அற்புதமான புத்தகத்தின் தலைப்பு. இலங்கையின் தமிழ் மொழிபெயர்ப்புகள் கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதிய முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் ஒரு ஒளிக்கீற்றாக கெகிறாவ ஸுலைஹாவின் இந்தப் புத்தகம் விளங்குகின்றது.
ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16 சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்த படைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.
பின் இணைப்பாக தொகுப்பில்
வந்த கதைகளின் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களையும் ஆசிரியர் இணைத்திருப்பதன் மூலம்,
நமக்கு அவர்களைப்பற்றிய பின்னணியையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.. கூடவே `மொழி
மாறி வந்த பிரதிகளும் அவை பேசும் அரசியலின் பொதுமையும்’ என்ற
தலைப்பில் மேமன்கவி அவர்களின் பின்னுரையும் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு நாடுகளின் கலாசாரப்
பின்னணிகள் கொண்ட இந்த பதினாறு கதைகளின் மூலப்பிரதிகளைத் தந்தவர்களில் ரவீந்திரநாத்
தாகூர், லியோ டோல்ஸ்டோய், கே.ஏ.அப்பாஸ், ஓ ஹென்றி, ஒஸ்கார் வைல்ட், அண்டன் செக்கோவ்ஃ
போன்றவர்களை ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கின்றேன். பேட் கார், நாசிர் ஜெஹாங்கீர், அப்துல்
கனி பெக் அத்தார், நயீமா அகமட், ஸாகி(எச்.எச்.முன்ரே), காத்தரீன் மான்ஸபீல்ட், புன்யாகாந்தி
விஜேநாயக்க, சீதா குலதுங்க, கிரிகோரியா ஃபியோன்டெஸ் போன்றவர்கள் எனக்குப் புதியவர்களாக
இருக்கின்றார்கள்.
மூலமொழியில் இருக்கும்
படைப்பின் இரசனை எந்தவிதத்திலும் குறைந்துவிடாமல் அப்படியே தமிழுக்குக் கொண்டுவந்திருப்பது
பாராட்டுக்குரியது. பலரது படைப்புகள் இதில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் வாசிப்பில்
வித்தியாசமான அனுபவம் கிட்டியது. கூடவே தொகுப்பின் கதைகள் மாறி மாறி வெவ்வேறு நாடுகளுக்கும்
பயணிப்பதும்கூட ஒரு சிறப்புத்தான். இந்தியா – வங்கம், அமெரிக்கா – டெக்காஸ், இந்தியா
– காஷ்மீர், பர்மா, பிரித்தானியா, இலங்கை, நைஜீரியா, வட அமெரிக்கா – மெக்ஸிக்கோ, சோவியத்
ரஷ்யா, அமெரிக்கா, அயர்லாந்து – டப்ளின் போன்ற நாட்டின் எழுத்தாளர்களையும் அவர் தம்
படைப்புகளையும் ஒரே புத்தகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது.
இதில் உள்ள பல கதைகள் வேறு
மொழிகளில் எழுதப்பட்டு, ஆங்கிலத்திற்கு மாறி பின்னர் அங்கிருந்து தமிழுக்கு வந்திருக்கின்றன.
சில நேரிடையாகவே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கதைகளுக்குத்
தகுந்தபடி இவரது மொழிபெயர்ப்பு வளைந்து குடுப்பதை வாசிக்கும்போது கண்டுகொள்ளக் கூடியதாக
இருக்கின்றது.
பெரும்பாலும் இந்தக் கதைகளில்
சிறுவர்களின் வாழ்வு அடிநாதமாக இருக்கின்றது. ஆசிரியர் சொல்வது போல, அவர்களின் குரல்
பெரியவர்களுக்கு எதையோ ஒன்றைச் சொல்லிச் செல்கின்றது. சிறாரை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தாலும்,
கதைகள் என்னவோ வயதுவந்தவர்களுக்கு உரியவைதான்.
முதல் கதையான ரவீந்திரநாத்
தாகூர் எழுதிய `என் பிரபுவே, அந்தக் குழந்தை`, தொகுப்பிற்கு
சிகரம் வைத்தால் போல் இருக்கின்றது. சமீபத்தில் குற்றால அருவியில் ஒரு சிறுவன் அள்ளுப்பட்டுச்
செல்லும் காட்சியை இணையத்தில் பார்த்தபோது ஏற்பட்ட பதைபதைப்பு, இந்தக் கதையைப் படிக்கும்போது
ஏற்பட்டது. எஜமானின் குழந்தையை குளமொன்றில் தொலைத்துவிட்டு நிற்கும் ரைச்சரன் என்ற
சிறுவனின் பதைபதைப்பும், கண்ணீர் ததும்பிய அவனது முகமும் என்றும் நினைவில் நிற்பவை.
பின்னாளில் அவனின் தியாகம் அளப்பரியதாகின்றது. ஆசிரியர் சொல்வது போல் அன்பு, நம்பிக்கை,
நல்லெண்ணம், நல்லிணக்கம், மனிதாபிமானம் கொண்ட
எழுத்து இது.
இந்தத் தொகுப்பில் இருக்கும்
காஸ்மீர் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கதைகளும் அந்தப் பிரதேசத்திற்கான பிரச்சினைகளைத்
தொட்டுச் செல்பவை. இந்தக் கதைகள் நீர்ஜா மாத்தூ மொழிபெயர்த்த காஸ்மீர் சிறுகதைத் தொகுப்பான
`The Stranger Beside Me’ இல் இருந்து பெறப்பட்டிருக்கின்றன.
புன்யாகாந்தியின் `குரங்குகள்’ கதை,
சிறுவர்களை சுதந்திரமாக அவர்களின் வழியில் செல்லவிடாது, இளம் வயதில் மதத்திற்குள் திணிக்கும்
செயலைச் சாடுகின்றது. இதில் வரும் சிறுவனின் உளவியல் சிறப்பாகச் சொல்லப்படுகின்றது.
கிரிகோரியோ ஃபியோண்டெஸ்
எழுதிய `கடவுளுக்கோர் கடிதம்’ கதையின்
முடிவு நகைச்சுவையைத் தந்தாலும், அது கொண்டிருக்கும் பொருள் மிகப் பெரியது. இயற்கை
எல்லை மீறும்போது கடவுளின் மீதான நம்பிக்கை வலுக்கின்றது. வித்தியாசமான முடிவு கொண்ட
கதை.
`Little Girls Wiser
Than Men’ என்ற லியோ டோல்ஸ்டோயின் கதையின் தலைப்பை, ஆசிரியர் பொதுப்படையாக
`சிறுவர்கள் பெரியோரைவிட புத்திசாலிகள்’ என மொழிபெயர்ப்புச்
செய்த்திருக்கின்றார். இந்தக் கதையில் சிறுமிகள் இருவர் விளையாடும்போது தமக்குள் பிரச்சினைப்பட்டுக்கொள்ள,
அதன் நிமிர்த்தம் பெரியவர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். அடுத்த கணமே சிறுமிகள்
சமாதானம் கொண்டு மீண்டும் விளையாடுவதைப் பார்த்து பெரியவர்கள் திகைப்படைந்து கொள்வதைக்
காட்டுகின்றது.
சிறு வயது நட்பு, இருபது
வருடங்களில் எப்படி மாறிவிடுகின்றது என்பதைச் சொல்கின்றது ஓ.ஹென்றி எழுதிய `இருபது
வருஷங்களின் பிறகு’ சிறுகதை. முடிவில் திருப்பத்தை வைத்து அற்புதங்களை நிகழ்த்தும்
எழுத்தாளர் ஓ.ஹென்றி.
தன் மகன் இறந்த துயரத்தை
ஏனையவருக்கும் சொல்லி ஆறுதல் கொள்ளத் துடிக்கும் ஒரு குதிரைவண்டிக்காரனின் கதை அண்டன்
செக்கோவ்ஃப் எழுதிய `புலம்பல்’ . இறுதியில் அவனது கதையைக் கேட்பது அவனது வயது முதிர்ந்த
குதிரைதான். `உனக்கு
ஒரு குட்டி இருந்து அது இறந்து போனால் உனக்கு எப்படி இருக்கும்… துயரமாய் இருக்காதா?’ என்பதுடன்
கதை முடிகின்றது.
இந்தக் கதைகளை எந்தச் சந்தர்ப்பத்தில், ஏன் தெரிவு செய்து
மொழிபெயர்த்தேன் என்பதை கெகிறாவ ஸுலைஹா அவர்கள் முன்னுரையில் சொல்வதாலும் ; மொழிபெயர்ப்பு
முயற்சிகள் பற்றியும் கதைகளைப் பற்றியும் மேமன்கவி அவர்கள் பின்னீடாகத் தந்திருப்பதாலும்
; முன்னுரை, பின்னிணைப்பு, பின்னீடு என்பவை இங்கே மிகவும் முக்கியம் வாய்ந்தவை ஆகின்றன.
கெகிறாவ ஸுலைஹா அவர்கள் மொழிபெயர்ப்புக்காக பல விருதுகளைப்
பெற்றிருக்கின்றார். இவரது கற்பித்தல் தொழிலும், தலைமைத்துவமும், ஆர்வமும் மொழிபெயர்ப்பில்
பல பரிமாணங்களைத் தொட்டு நிற்பதற்கு உதவுகின்றன. தொடர்ந்தும் இவரிடமிருந்து இத்தகைய
முயற்சிகளை எதிர்பார்க்கின்றேன்.
•
திண்ணை (11.06.2024)
No comments:
Post a Comment