Thursday, 5 June 2014

கங்காருப் பாய்ச்சல்கள் (2)


இலங்கையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பன் ஒருவன் ‘துசிததிஜேட்டரில் நல்ல ‘த்ரில்படமொன்று ஓடுவதாகச் சொன்னான். ‘சூட்டிங்படம். ஆங்கிலப்படம். நண்பனின் கதையைக் கேட்டு படம் பார்க்கச் சென்றோம்.

ஆரம்பத்தில் இருந்தே இரண்டுபேர் ஒரு மேசையின் முன்னால் இருந்து தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவனின் அருகில் துப்பாக்கி ஒன்று இருந்தது. அடிக்கடி கமரா அதனைப் ஃபோர்கஸ் செய்தது. கதை இடையிடையே எங்கோவெல்லாம் சென்று மீண்டும் அந்த மேசைக்கு வரும். மொத்த்த்தில் அந்த இரண்டு பேரும் மேசையும்தான் படம். இரண்டுமணி நேர உரையாடலின் பின்னர் துப்பாக்கி வைத்திருந்தவன், அதனை எடுத்து மற்றவனைச் சுட்டுக் கொன்றான். இதைப் பார்க்க இரண்டுமணி நேரம் பொறுமை சகிப்புத்தன்மை எல்லாம் வேண்டும்.

சிறுகதை ஒன்றில்---சுவரில் அடிக்கப்பட்ட ஆணி ஒன்றில் துப்பாக்கி ஒன்று தொங்கினால், கதை முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தே ஆக வேண்டும் என்று சொல்வார்கள். இல்லாவிடில் அந்த்த் துப்பாக்கி கதையில் வரக்கூடாது என்பார்கள். நல்ல ஒரு கதைக்கு அதுவே அடையாளம் என்பார்கள்---இதை யாரோ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இதனடிப்படையில் அந்தச் சினிமாவைப் பார்த்தால் அதுவும் நல்லதொரு படம் தான்.
ஒரு சிறுகதையின் ஆரம்பப் பந்தியில் ஒரு திருப்பத்தை (twist) வைத்துவிட வேண்டும் என்று சொல்லுவார்கள். சிலரது கதைகளில் –படத்தில் வரும் துப்பாக்கி போல் பொறியைக் காட்டுவார்கள். அதன் பிறகு அந்தப் படம் போலத் தாலாட்டுத்தான். சம்பவங்கள் எல்லாமே சிறுகதைகள் ஆகிவிடுவதில்லை. சிறுகதையில் ஒவ்வொன்றையுமே புட்டுப் புட்டுச் சொல்லவும் தேவையில்லை. வாசகர்கள் முட்டாள்கள் அல்ல.

நாவல் ஒரு ‘வடம் என்றால், அதன் துண்டம்சிறுகதை ஆகும். அதற்காக பத்துப் பதினைந்து நல்ல சிறுகதைகளைச் சேர்த்துக் கட்டி அதை நாவல் என்று சொல்லப்படாது. சமீபத்தில் நல்ல சிறுகதைகளைப் படைக்கும் ஒரு மூத்த எழுத்தாளர் அப்பிடித்தான் செய்தார். அதையும் சிலர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.
தமிழ் அங்காடி ஒன்றிற்கு முன்னால் நின்றுகொண்டிருந்தேன். கடைக்குள்ளிருந்து எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் வேகமாக கையில் ஒரு கட்டுப் பேப்பருடன் வெளியே வந்தார். சமீபத்தில் அவர் ஒரு சிறுகதைத்தொகுதியொன்றை வெளியிட்டிருந்தார். நானும் அதற்குப் போயிருந்தேன். என்னை நோக்கி வருகின்றார்.

“இன்னும் மூன்று கிழமைகளில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட இருக்கின்றேன். ஒன்று ஆங்கில மொழிபெயர்ப்பு. மற்றது வியட்நாமிய மொழிபெயர்ப்பு.
கையிலிருந்த அழைப்பிதழ் ஒன்றை நீட்டினார். முற்றுமுழுதாக வியட்நாமிய மொழியில் அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழ் அது. இடையே ஆங்கிலத்தில் -மொழிபெயர்கப்பட்ட புத்தகத்தின் பெயரும் அவரது பெயரும் மாத்திரம் இருந்தன. அவுஸ்திரேலியாவில் வியட்நாமியர்கள் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றார்கள். அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கின்றார். அங்கு நிறைய வியட்நாமியர்கள் வேலை செய்யக்கூடும்.
அப்போது எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. கூட்டமொன்றில் ஒரு எழுத்தாளர் தனது சிங்கள் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை என்னிடம் தந்தார்.

“என்ன தம்பி தூஷணத்திலை எல்லாம் எழுதிக்கிடக்கு அருகே ஒருந்த மூத்த எழுத்தாளர்---அவருக்கு காது கேட்காது, கண் பார்வை கூர்மை--- என்னிடம் இப்படிக் கேட்டார்.
“என்ன சொல்கின்றார்?என்றார் புத்தகத்தைத் தந்தவர். நான் மெளனமாகி நின்றேன்.
இது கந்தப்பு மாமா எழுதின எக்‌ஷாம்.

|என்னடி உமா... உன்ரை பிள்ளைக்கு மாக்ஸ் குறைஞ்சிட்டுதாம்!|
|கந்தப்பு மாமா இறந்த கவலை இருக்காதா பிள்ளைக்கு...|

“அதாரடி கந்தப்பு மாமா... இவ்வளவு நாளும் அவரைப்பற்றி எனக்கு ஒண்டும் சொல்லேல்லையே?
“அது செல்வி.... என்ரை இவர் நாதனரை தம்பியின்ரை சம்பந்த பகுதி ஆக்கள்

|கந்தப்பு மாமா எங்கை செத்தவர்?|
|இஞ்சாருங்கோ... கந்தப்பு மாமா எங்கையப்பா இருந்தவர்?|

“ஆரைப் பற்றிக் கேக்கிறீர்?
இல்லை... உங்கடை கந்தப்பு மாமா எங்கை இருந்தவர்?
“அரியாலையிலை எண்டுதான் நினைக்கிறன்

|அவர் சாகேக்கை எத்தினை வயது?|
|இஞ்சாருங்கோ கந்தப்பு மாமா சாகேக்கை எத்தினை வயதிருக்கும்?|
|ஆருக்குத் தெரியும்... தொண்ணூறு எண்டு நினைக்கிறன்|

“உமா... நீர் எப்பவாகிலும் கந்தப்பு மாமாவைச் சந்திச்சிருக்கின்றீரா?
“நானே சந்திக்கேல்லை. எப்பிடி உமா சந்திச்சிருப்பாள்?

|அப்ப ஒருத்தருமே செத்தவீட்டுக்கும் போகேல்லையெண்டு சொல்லுங்கோ|
|என்ன உமா விடுத்து விடுத்தெல்லாம் கேள்வி கேக்கிறாய்?|

“இல்லை உமா... எனக்கே கந்தப்பு மாமா செத்த கவலை இம்பிட்டு இருக்கேக்கை, உங்கடை பிள்ளைக்கு இருக்காதா என்ன?


பாய்ச்சல்கள் தொடரும்...

No comments:

Post a Comment