாயங்கள், கதை நிகழுமிடத்தை நம் கண் முன்னே காட்டும் தன்மை என்பவை சிறப்பம்சங்கள். அகதி வாழ்வின் அவலத்தை இதுவரை புதியதொரு நிலத்தில் - ஐய்ரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பார்த்தோம். நாவலாசிரியர் வாசு முருகவேல் நமக்கு அயலில் உள்ள, நமது நிலத்தைப் போன்ற தொப்புள்கொடி உறவான தமிழ்நாட்டில் காட்டுகின்றார்.

 

No comments:

Post a Comment