Saturday 1 June 2024

வளரி – சிறுகதை

வேலைக்குச் சென்றவுடன் கன்ரீனில் இருக்கும் குளிரூட்டியில் எனது மதிய உணவை வைப்பதற்காகச் சென்றேன். அங்கே ஏழெட்டுப் புதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். தொலைக்காட்சி தன்பாட்டில் வேலை செய்துகொண்டிருந்தது. குளிரூட்டியில் உணவை வைத்துவிட்டுத் திரும்புகையில், கையடக்க ஸ்கேனர் ஞாபகத்திற்கு வந்தது. தினமும் வேலை முடிவடைந்து வீட்டிற்குப் போகும்போது சார்ஜ் செய்வதற்காகப் போட்டுவிடும் கையடக்க ஸ்கானரை எடுத்துக் கொண்டு எனது அறைக்குச் சென்றேன்.

அறை, கட்டடத்தின் கடைத் தொங்கலில் இருந்தது. ஃபில்டர் (filter) தொழிற்சாலையின் நிர்வாகம், டிசைன், வடிகட்டும் அமைவைப் பரீட்சிக்கும் பகுதி என்பவை கட்டிடத்தின் முன் பகுதியிலும் ; கன்ரீன், ரொயிலற், உடை மாற்றும் பகுதி என்பவை நடுப்புறமும் ; இறுதியாக ஸ்ரோர் பகுதியும் இருக்கின்றன. எனது அறை மூன்று பக்கங்களும் கண்ணாடிகளினாலும், கிழக்குப்புறம் கொங்கிறீற்றினாலும் ஆனது. நான் அங்கே போனபோது சூரியன் கிழக்குப்புற ஜன்னலுக்குள்ளால் உள்ளே குதித்திருந்தான்.

“குட்மோனிங் ஜோன்…”

விற்பனை மேலாளரும், கொள்முதல் மேளாளர் ஜோனிடமிருந்து பதில் வரவில்லை. அவர் கொம்பியூட்டருக்குள் மூளையைச் சொருகியிருந்தார்.

கண்ணாடிக்கூண்டுக்குப் பின்புறமாக மார்க்கிரட் போர்க்லிஃப்ட் உடன் சறுக்கீஸ் விடத் தொடங்கியிருந்தார். அவர் சீமெந்துத்தரையில் நிரல்நிரலாக ஃபில்டர் பெட்டிகள் அடங்கிய பலற்களை அடுக்கும் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கிழக்குப்புற ஜன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன். நான்கு டிரக் வண்டிகள் ஏற்கனவே வந்திருந்தன. நான் எனது இரண்டு கொம்பியூட்டர் திரைகளையும் இயக்கிவிட்டு, வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்வையிட்டேன்.

பொதுவாக இரண்டு அல்லது மூன்று நிரல்களை மார்க்கிரட் அடுக்கி முடிந்ததும், நான் அவருக்கு இடையூறு இல்லாமல் எனது வேலையைத் தொடங்கி விடுவேன். வேணியர் கலிப்பர், றூளர், கோ நோ கேஜ் எல்லாவற்றையும் எடுத்து மேசை மீது பரப்பி வைத்தேன். இன்று வரவிருக்கும் ஃபில்டர்களின் விபரங்கள் அடங்கிய பத்திரங்களையும், ஸ்கானரையும் ஒரு றொலிக்குள் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினேன்.

“என்ன மார்க்கிரட்… ஸ்ரோருக்கு கொஞ்சப் பேரை புதுசா எடுத்திருக்கினம் போல? கன்ரீனுக்குள்ளை கண்டனான்.”

“கொரோனா தணிய வேலை சூடு பிடிச்சிட்டுது. அதுதான் கஸ்சுவலா கொஞ்சப்பேரை எடுத்திருக்கினம்.”

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மாதிரிக்கு ஒவ்வொன்று எடுத்து றொலிக்குள் போட்டுக்கொண்டு திரும்பும்போது, புதிதாக வேலைக்கு வந்தவர்கள் என்னை எதிர்கொண்டு விலத்தியபடியே ஸ்ரோருக்குள் நுழைந்தார்கள்.

நெடுநேரம் ஃபில்டர்களை அளவிடுவதாலும், கொம்பியூட்டருக்கு முன்னால் இருப்பதாலும் கண்களுக்கு சோர்வு வந்துவிடுகின்றது. வெளியே சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வருவதற்காகப் புறப்பட்டேன்.

அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.முயல்குட்டி போலத் துள்ளிக்கொண்டு வந்த ஒரு சிறுபெண், எங்கள் அறையின் முன்னே நின்று சற்று மூச்சு விட்டு, மீண்டும் துள்ளிக்கொண்டே சுவர்க்கரையோரமாக ஓடினாள். அந்தப் பெண்ணின் சாயலில் யாரோ ஒருவரை நான் எனது வாழ்நாளில் சந்தித்திருக்கின்றேன். அல்லது எனக்குத் தெரிந்த ஒருவரின் மகளாகக்கூட இருக்கலாம். அவள் என்னதான் செய்கின்றாள் என்று பார்ப்பதற்காக அப்படியே நின்று கொண்டேன். ஒரே ஓட்டமாகப் போன அவள் ரொயிலற்றுக்குள் மறைந்தாள். இந்த முயல்குட்டித் துள்ளலை இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னரும் கண்டிருக்கின்றேன். எனது ஊகம் சரிதான். அசப்பில் நியோமி போலவே இருக்கின்றாளே!

காத்திருந்து வரும்போது அவள் பெயரைக் கேட்டேன்.

“வலறி…” என்று சொன்னவள், பின்னர் என்னைத் தெளிவாக்க V A L E R I E என ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டினாள். தொடர்ந்து “நான் ஒரு பிலிப்பினோ” என அறிமுகம் செய்தாள். சப்பை உதட்டைத் திறந்து சிரிக்கும்போது கவர்ச்சியாக இருந்தாள். நாங்கள் இருவரும் கதைப்பதை தூரத்தில் இருந்தபடி ஸ்ரோர் மனேஜர் பார்த்துக் கொண்டிருந்தார். வலறி விரைவாக நடையைக் கட்டினாள்.

ஐந்து அடிக்கும் குறைவான அந்த மஞ்சள் நிறத்து அழகி போவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். கறுப்பு நிற காற்சட்டை அவளின் உருண்டு திரண்டிருந்த தொடைப்பகுதியை இறுகப் பற்றியிருந்தது. அவள் குதித்துக் குதித்து நடக்கும்போது, மேலாடையின் அடிப்பாகம் காற்சட்டையின் அடிப்பாகத்தைத் தொட்டுவிடத் துடித்தது.

அன்று வந்திருந்த ஃபில்டர் தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு `O’ ring இல்லாமல் இருந்தது. ஏறக்குறைய நூறு ஃபில்டர்கள் வரை வரும். ஜோனிடம் சொன்னபோது, தாய்வானில் இருந்த அதன் கொம்பனியுடன் கதைத்துவிட்டு, லோக்கலில் `ஒ ரிங்’ வாங்கித் தருவதாகச் சொன்னார். பின்னர் சிறிது நேரத்தில் என்னை அழைத்த ஜோன், “நாளை கூரியரில் வந்துவிடும்” என்றார்.



மறுநாள் காலை பத்து மணியளவில் `டொக்… டொக்’ என்று சத்தம் கேட்டது. முன்புறமாக கண்ணாடியைத் தட்டியபடி, தன்னிலும் பாதியளவு பெட்டி ஒன்றைச் சுமந்தவண்ணம் வலறி நிற்பதைக் கண்டேன்.

“குவாலிற்றி இஞ்சினியரைச் சந்திக்க வேண்டும்.”

“அது நான் தான்” என்று சொன்னதும் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஸ்ரோர் மனேஜர் சந்திக்கச் சொன்னார்.”

“கொஞ்ச ஃபில்டர்களுக்கு ஒ – ரிங் போட வேணும்.”

மாதிரிக்கு ஒரு ஃபில்டருக்கு ஒ – ரிங் போட்டுக் காட்டினேன்.

 கண்ணாடி அறைக்கு முன்னாலே இருந்த மேசைக்குப் பக்கத்தில் நின்று, ஃபில்டருக்கு ஒ – ரிங் போடுவதும், என்னைப் பார்ப்பதுமாக நின்றாள் வலறி. கூட்டத்தோடு நிற்கும்போது கலகலப்பாக இருந்தவள், தனிமைப்படுத்தப் பட்டபோது கவலையுடன் நின்றாள்.

வலறி ஒ – ரிங்கை சரியாகப் போடுகின்றாளா எனப் பார்த்து வரச் சென்றேன். கதை குடுத்தேன்.

“வலரி… உமக்கு இப்ப என்ன வயசாகுது? பார்த்தால் படிக்கிற பிள்ளை போலத் தெரிகின்றதே!”

“ருவன்ரி ஃபோர் சேர்.”

“இதுதான் உனது முதல் வேலையா?”

“ஆமாம். இதற்கு முன் பிலிப்பைன்ஸில் இருந்தேன்.”

“நீர் ஒஸ்ரேலியாவில் பிறந்து வளர்ந்தனீர் என்றல்லவா நான் நினைத்தேன்.”

“இங்கே மெல்பேர்ணில்தான் தான் பிறந்தேன். ஆனா வளர்ந்தது பிலிப்பைன்ஸில். இரண்டு வயதிலேயே அங்கு போய் விட்டேன்.”

“பிலிப்பைன்ஸில் உனக்கு யார் யார் எல்லாம் இருக்கின்றார்கள்?”

“பமிலி”

“பமிலி” என்று ஒற்றை வார்த்தையில் யார் யாரெல்லாம் அடங்குவார்கள் என மனம் கணக்குப் போட்டது. இவள் வேறு யாரோ பெண் என நினைத்துக் கொண்டு கதையை நிறுத்திக் கொண்டேன்.

அரை மணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டு மீண்டும் கதவைத் தட்டினாள்.

“உனது பமிலியில் யார் யார் எல்லாம் இருக்கின்றார்கள்?”

“நான் பிறந்து சில மாதங்களிலே அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட்டார்கள்.”

அவளை அழைத்து என் அருகேயிருந்த கதிரையில் உட்கார வைத்தேன்.

“இருவருக்கும் போதைப்பழக்கம் அதிகமாக இருந்ததால் நான் சின்னம்மாவுடன் வளர்ந்தேன். அப்புறம் அப்பா இறந்து போய்விட்டதாக அம்மா சொன்னார். நான் ஒருபோதும் என் அப்பாவைப் பார்த்ததில்லை.”

“இப்போ அம்மா எங்கே இருக்கின்றார்?”

“வில்லியம்ஸ்ரவுண் றீஹபிலிரேஷன் சென்ரரில்… போதைப்பொருள் அதிகமாகப் பாவித்ததால் இனிமேல் அம்மா அங்குதான் இருக்க வேண்டும்.”

“உன்னுடைய அம்மாவின் பெயர் நியோமி தானே!”

“எப்படித் தெரியும் சேர்?”

“நானும் நியோமியும், இருபது வருடங்களுக்கு முன்னர் இங்கே மெல்பேர்ணில் ஒன்றாகப் படித்தோம்.”

“ஓ…” ஆச்சரியத்தில் மூழ்கிப்போனாள் வலறி.

“இந்தவார இறுதியில் அம்மாவை சந்திப்பேன். அப்போது உங்களைப் பற்றிச் சொல்லுகின்றேன்.”

“நானும் அம்மாவைப் பார்க்க வருகின்றேன்.”

வலறி மகிழ்ச்சியடைந்தாள். மகிழ்ச்சியில் ஒரு துளி கண்ணீர் என் காலின் முன்னே வந்து விழுந்தது. அது என்னை இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இழுத்துச் சென்றது.



அப்பொழுது ஊரில் பன்னிரண்டு வரை படித்துவிட்டு வெட்டியாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தேன். நாட்டுப் பிரச்சினைகளால் பயந்துபோயிருந்த அப்பா, அவுஸ்திரேலியாவில் இருந்த தனது தங்கையின் வீட்டிற்கு என்னைப் படிப்பதற்காக அனுப்பி வைத்தார். நான் மாமி வீட்டில் தங்கியிருந்து விக்டோரியா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயின்று கொண்டிருந்தேன். படித்துக்கொண்டு பகுதி நேரமாக வேலைகளுக்குப் போனேன். என் மேல் பரிதாபம் கொண்ட மாமி எனக்கொரு பழைய கார் வாங்கித் தந்தார்.

என்னுடன் யூனியில் படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பதினெட்டுப் பத்தொன்பது வயதினராக இருந்தார்கள். நான் அவர்களைவிட நாலைந்து வயதுகள் மூத்தவனாக இருந்தேன்.

ஒரு நீண்ட வீதியின் ஒரு புறம் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. மறுபுறத்தில் குடிமனைகள் இருந்தன. அந்த வீடுகளின் உரிமையாளர்களில் சிலர், தமது வீடுகளை பகுதியாகவோ அல்லது முழுமையாகவொ பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். பல்கலைக்கழக கட்டடத்தின் முன்புறத்தில் பெரியதொரு கார்த்தரிப்பிடம் இருந்தது. பின்புறம் காடு போன்று விரிந்த இயற்கை நிலப்பரப்பு இருந்தது.

முதலாம் ஆண்டில் படிக்கும்போதே நியோமியைச் சந்தித்துவிட்டேன். நியோமி பார்ப்பதற்கு பாவைப்பிள்ளை போல இருப்பாள். அந்தக் கிறிஸ்ரல் பொம்மை தன் நுனி நாக்கு ஆங்கிலத்தில் வகுப்பறையைக் கலக்கிக் கொண்டிருந்தாள். எனக்கு விரிவுரைகள் ஒன்றும் புரியவில்லை. விரிவுரையாளர்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எழுத முடியாமல் இருந்தேன். மாணவர்கள் கதைப்பதும் பெரிதாக விளங்கவில்லை. நியோமி தான் எனக்குக் கொஞ்சம் உதவி புரிந்தாள். தன்னுடைய குறிப்புகளைப் பார்த்து எழுதத் தருவதும், புரியாதவற்றை விளங்கப்படுத்தவும் செய்தாள். நான் எந்த நேரமும் நியோமிக்குப் பின்னாலும் முன்னாலும் திரியலானேன். அது பற்றி அவள் எந்த முறைப்பாடும் சொல்வதில்லை.

பாடங்களைப் பொறுத்து வெவ்வேறு அறைகளுக்குச் செல்லவேண்டி இருந்தது. புறோகிறாமிங், மல்ரிமீடியா போன்ற பாடங்களுக்கு கொம்பியூட்டர் இருந்த அறைகளுக்கும், கொம்மினியுக்கேஷன் ஸ்கில் படிப்பதற்கு பல்கலைக்கழகத்தின் பின் தொங்கலில் அமைந்த வகுப்பறைக்கும் போகவேண்டி இருந்தது. கொம்மினியுக்கேஷன் ஸ்கில் மதியம் கடந்த வேளைகளில் நடப்பதாலும், பின்புறமிருந்த மரங்களிலிருக்கும் பறவைகளின் தாலாட்டினாலும், ஒன்றுமே புரியாததினாலும் அனேகமாக வகுப்பில் தூங்கிப் போனதுண்டு.

அப்படிப்பட்ட ஒரு நாளில், வகுப்பறைக் கண்ணாடி ஜன்னல் மீது வந்து விழுந்த ஒன்று, பலரின் தூக்கத்தைக் கெடுத்து திடுக்கிட வைத்தது. வெளியே சென்று பார்த்த விரிவுரையாளர் வரும்போது கையில் ஒரு பூமராங்குடன் வந்தார். அன்றுதான் நான் முதன்முறையாக ஒரு பூமராங்கைப் பார்த்தேன். பின்னாலே றிசேவ் பகுதியில் விளையாடுபவர்கள் பிழையாக பூமராங்கை எறிந்ததால் அது திசை மாறி இங்கே வந்துவிட்டதென விரிவுரையாளர் விளக்கம் தந்தார். பின்னர் பூமராங்கில் எழுதிக் கிடந்த `ஜேம்ஸ்’ என்ற பெயரை உரத்து வாசித்துவிட்டு மேசைமீது அதனை வைத்தார்.

வகுப்பு முடிந்ததும் விரிவுரையாளரிடம் கதைத்து, `அது தனது நண்பனுடையது’ என நியோமி பெற்றுக் கொண்டாள். தனது புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு, பின்புறமாகவுள்ள ஒற்றையடிப்பாதை வழியே றிசேவ் நோக்கி நடக்கத் தொடங்கினாள். அன்றைய நாளின் இறுதி வகுப்பு அதுவென்பதால் நானும் வீட்டுக்குப் புறப்படத் தயாரானேன்.

நியோமி எங்குதான் செல்கின்றாள் எனப் பார்த்துக் கொண்டு வகுப்பறை வாசலில் நின்றேன். தொலைதூரம் சென்றதும் திரும்பிப் பார்த்த நியோமி, நான் அவளையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் உள்ளே வரும்படி கையை அசைத்தாள். நான் அங்கு போய்ச் சேரும் வரைக்கும் நிலத்தில் குந்திக் கொண்டிருந்தாள்.

ஒற்றையடிப் பாதை என்பதால் அவளை முன்னாலே போகவிட்டு, பின்னாலே நான் நடந்தேன். பற்றைகளும் மரக்கொப்புகளும் குண்டும் குழியும் நடையின் வேகத்தை நிதானப்படுத்தின. அவளின் நடைக்குத் தகுந்தாற்போல் பாதையும் வளைந்து போனது. அவளின் பின்னழகு ஆடி ஆடி ஆசை காட்டியது. எனது கள்ளத்தனத்தை அறிந்த நியோமி, “விரைந்து வா…” என்று சத்தமிட்டாள்.

வளைந்து வளைந்து போக்குக் காட்டிய பாதை இறுதியில் ஆளரவமற்ற வெளி ஒன்றில் மிதந்தது. வெளியைச் சுற்றி இயூக்கலிப்ரஸ் மரங்கள் குடை விரித்திருந்தன.

“அவர்கள் போய் விட்டார்கள்” என்றாள் நியோமி.

“யார் அவர்கள்?”

“மூன்றாம் வருடம் சிவில் எஞ்சினியரிங் செய்கின்றார்கள். எனக்கு ஜேம்ஸ் இருக்கும் இடம் தெரியும். ஜேம்ஸ் என்னுடைய நாட்டவன் தான். விருப்பம் எண்டா என்னுடன் வா… நான் உனக்கு அவர்களை அறிமுகம் செய்கின்றேன்.”

என்னை முன்னாலே தள்ளிவிட்டு, “இந்தத் தடவை நீ முன்னாலே போ…” என்று சொல்லிச் சிரித்தாள்.

இடையில் என் தோள்களை இறுகப் பிடித்து, “இதிலேயே நின்றுகொள். சீக்கிரம் வந்துவிடுவேன். யாராவது வந்தால் கூவென்று சத்தம் போடு” சொல்லிவிட்டு தன்னுடைய பொருட்களை என்னிடம் தந்தாள். பின்னர் முயல் போலத் துள்ளிச் சென்று மரமொன்றின் பின்னால் ஒதுங்கினாள். அவள் குந்தி இருந்து ஆடையை நீக்குவது தெரிந்தது. நான் வேறுபுறம் திரும்பி ஆராவது வருகின்றார்களா எனப் பார்வையைச் செலுத்தினேன். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவள், “சரி போகலாம்” என்றாள்.

பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இருந்த வீதியின் கடைத்தொங்கலில் அவர்களின் வீடு இருந்தது. வீட்டை அண்மிக்கும்போது ஆரவாரம் கேட்டது. அங்கே பலரும் காட்ஸ், கரம்போர்ட் போன்ற உள்ளக விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என்னை அவர்களுக்கு நியோமி அறிமுகம் செய்தாள். நான் அவர்களுடன் ஐய்க்கியமானேன்.

“ஒவ்வொரு வெள்ளி இரவும் இங்கே பலரும் சந்திப்பார்கள். இன்று இரவு நீங்கள் வந்து பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும்” என்றான் ஜேம்ஸ்.

அதன் பின்னர் வெள்ளிக்கிழமைகளில் நானும் அங்கே பிரசன்னமானேன்.



விரிவுரைகள் இல்லாத வேளைகளில் நானும் நியோமியுடன் றிசேவ் பகுதிக்கு சென்று வந்தேன். அங்கே பெரும்பாலும் பந்து அல்லது பூமராங் எறிந்து விளையாடுவோம்.

யூனியில் பயிலும் திருடப்பட்ட தலைமுறையைச் சார்ந்த நண்பன் ஒருவன் எங்களுக்கு `மல்கா’ மரத்தினால் செய்யப்பட்ட நிஜ பூமராங்கை அறிமுகம் செய்து வைத்தான். அதுவரையிலும் பிளாஸ்ரிக்கினால் செய்யப்பட்ட பூமராங்கையே நாங்கள் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அவனுடன் கதைத்ததில் பூமராங் பற்றி சில புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். இலக்கைத் தாக்காத எல்லா பூமராங்குகளும் திரும்பிக் கைக்கு வந்துவிடும் என்பதையும், கங்காருக்களை வேட்டையாடப் பாவிக்கப்படும் பூமராங் இலக்கைத் தாக்குவதுடன் நின்றுவிடும் என்பதையும், பறவைகளைத் தாக்கும் பூமராங் இலக்கைத் தாக்கிவிட்டு திரும்பியும் வரும் என்பதையும் அறிந்து கொண்டேன்.

200 வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆங்கிலேயரைக் கதிகலங்க வைத்த வளரி, பல பேரை ஒரே நேரத்தில் தாக்கவல்லது. அது இரும்பினால் செய்யப்பட்டது. வளரியைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர் அதை அப்போது தடை செய்திருந்தார்கள்.

அந்த வளரி எப்படி பூமராங்காக அவுஸ்திரேலியாவிற்கு வந்தது?

மனிதன் இடம்பெயர்ந்த வரலாற்றைத் தான் இந்த பூமராங் சொல்கின்றதா?

ஒருமுறை விளையாடிக்கொண்டிருக்கும்போது, “பூமராங்கிற்கு உனது மொழியில் என்ன பெயர்?” என்று நியோமி கேட்டாள்.

“வளைதடி அல்லது வளரி” என்று நான் சொன்னபோது, அவள் `வளரி’ என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டாள்.

“வலறி... வலறி... எங்கள் மொழியில் வலறி என்று பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைப்போம்.

உனக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தால் வலறி என்ற பெயரை நீ வைத்துக் கொள். எனக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தால் நானும் வலறி என்று வைத்துக் கொள்கின்றேன்.” சொல்லிவிட்டு நியோமி கெக்கட்டம் போட்டுச் சிரித்தாள்.

“எங்களுக்கு...” என்று நியோமி சொல்லாதது எனக்குப் பெருங்கவலையாக இருந்தது.

ஜேம்ஸ் போன்றவர்களுடன் சேரவேண்டாம் என சில நண்பர்கள் எனக்கு அறிவுரை சொன்னார்கள். ஜேம்ஸ் போதைக்கு அடிமையாகி இருந்ததை காலப் போக்கில் நானும் கண்டுகொண்டேன். இருந்த போதிலும் நியோமியைச் சந்திக்கும் ஆசையில், வெள்ளிக்கிழமைகளில் நான் அவனது இருப்பிடத்திற்குச் சென்று வந்தேன்.

முதலாம் வருடப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் றிசேவ் பகுதியில் நாங்கள் அனைவரும் சந்தித்துக் கொண்டோம்.

அன்று நான் எறிந்த வளைதடி எனது கைகளுக்குத் திரும்பி வந்தபோது, காயப்பட்ட பறவை ஒன்றின் இறகு ஒன்று அதில் ஒட்டியிருந்தது. முதன்முறையாக எனது இலக்கு ஒன்று பறவையைத் தொட்டிருந்தது கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

அன்று முழுவதும் அந்த அடிபட்ட பறவையைத் தேடி காடு கரம்பை எல்லாம் அலைந்து திரிந்தோம். இறந்திருந்தால் அந்தப் பறவை கிடைத்திருக்கும். அது அடியை வாங்கிக் கொண்டு தப்பி ஓடிவிட்டது என்று நண்பர்கள் சொன்னார்கள்.

பரீட்சை முடிந்த அன்று இரவு ஜேம்ஸ் வீட்டில் அமர்க்களமாகப் பார்ட்டி நடந்தது. அந்த விருந்து எங்கள் எல்லோரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

அன்று ஆண், பெண், சீனியர், யூனியர் என்ற பேதமின்றி எல்லாரும் குடித்துக் கொண்டிருந்தார்கள். குடி வெறியில் கத்துவதும், உளறிப் பாடுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. சிலர் வாத்தியக் கருவிகளை கன்னாபின்னாவென்று தட்டி வேண்டுமென்றே சத்தமெழுப்பினார்கள்.

ஜேம்ஸ் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் ஒரு ஜப்பான் தேசத்துப் பெண் இருந்து படித்து வந்தாள். அவளுக்குப் பரீட்சைகள் இன்னமும் முடியவில்லை. அவள் ஒரு தடவை இவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி முறைப்பாடு செய்தாள். “சத்தத்தைக் குறைத்து உங்கள் பார்ட்டியைக் கொண்டாடுங்கள். இல்லாவிட்டால் பொலிசில் முறையிடுவேன். எனக்கு இன்னும் இரண்டு பரீட்சைகள் இருக்கு.” என்றாள் அவள்.

“நல்லா முறையிடு” என்று சொல்லிக் கொண்டே இவர்கள் மேலும் சத்தப் போட்டார்கள். நேரம் போய்க் கொண்டிருந்தது. சிலர் தரையில் சரியத் தொடங்கியிருந்தார்கள். ஜேம்ஸின் கண்கள் இரத்தச் சிகப்பில் மினுங்கின. வார்த்தைகளும் ஏடாகூடமாக வந்துகொண்டிருந்தன. அவன் போதைவஸ்து பாவித்துவிட்டான் எனப் புரிந்தது. நியோமி கூட கிளாசிற்குள் ஊற்றி ஊற்றிக் குடித்துக் கொண்டே இருந்தாள். நானும் தள்ளாடத் தொடங்கிவிட்டேன்.

திடீரென்று இருக்கையை விட்டு எழுந்த ஜேம்ஸ், நியோமியின் அருகில் சென்று அவளைத் தன் மடி மீது இருத்தி வைத்து கொஞ்சத் தொடங்கினான். நியோமி எந்தவித மறுப்புமின்றி சிணுங்கத் தொடங்கினாள். நான் திகைத்துப் போனேன். திடீரென்று அது நடந்ததால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது பார்வையைக் கண்டுவிட்ட நியோமி ஜேம்ஸின் காதிற்குள் ஏதோ முணுமுணுத்தாள். அவன் ஒரு குழந்தையைத் தூக்குவது போல அவளைத் தூக்கி, தள்ளாடியபடியே தனது அறை நோக்கிச் சென்றான்.

எனக்கு அழுகையுடன் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் குனிந்தபடி இருந்தேன். கோபம் கொப்பளிக்க உடல் பதட்டப்பட்டுக் கொண்டது.

ஜேம்ஸும் நியோமியும் காதலர்களா? என்னால் நம்ப முடியவில்லை. நான் ஒரு வெகுளிப்பையனாக இவ்வளவு காலமும் இருந்து கொண்டதையிட்டு என்னையே நான் நொந்து கொண்டேன். இருதயம் வேகமாக அடிக்க, உடம்பு வியர்வை வெள்ளத்தில் நனைந்தது. அருகேயிருந்த எனது கிளாசைத் தூக்கி மிகுதியை மடக்கெனக் குடித்தேன். ஏதோ தீ போல் உடம்பெல்லாம் பற்றி, நாடி நரம்பெல்லாம் படர்ந்து ஊடுருவி, அப்படியே ஆகாசத்தில் மிதப்பது போல உடம்பு பரவசம் கொண்டது. கண்ணை மூடி இருந்த வேளையில் யாரோ எதையோ எனது கிளாசிற்குள் கலந்துவிட்டார்கள்.

திடீரென அசுரப் பலங்கொண்டு அருகே இருந்த கதிரையைத் தூக்கிப் படீரென நிலத்தில் அடித்தேன். அடித்த வேகத்தில் நிலை தடுமாறி நிலத்தில் வீழ்ந்து கொண்டேன். சுற்றி இருந்தவர்கள் என்னைப் பார்த்துக் கெக்கட்டம் போட்டுச் சிரித்தார்கள். “உனக்கு நியோமி என்றால் அவ்வளவு இஸ்டமா?” ஒருவன் என்னைப் பார்த்துக் கேட்டான். அவர்களை முறைத்துப் பார்த்தபோது, அனைவரும் பல உருவங்களாகத் தெரிந்தார்கள். எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

“நான் வீட்டிற்குப் போகின்றேன்” சொல்லிவிட்டுப் புறப்படத் தயாரானேன்.

மெதுவாக காப்பற் தரையிலிருந்து எழுந்து, சுவரைப் பிடித்துத் தடவியபடியே சிறுநீர் கழிப்பதற்காக ரொயிலற் நோக்கிச் சென்றேன். உபாதை நீக்கி மீண்டும் ஹோலிற்கு வரும்போது, ஜேம்ஸின் அறைக்கதவு சாதுவாக நீங்கியிருப்பது கண்டேன். உள்ளே துலாம்பரமான வெளிச்சத்தில் ஜேம்ஸ் நிலத்திலும் நியோமி கட்டிலிலும் கிடந்தார்கள். இருவரது உடம்பிலும் ஒரு பொட்டுத்துணி கூட இருக்கவில்லை. அவர்களின் ஆடைகள் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. காலால் ஜேம்ஸைத் தட்டிப் பார்த்தேன். உடம்பில் அசைவில்லை. வெறி முற்றி இன்னோர் உலகத்திற்குள் அவன் நுழைந்துவிட்டிருந்தான். காலால் அவனுக்கு ஒரு உதை விட்டேன். நியோமியின் உடலில் சிறு அசைவு தென்பட்டது. எதையோ புலம்பியபடி இரண்டு உலகத்திற்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். நான் மெதுவாக அறையின் லைற்றை அணைத்தேன்.

அப்போது வீட்டு முகப்புக்கதவு மீண்டும் தட்டப்படும் ஓசை கேட்டது. கதவை மெதுவாக நீக்கிவைத்து ஹோலிற்குள் என்ன நடக்கின்றது எனப் பார்த்தேன்.

அதே ஜப்பானியப் பெண் தான். யாரோ ஒருவன் கதவைத் திறக்க, உள்ளே வந்து சத்தமிட்டாள். இந்தத் தடவை அவள் சத்தமிடுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை. ஒருவன் அவளது வாயைப் பொத்த, மற்றவன் அவளின் இடுப்பைப் பிடித்து குற இழுவையாக உள்ளே இழுத்துக் கதவை மூடினான்.

வேட்டை தொடங்கியது. பொத்திய வாயிற்குள்ளால் உளறல் சத்தமும், மூச்சு திணறும் ஓசையும் விட்டு விட்டுக் கேட்டது. வேட்டை நாய்களின் ஆர்ப்பரிப்பும், கோழிக்குஞ்சின் கேவலும் தொடர்ந்தது.

சிறிது நேர மெளனத்தின் பின் ஓவென்று கதறியபடி நிர்வாணக்கோலத்தில் கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினாள் அந்த ஜப்பானியப்பெண்.

தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எதுவும் நடக்கலாம். ஓடு என்று மனம் உந்தித் தள்ளியது. யாரும் பார்க்காத வேளையில் அங்கிருந்து வெளியேறி, காரையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போய்விட்டேன்.

ஜேம்ஸ் வீட்டில் நடந்தவற்றை ஒன்றும்விடாது மாமா மாமியிடம் சொன்னேன். மாமாவின் உறவினர் ஒருவர் டாக்டராக பெரும் செல்வாக்குடன் அப்பொழுது இருந்தார். அவருடன் தொலைபேசியில் குசுகுசுத்துக் கதைத்த மாமா, சற்று நேரத்தில் அவருடன் கதைக்கும்படி தொலைபேசியை என்னிடம் நீட்டினார். அவர் என்னுடன் உரையாடத் தொடங்கினார்.

“சம்பவம் நடந்த நேரத்தில் நீ அங்கே இருந்தாயா?”

“நான் அப்போது இன்னொரு அறையில் இருந்தேன்.”

“சரி நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றேன்.”

பொலிஸ் வந்து அங்கிருந்த எல்லாரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள் என மறுநாள் அறிந்தேன். பல வாரங்களாக அந்த வழக்கு இழுபறிப்பட்டது. அந்த ஜப்பானியப் பெண் அவர்களில் நான்கு பேரை அடையாளம் காட்டியதாகவும் - அவளை றேப்பிங் செய்தவனுக்கு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனையும், மற்றும் அதற்குத் துணை போன இருவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் கிடைத்தது. ஜேம்ஸும் நியோமியும் வேறு அறையில் இருந்ததனால் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டார்கள்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அனைவரும் பிரிந்து வேறுவேறு திசைகளில் சென்றுவிட்டோம். என்னை பெரியதொரு `தத்து’ கழிந்தது என்று சொல்லி, அவுஸ்திரேலியாவின் இன்னொரு மாநிலமான பிறிஸ்பேர்ண் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக மாமி அனுப்பி வைத்தார். எனது அடுத்த இருபத்தைந்து வருடங்களும் பிறிஸ்பேர்ணில் கழிந்தது. அந்தக் காலப்பகுதியில் நான் ஒருபோதும் மெல்பேர்ண் சென்றதில்லை. மாமி குடும்பத்தினர் அவ்வப்போது வந்து என்னைப் பார்த்துச் செல்வார்கள்.

முப்பது வயதில் புதிய உறவும் பொறுப்புக்களும் கைகூடியது.

மெல்பேர்ணிற்கு வேலை இடமாற்றம் கிடைத்துச் சென்றபோது, அங்கே எல்லாமே எனக்குப் புதிதாக இருந்தது.



சனிக்கிழமை காலை பத்து மணியளவில் றீஹபிலிரேஷன் சென்ரரைச் சென்றடைந்தேன். அந்தக் கட்டடத்திற்கு முன்னால் இருந்த பெரிய விருட்சம் போன்ற மரமொன்றின் கீழ் வலறி என்னைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

றீஹபிலிரேஷன் சென்ரர் மெல்பேர்ணின் ஒரு அந்தலையில் கடற்கரையை அண்மித்து இருந்தது.

அறைக்குள் மெல்லியதாக நறுமணம் வீசியது. வலறி முன்னதாகவே வந்து அம்மாவின் அறையைச் சுத்தம் செய்திருந்தாள். நியோமியை என்னால் அடையாளம் காண முடியவில்லை. கூன் விழுந்த முதுகும், துருத்திய கழுத்து எலும்புகளும் அவளின் முழுநீள வெள்ளை நிற ஹவுணுக்குள்ளால் தள்ளிக்கொண்டிருந்தன. குழி விழுந்த கன்னங்கள் போய், குழிக்குள் விழுந்த கண்களக, அவளின் உடலை இப்பொழுது நோய் தான் இயக்கிக் கொண்டிருந்தது.

வலறி என்னைப்பற்றி முன்னரே எல்லாம் சொல்லியிருந்ததால் எனது வருகை நியோமிக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தாள். சிரிப்பில் வேதனை தெரிந்தது. அந்நாளில் இடுப்புவரை படர்ந்திருந்த கூந்தல், இன்று தொட்டாற்சிணுங்கி போல் கழுத்துவரை சுருங்கியிருந்தது.

முன்னாலே இருந்த இருக்கையைக் காட்டி என்னை அமரும்படி சைகை செய்தாள்.

“வலறி… நீயும் இரு…” பற்கள் இல்லாததால் அவளின் பேச்சு உளறுவது போல் இருந்தது.

ஆனால் வலறி இருக்கவில்லை. தொடர்ந்தும் நின்றுகொண்டிருந்தாள்.

சற்று நேரம் பொறுமையாக என்னைப் பார்த்தபடி இருந்தாள் நியோமி.

“கடைசியாக நீ எறிந்து விளையாடிய பூமராங்கை இன்னமும் வைத்திருக்கின்றாயா?”

நான் `ஆம்’ என்று தலையாட்டினேன். அவள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கின்றாள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

“அதுக்குப் பிறகு நடந்தவை எல்லாவற்றையும் நீ அறிந்திருப்பாய் என நினைக்கின்றேன்.”

“சிலவற்றை அறிந்துகொண்டேன். ஆனா எது உண்மை எது பொய் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!”

“அதை நீ தான் சொல்ல வேண்டும்.”

அவளின் அந்த வார்த்தைகளினால் நான் திடுக்கிட்டேன்.

“உலகத்திலே சிலர் நல்லவர்களாகவே வாழ்ந்துவிட்டுப் போய் விடுகின்றார்கள். அவர்களாகச் சொன்னால் ஒழிய, அவர்களுக்குள்ளை ஒழிஞ்சு கிடக்கிற இரகசியங்கள் உலகத்துக்குத் தெரியப் போவதில்லை.” நியோமி என்னையும் வலறியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.

“நான் பக்கத்தில் இருக்கின்ற கடைக்குப் போய்விட்டு வருகின்றேன். நீங்கள் நீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கின்றீர்கள். மனம் விட்டுக் கதையுங்கள்.” சொல்லிவிட்டு வலறி புறப்பட்டுக் கொண்டாள்.

“வலறி பிறந்து எட்டு மாதங்களில் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம்.

ஜேம்ஸ் இப்போது இல்லை என்பது உனக்குத் தெரியுந்தானே! நாங்கள் பிரிந்து நான்கு வருடங்களில் ஜேம்ஸ் இறந்துவிட்டான்.”

“நீங்கள் இருவரும் பிரிந்ததை நான் அறிந்திருந்தேன். ஆனா எதற்காகப் பிரிந்தீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.”

“சொல்கின்றேன் கேள்… அவனுக்குப் போதை ஏறும் போதெல்லாம், குழந்தை மீது பாய்வான். வலறி தனக்குப் பிறக்கவில்லை என்று சத்தம் போடுவான். இரவு, சாமம் என்றெல்லாம் பாராமல் பொருட்களைப் போட்டு உடைப்பான். எனக்கும் அந்த நேரத்தில் போதை என்றால் வீடு போர்க்களம் தான். அப்படியான வேளைகளில் தான் அண்டை அயலார் பொலிசுக்குப் போட்டுக் குடுத்தார்கள். நாங்கள் இருவரும் போதைவஸ்து அதிகமாகப் பாவித்ததால், பொலிஸ் குழந்தையை எங்களிடமிருந்து பிரித்தெடுத்தது. அப்போது அவுஸ்திரேலியாவில் இருந்த என்னுடைய தங்கை வலறியை வளர்த்தெடுக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டாள். பின்னர் அவர்கள் பிலிப்பைன்ஸ் போகும்போது வலறியையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்.

நான் உழைக்கும் பணத்தில் அரைவாசியைத் தங்கைக்கு அனுப்பி வைப்பேன். வலறியை நான் அருகேயிருந்து வளர்க்கவில்லை என்றாலும் அவள் இன்று இங்கே வந்து என்னை நன்றாகவே பார்க்கின்றாள்.

ஜேம்ஸின் இழப்புடன் போதையை நான் விட்டுவிட்டேன். ஆனால் `அது’ என்னை விடவில்லை. என்னுடன் விளையாடத் தொடங்கிவிட்டது.

உன்னை அந்த வயதிலை புத்திமதி சொல்லித் திருத்த நல்ல உறவுகள் இருந்திச்சினம். அதாலை இப்ப கோபுரமா உயர்ந்து நிக்கிறாய். எனக்கு என்னுடைய பெற்றோரும் சரியா அமையேல்லை, நண்பர்களும் சரியாக அமையேல்லை.

உனக்கு ஜேம்ஸ் என்னை விட்டு ஏன் பிரிந்தான் என்று இன்னமும் சொல்லவில்லையல்லவா? அவன் கடைசியாகப் பிரியும் முன்னர், டி என் ஏ (DNA) பரிசோதனை மூலம் வலறி தன்னுடைய குழந்தை இல்லை என்று உறுதி செய்துவிட்டுத்தான் பிரிந்தான்.

அதில் எனக்கும் சந்தேகம் இருந்ததுதான். கடைசியாக நடந்த விருந்தில் ஜேம்ஸ்சின் அறைக்குள் புகுந்த இன்னொரு மிருகத்தின் வேலை அது!

ஒரு பெண்ணுக்கு தன்னுடையவனின் உடம்பையும் பிற ஆடவனுடைய உடம்பையும் வேறுபடுத்தத் தெரியாதா என்ன?”

நியோமியின் அந்த வார்த்தைகள் என்னைச் சுட்டெரித்தன.

தேவர்களின் தலைவன் இந்திரன், கானகத்தை இருளாக்கிவிட்டு அகலிகையை அடையாமல் – கெளதம மகரிஷியின் உருவத்தில் மாறி அகலிகையை அடைந்ததன் காரணத்தைப் புரிந்து கொண்டேன்.

“காதல் ஒற்றைக்கண்ணிலும் காமம் ஒற்றைக் கண்ணிலுமாக அலைந்து திரிந்த மிருகம் அது!” நியோமிக்கு மூச்சு வாங்கியது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் செத்த பாம்பை அவள் மீண்டும் மீண்டும் அடித்தாள்.

வெளியே வலறி அங்குமிங்குமாக நடமாடும் நிழல் தெரிந்தது.

“நான் போய் வருகின்றேன். அடுத்த தடவை வரும்போது மனைவி பிள்ளைகளையும் அழைத்து வருகின்றேன்.” எனது நிலையை மறைமுகமாகச் சொன்னேன்.

“வலறியும் வரட்டும். வந்த பின்னர் போங்கள்.”

”அவள் வந்துவிட்டாள். நாங்கள் கதைப்பதை குழப்ப விருப்பமில்லாமல் வெளியே நிற்கின்றாள்.”

நான் வெளியே சென்று வலறியைக் கூட்டி வந்தேன்.

“வலறி… உன்னைப் பற்றி அம்மா எவ்வளவு பெருமையாகச் சொல்கின்றார்.” வலறிக்குக் கை குடுப்பதற்காக கையை நீட்டினேன். அவள் அதை விடுத்து என்னை இறுக அணைத்துக் கட்டிப் பிடித்து, ஏதோ தனது பாஷையில் `பாப்ப’ எனச் சொல்லிக் கொண்டாள். ஒரு மகளுக்குரித்தான பாசம் பரிவு ஸ்பரிசம் என் உடலினுள் ஊடுருவியது. அந்தப்பிடி இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருந்திருக்கக் கூடாதா என மனம் ஏங்கியது.

 

2 comments:

  1. `வளரி’ மனதை அள்ளிக் கொண்டது. மனித உடலுள் உள்ள மனம், அறிவு என்ற இருவேறு துறைகளில் அறிவு மயக்கமடையும்போது மனம் உணர்ச்சியால் உந்தப்படுகிறது. தவறுகள் தாமதமாகவே நடக்கின்றன. கட்டுப்பாட்ட்டை இழந்த மனத்தினை காமம் காவு கொண்டு விடுகிறது. சுதாகர் அவர்கள் அற்புதமாக வடித்திருக்கின்றார். பாராட்டுகள் - மா.குலமணி, நயினாதீவு / ஞானம் 2024 ஏப்ரல் (287)

    ReplyDelete
  2. 'வலறி' தான் இக்கதையில் 'வளரி' என்ற குறியீட்டுக்கான கதாபாத்திரம்.
    கர்மவினைகள் எவ்வாறோ எம்மைப் பின்தொடரும் என்பதற்கான கதை. நல்வாழ்த்துகள். - Selvaranjany Subramaniam

    ReplyDelete