சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தற்செயலாகத்தான் அவரைக் கண்டேன். தன்னந்தனியாக ஒரு மேசையில் அமர்ந்திருந்தார். வழுக்கைத்தலை. வெள்ளை வெளேரென்ற ஆடைக்குள் புதைந்திருக்கும் தளர்ந்த உடல். முகத்தில்கூட சுருக்கங்கள் விழுந்து விட்டன. மூக்குக்கண்ணாடியினூடாக மேசையை உற்றுப் பார்த்தபடி இருந்தார்.
அவரை எங்கேயோ பார்த்திருப்பதாக மனம்
சொன்னது.
வர்ணஜால விளக்குகளின்கீழ், வட்ட வட்ட ரேபிள்களில், ஆண்களும் பெண்களுமாக சுற்றிச் சூழ
இருந்து உணவருந்தும் அந்த ரம்மியமான காட்சியிலிருந்து அவரது ரேபிள் வேறுபட்டுக்
காணப்பட்டது. அவர் ஏன் அப்படித் தனித்துப் போனார்?
"அட தயாளன்! என்ன அவரையே உற்றுப் பார்த்தபடி இருக்கிறாய்? ஆர் எண்டு தெரியுதா?" என்றபடி குணசேகரன் என்னை நோக்கி
வந்தான். குணசேகரன் மணப்பெண்ணின் அண்ணன். என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப்
படித்தவன். அவனுக்காகத்தான் நான் கடல் கடந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கே கனடா வந்திருக்கின்றேன்.
"எங்கட இரத்தினசிங்கம் மாஸ்ரடா!"
இரத்தினசிங்கம் மாஸ்டர்!
ஒரு காலத்தில் எப்படிக் கொடிகட்டிப்
பறந்தவர்! அந்த ஒரு சம்பவத்தின் பின்னர், எல்லோருக்கும் வேண்டாதவராகிப் போய் விட்டார்.
"பூச்சி இருந்திருந்தானெண்டா - இப்ப எங்களைப் போல - குழந்தை குட்டியளோடை
நல்லா இருந்திருப்பான். என்ன குணம்?"
"நடந்து முடிஞ்சதுகளைப் பற்றிக் கதைச்சு இனிப் பிரயோசனம் இல்லை. நீ
வடிவாச் சாப்பிடு தயாளன். சாப்பிட்ட பிறகு ஒருக்கா மாஸ்டரோடையும் கதை"
மறப்பதும் மன்னிப்பதும் மனிதகுணம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டு அடுத்த
ரேபிளுக்குத் தாவினான் குணசேகரன். மறப்பதும் மன்னிப்பதும் மனிதகுணம்
என்றால், குற்றத்தை
யார் சுமப்பது?
●
அப்பொழுது நாங்கள் நாலாம் வகுப்புப்
படித்துக் கொண்டிருந்தோம். இரத்தினசிங்கம் மாஸ்டர் பாடசாலையில் மிகவும்
பொல்லாதவர். அவர் மூக்குப்பொடி போடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் பயமாக
இருக்கும். இரண்டு மூக்கின் துவாரங்களையும் அகல விரித்து 'ம்' என்று ஒரே
இழுவையாக பொடியை உள்ளே இழுப்பார். பன்றியள் மூக்கை விரித்தால் போல் இரண்டு கறுப்பு
வட்டங்கள் விரிந்து சுருங்கும்.
இரத்தினசிங்கம் மாஸ்டரின் வாயிலிருந்து
நல்ல வார்த்தைகள் வருவது மிகவும் அருமை. அனேகமாக அவரின் எல்லா வகுப்புகளின் போதும்
பயந்தபடியே காலத்தைக் கழித்தோம்.
பள்ளிக்கூடத்தின் ஒருபக்க வேலியை
மருவியபடி இருக்கும் பாதையில் இருந்துதான் பூச்சி வருவான். அவனும் அவனது நான்கு
சகோதரர்களும் வயதுக்கேற்ற உருவங்களில் ஏழ்மையின் அவலம் தெரிய அணிவகுத்து
வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுடன் தந்தையாரும் சைக்கிளை உருட்டிக் கொண்டு கூட
வருவார். சைக்கிள் கரியரில் மண்வெட்டி, புல்லு செதுக்கும் உழவாரம், கடகம் என்பவை ஒய்யாரமாக வீற்றிருக்கும்.
செல்வகுமாரனுக்கு 'பூச்சி' என்பது காரணப்பெயர். எந்த நேரமும் சதா புத்தகமும் கையுமாகவே
இருப்பான். அதனாலொன்றும் அவன் படிப்பில் படு சுட்டி அல்ல. 'லஞ்' இடைவேளையின் போது கூட புத்தகத்துடனே இருப்பான். அல்லாவிட்டால் மேசை
மீது குனிந்து படுத்து விடுவான்.
இரத்தினசிங்கம் மாஸ்டர், சிலவேளைகளில் காற்றோட்டம் கருதி தனது
படிப்பித்தலை ஒரு மர நிழலின் கீழ் வைத்துக் கொள்ளுவார். மரத்தின் கீழ் ஒரு
கதிரையைப் போட்டு ஒரு குறுநில மன்னனாக நடுவில் இருப்பார். சுற்றிச் சூழ மாணவர்கள்
ஒரு வட்டப் பாதையில் நிற்க வேண்டும். அவர் தலையில் பறவைகள் எத்தனை தடவைகள்
எச்சமிட்டாலும் அவர் அந்த இடத்தை மாற்றமாட்டார். அவருக்கு என்றுமே நிழல். எங்களில்
பாதிப்பேருக்கு வெய்யில். மாஸ்டரின் அருகில் நிழல் இருந்தாலும் - அவரின் கொடூரம்
உணர்ந்து அந்த வேகாத வெய்யிலில் நிற்பதற்குத்தான் நாங்கள் முண்டியடிப்போம். அவரின்
கற்கை நெறியில் 'கேள்வி'களின் வகிபாகம் மூண்டின் கீழ் நாலு.
கேள்விகள் அவரை மையம் கொண்டு, கடிகாரத்தின் திசையிலே அல்லது அதற்கு எதிராகவோ கடுகதி வேகத்தில்
புறப்படும். கேள்விகளைவிட அவரது கையிலிருக்கும் பிரம்பு வீரியம் கொண்டது.
சிலவேளைகளில் சரியான விடைகளுக்கும் சரமாரியாக அடி விழுந்திருக்கிறது.
அன்று
சித்திர பாடம். கோழி
முட்டை, தாரா முட்டை, பல்லி முட்டை, தவளை முட்டை என்று கீறச்சொல்லும் இரத்தினசிங்கம்
மாஸ்டர் அன்று வழமைக்கு மாறாக தன்னையே பார்த்துக்
கீறச்சொல்லிவிட்டார். சிறிது நேரம் சிவாஜி கணேசன் போல, புன்னகை தவழும் முகத்துடன்,
ஒரு காலை மற்றதன் மேல் போட்டு கதிரையில் வீற்றிருந்தார். இயற்கை உபாதை எல்லையைக்
கடக்கவே மரத்தின் பின்னால் வேட்டியைத் தூக்கிக்கொண்டு ஒதுங்கினார்.
திரும்பி வந்து கதிரையில் அமரும் போது, குணசேகரன் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல அவருக்குப் பட்டது. ஈரம் பட்ட வேட்டியை ஒரு தடவை
குனிந்து பார்த்துவிட்டு, "எங்கை குணசேகரா நீ கீறினதைக்
கொண்டுவந்து காட்டு" என்று அவனை நோக்கிப் பிரம்பை
நீட்டினார்.
குணசேகரன்
கீறிய படத்தில் குரங்கு ஒன்று தன் வாலை ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி, மறு
கையில் பிரம்புடன் கதிரையில் வீற்றிருக்கும் காட்சி தென்பட்டது.
சிறுத்தை மானைப் பிடிப்பதற்குப் பதுங்கி, பின் துள்ளி எழுந்தது. குணசேகரன் வட்டத்தின் வழியே "இல்லை சேர். நன் கீறேல்லை சேர்" என்று தவளைப்பாய்ச்சலில் ஓடத் தொடங்கினான். மூன்றாவது ரவுண்டிலே ஒரு மாணவனை உழக்கிக்கொண்டு, விட்டத்தின்
வழியே பாய்ந்த மாஸ்டர் குணசேகரனை மடக்கிப் பிடித்தார்.
சற்றே மூச்சை உள்ளே இழுத்துவிட்டுக் கொண்டு கடகடவென்று காலுக்குக் கீழே போட்டுத்
தள்ளினார். அவன் 'ஐயோ ஐயோ' என்று கத்திக் கொண்டிருக்கும் போது, அவனை
அந்தரத்திலே தூக்கினார். 'ஐயோ!' சத்தம் பூமிலிருந்து வானுக்குக் கிழம்பியது. `மனிசர் இந்தக் கொதிக்கிற வெய்யிலிலை
நிக்கவே ஏலாமல் கிடக்கு. அதுக்குள்ளை படத்தையும் கீறச் சொன்னா? பெரிய சிவாஜி கணேசன்
எண்ட நினைப்பு...’
மனதிற்குள் பொருமினான்
குணசேகரன். அவனை அங்கிருந்தபடியே தொப்பென்று கீழே
போட்டார் மாஸ்டர்.
"போய் நடுவிலை வெறுங்குண்டியோடை இரு. பாடம் முடியும் வரையும்
எழும்பக்கூடாது."
குணசேகரன் காற்சட்டையை மெதுவாக
நெகிழ்த்தி சுடுமண்ணில் குந்தினான்.
இவ்வளவு கலாட்டாவும் நடந்து
கொண்டிருக்கும்போது, செல்வகுமாரன் மாடு நுரை தள்ளும் கோலத்தில் மூச்சிரைக்க வந்து அங்கே நின்றான்.
"சேர் உள்ளே வரலாமோ?"
மாஸ்டர் அவனைக் கண்டும் காணாதது மாதிரி முகத்தை திருப்பி வைத்துக் கொண்டார்.
"சேர் உள்ளே வரலாமோ?" செல்வகுமாரனின் இடைவிடாத ரீங்காரம் மாஸ்டரின் காதுகளை இம்சை செய்திருக்க வேண்டும். காதுகள் விரிந்து சுருங்கியதில் காது மடலிற்குள் செருகியிருந்த பென்சில் கீழே விழுந்தது.
"உள்ள வந்திட்டு… கேட்கிறார் ஒரு கேள்வி….
போ! போய் அந்த மண் கும்பானுக்குக் கிட்ட
வெய்யிலிலை நில்" கர்ச்சித்தார் சிங்கம். செல்வகுமாரன் தலையைக் குனிந்தபடி
போய் மண்மேட்டிற்குக் கிட்ட நின்றான். சூரிய ஒளி நேரே அவன் முகத்தில் விழுந்தது.
வெப்பம் அதிகமாக அதிகமாக தலை மெல்லச் சுற்றுவது போல இருந்தது அவனுக்கு.
சித்திரம்
முடிந்து தமிழ் பாடம் தொடங்கியிருந்தது. புத்தகத்தை
மாணவன் ஒருவன் உரக்க வாசிக்க, காது குடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார் மாஸ்டர்.
'ஆ!' என்றொரு மெல்லிய சத்தம்.
சுற்றுமுற்றும் பார்த்தான் குணசேகரன். மண் திட்டியில் நின்ற செல்வகுமாரனைக்
காணவில்லை.
"சேர்! செல்வகுமாரன் விழுந்திட்டான்" கத்திக் கொண்டே
காற்சட்டையைத் தூக்கிக் கொண்டு எழும்பினான் குணசேகரன். மண் திடலிற்குப் பின்புறமாக, மண்டை அடிபட விழுந்து கிடந்தான்
செல்வகுமாரன். கூரிய கல்லொன்று அவனது தலையைக் குத்திக் கிழித்திருந்தது. மயங்கிப்
போன நிலையில் இருந்த அவனைத் தூக்கிக் கொண்டு இரத்தினசிங்கம் மாஸ்டர் ஒஃபீஸ் நோக்கி
விரைந்து ஓடினார். அவரது வேட்டி சட்டை எல்லாம் இரத்தமயமாக, செல்வகுமாரனுடைய தலை கவிழ்ந்து தொங்கியது. நாங்கள் செய்வதறியாது
திக்கொன்றாய் ஓடினோம்.
அதிபரின் அறையின் முன்னால்
வாங்கொன்றில் அவனைக் கிடத்தியிருந்தார்கள்.
"ஆராவது கெதியிலை போய் கந்தசாமியின்ரை காரைப் பிடிச்சுக் கொண்டு
வாங்கோ. மேற்குப் புற கோயில் வீதியிலை கந்தசாமி நிற்பான்" அதிபர் சத்தம்
போடுகின்றார். பாடசாலைக்கு முன்பாக நிறையப் பேர் கூடிவிட்டார்கள். தியாகராஜா
மாஸ்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாடசாலை வளவை விட்டு வெளியேறுகின்றார்.
சைக்கிள் பெரலிலை காலை வைச்சுக் கொண்டு கெந்தி ஏறும்போதே தியாகராஜா மாஸ்டர் விழப்
பாத்திட்டார்.
"உவர் இனி நத்தை மாதிரி ஊர்ந்து போய் வாறதுக்குள்ளை எல்லாம்
முடிஞ்சிடும்."
பத்தாம் வகுப்புப் படிக்கும் யோகன்
அதிபருடன் கதைத்துவிட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு தியாகராஜா மாஸ்டரையும் உன்னிக் கொண்டு
விண்ணெண்று பறக்கின்றான். மறுபறத்திலிருந்து கந்தசாமியின் கார் வந்தது. யாரோ தகவல்
குடுத்திருந்தார்கள். கந்தசாமி, காரின் பின்புறம் திறந்து துணிகளை எடுத்துவந்து சீற்றினில் பரப்பினான். இரத்தினசிங்கம் மாஸ்டர்
கந்தசாமியின் உதவியுடன் செல்வகுமாரனைத் தூக்கிக் கொண்டு காரின் பின்புறம் ஏறினார்.
அதிபர் யாருடனோ தொலைபேசியில் கதைத்துவிட்டு காரின் முன்புறமாக ஏறிக்கொண்டார். கார் வைத்தியசாலை நோக்கிப் பறந்தது.
அதன்பிறகு செல்வகுமாரனின் தந்தையும்
தாயும் தலையிலடித்துக் குழறியபடி பாடசாலைக்கு வந்தார்கள். அவர்களின் மற்றப்பிள்ளைகளும் பெற்றவர்களுடன் சேர்ந்து
கொண்டார்கள். பாடசாலை வளவிற்குள் நெடுநேரமாக ஆக்கள் நின்று கதைத்துக்
கொண்டிருந்தார்கள்.
எங்கள் எல்லாரையும் வகுப்பறைக்குள்
போய் இருக்கும்படி உப அதிபர் சொன்னார். அதன் பிறகு எங்களுக்குப் படிப்பு
நடக்கவில்லை.
மதியம் கழிந்த நிலையில் - அதிபர்
ஹொஸ்பிட்டலில் இருந்து பாடசாலைக்குத் தொலைபேசி எடுத்தார். பூச்சி இறந்து போய்
விட்டதாக தகவல் சொன்னார். காரில் போகும் போது இடைவழியில் கண் முழித்து ஒரு
தடவை 'அம்மா' என்று கூப்பிட்டதாகவும், ஹொஸ்பிட்டல் போய் சேர்வதற்குள் இரத்தினசிங்கம் மாஸ்டரின் மடியில் அவன் இறந்து போய் விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்.
●
இரத்தினசிங்கம் மாஸ்டருக்குப்
பக்கத்தில் போய் நின்றேன்.
"சேர்! என்னைத் தெரியுதா சேர்"
"தம்பியை மட்டுக் கட்டேலாமல் கிடக்கு."
"என்ரை பெயர் தயாளன். உங்களிட்டைப் படிச்சனான்."
"நல்லது. என்ரை கண் பார்வையும் இப்ப மங்கிப் போச்சு. எந்த ஆண்டு மட்டிலை
என்னட்டைப் படிச்சிருப்பீர்?"
"சேருக்குப் பூச்சியை நினைவிருக்கா? செல்வகுமாரன் எண்டு பெயர். சின்ன வயசிலேயே தவறிப் போனான்."
மாஸ்டரின் முகம் சுருங்கிப் போனது.
"அதடா தம்பி என்ரை வாழ்க்கையிலை நடந்த ஒரு கெட்ட கனவு. அப்படியே மனசில
ஆழமாப் பதிஞ்சு கிடக்கு. ஒரு மாறாத வடுப் போல. உம்முடைய பெயர் என்ன சொன்னனீர்? தயாளனோ? இப்படி ஒருக்காக் கொஞ்சம் திரும்பும் பார்ப்போம்."
நான் அவரை நோக்கித் திரும்பினேன். உற்றுப் பார்த்தார்.
"உம். இப்ப தெரியுது" பெருமூச்சு விட்டார் மாஸ்டர்.
இப்பொழுது எப்படி என்னை அடையாளம் கண்டு
கொண்டார். எனக்கு வியப்பாக இருந்தது.
"மண்ணிலை பிறக்கேக்கை எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத்தான்
பிறக்கினம் எண்டு சொல்லுவினம். எனக்கு அதிலை நம்பிக்கை இல்லை. ஒரு சிலர்
குறைகளோடையும் வந்து பிறந்து விடுகிறார்கள். நான் அடங்காத கோபத்தோடை வந்து பிறந்து
விட்டேன். என்னுடைய குடும்பத்திலை என்னைப் போல இப்படியான குணத்தோடை ஒருத்தரும்
இல்லையெண்டுதான் சொல்லுகினம். அம்மா கூடச் சொல்லுவா - இந்தச் சண்டாளனைப் போல
ஒருத்தரும் எங்கடை பரம்பரையிலை இல்லையெண்டு. ஆனாத் தம்பி,
எங்கையோ ஒரு அடி ஆழத்திலை - எங்கட பரம்பரையிலை
- என்னைப் போல ஒரு ஆள் இருந்திருக்க வேணும். அது பரம்பரை அலகுகளுக்கூடாக என்னை
வந்து சேர்ந்திருக்க வேணும்.
இப்ப உம்மையே எடுத்துக் கொள்ளுவம்.
உம்முடைய காதைப் போல - சுளகுக் காதோடை ஆராவது உம்முடைய குடும்பத்திலை இருக்கினமா?"
பிள்ளையார் காது, சுளகுக்காது! இதை
வைத்துத்தானா அவர்
என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
"சேர் என்னுடைய அம்மா சொல்லுறவா, என்னுடைய அம்மம்மாவின் தம்பி ஒருவருக்கும் இப்படிக் காது
இருந்ததாம்."
"பார்த்தீரா தம்பி! மனிதனுடைய உடற்கலங்களிலை இருக்கிற
நிறமூர்த்தங்களிலை உள்ள பரம்பரை அலகுகள் செய்யிற வேலையை. எப்பவோ ஒருக்கா அது
தன்னுடைய வேலையைக் காட்டிப் போடுது. உடலிலை ஏற்படுகிற இந்தக்குறைபாடு ஒருவருடைய
வாழ்நாளிலை மாற்றமடைகிறதில்லை. ஆனா உள்ளத்திலை ஏற்படுகிறது சிலருக்கு காலத்தோடை
குறைஞ்சு போய் மறைந்து விடுகிறது" மாஸ்டர் சலித்துக் கொண்டார்.
என்னுடைய நண்பர்கள் - மாஸ்டரிடம்
படித்தவர்கள் ஒவ்வொருவராக வந்து என் பின்னே வட்டமடிக்கின்றார்கள்.
"தம்பி தயாளன், என்ரை கழுத்திலை இருக்கிறதை ஒருக்கா தடவிப் பாரும்" சிரித்தபடியே
கழுத்தை என் முன்னே நீட்டினார்.
அவருடைய கழுத்திலே ஒரு உருண்டை திரண்டு, பந்து போல அங்கும் இங்கும் உருண்டு ஓடியது.
"சேர் இதை ஒப்பரேஷன் செய்யலாமே!"
"செய்யலாம்தான். ஒப்பரேஷன் செய்தால் செத்துப் போவன். இந்த வயதிலேயே
சாகிறதுக்குப் பயப்பிடுகிற எனக்கு, ஒரு பையனைக் கொல்லுறதுக்கு மனம் வருமா?
பிள்ளையள் ஒழுங்காகப் படிக்கவேணும்
எண்டதுக்காகத்தான் வாத்திமார் அடிக்கிறவை, கோபம் கொள்ளுறவை. என்ரை இரண்டு
பிள்ளையளுக்கும்கூட படிப்பிலை கவனம் செலுத்தாத வேளையிலை அடி போட்டிருக்கிறன். என்ன
கொஞ்சம் கண் மண் தெரியாமல் அடிச்சுப் போடுவன்.
என்னவோ விதித்தபடிதான் எல்லாம்
நடக்கும். அந்தப் பையனின் பெற்றோர் சகோதரர் நண்பர்களுக்கு இருக்கும் வலி
என்னவென்று புரிகிறது. இந்தக் கோபத்தை அடக்கிறதுக்கு நான் நேராத
கோயில் இல்லை, செய்யாத வைத்தியமில்லை. யோகா கூட செய்து பாத்தனான். குறைந்ததேயொழிய
முற்று முழுதாக என்னை விட்டுப் போகவில்லை. கோபம், வெறி எல்லாம் காலம் என்ற நீட்சியுடன் மூப்பை நோக்கி நகர
பரிணாமமடைந்து முற்று முழுதாக மறைந்து விடுகிறது. இப்ப எனக்கு எதுவுமே இல்லை. ஆனா அண்டைக்கு நடந்ததின்ரை வலி
இப்பவும் என்னுக்குள்ளை இருக்கு."
"சேர் உங்கடை கழுத்திலை இருக்கிற அந்தக் கட்டி எப்பிடி வந்தது சேர்?" பின்னாலே நின்ற குணசேகரன் கேட்டான்.
"நல்ல கேள்வி. சொல்லுறன். செல்வகுமாரன் இறந்து ஒரு கிழமை இருக்கும்.
நான் தெருவாலை போய்க் கொண்டிருந்தன்.
பனை வடலியொன்றைக் கடந்து போகேக்கை சரமாரியா கல் எறி விழுந்தது. அதாலை வந்த காயம் இது. என்னுடைய கோபம் குறையக் குறைய இது பெருத்துக்
கொண்டே போகிறது" இரத்தினசிங்கம் மாஸ்டர் புன்முறுவல் செய்கின்றார்.
எனது நா தழுதழுக்கிறது. ஓவென்று அழுது
விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
"சேர்! சேர்!!"
"சொல்லும். சொல்லும் தம்பி தயாளன்."
"அந்தக் கல்லை எறிந்தது நான்தான் சேர்!"
"எனக்கும் தெரியும்!" என்றார் மாஸ்டர் - ஒரு குழந்தையைப் போல.
மின்னல்
பாய்ச்சியது போல, இதுவரை இல்லாத வலி ஒன்று இப்பொழுது எனக்குள் எழுந்தது.
●
No comments:
Post a Comment