Sunday 10 August 2014

லவ் லெட்டர்


ஸ்ரொப்....ஸ்ரொப்என்று சத்தமிட்டபடியே வேலிமறைவில் இருந்து சைக்கிளுக்கு முன்னால் குதித்தான் முகுந்தன்.

ஏற்கனவே கால் எட்டாமல் நொண்டி நொண்டி ஓடி வந்த உமா, செய்வதறியாது கால்களை நிலத்தினுள் ஊன்றி, கொஞ்ச தூரம் சைக்கிளுடன் இழுபட்டு புழுதியையும் கிழப்பி மூச்சிரைத்து நின்றாள்.

தெருவழியே போன நாய் ஒன்று சற்று மிரண்டு, நின்ற இடத்திலே நின்று அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தது.

“உமா! நான் உன்னை விரும்புகிறன். ஐ லவ் யு.                     
முகுந்தனை மேலிருந்து கீழ்வரை உற்றுப் பார்த்து, அதிசயித்து நாணித் தலை குனிந்தாள் உமா.

“என்ன ஒண்டும் பதில் சொல்லேல்ல.
“நான் ஸ்கூலுக்குப் போகவேணும். படிக்கவேணும்.
“ஆர் வேண்டாமெண்டது. படி. நல்லாப் படி!! போகேக்கை இதையும் எடுத்துக் கொண்டுபோய்ப் படி.
“என்னத்தை?
இந்த லெட்டரை!
“அப்பா ஏசுவார்!

அங்கு நின்ற பத்து நிமிடத்தில், குறைந்தது பத்துத் தடவைகளாவது ‘நான் ஸ்கூலுக்குப் போகவேணும். படிக்கவேணும்என்று சொல்லிவிட்டாள் உமா. கொஞ்ச நேரம் ஆளை ஆள் பார்த்தபடி இரண்டுபேரும் வியப்பில் நின்றார்கள்.

மூச்சுமுட்டும் தூரத்தில் நின்ற முகுந்தன் “மெளனம் சம்மதமா?என்றான். அவனை ஏமாற்றிவிட்டு ஓட்டமெடுத்தாள் உமா.

சட்டைப் பொக்கற்றுக்குள் இருந்த கடிதத்தை எடுத்து மறைவாக புத்தகத்தினுள் செருகினான். மறைவில் சாத்தியிருந்த்து சைக்கிள். தூக்கி ஒரு மிதி மிதித்தான். சடசடவென ‘றிம்ஓசை எழுப்பியது. குனிந்து பார்க்க இரண்டு சில்லுகளும் சுத்தமாகக் காற்றுப் போயிருந்தது. ‘வால்வ் கட்டைகளையாரோ பிடிங்கி எறிந்திருந்தார்கள். வாய்க்கு வந்தபடி திட்டியவாறே சைக்கிளை உருட்டிக்கொண்டு சைக்கிள் கடையடிக்குப் போனான். சைக்கிள்கடை இராசரத்தினம் அந்தநேரம் பார்த்து சாப்பிடப் போயிருந்தார்.

சைக்கிள்கடைக்கு முன்னால் இருந்த வாங்கில், கால்களை ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டு, ஒரு பாதத்தை ‘கிடுகிடுவென்று ஆட்டிக்கொண்டிருந்தான் முகுந்தன். உள்ளுக்குள் சிரிப்பதும், சிரித்த சிரிப்பு உள்ளிருந்து வெளியே வந்து உதட்டில் பொசிவதுமாக இருந்தது. முகுந்தனுக்குத் தெரியாமல் வந்து பக்கத்திலிருந்த கதிரையில் அமர்ந்தான் நாதன். நாதன் அவனது பள்ளிநண்பன்.

“நான் போக வேணும். ஸ்கூலுக்குப் போக வேணும்முகுந்தனது காதிற்குள் குனிந்து, காதடைக்கும் வண்ணம் கத்தினான் நாதன். திடுக்கிட்டு துள்ளி எழுந்தான் முகுந்தன்.
“ஆர் கேர்ள்?
“ஆ! நாதன் அண்ணையா? என்ன கேட்டனியள்?
“ஆர் கேர்ள் எண்டு கேட்டனான்
“அமலாபால்
“நீ பாத்த பட்த்தின்ர கதாநாயகியை நான் கேட்கேல்ல!
“அப்ப?
உன்ரை சைக்கிள் காத்துப் போய் சைக்கிள்கடையிலை நிக்குது. ஞாபகம் இருக்கட்டும்.
“அண்ணை! நீங்களா சைக்கிள் காத்தைப் பிடுங்கிவிட்டது.
“இந்தா பிடி. ரண்டு வால்வ் கட்டைகளையும். இப்ப சொல்லு?
“சந்தைக்கு முன்னாலை மதில் போட்ட வீடு
“அட நம சிவராசா வாத்தியின்ர மகள் உம்மா. அந்தாளைத் தெரியும்தானே! ஸ்கூலிலை பிள்ளையளை கமக்கட்டுக்கை தூக்கி வைச்சுக்கொண்டு விளாசுமே! எத்தனை பிள்ளையள் தூக்க முதலிலேயே ‘சூஇருந்திருக்கும்.
லெட்டர் வாங்கமாட்டன் எண்டிட்டாள் போல?
“ஓம். அப்பா ஏசுவாராம்.
“அந்த லெட்டரைத் தா பாப்பம்.
“ஒண்டுமில்லை. வெறும் பேப்பர். வெறும்பேப்பரை என்வலப்புக்குள்லை வைச்சுக் கொண்டு திரியுறன். ஒருக்கா இதை வாங்கிட்டா, பிறகு சுவாரசியமாக எழுதிக் குடுக்கலாம் எண்டிருக்கிறன்.

நாதன் தன் கையிலிருந்த சீலைப்பையிற்குள் கையை நுழைத்தான். ஒரு பேப்பர் – அங்கங்கே அண்டர்லைன் போட சில கலர்ப் பேனாக்கள், என்வலப் என்பவை வெளியே வந்தன. உமாவைப்பற்றியும் அவள் குடும்பம் பற்றியதுமான தகவல்களை முகுந்தனிடமிருந்து சேகரித்தான். கற்பனைக் குதிரையைத் தட்டிவிட கடிதம் வந்தது.

“பிளையார்சுழியைப் போட்டிட்டு, அன்புள்ள உமாக்குட்டி எண்டு எழுது
“குட்டி இல்லை அண்ணை குஞ்சு
‘குஞ்சோ பிஞ்சோ எழுது. நானும் நீயும் நலமாக இருக்க விநாயகர் அருளை வேண்டிக் கொள்கின்றேன்.
“என்ன அண்ணை பற்றனையே மாத்திறியள்?
“இப்பிடி ஒவ்வொரு வசனத்துக்கும் இடக்கு முடக்காக குறுக்குக் கேள்வி கேட்டா கடிதம் இண்டைக்கு கட்டுக்குச் சேராது
“இனிக் கேட்கமாட்டன். நீங்கள் சொல்லுங்கோ
“நான் போட்ட கடிதத்துக்கு, நீங்கள் பதில் போடுவியள் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை. திகைத்துப் போனேன். மிக்க நன்றி.

முகுந்தனும் திகைத்துப் போனான். அவன் எங்கே உமாவிற்குக் கடிதம் போட்டான்? கடிதம் எழுதுவதைவிட்டு நாதனை நிமிர்ந்து பார்த்தான்.

“சரி தொடர்ந்து எழுது. மேலும் இரண்டு தங்கைகள், தம்பி, ஆஸ்மா நோயுடன் போராடும் அம்மா இவர்களைப் பற்றியெல்லாம் எழுதியிருந்தீர். எனக்கும் கவலையாகத்தான் உள்ளது. ஒன்று சொல்வேன். இனிவரும் காலங்களில் பெண்களுக்கு, கணவனைக் காட்டிலும் கல்விதான் முக்கியம் என்பேன்.
“அண்ணை... நீங்கள் கெதிகெதியாச் சொல்லுறியள்.
“சரளமா வரேக்கை அப்பிடித்தான் சொல்லுவன். நீதான் கிரகிச்சு எழுதவேணும்.
அப்பா பொல்லாதவர்தான். நானும் அறிவேன். ஊரிலுள்ள பள்ளிக்கூடப் பிள்ளைகள் தோள்பட்டையைத் தூக்கிக் கொண்டு திரிவதை நானும் பார்த்திருக்கின்றேன்.
“இனிக்காணும் அண்ணை. நல்லதா ஒரு முடிப்பு முடியுங்கோ!
“வீட்டிற்குக் கடிதம் போடவேண்டாம் என்று எழுதியிருந்தியள். நேரிலை வாங்கியிருந்தால் ஏன் இந்த வில்லங்கம்? இப்ப முத்திரைச் செலவும். இனிமேல் முயற்சி செய்கின்றேன். நீங்கள் போட்ட கடிதத்தை ஆயுள் உள்ளவரை பத்திரமாக வைத்திருப்பேன். படிப்போம். சொந்தக்காலில் நிற்போம். சொந்தபந்தங்களைக் காப்பாற்றுவோம். அதுக்குப் பிறகுதான் எல்லாம். அன்பு நண்பன், முகுந்தன்

“நாதன் அண்ணை... ஒரு ‘டவுட்’. வாத்தியின்ரை கையிலை ஒருவேளை இந்தக் கடிதம் கிடைச்சிட்டால்?
“அந்தாளின்ரை கையிலை கடிதம் கிடைக்க வேணுமெண்டுதானே ரூவும் புறமும் போட்டு எழுதுறம்.

முகுந்தன் சைக்கிளில் காற்றடிக்கும் பம்பைப் பொருத்தினான். காற்றைக் கிழித்துக் கொண்டு இரண்டு சைக்கிள்களும் பறந்தன. தபால்பெட்டி – சாடியும் மூடியுமாக செவ்விளநீர் கலரில் கம்பீரமாக நின்றது. அதற்கு எதிராக பஸ் தரிப்பிடத்தில், முகுந்தனின் நண்பர்கள் இருவர்---குகநேசனும் பரமுவும்--- இருந்து வம்பளந்து கொண்டிருந்தனர்.

போடு லெட்டரை! அரசிளங்குமரி உனக்குத்தான்.
“என்னைப் பயந்தாங்கொள்ளி எண்டு ஸ்கூலிலை சொல்லுறவை. ஒருக்கா உவை ரண்டு பேருக்கும் இந்த லெட்டரைக் காட்டிப்போட்டு ஓடியாறன் அண்ணை.

பதிலுக்குக் காத்திராமல் எதிர்க்கரை ஓடினான்.

“என்ன ரண்டு பேரும் ஸ்கூலுக்குக் கட் போல?
“நீ மாத்திரம் என்னவாம்.
உதென்ன கையிலை லெட்டர் போல?
“இப்பதான் தெரியுதாக்கும். இந்தா பார். சி.உமா மேற்பார்த்து
குகநேசன் ஒரு கணம் நிமிர்ந்து வானத்தை மேல் பார்த்தான்.

“என்ன மேலை பாக்கிறாய்? இந்தா... இஞ்சை பார். மேற்பார்த்து சிவராசா ஆசிரியர். 130 பொன்னு சீமா ஒழுங்கை. எப்படியிருக்கு லெட்டர்? ஆராவது இதுவரை ஸ்கூலிலேயே ‘புறம்போட்டு கடிதம் எழுதியிருக்கிறியளா?

வீதிக்குக்குறுக்கே திரும்ப ஓடி எதிர்க்கரை வந்தான். அவனுக்குப் பின்னால் குகநேசனும் பரமுவும், கடிதத்திலே என்ன எழுதியிருக்கின்றான் என்பதைப் பார்ப்பதற்காக துள்ளித்துள்ளி ஓடி வந்தார்கள். முத்திரைக்கு எச்சில் போட்டு கவருடன் அதனை அழுத்தி அழுத்தி ஒட்டினான் முகுந்தன். பொறுமை இழந்த நாதன் அதைப்பறித்து தபால்பெட்டிக்குள் போட்டான். பிறகு நான்குபேரும் சைக்கிளையும் உருட்டிக்கொண்டு கதைபேசினார்கள்.

மாஸ்டர் கடிதத்தைக்  காட்டச் சொல்லிக் கேட்டால் என்ன செய்வாய்? வாழ்நாள் முழுவதும் பத்திரமாய் வைச்சிருப்பன் எண்டு எழுதியிருந்தாய்குகநேசனின் கேள்வி முகுந்தனைச் சிந்திக்க வைத்தது. இந்தவயதிலும் ஒருவேளை அவரின் கமக்கட்டுப்பிடிக்குள் தொங்கவேண்டி வருமோ? புதிய பிரச்சினை வெளிக்கிழம்பியது. நாதனின் தரம்கெட்ட யோசனையை எண்ணிக் கவலை கொண்டான். நேரத்தைப் பார்த்தான். மூன்று மணிதான்.

“கடிதத்தை கட்டுக்குச் சேரவிடாமல் தடுக்கவேணும். அதுதான் ஒரே வழி.
தபால்பெட்டியை நோக்கி நாலுபேரும் விரைந்தார்கள். வீதியில் சனநடமாட்டம் இல்லை. உண்ட களைப்பில் குட்டிதூக்கம் போட்டுக்கொண்டிருக்கும் நேரம். தபால்பெட்டியைச் சுற்றிச்சுற்றி வலம் வந்தார்கள். சாடிக்கும் மூடிக்குமிடையேயான சீமெந்திலான இணைப்பைக் கண்டுகொண்டார்கள். அங்குமிங்கும் பார்த்துவிட்டு ஒரே தள்ளு. முக்கித்தள்ளியதில் மூடி சாடியைவிட்டுப் பிரிந்து முனகியபடியே புல்தரையில் விழுந்தது. பரமுவும் குகநேசனும் கால்களைக் கெட்டியாகப்பிடிக்க, முண்டம்போல கிடந்த சாடியின் உள்ளே தலைகீழாகப் புகுந்தான் முகுந்தன்.

“ஒரே இருட்டாக்கிடக்கு. மூச்சு அடைக்குது. காலை விட்டியளோ அரோகராத்தான்.
"இந்தா ரோச்லைற். அடிச்சுப்பாத்து எடு.
“இஞ்சைபாரப்பா பொட்டுக்கேட்டை. சரவணபவான் மாஸ்டர் மிஸ் செல்வி ரீச்சருக்கு எழுதின லவ்லெட்டர் ஒண்டு கிடக்கு. எடுத்து வச்சா பிறகு உதவும். இந்தா இதைப்பிடி. கையெழுத்தை வைச்சு கடித்த்தை ஆர் எழுதினதெண்டு கண்டுபிடி பாப்பம்
“அட நம்ம ‘பூனை’. தனக்குத்தானே லவ்வெட்டர் போட்டிருக்கிறான்.
“மழை தூறுது. மற்றவையின்ரை கடிதத்தை விட்டிட்டு கெதியிலை உன்ரை கடிதத்தை எடு. ஆக்கள் வந்தா பிறகு பிரச்சினையாப் போகும்குகநேசன் முகுந்தனைத் துரிதப்படுத்தினான்.

மழை பிலக்கத் தொடங்கும்போது தனது கடிதத்துடன் வெளியே வந்து  விழுந்தான் முகுந்தன். நாலுபேருமாகச் சேர்ந்து மூடியைத் தூக்கி இருந்த இட்த்தில் வைப்பதற்கு எத்தனித்தார்கள். மூடி அசைந்தால்தானே! அதைத்தூக்க ஒரு யானையின் பலம் தேவைப்படும்போல் இருந்தது. உள்ளே இருந்த கடிதங்கள் மழையில் நனையத் தொடங்கின. குகநேசன் எப்பொழுதும் தன்னுடன் கொண்டு திரியும் அந்தப் பென்னாம்பெரிய குடையை விரித்து தபால்பெட்டிக்குள் செருகினான்.

மழையில் விரைந்த மனிதர்களைத் தேடி தெருத்தருவாக அலைந்தார்கள்.

“ஆரோ தறுதலையள் தபால்பெட்டியின்ரை மூடியைத்தள்ளி விழுத்திப் போட்டாங்கள். கடிதங்கள் எல்லாம் நனையுது. உதவி செய்தால் தூக்கி வைக்கலாம்.துணைக்கு ஆள் தேடி தெருவில் போனவர்களைக் கெஞ்சினார்கள்.
“ஐயா... அண்ணா.... ஆரோ தறுதலையள்...

பொலிஸ் ஜீப் ஒன்று வெள்ளத்தை விசிறியடித்துக்கொண்டு வீதியில் விரைநதது. ஆபத்துக்குப் பாவமில்லை. விஷயத்தைச் சொல்ல, நாலைந்துபேர் வாகனத்தினின்றும் குதித்து இறங்கினார்கள். தெருவில் போனவர்கள் வந்தவர்கள் எல்லாம் மறிக்கப்பட்டார்கள். பத்துப் பதினைந்து பேர் புடைசூழ மூடி சாடியின் மேல் அமர்ந்தது. தபால்பெட்டி மீண்டும் கம்பீரமாகக் காட்சி கொடுத்தது.

சைக்கிளைப்பூட்டி வைத்துவிட்டு நாலுபேரையும் ஜீப்பில் வந்து ஏறும்படி இன்ஸ்பெக்டர் சொன்னார். “இண்டைக்கு ஏதோ சமா நடக்கப் போகுதுஎன்ற வயிற்றுக்கலக்கலில் நாலுபேரும் ஆளை ஆள் பார்த்தபடி ஜீப்பிற்குள் ஏறினார்கள். ஜீப் தபால்கந்தோரை வந்தடைந்தது. தபால் அதிபருடன் கதைதுவிட்டு வெளியே வந்தார் இஸ்பெகடர்.

அடுத்தநாள் பத்திரிகையில் ‘இவர்கள் வருங்காலச் சிங்கங்கள்என்ற மகுடமிட்டு செய்தி வந்திருந்தது.


No comments:

Post a Comment