Sunday, 1 September 2024

ரகசிய பொலிஸ்

 
அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா திஜேட்டர் கட்டப்படவில்லை.

 காங்கேசன் துறை வீதியில் இருக்கும் ராஜநாயகியில் தான் அதிகம் படம் பார்ப்போம். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்தான்.

 அண்ணா படிப்பை விட்டு அதிகம் படம் பார்க்கின்றார். தான் கெட்டுப்போவதுமல்லாமல் தம்பியையும் குழப்புகின்றார்என்பது அக்காவின் குற்றச்சாட்டு. அடிக்கடி அம்மாவிடம் முறையிடுவார். நாங்கள் படம் பார்க்கப் போகும் முயற்சிகளை தன்னால் ஆனமட்டும் குழப்புவார்.

 என்னிடம் சினிமாப் பாட்டுக்கள் அடங்கிய சிறுசிறு புத்தகங்கள் இருந்தன. அவற்றை அண்ணா வாங்கிப் படித்துவிட்டு என்னிடம் தருவார். சிலவேளைகளில் அவற்றில் சில காணாமல் போய்விடும். இந்தத்  தடவை ரகசியப் பொலிஸ் 115 காணாமல் போய்விட்டது. அவற்றைத் தேடி அண்ணாவின் பொக்கிஷங்கள் அடங்கிய அறைக்குப் போவேன். அப்போது அங்கே அக்கா எதையோ அங்கு தேடிக் கொண்டிருந்தார். அவரது கையில் வினோத எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த கொப்பி ஒன்று இருந்தது. அக்கா சுற்று முற்றும் பார்த்துவிட்டு அந்தக் கொப்பியை அங்கே வைத்துவிட்டுப் போனார்.

 அதன் பின்னர் நான் அங்கே போனேன். அந்தக்கொப்பி தனிச்சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது. மருந்திற்கும் வேறு எழுத்துக்கள் இல்லை. அதற்குள் .பொ.115 இருந்தது. அண்ணா தான் பார்க்கும் படங்களை சிங்களத்தில் எழுதி வைத்திருந்தார் என்பது புரிந்தது. அக்கா ஒருவேளை சிங்களம் படிக்கின்றாரோ?

அதன்பின்னர் பள்ளிக்கூட நண்பன் ஒருவனிடமிருந்து சிங்கள அரிச்சுவடி ஒன்று கடனாகப் பெற்றுக் கொண்டேன். அக்காவிற்குப் போட்டியாக நானும் சிங்களம் படிக்கத் தொடங்கினேன். அதன்மூலம் அண்ணாவின் அந்தக் கொப்பியைப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.

முதல் இரண்டு மூன்று எழுத்துக்களை வைத்துக்கொண்டு படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்கக் கூடியவாறு இருந்தது. வசந்த என்பது வசந்தமாளிகை, குடியிருந்த என்பது குடியிருந்தகோயில். ஒரு புதிர்ப்போட்டி போல அந்தக்கொப்பியுடன் விளையாடத் தொடங்கினேன். பெரும்பாலான எம்.ஜி.ஆர் படங்களுக்கு எதிராக 2, 3 என்றும், சிவாஜியின் வசந்தமாளிகைக்கு 2 எனவும் ஏனைய படங்களுக்கு 1 எனவும் இலக்கமிடப்பட்டிருந்தன. ஓகோ எம்.ஜி.ஆர் படங்களை மூன்று தடவைகள் பார்த்திருக்கின்றார். அந்த வரிசையில் இருந்த கடைசிப்படம் ரகசியப் பொலிஸ் 115. அதற்கு இன்னமும் இலக்கமிடப்படவில்லை.

 அடுத்தநாள் பாடசாலையில் விசாரித்தேன். சுண்ணாகம் நாகம்ஸ் திஜேட்டரில் ஓடுவதாகச் சொன்னார்கள். அண்ணாவை வால் பிடிக்கத் தொடங்கினேன். அவர் எள் என்று சொல்ல முன்னர் நான் எண்ணையாகி நின்றேன். வசதியான நேரம் வந்தபோது ரகசியப் பொலிசைப் பிடிப்பதற்கு நானும் வருகின்றேன் என்று சொல்லி வைத்தேன்.

 


அடுத்த சனிக்கிழமை 5.30 படத்திற்குப் புறப்பட்டோம். அக்கா பதகளிப்பட்டு அங்கும் இங்கும் ஓடித் திரிந்தார். வீட்டிற்குள்ளிருந்து சைக்கிளை உருட்டி வெளியே கொண்டுவந்தார் அண்ணா. காலால் ரயரை மிதித்துக் காற்றுப் பார்த்தார். கிடுகு வேலிக்கு முன்னால் வந்ததும், “ஐஞ்சு நிமிஷம் திரும்பி நில்என்று கட்டளையிட்டார். கிடுகு வேலிக்குள் ஒளித்து வைத்திருந்த சைக்கிள் பம்பை உருவி எடுக்கும் சத்தம் கேட்டது. “இதுக்குள்ளை ஒளிச்சு வைச்சிருக்கிற விஷயத்தை ஒருத்தருக்கும் சொல்லப்படாதுஎன்றார். கூடவே சைக்கிள் பம்புடன் ஒரு சிகரெற் பெட்டியும் இருந்தது.

 சைக்கிள் சுண்ணாகம் நோக்கி விரைந்தது. மழை தூறத் தொடங்கியது. லேஞ்சியை எடுத்து தலைக்குக் கட்டினோம். குடை விரித்து சைக்கிள் ஓடினால் ஐஞ்சரை மணிக்கும் மல்லாகத்தைத் தாண்டமாட்டோம் என்றார் அண்ணா. ‘ஆகாஎன்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்பாட்டுடன் சைக்கிள் பறந்தது.

 திஜேட்டருக்கு முன்னால் உள்ள பெட்டிக்கடையில் பீடா வெற்றிலை வாங்கிக் கொண்டோம். கூடவே கடதாசிச் சுருளிற்குள் அவித்த பட்டாணிக்கடலை - உப்பு மிளகாய்த்தூள் தூவி எலுமிச்சம்பழச்சாறு சிவிறி எடுத்துக் கொண்டோம். சைக்கிளைத் தரிப்பிடத்தில் நிற்பாட்டினோம்.

 திஜேட்டரில் ஒரே சனக்கூட்டம். வரிசை வளைந்து வளைந்து, கம்பிகளுக்கிடையே கட்டப்பட்டிருந்த கயிற்று நிரல்களிடையே அசைந்தது.

 படம் ஆரம்பிப்பதற்கு இன்னமும் 15 நிமிடங்கள் இருந்தன. மெதுவாகத் தூறிய மழை சோனாவாரியாகியது. கைவசம் கொண்டு சென்ற குடையை விரித்துப் பிடித்தோம்.

 முன்வரிசையில் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது. திரையரங்கு நிறைந்துவிட்டது, ‘ஹவுஸ் ஃபுல்என்று கத்தினார்கள். உப்பிடித்தான் சிலர் புரளியைக் கிழப்பி வரிசையைக் குழப்பி தங்கடை காரியத்தைச் சாதித்துப் போடுவார்கள். பிளக்கிலை ரிக்கெற் விக்கிறவையின்ரை விளையாட்டாகவும் இருக்கலாம். நாங்கள் கவுண்டர் வரையும் வரிசையில் நகர்ந்து சென்று ஹவுஸ் ஃபுல் என்பதை உறுதி செய்து கொண்டோம்.

 அரைமணி நேரம் வரிசையில் நின்றது வீணாகிவிட்டது.

 இனி அடுத்தகிழமை பார்ப்போம்.”

 சைக்கிளை ஸ்ராண்டில் இருந்து இறக்கும்போது பின் சில்லு காற்றுப் போய் குந்தி இருந்தது.

 எதிர்ப்புறமாக ஒரு சைக்கிள்கடை இருந்தது. அங்கே இருந்த வயது முதிர்ந்தவர் சைக்கிளைத் திருத்தினார். பத்து நிமிடங்கள் எடுத்தன.

 தம்பி! ஆரோ ஒரு ஆள்  ரயரை சின்ன ஊசியாலை குத்தி விளையாடியிருக்கின்றார்பொக்கை வாயால் சிரித்தார் அந்த முதியவர்.

 அது பெரியவரேரகசியப் பொலிஸ் 115” என்றார் அண்ணா. முதியவருக்குப் புரியவில்லை. எனக்கும் தான்.

 வெளியே மழை விட்டிருந்தது. வீடு நோக்கிப் புறப்பட்டோம்.

அண்ணாயார் அந்த ரகசியப் பொலிஸ்115?” காதிற்குள் மெதுவாகக் கேட்டேன்.

 வீட்டிற்கு வா காட்டுகின்றேன்.”

 வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததும் அக்கா எங்கள் இருவரையும் மணிக்கூட்டையும்  மாறி மாறிப் பார்த்தார். பின் உதட்டிற்குள் சிரித்தபடி உள்ளே போனார்.

 பொலிஸ் சிரிக்குதுஎன அண்ணா என் காதிற்குள் சொன்னார்.

 (அந்த அருமையான படத்தை அன்று பார்க்கத் தவறியதால், 40 வருடங்கள் மேலும் காத்திருந்து பார்க்க வேண்டியதாயிற்று.)

No comments:

Post a Comment