Thursday, 5 June 2014

கங்காருப் பாய்ச்சல்கள் (1)தமிழ் எழுத்தாளர்கள் தமது படைப்புகளை பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கும்போது தேர்வு என்பது முக்கியமானதொன்றாகிறது. தேர்வு சரியாக அமையாவிடில் தமிழ் இலக்கியம் பற்றிய மதிப்பீட்டின் தரம் குறைந்துவிடும்.
புலம்பெயர்ந்த சில எழுத்தாளர்கள் பணம் இருக்கின்றதே என்ற கைங்கரியத்தில், தமது படைப்புகளை அசுரகதியில் மொழிபெயர்புச் செய்து அவசர அவசரமாக வெளியிட்டு வருகின்றார்கள். இந்தத் தனிநபர் முயற்சிகளைப்பற்றி சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது...!
சில எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பார்த்துப பயந்து ஓடிய காலம் போய், எழுத்தாளர்கள் சிலரையே பார்த்துப பயந்தோடும் காலம் வந்துள்ளது. “சே! என்ன மனிசரப்பா... சும்மா இருந்த என்னைச் சந்திக்கவென்று வீட்டுக்கு வந்துவிட்டு, என் பெண் எப்படி இருக்கின்றாள்? என் மனைவியின் சமையல் பக்குவம் எப்படி? என் அம்மம்மாவை நான் முதியோர் இல்லத்தில் விட்டது பற்றியெல்லாம் கட்டுரை கட்டுரையாக எழுதிவிட்டாரே! என்று சமீபத்தில் என்னிடம் ஒரு நண்பர் புளுங்கினார்.
கதை எழுதலாம். கதையில் வேறு பெயர்களைப் போட்டு சம்பவங்களைத் திரித்து சுவைபட எழுதிவிட்டுப் போகலாம். ஆனால் கட்டுரை எழுதுவதென்பது? இது அவர்களின் எழுத்து வறட்சியைக் குறிக்கின்றதா?
சில எழுத்தாளர்கள் சிங்கள இனமக்களின் நல்ல இயல்புகளை மாத்திரம் கதையாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளுகின்றார்கள். ஏதோ தமிழ் மக்கள் மிகவும் கூடாதவர்கள் என்பது போல. ஓரிரு படைப்புகளில் மாத்திரம் நான் இதை அவதானிக்கவில்லை. அவர்களின் எழுத்தே அப்படித்தான்.
எல்லா இன மக்களிலிலும் நல்லவர்களும் உள்ளார்கள், தீயவர்களும் உள்ளார்கள். இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம் சில எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களுக்கு ஏதாவது இருக்கும் பட்சத்தில்தான் விழாக்களுக்கோ கருத்தரங்குகளுக்கோ வருகின்றார்கள். ஏதாவது பேசுவதற்கோ, கவிபாடவோ, கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவோ அல்லது நூல் அறிமுகம், சிறப்புப்பிரதிகள் வாங்க என்றால்தான் அவர்கள் வருகின்றார்கள். இல்லாவிடில் ஏதாவது நொண்டிச்சாட்டு சொல்லி விடுகின்றார்கள்.
சமீபத்தில் ஒரு எழுத்தாளரை விழாவிற்கு பார்வையாளராக அழைத்தபோது “நான் அங்கு வருவதால் எனக்கென்ன benefit ? என்று கேட்டார்.
மேலும் சிலநாட்களிற்கு முன் முகநூலில் ஒரு நண்பர்,
“புத்தகம் வெளியிடுபவர்கள், தாங்களே ரீயையும் வடையையும் இலவசமாக வாங்கிக் குடுத்து புத்தகத்தை வெளியிடுகின்றார்கள் என்று குறைப்பட்டிருந்தார். அவரை ஒரு புத்தகவெளியீட்டு விழாவில் வந்து, அங்கு நடைபெறும் கவியரங்கில் கவிதை பாடக் கூப்பிட்டபொழுது ஐயையோ.... ரிக்கற் புறோகிறாமிற்கு எல்லாம் நான் கவிதை பாடுவதில்லை என்றார். காரணம் விழா நடத்துபவர் இரவு உணவும் வழங்குவதால் நிகழ்ச்சிக்கு சிறு தொகைப் பணத்தை ரிக்கற்றாக வைத்திருந்ததுதான்.

பாய்ச்சல்கள் தொடரும்...

No comments:

Post a Comment