இலங்கை வாழ்க்கை, ஜெர்மனிய வாழ்க்கை என இந்த நாவலை இரண்டு பாகங்களாகப் பார்க்கலாம். இலங்கையில் இருக்கும் ஏறாவூர், பேராதனை, நீர்கொழும்பு என்ற இடங்களில் இருந்து ஆரம்பித்து, பின்னர் ஜேர்மனியை நோக்கி நாவல் பயணிக்கின்றது.
முதலில் நாவலின் சுருக்கத்தைப் பார்க்கலாம். கந்தசாமி வைரவள்ளி தம்பதிகளின் மகளான பார்வதியை பரமசிவம் மணந்து கொள்கின்றார். அவர்களின் நான்கு பிள்ளைகளான சிவம், சிநேகா, கீரன், சிந்து என்பவர்களைச் சுற்றி கதை ஆரம்பத்தில் பின்னப்பட்டுள்ளது. தாத்தா பாட்டியுடன் வாழ்வதற்கு பலருக்கும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இங்கே சிநேகாவிற்கு பாட்டி வாய்த்துவிடுகின்றது. பாட்டி வைரவள்ளி மட்பாண்டங்கள் செய்தல், கை வைத்தியம், முறிவு வைத்தியம், பிள்ளைப்பெற்று பார்த்தல் போன்றவற்றில் கை தேர்ந்தவளாக இருக்கின்றார்.

சிநேகா பள்ளி வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, உயர்கல்வி பயில்வதற்காக பேராதனைப் பல்கலைக்கழகம் செல்லும்போது, நானும் கூடவே சென்று விடுவது போன்ற உணர்வு மேலிட்டது. நானும் அங்கே நான்கு வருடங்கள் தங்கிப் படித்தவன் என்பதால், ஆசிரியர் கூறும் இடங்கள், காட்சிகள், சம்பவங்கள், கல்வி முறைகள், மொழி, பகிடிவதை எல்லாம் பழக்கப்பட்டவையாகவும் மீளவும் ஞாபகத்திற்கும் வந்தன. சிநேகா விஜேவர்த்தன விடுதியில் தங்கியிருந்து கலைப்பீடத்தில் கல்வி பயில்கின்றார். அந்தக் காலங்களில் சத்யா, தியான், ஈழவாணி, சசித்ரா, சிவராஜேந்திரம்,ஆயிஷா போன்றோர் நண்பர்களாகக் கிடைக்கின்றார்கள். கூடவே பேராசிரியர்கள் பூலோகசிங்கம், தில்லைநாதன், சதாசிவம், அருணாசலம் போன்றவர்களும் கலாநிதி துரை மனோகரன், திருமதி தியாகராஜா போன்றோர் விரிவுரையாளர்கள் ஆகின்றார்கள். உண்மையைச் சொல்வதென்றால் அந்தச் சில அத்தியாயங்களை வாசித்தபோது நானும் அதில் கரைந்துவிட்டேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் இந்த நாவலை வாசிக்கும்போது அவர்கள் இன்னொரு உணர்வு நிலைக்குச் செல்வார்கள் என்பது நிச்சயம். பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர்ந்து பிலிமத்தலாவ என்னுமிடத்தில் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்கின்றார். தொடர்ந்து வாழைச்சேனையில் முதல் ஆசிரியர் நியமனம், அங்கு பெறும் அனுபவங்கள், சகோதரப் படுகொலைகள். அதனைத் தொடர்ந்து தனது பிறந்த ஊரான ஏறாவூரில் சில மாதங்கள் பணியில் இருந்துவிட்டு, இஸ்லாமியர்களின் தாக்குதலால் நீர்கொழும்புக்குப் புலம் பெயர்கின்றார். நீர்கொழும்பில் விஜயரெத்தினம் தமிழ் மகாவித்தியாலத்தில் படிப்பிக்கும்போது, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பயின்று இரண்டாவது பட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றார்.
சிநேகா தனது ஆசிரியத் தொழில் நிமித்தம் வாழ்ந்த இடங்கள் எல்லாம் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பில் இருக்கும் காலங்களிலே ஜெர்மனியில் இருக்கும் அரவிந்தனுடன் திருமணம் என்ற பெரும் திருப்பம் ஏற்படுகின்றது. கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட சிநேகா, வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட அரவிந்தனுடன் இணைந்து கொள்கின்றார். அக்காலப் பகுதியில் சிநேகா தனது தாயையும் இழக்கின்றார். அங்கிருந்து அவருக்கொரு புதிய வாழ்வு ஜேர்மனியில் தொடங்குகின்றது.
ஒரு புதிய நாட்டில் சிநேகா எப்படி இயைபாக்கம் கொள்கின்றார் என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்கள் சொல்கின்றன. சிநேகா திருமணமான பின்னர் கணவனான அரவிந்தன் நாவலிற்குள் வருகின்றான். அவன் எப்படி ஜேர்மனி என்னும் தேசத்திற்கு வந்து சேர்ந்தான், அதற்காக அவன் பட்ட கஸ்டங்கள் போன்றவையும் இந்நாவலில் விலாவாரியாகச் சொல்லப்படுகின்றது. புலம்பெயர்ந்து போகின்றவர்களுக்கு வேலை உடனே கிடைத்துவிடுமா என்ன? அரவிந்தனும் பல வேலைகளைச் செய்கின்றான். கடைசியாக உணவகம் நடத்துகின்றான். சிநேகா உணவகத்தில் வேலை செய்வதுடன் சுகாதாரப் பணியாளராகவும் வேலை செய்கின்றார். சிநேகா விழப்போகும் தருணங்களில் எல்லாம் பின்னால் இருந்து தாங்கிக் கொள்பவனாக அரவிந்தன் பாத்திரம் அமைகின்றது.
அவர்களுக்கு சுருதி பிறக்கின்றாள். சில வருடங்களின் பின்னர் மீண்டும் சிநேகாவிற்கு தமிழுடன் உறவாட சந்தர்ப்பம் வாய்க்கின்றது. `தமிழ் வான் அவை’ என்னும் அமைப்பை நிறுவி அதனூடாக கலையுலக வாழ்வை ருசிக்கின்றார்.
தந்தை நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருக்கையில், தந்தைக்கும் மகளுக்குமிடையேயான உரையாடல் மனதை நெகிழ வைக்கின்றது. தந்தைக்கு சிகிச்சை பலனின்றி, ஹீமோதெரபியை நிறுத்திய பின்னர் – சிநேகா அவரின் மூளையில் பதிந்திருக்கும் பதிவுகளை பதிவு செய்ய விரும்புகின்றாள். அதற்கு மூளை பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிருபா கிடைக்கின்றாள். அறிவியல் ஆராய்ச்சி செய்யும் நிருபா, பரமசிவத்தின் மூளையில் படிந்திருக்கும் ஞாபகக் கோப்புகளை கணினி மூலம் தரவிறக்கம் செய்ய முயல்கின்றாள். அந்த விஷப்பரீட்சை வெற்றி பெற்றதா? தந்தையின் இளமைக்காலம் எப்படி இருந்தது?, அவர் தன் மனைவியுடன் கொண்டிருந்த வாழ்க்கை எத்தகையது?, சமூகத்திற்கு பரமசிவம் என்னவெல்லாம் செய்தார் போன்ற தகவல்களை அவர்கள் பெற்றுக் கொண்டார்களா என்பதை நாவலில் பிற்பகுதி சொல்கின்றது.
இந்த நாவல் தர்க்க ரீதியாக பல கேள்விகளை மனதில் எழுப்பி, அதற்கான அறிவியல் விளக்கங்களையும் கூடவே தந்துவிடுகின்றது. அம்மாவின் குரல், மூளையில் பதிந்து தொடர்ந்து கேட்கும் விந்தை – வாழ்நாள் முழுவதுமே தொடர்ந்து வரும் அம்மாவின் அசரீரி. மூளை எந்தவிதமான குரல்களை பதிவு செய்து வைத்திருக்கின்றது போன்ற சிந்தனையைத் தூண்டும் பல அறிவியல் தகவல்கள் நாவல் எங்கனும் விரவிக் கிடக்கின்றன. புற்றுநோயால் இறந்த ஒருவரின் உடலைக் குளிர வைத்து, புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடித்தவுடன் அந்த மருந்தை அந்த உடலினுள் செலுத்தி உயிர்பெறச் செய்யும் `கிரையோனிக் முறை’ பற்றிய சில தகவல்களும் உள்ளன.
நாவலின் முற்பகுதி இனப்பிரச்சினை, விடுதலை இயக்கங்களுக்கிடையேயான முரண்பாடுகள், சகோதரப் படுகொலைகள் என்பவற்றை இடையிடையே தொட்டுச் செல்கின்றது. அதே வேளை நாவலின் பிற்பகுதி - எமது வாழ்க்கை முறைக்கும், ஜெர்மனியரின் வாழ்க்கை முறைகளுக்கும் இடையேயான வேறுபாடுகள், புலம்பெயர் வாழ்வு கற்றுத் தரும் பாடங்கள், உயிரைத் தக்க வைக்கப் புலம்பெயரும் மக்கள் இன்னொரு நாட்டில் வாழ்வதற்காக - எப்படி மனதைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற தகவல்கள், டிமென்ஷியா - பாகின்சன் நோய்கள் பற்றியதான விபரங்கள் – அந்த நோய் கண்டவர்களின் நடத்தைகள், கொரோனா கால வாழ்வு எனப் பல தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்தக் குருவிக்கூட்டில் அரசியல் இருக்கின்றது; ஆன்மீகம் இருக்கின்றது; இலங்கை ஜெர்மனி என்ற இரண்டு நாடுகளினதும் கலாசாரம், விருந்தோம்பல், உணவுப்பழக்க வழக்கங்கள் உள்ளன. இலக்கியம் குடும்பவாழ்க்கை விஞ்ஞானம் எல்லாம் இருக்கின்றன. ஆசிரியர், தமிழ் சிறப்புப் பாடம் பல்கலைக்கழகத்தில் பயின்றிருப்பதால், இடையிடையே கம்பரின் கவிநயம், வள்ளலார் பாடல்கள், பாரதியார் பாடல்கள், வள்ளுவர் வாக்குகள், மூதுரை என இலக்கிய இன்பத்தையும் நாம் அள்ளிப் பருகக்கூடியவாறு உள்ளது.
தந்தை பரமசிவத்தின் மூளை அடுக்குகளில் பதிந்திருக்கும் தரவுகளை கணினி உதவியுடன் தரவிறக்கம் செய்யும் செயலானது, சட்டத்துப் புறம்பானது எனத் தெரிந்தும் நிருபாவும் சிநேகாவும் அதைச் செய்வது மனதைச் சற்று நெருடவே செய்கின்றது. உயர உயரப் பறக்கும் சிநேகா என்ற நாயகியின் விம்பம் இங்கே சற்றே உடைந்துபோய் விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அதை அவர்கள் அரச அனுமதி பெற்று செய்கின்றார்கள் என்று காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பரமசிவத்தின் பதிவுகள் கொண்ட `இன்னும் வாழ்கின்றேன்’ என்ற புத்தகம் கொண்டிருக்கும் தகவல்கள், மிகவும் முக்கியமானவை என்றாலும் சற்றே நீண்டுவிட்டன.
இந்த நாவலில் வியக்க வைக்கும் சாட்சியாக பரமசிவம் பார்வதி சிநேகா அவர்களின் புகைப்படங்களும்; தண்டவாளத்தின் கீழ் தொங்கிக் கொண்டு ஓடும் புகையிரதம், திருமணத் தம்பதிகள் போகும் கார் போன்ற பல புகைப்படங்களை இணைத்துள்ளமை புதுமையாக உள்ளது. கூடவே புத்தகத்தினுள் ஒரு புத்தகம், நவீன அறிவியலுக்குத் திறவுகோலாகும் மூளைப் பதிவுகள் எனப் பல புதுமைகளையும் தந்திருக்கின்றார் நூல் ஆசிரியர்.
நூலிற்கு முனைவர் மு.இளங்கோவன் அணிந்துரையையும், பேராசிரியர் துரை.மனோகரன் வாழ்த்துரையையும் வழங்கியிருக்கின்றார்கள்.
பக்கம் சாராது நடுநிலையில் நின்று பயணிக்கும் எந்த நாவலை வாசிக்கும்போதும் மனதுக்கு இதமாக இருக்கும். தற்போது வெளிவரும் நாவல்களில் பல, பக்கம் சார்ந்தவை. அதை எழுதுபவர்கள், சிலவற்றை மறைத்து வைத்து பூடகமாக எழுதி விடுகின்றார்கள். தாம் எழுதுபவைதான் சரி என்றும் வாதிடுகின்றார்கள். அந்த வகையில் நிஜத்தைச் சொல்லவரும் சுயபுனைவு (Autofiction) வகையைச் சார்ந்த இந்த நாவல் ஒரு ஆவணமாகவும் திகழ்கின்றது. வாழ்த்துகள் கெளசி.
நூல் விபரம் :
வெளியீடு: வசந்தா பதிப்பகம் ; பக்கங்கள்: 342 ; வெளியான ஆண்டு:2024
விலை:400 ரூபாய்கள் ; ISBN:978-93-6415-601-1
No comments:
Post a Comment