இரவு மணி பத்தாகிவிட்டது. இன்னமும் மோகன் வீடு வந்து சேரவில்லை. வேலை அலுவலாகச் சற்றுப் பிந்தும் என்று சொல்லியிருந்தான், என்றாலும் இதற்குள் வந்திருக்க வேண்டும். நளாயினி போன் செய்தபோது மோகனின் மொபைல்போன் சுவிச் ஓஃப் செய்யப்பட்டிருந்தது கண்டு துடித்துப் போனாள். எப்போதாவது வெள்ளிக்கிழமைகளில் மோகன் வேலை முடிந்து பிந்தி வருவதுண்டு. அந்த வேளைகளில் அவன் கொஞ்சம் மதுவும் அருந்தியிருப்பான்.
என்ன செய்வது? குழந்தையின்
தேகம் அனலாகக் கொதித்தது.
நளாயினி தன் குழந்தையை
மார்புடன் இறுக அணைத்துக் கொண்டு, பின்புறமிருந்த வீட்டிற்குச் சென்று கண்ணீர் விட்டாள்.
மோகன் எங்கே போயிருக்கின்றான் என்று சரியாகத் தெரியாதபடியால் அவர்களால் நளாயினிக்கு
உதவ முடியவில்லை.
வீட்டிற்குத் திரும்பிய
நளாயினி இரவு முழுவதும் விழித்திருந்து, ஒரு மூலையில் குழந்தையுடன் ஒடுங்கிப் போயிருந்தாள்.
அன்று இரவு முழுவதும் மெல்பேர்ண்
சிற்றியில் அலைந்து திரிந்துவிட்டு விடியற்காலை நான்கு மணியளவில் ஒரு ரக்ஷியில் வந்து
இறங்கினான் மோகன்.
“இவ்வளவு நேரமும் எங்கே
போயிருந்தீர்கள்?” அழத் தொடங்கிவிட்டாள் நளாயினி.
“குழந்தாய்…. நான் சுவாமி தரிசனம் முடித்து வந்திருக்கின்றேன்” பக்தியின் குரலை முன் வைத்தான் மோகன்.
நளாயினி திகைத்துப் போனாள்.
மோகனை அணைத்து, அணைக்கும் சாட்டில் முகத்தை மெதுவாக முகர்ந்து பார்த்தாள். அப்படியொன்றும்
கெட்ட வாடை வீசவில்லை. மாறாக உடலில் மெலிதாக நறுமணம் வீசியது. களைத்துப் போய் வந்திருப்பதால்
உறங்கட்டும் என விட்டு வைத்தாள்.
குழந்தையின் சுரம் கொஞ்சம்
தணிந்திருந்தது.
நளாயினி ஒரு நோய்க்காரி. நளாயினிக்கு எப்போதாவது தனது லீலைகள் தெரியவந்து
எதிர்க் கேள்வி கேட்டால், “உன்னாலேதான் நான் போனேன்” என்று சொல்லிவிட வேண்டும் என்று
மனதில் நினைத்து வைத்திருந்தான் மோகன். தெய்வாதீனமாக அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை.
விடிய அதிகாலை அவர்கள்
வீட்டில் மணிச்சத்தம் கிழம்பியது. நாலு மணிக்கு வீட்டிற்கு வந்த மோகன், ஐந்தரை மணியளவில்
மணியைக் கிலுக்கினான்.
நளாயினி பதறிப்போய் அவன்
காலில் வீழ்ந்தாள். “நல்லாய் இருப்பாயாக” என்று அவளை ஆசீர்வதித்தான் மோகன். குழந்தையைத்
தூக்கி வந்து மோகனின் முன்னால் கிடத்தினாள். திருநீற்றை அள்ளி அவள் மீதும், குழந்தையின்
மீதும் அப்பிப் பூசினான் மோகன்.
அன்று முதற்கொண்டு இன்றுவரை
கணவன் ஒரு சாமியார் ஆகிவிட்டான். கணவன் இப்படி ஒருநாள் இரவிலே திடீர் சாமியார் ஆகிவிட்டதைக்
கண்ட நளாயினி செய்வதறியாது திகைத்தாள். எங்கையோ எதையோ பார்த்துப் பயந்து போய் இருக்க
வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
“நளாயினி…. உணவிலே பூண்டு,
இஞ்சி, காரம் சேர்க்க வேண்டாம். அவை எல்லாம் காமத்தைக் கிளர்த்தி, உடல் இன்பத்தைக்
கூட்டும்” என்று நளாயினியிடம் பணிவாகக் கேட்டுக் கொண்டான்.
நோயாளியான நளாயினி தன்
நிலை அறிந்தாள். கணவன் தன் மீது கொண்டுள்ள பாசத்தை மெச்சினாள். தினமும் அவன் கால்களில்
விழுந்து வணங்கி, பாத பூஜை செய்து `சுவாமிஜி’ என்று வணங்கும் பக்தை ஆனாள்.
இந்தக் கூத்தெல்லாம் அவுஸ்திரேலியாவில்தான்
நடக்கின்றது என்று சொல்லி, துண்டைத் துணியைப் போட்டுத் தாண்டினாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.
இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் இருக்கின்றார்களே, அதுவும் மேலை நாடுகளில் புலம்பெயர்ந்த
தமிழர்களிடத்திலா என்று நீங்கள் வியந்து கொள்வதும் தெரிகின்றது.
•
சிலநாட்கள் கோவிலிலே போய்,
பின்வரிசையில் நின்றுகொண்டு கை கட்டி, அங்கே நடப்பவற்றை துல்லியமாக அவதானித்தான் மோகன்.
ஒருவரும் அவனை யார் என்று கேட்கவில்லை. எல்லாரும் அவரவர் புகழ் பெற முண்டியடித்துக்
கொண்டு தொண்டுகளில் அலையலானார்கள்.
மணம் முடித்த நாட்கொண்டு
தன்னை ஒரு அறிவாளியாகக் காட்டிக் கொள்வதால், மோகன் சொல்வதே சரியென என்நாளும் தலையாட்டிக்
கொள்வாள் நளாயினி. மொக்குத்தனமாகக் கதைத்து, சுவாமி கோபம் கொண்டு, சில நாட்கள் கன்னம்
வீங்குமளவுக்கு அடி வாங்கியதும் உண்டு. நளாயினி ஏதாவது தெரியாத்தனமாகக் கதைத்து விட்டால்,
“இதெல்லாம் உனக்குத் தெரியவேணும் எண்டா, நீர் ஒரு கோஸ் ஃபொலோ பண்ண வேணும்” என்பான்
மோகன். கோஸ்.. கோஸ் என்று சொல்லி நளாயினியை ஒரு முட்டைக்கோஸ் ஆக்கிவிட்டான். என்னதான்
நடந்தாலும், அடி விழுந்தாலும் - தனக்குள் குமுறும் கோபத்தைத் தணித்து, அவனிடம் சரணாகதி
அடைந்து விடுவாள் நளாயினி.
ஆனால் இப்போது இந்தச் சாமியார்
மெளனம் காத்துக் கொண்டாலும், சிலவேளைகளில் வேகமாகக் கோபப்பட்டுக் கொள்கின்றார். நளாயினிக்கோ
வேறு கதியில்லை, `சாமியே சரணம்’ என்று விடுவாள். மோகன் படித்தவன், பல்கலைக்கழகம் சென்றவன்,
வேலையில் உயர் பதவியில் இருப்பவன் என்பதால் - யார் என்ன கேட்டாலும், `அவரைக் கேளுங்கள்’
என்று விடுவாள். ஒன்றுக்கு மூன்று முட்டைகளை வாயிற்குள் புதைத்து வைத்துக்கொள்ளும்
கோலம் இப்பொழுது அவளுக்கு வந்துவிட்டது.
மோகன் தனது சுயரூபத்தை
சாமியார் ஆவதற்கு முன்னர் பல தடவைகள் நளாயினியிடம் காட்டியிருக்கின்றான். உரு எடுத்து
கையில் எது கிடைக்கின்றதோ, அதனால் நளாயினியை விளாசி இருக்கின்றான். `சேங்கு’ என்று
பேசியிருக்கின்றான். அதனால் அவள் அவனிடம் ஒடுங்கிப் போவதைத் தவிர வேறு வழியில்லை.
மோகன் தனது நெறி பிறழ்வு
கொள்ளும் நடத்தையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தியானப் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கினான்.
யோகாவிற்கும் சென்று வருகின்றான்.
ஒருநாள் யோகாப் பயிற்சியில்
எல்லாரும் கண் மூடித் தியானத்தில் இருந்தபோது, கண்ணைத் திறந்துதான் பார்ப்போமே என மோகனின்
மனம் உந்தித் தள்ளியது. கண்ணை மெதுவாகத் திறந்தபோது, அவனுக்கு நேர் எதிராகவிருந்த ஒருவன்
அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மோகன் அவனின் நிலை கண்டதும் முதலில்
பயந்துவிட்டான். பின்னர் அவனின் புன்முறுவல் கண்டு, தானும் சிரித்துக் கொண்டான். அவன்
கைகளினால் அபிநயம் புரிந்து, `சிகரெட் பிடிப்போம் வாறியா?’ எனக் கேட்டான். மோகன் கண்களை
படக்கென மூடி, ஒன்றுமே நடவாதது போலப் பாவனை செய்தான். அவன் எழுந்து போகும்போது மோகனைக்
காலால் இடித்துவிட்டுப் போனான்.
தியானம் முடிந்து குரு
கண் திறந்தபோது, ஒழுங்கான வரிசையில் ஒரு வெற்றிடம் கண்டு திகைத்துப் போனார். கூட இருந்த
அனைவருக்கும் அந்தக் காட்சி புதிராக இருந்தது. மோகன் மாத்திரம் தியானத்தைச் சரியாகப்
புரிந்து கொண்டதால் அதிர்ச்சியடையாமல் இருந்தான்.
சரியான புரிதல்களுடன் தியானப்பயிற்சி
மேற்கொண்டதால், மோகன் இப்பொழுது யாருடனும் முரட்டுத்தனமாகப் பேசுவதில்லை. கோபம் புட்டுக்கொண்டு
வந்தால் அடக்கிக் கொள்வான். ஆனாலும் அவனின் அடங்கிய கோபத்தை, அவனின் முக பாவனையால்
நளாயினி மட்டுக் கட்டிக் கொள்வாள்.
இப்பொழுது நளாயினி மோகனுடன்
சேர்ந்து கோவிலுக்குப் போகும் பக்குவத்தைப் பெற்று விட்டாள். அங்கே மனிதர் காலில் மனிதர்
வீழ்ந்து வணங்கும் பழக்கம் இருந்தது. ஆண்களின் காலில் விழும்போது சுவாமிஜி என்றும்,
பெண்களின் காலில் விழும்போது மாதாஜி என்றும் சொல்லிக் கொண்டார்கள்.
நளாயினிக்கு கோவிலில் ஒரு
புதிய அனுபவம் கிடைத்தது. அவளது காலில் சிலர் வீழ்ந்து மாதாஜி என்று சொல்லிக் கொண்டார்கள்.
அவளும் பதிலுக்கு சிலரது காலில் விழுந்து `மாதாஜி’ என்று மெதுவாகச் சொல்லிக் கொள்வாள்.
இதுவரை காலமும் மோகனின் காலில் வீழ்ந்து வணங்கியவளுக்கு, அவளது காலிலும் சிலர் வீழ்ந்தது
கண்டு உள்ளம் பூரித்துப் போனாள். அவளின் உள்மனம் சிரித்துக் கொள்ள, அவளின் பக்தி மோகனின்
பக்தியைவிட பன் மடங்கு அதிகரித்துவிட்டது.
ஒருநாள் ஒரு ஆணின் காலில்
நளாயினி விழப் போனபோது, மோகன் அவளைத் தடுத்து நிறுத்தி, “நோ…. ஒன்லி மி” என்றான்.
குழந்தை இப்பொழுது சற்றே
வளர்ந்து பெரியவனாகி விட்டான். அவனும் கால்களில் விழுந்து எழும்பப் பழகிக் கொண்டான்.
நாளாக நாளாக மோகன், மோகன்சாமியாராக
மாறி விட்டான். கோவிலின் சமையல்கட்டுக்குள் அவன் ஒரு முக்கிய புள்ளியாகிவிட்டான். கேசரி
கிண்டுவதில் விண்ணாதி விண்ணன் என்று பெயரும் எடுத்துக் கொண்டான்.
•
ஒருநாள் கோவில் விசேட தினத்தில்,
ஒரு பெண்ணொருத்தி விசர் கோலத்தில் கோவில் முன்னால் வந்து நின்றாள். சிலர் அவளைப் பிச்சைக்காரி
என்றார்கள். சிலர் அவளை விபச்சாரி என்றார்கள்.
கோவிலிற்குள் அவள் நுழைவதை
சிலர் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் கோவிலின் குருவானவரோ அவளை உள்ளே விடும்படி சொன்னார்.
அந்தக் காட்சியை மோகன் பார்த்துவிட்டான். அவளும் மோகனைக் கண்டு கொண்டாள். இருவர் கண்களிலும்
ஒரு இன்ப அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியைப் பார்த்த நளாயினிக்கும் அதிர்ச்சி.
மோகனின் நாடி நரம்பெல்லாம்
விண்ணென்று வலிக்க, நளாயினியையும் மகனையும் விட்டுவிட்டு திடீரென்று அவ்விடத்தை விட்டு
ஓடி மறைந்தான். நளாயினி மோகனைத் துரத்தித் துரத்தி வரும்போதெல்லாம், அவன் ஓடி ஒளியத்
தொடங்கினான்.
“நளா… நீ சுறுக்கெண்டு
கும்பிட்டிட்டு ஓடிப் போய் காருக்குள்ளை பிளையையும் வைச்சுக் கொண்டிரு. நான் சிக்கிரம்
வந்து விடுகின்றேன்” என்றான் மோகன்.
சுவாமிஜிக்கும் அந்தப்
பெண்ணிற்கும் ஏதோ தொடர்பு இருக்கவேண்டும் என்பதை நளாயினி புரிந்து கொண்டாள். அவள் மகனுடன்
புறப்பட்டு கோவில் கேற்றடியில் நின்று கொண்டாள். அந்தப் பெண்ணும் வந்து கேற்றடியில்
நளாயினிக்குப் பக்கமாக நின்று கொண்டாள். அவளின் உடலில் இருந்து மெலிதாக நறுமணம் வீசியது.
அன்றொருநாள் மோகனின் உடலில் இருந்து வீசிய அதே வாசம்.
சற்று நேரத்தில் விறுவிறென்று
வேட்டி அவிழ்ந்து விழ, கோவிலில் இருந்து மோகன் புறப்பட்டு வருவது தெரிகின்றது. `உன்னையல்லே
காருக்குள்ளை போய் ஏறி இருக்கச் சொன்னனான். சேங்கு…. சேங்கு’ அடி விழப் போகின்றது என்பதைப்
புரிந்துகொண்ட நளாயினி, மகனையும் இழுத்துக் கொண்டு காரிற்குள் ஏறி இருந்து கொண்டாள்.
கேற்றடிக்கு மோகன் வந்தபோது,
அந்தப் பெண் எதையோ மோகனிடம் சொன்னாள். மோகன் காது கேளாதவன் போல் விறுவிறென்று வந்து
கார்க் கதவைத் திறந்தான்.
“சுவாமிஜி நானும் இங்கே
வந்து விட்டேன்” என்று சொல்லியபடியே, காரின் முன்னால் மோகனின் பாதங்களில் வீழ்ந்து
வணங்கினாள் அந்தப் பெண்.
“எனக்கு உன்னைத் தெரியாது”
என்று சொல்லிவிட்டு காரினுள் ஏறி காரை ஸ்ராட் செய்தான் மோகன்.
அனேகமாக மோகன் இனிமேல்
இந்தக் கோவிலுக்கு வரமாட்டான் என்பதை நளாயினி புரிந்து கொண்டாள்.
•

No comments:
Post a Comment