வவனியாவிற்கு இங்காலை புகையிரதத் தண்டவாளங்களை
இயக்கங்கள் எல்லாம் புரட்டிப் போட்டிருந்த காலம். வடபகுதிப் பிரயாணிகள் தலைநகர்
கொழும்பிற்குப் போவதென்றால், முதலில் வவனியா சென்று அங்கிருந்து புகையிரதம்
மூலமாகவோ அல்லது பஸ் மூலமாகவோ போக வேண்டும். பஸ் பிரயாணம் ஆபத்தானது. சிங்களக்
காடையர்கள் பஸ்சை இடையிலை மறிச்சு தமிழ் மக்களைத் தொந்தரவு செய்வார்கள்.
இளைஞர்களைக் கதறக் கதற இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.
நாங்கள் வவனியா புகையிரத நிலையத்திற்கு ஒரு மணியளவில்
போய் விட்டோம். ஒரே சனக்கூட்டம். ஒன்றரை மணிக்குத்தான் கொழும்புக்குப் போகும்
புகையிரதம் வரும்..
“நான் ‘பாக்’ ஒண்டை கோணர்சீற்றுக்கு எறியிறன். நீ
அப்பாவைக் கூட்டிக்கொண்டு கெதியிலை ஏறு. என்னைப் பாக்க வேண்டாம். நான் எப்பிடியோ
ஏறிவிடுவன்” தம்பியைப் பார்த்துச் சொன்னேன்.