Thursday, 2 October 2014

இன்றைய ஈழத்து விமர்சனம்

விமர்சனம் என்றவுடன் இன்னமும் கனக.செந்திநாதனையும், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, மு.தளயசிங்கம் போன்றவர்களையும்தான் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து - இன்றைய ஈழத்து விமர்சனத்தை ஓரளவிற்கு எடை போட்டுக் கொள்ளலாம். 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி', 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி', '20ஆம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம்' போன்றவற்றைத் தவிர வேறு நூல்களைப் பார்ப்பதும் அருமையாகிவிட்டது.

முன்னையைப்போல பத்திரிகைகள், இதழ்கள், ஊடகங்கள், மேடை என்றில்லாமல் இன்று இலத்திரனியல் ஊடகங்களிலும் விமர்சனம் புகுந்துவிட்டது. முன்பு ஒரு படைப்பு வந்து அதற்கான விமர்சனத்தை பார்ப்பதற்கு நீண்டநாட்கள் எடுக்கும். இப்பொழுது சுடச்சுட இணையத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள், இணையக்குழுக்களில் வந்துவிடுகின்றன.

இன்று படைப்புகள் பெருகிய அளவிற்கு விமர்சகர்கள் பெருகவில்லை.
பல்கலைக்கழகங்களைச் சார்ந்தவர்களில் சிலரின் மொழிநடை சாதாரணமானவர்களால் விளங்கிக் கொள்ளமுடியாத நிலையில் உள்ளது. மூத்த எழுத்தாளரும் விமர்சகருமாகிய ஒருவர் அடிக்கடி புலம்பெயர்ந்தவர்களின் படைப்புகளை காரசாரமாக விமர்சிக்கின்றார். பல திறனாய்வு நூல்களை எழுதிய ஒருவரின் சில விமர்சனங்கள் மேலோட்டமாகவும் நிறைகளை மாத்திரம் சுட்டிகாட்டுவனவாகவும் உள்ளன. ஒரு படைப்பை எடுத்து ஆழமாக விமர்சிப்பதை விடுத்து, பல படைப்புகளை மேம்போக்காக அகலப்பாங்கில் பேசுவதையும் காணலாம். விமர்சனம் என்றால் 'உச்சி குளிர வைத்தல்', 'தனி நபர் தாக்குதல்', 'ஒருவரை ஒருவர் புகழ்பாடித் துதிபாடுதல்' எனவும் சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். இவை சிலருக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடும். ஆனால் குறைகள் நீக்கி முன்னேறுவதற்கு வழிவகுக்காது.

இன்னொரு புறத்தில் விமர்சனக்கலை வரலாறு அண்மைக்காலத்தில் வீரியமிழந்து நிற்கின்றது. கைலாசபதி காலத்துத் துடிப்பைக் காண முடியவில்லை. ஆழமாகப் பார்க்கக்கூடியவர்கள் அரிதாகவே உள்ளனர்.

ஈழத்து விமர்சனம் பெரிதும் அரசியல் வண்ணம் சார்ந்த சிக்கலுள் தவிப்பதைக் காணலாம். இதன் இன்னொரு தனிச் சிறப்பு கண்டும் காணாமல் இருப்பது. புதியனவற்றை அடையாளம் காட்டுவதில்லை. தத்துவ அல்லது அரசியல் கருதுகோள்கள் காரணமாக - நல்ல பல இலக்கியங்கள் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்படாமல் ஒதுக்கப்படுகின்றன, அதேவேளை தரமற்றவைகள் ஜொலிப்பாக பார்வைக்கு வைக்கபடுகின்றன. இந்த குணாம்சம் இணையத்தளங்களில் பிரகாசிக்கின்றன.

ஈழத்து விமர்சனம் என்ற வகையில் தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பேசப்படுகின்றன. தமிழ்ப்படைப்பாளிகளின் ஆங்கில ஆக்க இலக்கியங்களைக் கடைக்கண்ணாலும் பார்ப்பதாக இல்லை. இவை ஈழத்தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழ் இலக்கியம் வளர்ந்தளவுக்கு விமர்சனக்கலை வளரவில்லை. நேர்மை என்ற அளவுகோலுடன், உள்ளதை உள்ளவாறு சொல்லும் விமர்சனங்கள் நிரம்ப வளரவேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்கள்தான் மேன்மையான இலக்கிய வளர்ச்சிக்கு நல்ல உரமாக அமையும்.
No comments:

Post a Comment