Friday 1 July 2022

ஆசிரியர், மிருதங்கக் கலைஞர் வை. வேனிலான் உடன் நேர்காணல்

                  
மின்னஞ்சல் வழி : கே.எஸ்.சுதாகர்

1.            வணக்கம். உங்களை சிறுவயது முதல் சக வகுப்புத் தோழனாக நான் அறிவேன். சிறுவயதில் மிருதங்கம் என்ற இசைக்கருவி மீது மாத்திரம் தங்களுக்கு ஆர்வம் வர ஏதாவது விசேட காரணங்கள் இருந்ததா?

தெல்லிப்பழையில் எமது வீட்டின் அருகிலுள்ள காசிவிநாயகர் ஆலய குரு கணேசலிங்கக்குருக்கள் ஐயாவின் தலைமையில் பாலர் ஞானோதயசபை சைவசமய அறநெறி மற்றும் இசைவகுப்புகள் சிறப்புற நடைபெற்ற காலத்தில் சமய மற்றும் இசையிலும் ஈடுபாடு ஏற்பட்டது. எனது தந்தையாரின் விருப்பத்தினால் 11 வயதில் (தரம் 7) திரு...சின்னராசா ஆசிரியரை குருவாகக் கொண்டு மிருதங்க இசையை கற்க ஆரம்பித்தேன். எமது வகுப்புத் தோழன் கந்தையா ஆனந்தநடேசன், வா.அகிலகுருக்கள் (துர்க்கையம்மன் கோவில்) ஆகிய இருவரும்  மிருதங்க வகுப்புத் தோழர்களாகவும் அமைந்தனர்

2.            பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட பின்னர், ஆசிரியத் தொழில் புரிகின்றீர்கள். உங்கள் தந்தையார் வைரவப்பிள்ளை அவர்களும் ஆசிரியர் என ஞாபகம். ஆசிரியத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்? எங்கெல்லாம் கல்வி கற்பித்தீர்கள்? தாங்கள் கல்வி கற்பிக்கும் பாடங்கள் பற்றிச் சுருக்கமாக அறியத் தருவீர்களா?

என்னை ஆசிரியராக்க வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம்.அவர் கணிதம், தமிழ் என்பனவற்றை கவர்ச்சிகரமாகக் கற்பிப்பவர். அவரது வகுப்புகளில் விஞ்ஞானம் கற்பிக்க என்னையும் அறிமுகப்படுத்தினார். விஞ்ஞானமாணி (BSc.) பட்டம் பெற்று யா/ வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் தொண்டராசிரியராக திருமதி..சச்சிதானந்தம் (SLEAS) அவர்கள் நியமித்தார். மேலும், அவரே பாடசாலை நிர்வாக விடயங்களை கற்பித்த குருவாகவும் அமைந்தார். பின், உயர்தர வகுப்புகளுக்கு விலங்கியல் பாட ஆசிரியராக,  அரசினால் முதல் நியமனம் கிடைக்கப்பெற்று அக்கரைப்பற்று ஆயிசா பெண்கள் கல்லூரியில் பணியாற்றினேன். பட்ட பின் கல்வியியல் டிப்புளோமா (P.G.Dip –in – Education) பெற்று பின், கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியில் 18 வருடங்களும் அதன் பின் இஸிபத்தன கல்லூரியில் சிங்கள மாணவர்களுக்கு ஆங்கில மொழி மூல உயிரியல் மற்றும் விஞ்ஞான ஆசிரியராக 10 வருடங்கள் பணியாற்றி தற்போது பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் பணியாற்றுகிறேன். மேல்மாகாணத்தில் பணியாற்றிய விஞ்ஞான ஆசிரியர்களுக்கு தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்ற ஆசிரியர் பயிற்சிகளில் உயிரியல் மற்றும் இரசாயனவியல் போதனாசிரியராக  பயிற்சியளித்தேன். 1985 ஆம் ஆண்டிலிருந்து தேசிய வானொலி ரூபவாகினி தொலைக்காட்சியின் கல்விச்சேவைகளில் உயர்தர வகுப்புகளுக்கு விலங்கியல் உயிரியல் மற்றும் சாதாரணதர விஞ்ஞான பாட வளவாளராகவும் பணியாற்றுகிறேன்.

3.            ஆசிரியத்தொழிலுடன் எப்படி உங்கள் கலைத்துறையை சமநிலைப்படித்திக் (பலன்ஸ்) கொண்டு செல்லமுடிகின்றது?

பலரும் வினவுகின்ற ஒரு பெறுமதியான வினா. உண்மையில் சமநிலைப்படுத்தல் கடினமான ஒரு விடயம். எனது தாய் தந்தையின் வளர்ப்பில் நேர முகாமைத்துவம் என்பது ஒரு முக்கியமான பரிமாணமாகும்.  பலர் பல விதமாக வாழ்வை இன்பமாக அனுபவிக்கின்றனர். நான் அவ்வாறில்லாமல் தாங்கள் வினவிய இரு விடயங்களிலும் ஆழ்ந்து ஈடுபடுதலை இன்பமாக அனுபவிக்கப்  பழகிவிட்டேன்.  

4.            இந்த நேர்காணல் தங்களின் கலை வாழ்க்கையை மட்டும் முன்னிறுத்துவதால், மீண்டும் தங்களின் இசைப்பங்களிப்புக்கு வருகின்றேன். சிலப்பதிகாரம் காலத்தில் இருந்துவந்த `தண்ணுமைஎன்று அழைக்கப்படும் இசைக்கருவியையொட்டி வந்தது மிருதங்கம் என்று சொல்லுவார்கள். மிருதங்கம் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவருக்கு அதன் தோற்றம்  பயன்பாடு பற்றி எப்படி விளக்கம் தருவீர்கள்? ஏனைய இசைக் கருவிகளில் இருந்து இது எவ்விதம் வேறுபடுகின்றது?

அருமை. இது தனியாக ஆராயப்பட வேண்டிய பெரிய விடயம். தொன்மைமிகு மிருதங்க வாத்தியத்தின் தோற்றம் பற்றி வரலாற்று அடிப்படையில் தெளிவின்மை காணப்படினும் பரதர் எழுதிய நாட்டியசாஸ்த்திரத்தில் மண்ணால் ஆக்கப்பட்ட முழவுக்கு `மிருதங்கா எனப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இம் மிருதங்க வாத்தியத்தை எம்பெருமான் சிவபெருமானே இமயமலையில் வடிவமைத்ததாகவும் தமிழ்ச் சுவடிகள் மூலமாகவும் அறியமுடிகிறது.

மகமேரு வெற்பில் வடபால் மாகதமே

தகமா மலையினையே தானெடுத்துப்புகழ்மாரி

பொற்பாற் துளைகள் பதினாறும்

மெய்ப்பாகச் செய்தான் விரைந்து.

              

 

 

 

லய வாத்தியங்களுள் தனித்துவமான இயற்கைநாதம் கொண்டது. அதனால் ஈடிணையற்ற தலையாய லய வாத்தியமாக அமைகிறது. ஆண்களுக்குரிய தாழ் சுருதி low pitch அளவில் பெரியதாகவும் (26 அங்குல நீளம்), பெண்களுக்குரிய உயர் சுருதி high pitch அளவில் சிறியதாகவும் (24 அங்குல நீளம்)அமையும். அரங்க உள்ளக இசைக்கருவியாகவும் மிருதங்கம் அமைகிறது. கர்நாடக இசை நிகழ்வுகள் பரதநாட்டிய நிகழ்வுகள், இசைநாடகம், பண்ணிசை, கதா காலட்சேபங்கள், நாட்டிய நாடகங்கள் என்பனவற்றில் மிகப்பிரதான இடம் வகிக்கிறது.

5.            தாங்கள் மிருதங்கம் பற்றி எங்கெல்லாம் பயின்றீர்கள்? தங்களின் குரு பற்றிய விபரங்களைப் பகிருங்கள்.

காசிவிநாயகர் ஆலய குரு கணேசலிங்கக்குருக்கள் ஐயா தலைமையில் பாலர் ஞானோதயசபையில் 11 வயதில் (தரம் 7 கற்றபோது) திரு...சின்னராசா ஆசிரியரை குருவாகக் கொண்டு மிருதங்க இசையை கற்க ஆரம்பித்தேன். வட இலங்கை சங்கீத சபையின் 6 தரங்களும் சித்தியடைந்துமிருதங்க கலாவித்தகர்பெற்ற பின் தமிழ் நாட்டில் முன்னணி இசைமேதை கலைமாமணி திருவாரூர் Dr. பக்தவற்சலம் அவர்களிடம் குருகுலவாசம் போன்ற அமைப்பில் 4 வருடங்கள் கற்றேன். அது ஒரு பொற்காலம். ஏனெனில் வாழ்வில் நினைத்துப்பார்க்க முடியாத பெரும் இசை மேதைகளுடன் பழகும் வாய்ப்பு எனது குருவின் ஆதரவில் கிடைத்தமை பெரும் பேறு.

6.            பல்வேறு இசைக்கச்சேரிகளில் பங்குபற்றிய அனுபவம் உங்களுக்கு நிறைய இருக்கும். யார் யாருக்கெல்லாம் நீங்கள் மிருதங்கம் இசைத்திருக்கின்றீர்கள்? அப்போது ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்/சம்பவங்கள் பற்றி

கலைஞாக இருந்தமையால் அரச உயர்பீடங்களான  அலரிமாளிகை, ஜனாதிபதி மாளிகை, பாரளுமன்றம்,  சபாநாயகர் அலுவலகம் என்பனவற்றில்  பல அரங்க நிகழ்வுகளை ஆற்றினோம். ஏராளமான இலங்கை மற்றும் இந்திய மேதைகளுக்கு இசைப்பங்களிப்பு வழங்கியுள்ளேன். அனுபவங்களும் எண்ணில. குறிப்பாக பெரும் மேதைகளான Dr. மதுரை சோமு அவர்களுக்கு தஞசாவூரில் திருவையாறு உற்சவத்திலும், புல்லாங்குழல் இசை மேதை Dr. ரமணி மற்றும் Dr. திருச்சூர் ராமச்சந்திரன் அவர்களுக்கும் நேத்ரா தொலைக்காட்சி நிகழ்வில் வாசித்தமையை மகுடமாக சொல்லலாம்.

7.            புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று கச்சேரி நிகழ்த்திய அனுபவம் உண்டா?

குருவிடம் கற்ற காலத்தில் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் வாசிக்க அனுப்பியமையும் ஏராளமான கர்நாடக இசையாளர்களான இந்தியக்கலைஞர்களுக்கு வாசித்தமையும் மிகப்பெருமை. பஞ்சாப் கனடாவை தளமாகக் கொண்ட Sarb Akal Music Society  வட இந்திய இந்துஸ்தானி அமைப்பு என்னை அணுகி மிருதங்கம் பற்றிய விரிவுரையையும் தனியாக வாசிக்கவும் கேட்டு வாசித்தேன். Melbourne Trinity Heritage Festival, Nandi & L90 Fest  விழாவிலும் தனியாவர்த்தனம் வாசித்தேன்France spring festival 2021 இல் மாலைதீவைச் சேர்ந்த பாடகி ஹன்யா அவர்களின் ஹிந்துஸ்தானி இசைக்கு மிருதங்கம் வாசித்தமைக்காக கொழும்பு பிரான்ஸ் தூதரகத்தினால் கெளரவிக்கப்பட்டேன்.

8.            கர்நாடக இசைக்கு மிருதங்க வாத்தியத்தின் முக்கியத்துவமும் வாசிப்பவரின் கடமைகளும் என்ன என்று சொல்லுங்கள்.

பாடகரின் அல்லது வாத்திய இசையின் லயத்தை சீராக கொண்டு செல்வதும் நிகழ்வின் இரசிப்பு தரத்தை பேணுவதும் மிருதங்கவாத்தியத்தின் பணி.

மிருதங்கவாத்தியத்தை இசைப்பவருக்கு பாடத் தெரிந்திருத்தல் சிறப்பானதாகும். அல்லது பாடல்கள், வர்ணம், தில்லானா, சிட்டாஸ்வரங்கள் ,பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் போன்றவை பாடமாக இருக்க வேண்டும். பாடகருக்கு முதல் ரசிகனாகவும் காலப்பிரமாணத்தை அனுசரிப்பவராகவும் மிருதங்கத்தை மிருதங்கமாக வாசிப்பதும் மிக அவசியம். இசைக்கு இடைஞ்சலாகவும் தொடர்பில்லாதவாறும் வாசித்தல் தவறு.

9.            தங்களிடம் பல மாணவர்கள் மிருதங்கம் பயில்கின்றார்கள். தாங்கள் குருவிடம் மாணவனாக இருந்த அனுபவம், இப்போது தாங்கள் பல மாணாக்கர்களுக்கு குருவாக இருக்கும் சந்தர்ப்பம்இந்த இரண்டுக்குமிடையே ஏதாவது வேறுபாட்டைக் (ஒற்றுமையைக்) காண்கின்றீர்களா?

கற்பிப்பவர் எல்லாரும் ஆசிரியர்கள் அல்லர்.ஏனைய துறைகளைப் போலவே போலிகளும் தாராளம். எனக்கு இறையாசியோ  அல்லது முன்செய்த நல்வினையோ அறியேன். எனக்கு மிருதங்க இசைக்குக்குருவாக அமைந்த இருவரும் கடினமாக உழைப்பவர்களாவும், ஞானம் நிறைவானவர்களாகவும், கற்பித்தலில் தரமானவர்களுமாக அமைந்தனர்.மேலும் இருவகையான மாணவர்களும் உள்ளனர்

1.      தன்னார்வ மிகுதியாக கற்கும் மாணவர்

2.      பெற்றார் விருப்பத்திற்கு கற்கும் மாணவர்

முதல் வகையினர் மிகக்குறைவு. ஆனால் நான் அவ்வகையினன். முதல் வகையினர் பல சவால்களையும், கேலிகளையும், அவமானங்ளையும், பல வடிவங்களில் வலிகளையும் தாங்குபவராக அமைவர். இரண்டாவது வகையினருக்கு இயற்கை ஞானம், ஆற்றல்கள்  அமைந்திருப்பினும் இத்துறையில் நிலைப்பது அரிதே. 

10.          மிருதங்க அரங்கேற்றம் பல செய்திருப்பீர்கள். அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள். எப்படி மாணவர்களை அரங்கேற்றத்துக்காகத் தயார் செய்கின்றீர்கள்?

மிருதங்க அரங்கேற்றத்தை மேற்கொள்ளக்கூடிய ஒருவருக்கு அடிப்படைத்தகுதி அவசியம். அரங்கேற்ற பயிற்சிக்கு மட்டும் ஒரு வருடம் தேவைப்படும். முதலில் தனியாவர்தனத்திற்குரிய பகுதிகளை பயிற்சியளித்து திருப்தியாக அமையின் ராகம் தாளம் பல்லவி, வர்ணம், வேறுபட்ட தாளங்களிலமைந்த கீர்த்தனைகள், மற்றும் தில்லானா என்பனவற்றை பயிற்சியளித்து பின்  பாடகருடன் 10 க்கு மேற்பட்ட ஒத்திகைகளை மேற்கொள்வோம். திருப்தியாக அமையின் குறித்த நாளில் அரங்கேற்றத்தை நிகழ்த்துவோம்.

11.          மிருதங்கம் தவிர்ந்த வேறு என்ன கலை/இலக்கிய முயற்சிகளில் ஈடுபாடு உண்டு? மிருதங்கம் தவிர்ந்த வேறு ஏதாவது தாளக்கருவிகள் வாசிப்பீர்களா?

டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியில் கற்பித்த காலங்களில் மாணவர்களுக்கான 12 க்கு மேற்பட்ட சிறிய நாடகங்களை எழுதி கல்லூரி கலைவிழாக்களில் அரங்கேற்றினேன். என்னால் பயிற்றுவிக்கப்பட்ட டி.எஸ்.சேனாநாயகா மாணவர் பட்டிமன்றம் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றது. அண்மையில்  இந்துக்கல்லூரியிலும் இரண்டு  நாடகங்களையும் திருமந்திர இசையுடனான உரையாடலையும் அரங்கேற்றினேன். வேறு வாத்தியங்கள் பற்றிக் கூறுவதாயின் குரு ..சின்னராசா ஆசிரியரின் மாணவர்களின் அரங்கேற்றங்களுக்கு கடம் மற்றும் கெஞ்சிரா வாத்தியங்களையும் வாசித்தேன். மிருதங்க வாத்தியம் அளவிடமுடியாத லய அடிப்படையான விடயங்களை தன்னகத்தே கொண்டிருப்பதால் மிருதங்கத்தை வாசிக்கக்கூடிய ஒருவரால் பல லய வாத்தியங்களை இலகுவில் கையாள முடியும்.

12.          மின்சக்தியால் இயங்கும் நவீன இசைக்கருவிகளின் வருகை தோல், துளை, நரம்பு போன்றவற்றாலான இத்தகைய இசைக்கருவிகளின் மீதான தாக்கம் எத்தகையது?

இயற்கை இறைவனின் படைப்பு. செயற்கை மனிதனின் படைப்பு. செயற்கையால் இயற்கையை வெல்ல முடியுமா? இயற்கையான வாத்திய ஒலி நயத்திற்கு எந்த மின் உபகரணமும் ஈடாகாது. தென்னக கீழைத்தேய இசையில் மின்இசைக்கருவிகளால் குறித்த எல்லையை விஞ்சி எதுவும் சாதிக்க முடியவில்லை. உதாரணமாக ஒலிப்பதிவு இசையைக் கொண்டு நடைபெறும் நடன நிகழ்வுகளும் மேடையில் இசைக்கருவிகளுடன் நடைபெறும் நடன நிகழ்வுகளுடன் நடாத்தப்படும் போது அதன் இசைத்தரம் பற்றி யாவர்க்கும் புரியுமே. மின்இசைக்கருவிகளை பயிற்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

13.          தாங்கள் இயக்குனராக இருக்கும் லயநாதாலயா இசைக்கல்லூரி பற்றியும், தங்களின் கலைப்பணிக்காகக் கிடைத்த விருதுகள் பற்றியும் சொல்லுங்கள்.

எமது பாரம்பரியம் மிக்க மிருதங்க இசைக்கலையை அடுத்தடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் அமைக்கப்பட்டதுதான் லயநாதாலயா இசைநிறுவனம். அதனூடாக பலர் தமது இசைவாழ்வை வளப்படுத்தியும் அரங்கேற்றம் பெற்றும் மகிழ்ந்துள்ளனர்.

விருதுகளை தேடிச்செல்வதில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை. ஏனெனில் கிடைத்த விருதின் தரத்துக்கேற்ப நாம் அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியிருக்கும். தானாகவே தேடி வந்து அமையும் விருதுகள் இறைவனின் பணிப்பாகக் கருதி ஏற்றுக்கொள்கிறேன். அவ்வகையில், “இசைச்செல்வர்விருதை ஆலாபனா இசைவளர்ச்சி நிறுவனமும்; “லயஞானப்பேரொளிவிருதை நோர்வே ஆர்யாலயா நிறுவனமும்; “திருமந்திர இசைச்செல்வர்விருதினை திருமந்திரப்பணிமனையின் தலைவர் சைவப்புலவர் திரு சு. செல்லத்துரை அவர்களும்;சங்கீத வித்வான் மணிஎன்ற இந்திய விருதினை  தியாகையா இந்திய தொலைக்காட்சியும்;மகாத்மா காந்திவிருதை கண்டி இந்திய துணைத் தூதரகமும்;கலைச்சுடர்  என்னும் இலங்கை அரச விருதினை முன்னாள் அமைச்சர் கௌரவ  மனோகணேசன் அவர்களும் வழங்கி மகிழ்ந்தனர். மேலும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற France spring festival 2021 நிகழ்வில் இடம்பெற்ற இந்தஸ்தானி இசை நிகழ்வுக்கு கொழும்பிலமைந்த பிரானஸ் தூதரகம் வழங்கிய கௌரவம் உருவாக்கிய ஆசிரியர்களுக்கே சமர்ப்பணம்.

14.          லயநாதாலயா இசைக்கல்லூரி இசையாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றதா?

லயநாதாலயா இசைநிறுவனம் முது பெரும் கலைஞர்களை கௌரவித்துலயநாதஅரசுவிருதினையும், பெரும் கலைஞர்களை கௌரவித்துலயநாதசுரபிவிருதினையும், அரங்கேறும் கலைஞர்களை கௌரவித்துலயநாதபாரதிவிருதினையும், இளம் கலைஞர்களை கௌரவித்துலயநாதசெல்வன்விருதினையும் அளித்து மகிழ்கிறது.

15.          தாங்கள் யூடியூப்பில் (You tube)  பல வீடியோக்களைப் பதிவு செய்து வருவதை அவதானித்துள்ளேன். அந்த வீடியோக்களின் பயன்பாடு, அதற்கான வரவேற்பு எப்படியிருக்கின்றது?

எனது குருவின் ஆசிகளால் கிடைத்த சிறிதளவு இசைஞானத்தில் பல புதிய திசையில் யாரும் கையாளாத கடினமான விடயங்களை அளிப்பதற்கே அதிகமாகப் பயன்படுத்துகிறேன். இன்னும் இசைப் பாரம்பரியத்துக்குட்பட்ட பல புதிய வியூகங்களையும் அளிக்கவுள்ளேன். அத்துடன் இந்திய கலைஞர்களுடனான பதிவுகளுக்காகவும் யுடியுப்பை பயன்படுத்துகிறேன்.

16.    அறுபது வயதை நெருங்கிவிட்டீர்கள். இந்த அறுபது வருட காலப்பகுதியில் நீங்கள் கலை மீது---குறிப்பாக மிருதங்க இசையின்மீது--- நிகழ்த்திய சாதனைகள் என்று எவற்றைக் குறிப்பிடுவீர்கள்? உங்கள் எதிர்காலத் திட்டம், புதிய முயற்சிகள் பற்றிச் சொல்லுங்கள்.

 பல விடயங்களை முதன் முறையாவும் ஏனையோரை பிரதிபண்ணாமலும் ஆக்கப்பட்ட அரிய விடயங்கள் அடங்கியுள்ள எனது முயற்சிகள் சிலவற்றை யுரியுப்பில் ( You tube) அவதானிக்கலாம்.

ஏனையோர் கைவைக்கத்  தயங்கும் இருகைகளில் இரு  வேறு தாளங்களில் அமைந்த துவிதாள லயவின்யாசங்கள், உலகில் மிகநீளமானதும் 128 அட்ஷரங்களையும்  கொண்ட தாளமான சிம்ம நந்தன தாளம், 108 தாளங்கள், அபூர்வதாளங்கள், அமெரிக்கா, பெங்களுர் கலைஞர்களுடனான பிரதிலோமம், மற்றும் பஞ்சநடைகள் இரு பகுதிகளாக முதன்முறையாகக் கையாளப்பட்டவையே.

மேலும் இந்த நேர்காணலை ஏற்படுத்திய சகபள்ளி மாணவனும், எந்திரவியலாளரும், எழுத்தாளருமான திரு கே.எஸ்.சுதாகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

No comments:

Post a Comment