Friday, 1 August 2014

கொலையும் கூத்தும் - Flashbacks


அப்பொழுதெல்லாம் பாடசாலை விடுமுறைக்காலங்களில் கிளிநொச்சி சென்றுவிடுவோம். ஜெயந்திநகர், உருத்திரபுரத்தில் எனக்கொரு அக்கா முறையானவர் இருந்தார். அவர்களின் பிள்ளைகளும் எங்களின் வயதை ஒத்தவர்களாக இருந்தார்கள்.

பத்தாம் வகுப்பு படிப்பிற்குப் பின்னர்தான் தனியவெல்லாம் சுற்றித்திரிவதற்கு வீட்டில் அனுமதி கிடைத்தது. அதற்கு முன்னரெல்லாம் ஆராவது கிளிநொச்சி போனால் அவர்களுடன் கூடிக்கொண்டு போவேன்.

மாரிகால விடுமுறையில் போவதற்குத்தான் நல்ல விருப்பம். நீண்ட விடுமுறை.
அவர்களின் வீடு பெரியதொரு வளவில் இருந்தது. வளவின் முன்புறம் வீடு, பின்புறம் தென்ன்ந்தோட்டம். றோட்டிலிருந்து வீட்டிற்குப் போவதற்கு சிறியதொரு பாலம் மரத்தடிகளினால் கட்டப்பட்டிருந்தது. கீழே தண்ணீர் சலசலத்து ஓடியது. வீட்டிற்கு முன்பாகவும் பக்கத்திலும் நல்ல கறுத்தக்கொழும்பான் மாமரங்கள். ஒருமரத்தின் கீழே பென்னம்பெரிய மாடொன்று கட்டப்பட்டிருக்கும். பின்புற வளவில் ஒரு படலை இருந்த்து. அதன் மருங்கே அன்னாசிக்கன்றுகள். படலையைத் திறந்தால் இந்துமகாவித்தியாலயம், குருகுலம்.

திருவெம்பாவைக் காலங்களில் குருகுலத்திலிருந்து அதிகாலை ஊர்வலம் புறப்படும். குருகுலத்தில் அப்போது நிறைய சிறுவர்கள் இருந்து படித்துவந்தார்கள். குருகுலத்து ஐயாவின் தலைமையில் இன்னும் சில வாத்திமார்களின் துணையுடனும் ஊர்வலம் தயாராகும். என்னுடைய அக்காவும் அத்தானும் அப்பொழுது கிளிநொச்சி இந்துமகாவித்தியாலயத்தில் படிப்பித்து வந்தார்கள். இருள் விலகாத அந்தப்பொழுதுகளில் தேவாரம் பாடிக்கொண்டு மணி அடித்து சேமக்கலம் சங்கு பிரசாதம் இத்தியாதிகளுடன் ஏறக்குறைய இரண்டு மணித்தியாலம் நடை பயில்வோம்.

பகல் பொழுதுகளில் இந்துமகாவித்தியாலயக் கட்டடங்கள் வாய்க்கால்வரப்புகள் நாவல்மரங்கள். சிலபொழுதுகளில் வாய்க்கால் தண்ணீரில் தூண்டில் போட்டு மீன்பிடித்தல், விலாங்குமீனுக்குக் கல் எறிதல், ஓடையில் குளித்தல்.

ஒருமுறை - 1975 ஜுலை மாதம் நானும் அண்ணாவும் கிளிநொச்சி அக்காவின் மூத்த மகன் ராசாவும் தெல்லிப்பழையில் இருந்து கிளிநொச்சி போவதற்காக பஸ் ஏறினோம். அப்பொழுது ராசா எங்கள் வீட்டில் இருந்து யூனியன்கல்லூரியில் படித்து வந்தார் (லண்டனில் வசித்துவந்த அவர் சமீபத்தில் காலமாகிவிட்டார்). முதலில் யாழ்ப்பாணம் சென்று பின்னர் கிளிநொச்சி செல்லும் பஸ்சில் ஏறினோம். கிளிநொச்சியை பஸ் அண்மித்துவிட்டது. ஏ 9 வீதியில் கரடிப்போக்கு சந்திக்கு அண்மையாக இறங்கிக் கொண்டோம். அதிலிருந்து இனி 7ஆம் வாய்க்காலுக்கு போகவேண்டும். பஸ் ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம்தான் வரும். காத்திருந்தோம். ராசாவுக்குத் தெரிந்த டிரக்டர் ஒன்று வந்தது. அதில் ஏற்கனவே ஏழெட்டுப்பேர்கள்வரை இருந்தார்கள். நாங்களும் அதில் ஏறிக்கொண்டோம். பாட்டும் பைலாவுமாக கடகடத்து ஓடியது டிரக்டர்.

பெற்றோல் செற் ஒன்றின் முன்னால் பொலிஸ் ஜீப் ஒன்று நின்றது. அதைச் சுற்றி பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். டிரக்டர் நிறுத்தப்பட்டது. அப்போது ‘டிங்கிரி டிங்காலேபாட்டு போய்க்கொண்டிருந்தது. டிரக்டர் சாரதிக்கு இருக்கையுடன் சேர்த்து ஒரு அறை விழுந்தது.

“எல்லாரும் இறங்குங்க...ஒரு பொலிஸ் கத்தினான்.

அடியின் அகோரத்தைப் பார்த்த அதிர்ச்சியில், டிரக்டர் பெட்டியில் இருந்து குதிச்சு நிலத்தில் தவழ்ந்து அங்கு நின்றவர்களுடன் ஒளித்துக் கொண்டேன்.

“நீ சுட்டியா? நீ சுட்டியா?எல்லாருக்கும் குண்டாந்தடிப் பிரயோகம் நடந்தது.
என்னை அவர்கள் சிறுவன் என்று கண்டும் காணாமல் விட்டார்களோ, அல்லது டிரக்டர் பெட்டிக்கும் கீழேயான சைஷில் இருந்த நான் ஓடி ஒளித்ததை அவர்கள் காணவில்லையோ எனக்குத் தெரியாது. தெரியாத விஷயங்களில் தலைப்போடாது கூட்டத்துள் ஒருவனாக நின்று அங்கு நடப்பவற்றை வேடிக்கை பார்த்தேன்.

ராசாவுக்கு மண்டை உடைந்து இரத்தம் முகம் வழியே வழிந்தது.
சமா முடிந்தபின்னர், அருகே இருந்த வைத்தியரிடம் சென்றோம். அவர் மருந்து போட்டுவிட்டார். வீட்டிற்குச் சென்றபோது அக்காவும் அத்தானும் கேள்விமேல் கேள்வியாய் துளைத்தார்கள்.

“அது டிரக்டர் பள்ளத்துக்கை சரிஞ்சு, பெட்டியோடை இருந்த எல்லாரும் வாய்க்காலுக்கை விழுந்து போனோம். வாய்க்காலுக்கை இருந்த கல்லு ராசாவைக் குத்திப் போட்டுது!என்று அண்ணை சொல்லிச் சமாளிச்சார்.

யாழ் மேஜர் அல்பிரட் துரையப்பாவைச் சுட்டுபோட்டான்களாம்என்றார் அத்தான்.

“இதென்னப்பா... நாங்கள்தான் அவரைச் சுட்டோம் எண்டு நீங்களுமா அப்பா நம்புறியள்?என்றார் இன்னமும் அரை மயக்கத்திலிருந்த ராசா.

எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ராசா தன்னைத்தானே காட்டிக் குடுத்த சங்கதியை நினைச்சு இப்பவும் அடிக்கடி சிரித்துக் கொள்வேன்.

புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர், துரையப்பாவை ‘நான் தான் கொன்றேன். நான் தான் கொன்றேன்என்று சொல்லும்போது – ஏன் நாங்களும் அவரைக் கொன்றிருக்கக்கூடாதா?

No comments:

Post a comment