Friday, 26 September 2014

குழந்தைக்குப் புரிந்தது!


அன்று விஜயதசமி. வித்தியாரம்பம். ஏடு தொடக்கும் நாள். கவினுக்கு ஏடு தொடக்குவதற்கு பெற்றார் பாலனும் வனஜாவும் விரும்பினார்கள். கவினும் அவனது அக்கா ஆரபியும் அதிகாலை எழுந்து, அம்மம்மாவின் துணையுடன் குளித்தார்கள். தேவாரம் பாடினார்கள். அவர்கள் இருவரும் அம்மம்மாவின் சொல் கேட்பார்கள். குறும்புகள் செய்யும்போது அம்மம்மா 'ஏய்!' என்று சத்தமிட்டவாறே தடியைத் தூக்கிக் கொண்டு கலைப்பாள். 

கவினுக்கு அந்த 'ஏய்!' மீது 'ஒரு' கோபம்.

வெள்ளிக்கிழமைகளில் அம்மம்மா நீண்ட நேரம் தேவாரம் படிப்பாள். அந்த நேரங்களில் சுவாமி அறைக்குள் புகுந்து "Change the song" என்பான் கவின். அந்த நேரங்களில் அடி விழாது என்று அவனுக்குத் தெரியும்.

ஆரபி சனிக்கிழமைகளில் 'கொம்மியூனிட்டி ஹோலில்' (Community Hall) நடைபெறும் தமிழ்ப்பாடசாலையில் தமிழ் படிக்கின்றாள். மெல்பேர்ணில் அரச பாடசாலையில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. சிட்னி அதற்குப் புறவிலக்கு. தமிழ்ப்பாடசாலையில் ஒவ்வொருவருடமும் நவராத்திரியும் கிறிஸ்மஸ் பண்டிகையும் கொண்டாடுவார்கள். காலை 10 மணியளவில் பாடசாலையில் எல்லோரும் சந்திப்பதாக ஏற்பாடு. பொங்கலை பாடசாலையில் செய்வதென்றும், ஏனைய பலகாரங்களை வீட்டிலிருந்து கொண்டு வருவதென்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தார்கள்.

வனஜா அதிகாலையில் எழுந்து நீராடி, வடை செய்தாள். பாலன் நண்பர்கள் வீடு சென்று பூக்கள் பறித்துக் கொண்டு வந்தான். அம்மம்மா ஆரபியையும் கவினையும் வெளிக்கிடுத்தினாள். நான்கு வயதான கவின் வேட்டி - சால்வையில் நின்றான்.

பத்துமணிக்கெல்லாம் 'கொம்மியூனிட்டி ஹோலி'ற்கு போய் சேர்ந்து விட்டார்கள். வளவிற்குள் காரை நிறுத்திவிட்டு பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த போது காரொன்று அருகே வந்து நின்றது. உள்ளே இருந்த பவானி 'ஹோர்ண்' அடித்து வனஜாவை அருகே வரும்படி கூப்பிட்டாள். அவளின் மகளும் ஆரபியுடன் தமிழ் படிக்கின்றாள்.

"குறை நினைக்காதையுங்கோ தங்கைச்சி, சுண்டல் செய்தனான். இதை ஒருக்கா குடுத்து விடுவியளோ?" கார்க் கண்ணாடியைப் பதித்து வனஜாவைக் கேட்டாள் பவானி. தொடர்ந்து,

"நேரம் போய் விடுமோ எண்டு கெதி கெதியா செய்து கொண்டு வந்தனாங்கள். வீட்டிலை மகள் தனிய. இன்னும் குளிச்சு முழுகேல்லை. பல்லுக் கூடத் தீட்டேல்லை எண்டால் பாருங்கோவன்" சொன்னாள் பவானி.

முகத்தில் துர்நாற்றம். கண்ணில் பீளை. வனஜாவும் பிள்ளைகளும் காரினில் இருந்து இறங்கி திகைத்து, அருவருத்து ஆடாமல் அசையாமல் நின்றார்கள்.

"ஆரபி... அந்த அன்ரியிட்டை இருந்து அதை வாங்குங்கோ."
"நாங்கள் கொஞ்சம் பிந்தி வருவம். சொல்லிவிடுங்கோ" சொல்லிக் கொண்டிருக்கும்போதே கார் புறப்பட்டது.

பூசை முடிந்து ஏடு துவக்க ஆரம்பித்தார்கள். அருகேயிருந்த முருகன் கோயிலில் இருந்து ஐயர் வந்திருந்தார். ஒரு வாழை இலையில் நிறைகுடம், பால் பழங்கள் திருநீறு சந்தனம் குங்குமம். இன்னொரு இலையில் நெல் பரப்பி எதிரே ஐயர்.

கவினின் முறை வந்தது.

"அ.. ஆ.. இ.. ஈ.." என்று கவினின் கைவிரலைப் பிடித்து நெல் மணிக்குள் எழுதிக் காண்பித்தார் ஐயர். அவனுக்கு ஏற்கனவே எல்லாம் அத்துப்ப்படி. சுறுசுறுப்பாக ஒன்றும் விடாமல் எழுதினான். "இவன் வருங்காலத்தில் ஒரு டாக்டராக வருவான்" என்று கவினைப் புகழ்ந்தார் ஐயர். 

தனக்குள்ள ஆங்கிலத்தின் வித்துவத்தைக் காட்டுவதற்காக, ஆங்கிலத்திலும் ஏடு தொடக்க ஆசைப்பட்டார் ஐயர். கவினின் கையைப் பிடித்து நெல் மணிக்குள் அழுத்தி "A... B..." என்று சொல்லத் தொடங்கினார். கவினுக்கு ஒன்றும் புரியவில்லை. ஐயருக்கும் ஒன்றும் புரியவில்லை. மீண்டும் கவினின் கையைப் பிடித்து அமிழ்த்தி "ஏய்... ஏய்.." என்றார். 

கவினுக்கு அம்மம்மாவின் நினைப்பு வந்தது. தடி தன்னை முறைத்துப் பார்ப்பதாகவும் அடுத்தது அடிதான் என உறுதியாக, கையை இழுத்துப் பறித்து ஓடத் தொடங்கினான். ஓடும்போது "ஸ்டுப்பிட் கைய் (Stupid Guy)" என்று சொல்லிக் கொண்டு ஓடினான். ஐயர் உட்பட எல்லாரும் திகைத்துப் போனார்கள்.

"அவனை ஒன்றும் செய்யாதீர்கள்.... அவன் வளர்ந்து டாக்டராக வருவான்" என்றார் மீண்டும் ஐயர்.

இந்தக் கலாட்டா நடந்து கொண்டிருக்கும் போது பவானியின் கைகள் வனஜாவின் தோளைத் தொட்டன.

:தங்கைச்சி... இப்பதான் வாறன். எங்கை பிள்ளை என்னுடைய பிரசாதம் கொண்டுவந்த பாத்திரம்" என்றாள் பவானி.
"ஆரபி ... அன்ரியின்ரை பாத்திரத்தை ஒருக்கா எடுத்துக் குடுங்கோ" என்றாள் வனஜா.
ஆரபி தயங்கினாள்.

"அம்மா...! அன்ரி குளிக்காமல் பல்லுத் தீட்டாமல் பிரசாதம் கொண்டு வந்ததாலை நாங்கள் அதை இஞ்சை கொண்டு வரேல்லை. அதை நான் அப்பாவினரை காருக்குள்ளையே வைச்சிட்டன்" என்றாள் ஆரபி.

வனஜா செய்வதறியாது ஒன்றும் சொல்லாமல் நின்றாள்.1 comment:

  1. அந்தச் சிறு பிள்ளைக்குத் தெரிந்ததுகூட பவானி ஆண்டிக்குத் தெரியவில்லை. சிறுவர்களிடமிருந்து பெரியவரகள் கற்க வேண்டியது இதுபோல் நிறையவே உண்டு. அருமையான பதிவு.

    ReplyDelete