மேலை நாடுகளில் தனித்து வாழ்வதற்கு பாடசாலைகளில் கற்றுக் கொடுக்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் நான் இருக்கும் இடத்தில், எம் அயலவர்கள் எல்லாரும் தங்கள் தங்கள் பாட்டில் வாழ்க்கை நடத்துகின்றார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரிவதில்லை, பழகுவதில்லை. ஒரு துன்பம் துயரத்திற்குக்கூட உதவ மாட்டார்கள்.
நாம் நமது நாட்டில் அப்படி வாழப் பழகவில்லை என்பதால் இது விசித்திரமாகத் தெரிகின்றது..
•
எனக்கொரு விசித்திரமான தமிழ் நண்பன் ஒருவன் இங்கு இருக்கின்றான். நான் ஒருமுறை தொலைபேசியில் எடுத்துக் கதைத்தால், சிலகாலம் கழித்து தானும் ஒருமுறை எடுத்துக் கதைப்பான். பின் எனது முறைதான். நான் எடுக்காவிட்டால் தானும் எடுக்க மாட்டான். அந்த இடைவெளிக்குள் எது நடந்தாலும் அவன் தொலைபேசி எடுக்க மாட்டான். உயிரே போனாலும் எடுக்க மாட்டான். எனக்கும் அவனுக்கும் பொதுவான நண்பர்கள் இருந்து அவர்களுக்கேனும் சுக துக்கங்கள் நடந்தாலும் சொல்ல மாட்டான்.
டைரி வைத்து நான் எப்போது கதைத்தேன், தான் எப்போது கதைத்தேன் என்று எழுதி வைப்பான் போலும்.
•
கார் பழுதானால் அவன் என்னிடம் அவசர உதவி கேட்கமாட்டான். ஏனென்றால் பிறகு தானும் உதவி செய்யவேண்டி வரும் என்பதால். காசு இருக்கு. ‘ரக்ஷி’ இருக்கு. பிறகென்ன? இறக்கும் வரைக்கும் காசைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றான். ஊரில் யார் காணி விற்றாலும் வாங்கி விடுவான். வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சி, ஒரு கொண்டாட்டம், ஒரு உல்லாசம்…. சீ. மறுபிறப்பிற்கும் இவற்றைக் கொண்டு செல்லலாம் என்று இற்றை வரையும் நம்புகின்றான்.
இந்த மனிதர்களே பாவம். ஓய்வுபெற்ற பின்னர், அல்லது அறுபதைக் கடந்தவுடன் தான் எல்லாம் என்று, ஏங்கி ஏங்கி தண்னி வென்னி குடிக்காமல் இன்பங்களை அனுபவிக்காமல் வாழ்ந்து விடுகின்றார்கள். இடையில் ஆசையை ஒறுத்து எதுவுமே செய்யாமல் வேலை வேலை என்று காலத்தைக் கடத்துகின்றார்கள். ஒரு சினிமாவுக்குப் போவது என்றாலும் தயக்கம் தான். ஏன் அந்தச் சினிமா இன்னும் பத்து வருஷங்களுக்கு இருக்காதோ? ஒரு புத்தகம் வாங்கக் குடுக்கிற காசை சேமிச்சு வைச்சா சொர்க்கம் போகேக்கை மேலுக்கு அள்ளிக்கொண்டு போகலாம் எண்ட நினைப்பு. நண்பர்களை வீட்டுக்குச் சேர்ப்பதில்லை. ஒரு தேநீர் போடும் வேலை மிச்சம், செலவும் மிச்சம் என்ற கருமிகளும் உண்டு.
•
.png)
No comments:
Post a Comment