Friday 26 May 2023

சின்னான் - குறுநாவல்

 

`சின்னான்’ வாழ்வில் என்றும் `பெரியான்’

`சின்னான்’ குறுநாவலின் ஆசிரியரான சண்முகம் சந்திரன் வாசகர்களுக்குப் புதியவரல்லர். ஏற்கனவே ஞானம் பதிப்பக வெளியீடான `ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ சிறுகதைத்தொகுப்பின் மூலம் நன்கு அறியப்பட்டவர். அனுபவம் மிக்க இவரின் எழுத்துகள் மனிதநேயம் கொண்டவை. நல்ல கவிஞரும் கூட. இவரது இந்த குறுநாவலில் கூட ஆத்மாவைத் தொலைத்த பலரைத் தரிசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் கதை நிகழுகின்றது. நெடுந்தீவிற்கு வழங்கப்படும் பெயர்களில் பசுத்தீவும் ஒன்று. அதன் வழியாக நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரன் தனது புனைபெயரை `ஆவூரான்’ என வைத்துக் கொண்டார்.

விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் இக்குறுநாவல் ஏதோ ஒரு மர்மதேசத்திற்குள்  நுழைவதைப் போன்ற பிரம்மையுடன் எம்மை அழைத்துச் செல்கின்றது. கதையின் பின்புலமாக ---மாவிலி துறைமுகம், சாறாப்பிட்டி, ஒல்லாந்த கோட்டை, வெடியரசன் கோட்டை, குவிந்தாக் கோபுரம், நெழுவினிப்பிள்ளையார், முருகன் கோவில், கடற்கரை--- என நெடுந்தீவின் அழகான காட்சிகளை ஆசிரியர் காட்சிப் படுத்தியிருக்கின்றார்.   

சிறுவனாக இருந்த சின்னான், சிறைக்குச் சென்று முப்பது வருடங்களின் பின்னர் திரும்பி வருகின்றான். இந்த இடைவெளிக்குள் ஏற்பட்ட காலமாற்றத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கின்றார் ஆவூரான்.

நெடுந்தீவில் பல சாதியினரும் வாழ்கின்றார்கள். சின்னான் பறைமேளம் அடிக்கும் காத்தானின் மகன். செய்யாத குற்றத்திற்காகச் சிறை சென்று திரும்பி வரும்போது மானுட விடியலின் வெளிச்ச விதையாக வருகின்றான். சிறைச்சாலையில் படித்து, பரீட்சையில் சித்தியெய்தி வாழ்வில் என்றும் `பெரியான்’ ஆகின்றான்.

சாதி வெறி பிடித்த தர்மகர்த்தா தாமோதரம்பிள்ளை, மகள் தாமரை, பத்திரிகை நிருபர் சேது, சிங்களப் பெண் பொலிஸ் போன்றவர்கள் அவர்களின் இயல்புக்கு ஏற்ப சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் நடக்கும் கெடுபிடிகள், பாலியல் பலாத்காரம் போன்றவை தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. அதேவேளை சிறைச்சாலைக்குள் சில நல்ல மனிதர்களும் இருக்கின்றார்கள் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.

இறுதியில் இரட்டை வேடம் போடும் தர்மகர்த்தாவின் போலித்தனம் அம்பலமாகின்றது. அவரது தந்திரங்கள், சூழ்ச்சிகள், ஏமாற்று வேலைகள் எதுவுமே பலிக்கவில்லை.

`சின்னான்’  என்பது பெயர் மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு குறியீடு. உலகில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் இந்த எளியோரைத் தாழ்த்தும் செயலானது நின்றபாடில்லை. அதுவரையில் இத்தகைய நாவல்களின் தேவை இருந்து கொண்டே இருக்கும். வாழ்த்துகள் சந்திரன்.

 

கே.எஸ்.சுதாகர்

 

 

 

 

No comments:

Post a Comment