Monday 17 November 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 4) - கதிர் பாலசுந்தரம்

வானரங்கள்

கதை கேட்க வருவதாகக் கூறிய பிள்ளைகள் வருவார்களோ வரமாட்டார்களோ என்று மனம் விசாரணை செய்தது.
புதன்கிழமை. மாலை வேளை. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. காலை முழுவதும் மழை கொட்டியது. கிறவல் வீதியை மூடி காட்டு வெள்ளம் கரடியன்குளத்தை நோக்கிப் புரண்டு பாய்ந்து கொண்டிருந்தது. ஆளை மோதி விழுத்தும் வேகம். இப்பொழுது கான் நீளத்துக்கு வெள்ளம் ஓடுகிறது.
தார்ப்பாய்க் கூடார வாசலில் நின்று எட்டிப் பார்த்தேன். ஓடிஓடி வந்து கொண்டிருந்தனர்.

கூடாரத்துள் கதை கேட்கும் ஆர்வங் கொண்ட பத்து சின்னபிள்ளைகள் பாயில் சம்மாணமிட்டு அமர்ந்திருந்தனர். முதல் தினம் காணாத ஒரு அழகான பெண்ணும் வந்திருந்தாள்.
'பிள்ளைகள் நான் ராச நாச்சியார் வம்சத்தது நீள் கதையை ஆரம்பிக்கப்போகிறேன். கதை முடிவில் ஏதாவது கேள்விகள் கேட்க
விரும்பினால் தாராளமாகக் கேட்கலாம்."

1983 கறுப்பு யூலை பயங்கர இனக் கலவரம் கொழும்பில் வெடித்தது. அப்பொழுது நானும் எனது சகோதரர் மூன்று பேரும் யாழ்ப்பாணத்தில் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தோம். எல்லோரும் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பெற்றவர்கள். எனக்கு வயது பன்னிரண்டு. ஏனைய. இளைய சகோதரங்கள் முல்லை, பாவலன் இருவரும் ஆயிலடி பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தனர்.

எல்லோர் கனவுகளும் வேறுபட்டவை. இருவர் டாக்டர்கள் பற்றிய கனவிலும், ஒருவர் என்ஜினியர் கனவிலும். ஏனையவர்கள் சட்டத்தரணிகள், அரசியல் வாதிகளாக வரவேண்டும் என்று ஆர்வங் காட்டினர்.

ஏலவே சித்தப்பா சிவநேசன் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து கலைப் பட்டதாரியாக வெளியேறியவர். இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து, கொழும்பு திறைச்சேரியில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரும் எமது பரம்பரையினர் போல செக்கச்செவேல் என்ற நிறம். நெடிதே வளர்ந்து, சுருள்மீசையுடன் காட்சி தருவார்.

நான் யாழ் வேம்படி மகளிர் உயர்நிலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்தின் அதிசிறந்த பெண்கள் பாடசாலை. கொழும்பில் தமிழர்களைச் சிங்களவர்கள் கொல்கின்றனர் என்னும் மனதை வருத்திப் பிழியும் செய்திகள் கல்லூரி விடுதி மாணவிகளை  கலவரப் படுத்தியது.
அநேகமாகச் சகல மாணவிகளுக்கும் உறவினர்கள் நண்பர்கள் இலங்கையின் தென் புலத்தில் இருந்தனர். பெரும்பாலானவர்கள். அரச சேவையினர். குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையினர் தீவுப் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள். கலவரம் பற்றி நெஞ்சை உறைய வைக்கும் புதுப்புதுச் செய்திகள் சூறைக்காற்று வேகத்தில் பரவின. தென் இலங்கை வாழ் உறவுகளின் சுகநலங்களை அறிய முடியாத பரிதாப சூழ்நிலை. கொழும்பு நோக்கிய போக்குவரத்து முற்றாக நின்று போயிருந்தது.
அக்காலத்தில் இன்று போலத் தொலைபேசி மின்னஞ்சல் வசதிகள் இல்லை. ஏதும் அறிய முடியாத நிலையில், கல்லூரிக்கு வெளியில், யாழ்ப்பாணம் தலையிலடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது. மக்கள் எல்லாம் தெருவோரங்களில் ஏதாவது புதினம் கிடைக்குமா என்று ஏங்கி அழுதுகொண்டு நின்றனர்.

அடிக்கிறார்கள், வெட்டுகிறார்கள், குத்துகிறார்கள், தீ வைக்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள். கற்பழிக்கிறார்கள், வாகனங்களோடு சேர்த்து எரிக்கிறார்கள் போன்ற பதற வைக்கும் பயங்கரச் செய்திகள், விடுதி மாணவிகளின் உயிர் நாடியைத் திருகிப்பிழிந்தன. மாணவிகள் நெஞ்சை பலமாக அமுக்கிப் பிடித்துக் கொண்டு ஆளையாள் கவலையோடு பார்த்தார்கள். அழுவதற்கு மாணவிகள் நிரம்பப் பேர் இருந்தார்கள். ஆறுதல் கூற எவரும் இல்லை.

சித்தப்பா சிவனேசனின் உயர்ந்த சிவந்த அழகிய உருவம் என் கண்களில் நிழலாடியது. தலைநகர் கொழும்பில் திறைச்சேரியில் உயர் அதிகாரி. தமிழர் செறிந்து வாழும் வெள்ளவத்தை யில் நெல்சன் பிளேஸ் ஒழுங்கையில் சொந்தமாக நான்கறை வீடு.இரண்டு பிள்ளைகள். இலக்கியா, சீராளன்.
இலக்கியா விடுதலைக்கு ஆயிலடிக்கு வரும் காலங்களில் இருவரும், ஓருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு ஒன்றாய்த் திரிவோம். இடையிடையே தங்கை முல்லையும் சேர்ந்து கொள்வாள். அவளுக்கும் என்னைப் போல இலக்கியாவில் அலாதி பிரியம். ஊரெல்லாம் சுற்றுவோம். எம்மைத் தெரியாதவர்கள் இரட்டையர் என்பர்.
குளத்து நீரில் குளிப்பதில் இலக்கியாவுக்கு அலாதிப் பிரியம். அல்லி, தாமரைப் பூக்களை நினைத் தபடியே குளத்துக்கு வருவாள். வீடு திரும்ப இரண்டு மணி நேரமாகும். சித்தி கல்யாணி வந்து கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வார்.
வகைவகையான பறவைகள் கூட்டம் கூட்டமாய்க் குளத்தில் விழுந்து மேலெழும்பும். சொண்டுகளில் மீன்களைக் காவிச் செல்லும். கமெராவால் அவற்றைப் படம் பிடிப்பதில் துடிப்பாய்ச் செயற்படுவாள்.

கடுங் கோடை காலம். குளத்தில் நீர் மிகக் குறைவு. தென்புலத்தில் பரந்த பச்சைப் புல். அங்கு மயில் கூட்டம். ஒரு மயில் தோகை விரித்து ஆடியது. மயில் என்றால் யார் மனம் தான் மலராது? இலக்கியா மகிழ்ச்சியில் துள்ளினாள். நாமிருவரும் குளக்கட்டால் இறங்கி வேகமாக ஓடினோம். கமெராவால் படம் எடுக்கும் பேராவல். மயில்கள் காட்டுள் நகர்ந்தன. நாமும் நகர்ந்தோம். சொற்பதூரந்தான் போயிருப் போம். மயில்கள் மேலே பறந்து இருண்ட பச்சைக் கிளைகளுள் மறைந்து போயின.
வெப்பவலய என்றும் பச்சையான மிகப் பெரிய காடு. மரங்கள் ஓங்கி வான் முட்ட வளர்ந்து படர்ந்து நிலத்தில் சூரிய வெளிச்சம் படாமல் ஆதிக்கம் புரிந்தன. கீழே நிலத்தில் செடி கொடிகள் மருந்துக்கும் காணப் படவில்லை. பெரிய பெரியஅடிமரங்கள் மட்டும் திக்குத் திக்காகத் தெரிந்தன. நிலத்தை மூடி பழுத்த காய்ந்த உக்கிய இலைகள் மட்டும் மெத்தை போலப் பரந்து கிடந்தன.
திரும்பி நடந்தோம். குளத்தைக் காணவில்லை.

மேலே செங்குரங்குக் கூட்டம் கிளைகளிலிருந்து கிளைகளுக்குத் தாவிச் சென்றது. மிகப் பெரிய ஆண் குரங்கு ஒன்று எங்களைத் தொடர்ந்து பார்த்துப் பற்களை ஈயென்று காட்டித் தனுப் போட்டுக் கத்திக் கிளைகளை பிடித்து வேமாக ஆட்டி வெருட்டியது. பயம் பெரிதும் பற்றிக்கொண்டது. ஒருவரை ஒருவர் இறுக  அணைத்து'ஐயோ" என்று குரல் எழுப்பினோம்.
காட்டுள் எங்கும் மரண அமைதி. பாதையைத் தவறவிட்டு விட்டோம் என்பது வெளிச்சமாகியது. கட்டிப் பிடித்தபடியே சுற்றிச் சுற்றி கண்மடல்களை விரித்தபடி பார்த்தோம்.
கண்களைத் தோண்டும் புளியங்குளத்து விளைந்த கறுப்புச் சொத்திப் பெட்டைக் கரடி வந்துவிடுமோ என்ற அச்சம் என்னைப் பற்றியது. யாரோ சுட்டு அதன் வலது பின்னங்காலில் ஊனம். வெஞ்சம் தீர்க்க மனிதரைத் தேடி அலைந்தது. அதைச் சொல்லி நடுங்கிக் கொண்டிருக்கும் தங்கை இலக்கியாவை மேலும் பயப்படுத்த விரும்ப வில்லை.
வைக்கோல் போருக்குள்உள்ள நெல்லை மணந்துஅறிந்து, ஊருக்குள் வரும் யானைக் கூட்டம் எங்காவது உறங்குகிறதா என்ற கேள்வி மனதில் மின்வெட்டி மறைந்தது. மூன்று மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது.

நாங்கள் பயத்தில் கட்டிப் பிடித்து அழுது நடுங்குவதைக் கண்ட, எம்மை அச்சுறுத்திய பெரிய தாட்டான் குரங்கு அமைதியாக எம்மை நோக்கியது. ஏனைய குரங்குகளும் கிளைகளில் குந்தியிருந்து எம்மை அவதானித்தன. அரை மணி நேரம் ஆகிவிட்டது. திடீரெனச் சத்தம் போட்டபடி ஒரு திக்கை நோக்கி குரங்குகள் யாவும் தாவித் தாவிச் சென்றன. மீண்டும் வந்து கொப்புகளில் இருந்து எம்மை அவதானித்தன. மீண்டும் அதே திக்கில் பாய்ந்து பாய்ந்து சென்று திரும்பின. நான்காவது தடவையும் அப்படியே செய்தன. 'இலக்கியா, குரங்குகள் எமக்கு ஏதோ செய்தி சொல்கின்றன. அவை வழி காட்டுவதாய்ப் படுகிறது."
'ஓம். அக்கா. மிருகங்களால் காப்பாற்றப்பட்ட மனிதரின் உண்மையான சில கதைகளை அண்மையில் வாசித்திருக்கிறேன். கென்யாவில் பன்னிரண்டு வயதுச் சிறுமியை, சிலர் கடத்திச் சென்றனர். அவர்களில் ஒருவன் அவளை விவாகம் செய்ய. காட்டுப்பாதையில் அப்பெண் கத்தியிருக்கிறாள். ஒரு சிங்கம் அவர்களைக் காயப்படுத்தி வெருட்டிவிட்டு அப்பெண்ணை மீட்டுள்ளது."
மேலே குரங்குகள் கிளைகளில் தாவிக் கொண்டிருந்தன. நாங்கள் கீழே தரையில் நடந்தோம். அரை மணி நேரம் கடந்துவிட்டது 'அக்கா, குரங்குகள் எம்மை எமாற்றுகின்றன." 'இல்லை. மனிதருக்குத்தான் அப்படி நயவஞ்சகக் குணம். குரங்குகளுக்கு அப்படி இல்லை." ஒரு சில நிமிடங்களில் எதிரே குளம் தெரிந்தது. எமது சூரன் நாய் குரைத்தபடி ஓடி வந்தது. நாயின் பின்னே ஊர்முழுவதும்வந்து கொண்டிருந்தது.

நாம் காட்டுள் வெகு தூரம் உள்ளே சென்றுவிட்டோம் என்பது பின்னர்தான் புரிந்தது. காட்டுக்குள் போவதென்றால் அடையாளம் வைத்துப் போக வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டோம். அதற்காக நாம் குளத்துக்குப் போகாமல் விடவில்லை.
அடுத்த நாள் நாம் காட்டு எல்லை வரை போனோம். விளாமரங்கள் குளத்தோரக் காட்டில் ஏராளம். தாழப்படர்ந்த கிளைகளில், கிளை நிறைந்த வெள்ளை உருண்டைக்; காய்கள். கண்கள் நிறைந்த அழகு தந்தன. மரத்தில் தொங்கும் முற்றிய காயைப் பறித்துச் சாப்பிடுவதில் இலக்கியாவுக்கு அத்தனை பிரியம்.

எனது கட்டிலிலேயே என்னைக் கட்டிப் பிடித்தபடி தூங்குவாள்.
கொழும்பு இராமநாதன் பெண்கள் கல்லூரி வகுப்புத் தோழிகள் பற்றி வேடிக்கையான கதைகள் சொல்வாள். வீட்டில் பெற்றோர் பிடிக்கும் சண்டைகள் பற்றி அலசி ஆராய்வார்களாம். சிலர் தங்கள் பெற்றோர் சண்டை பிடிப்ப தில்லை என்பார்களாம். சத்தியம் செய்வார்களாம். அது வெறும் பொய் என்று மற்றவர்கள் அடம்பிடிப்பார்களாம்.

கலவரம் பற்றிய செய்திகள் கல்லூரி விடுதிக்குள் வந்து கொண்டிருந்தன. கண்களில் இலக்கியாதான் நிழலாடினாள். 'அவளுக்கு ஏதன் நிகழ்ந்ததோ? ஏன் அவள் என்னைச் சுற்றிச் சுற்றி வாறாள்?  கடவுளே! அவளைக் காப்பாற்று. ஆயிலடி முருகப்பெருமானே நான் உனக்கு மல்லிகைப் பூ மாலை போடுவேன். இலக்கியாவைக் காப்பாற்று." சித்தப்பா, சித்தி, சீராளன் நினைவுகளும் அடிக்கடி வந்து கவலையை அதிகரித்தன.

என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அடிக்கடி பிரதான வாயிலைப் பார்த்து, ஆயிலடியிலிருந்து ஏதாவது நல்ல செய்தி வராதா என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல எல்லா மாணவிகளும் தலையை விரித்து அழுதபடி அங்கும் இங்கும் ஓடினர். பலருக்கு பெற்றாரே தென் இலங்கையில். சிலருக்குச் சகோதரங்கள். சிலருக்கு உறவினர்கள், நண்பர்கள்.

அப்போது கல்லூரியில் றேடியோ தொலைக்காட்சி வசதி எதுவும் கிடையாது. மூன்று வழிகளில் கலவரச் செய்திகள் எட்டிக் கொண்டிருந்தன --- றேடியோ, பிரதான தபாற் கந்தோர், பொலிஸ்.

றேடியோவில் மொட்டையாக கலவரம் எரியுது கொல்கிறார்கள் என்ற செய்தி. ஓரளவுக்கு உண்மையான செய்தி யாழ் பெரிய தபாற்கந்தோர் வழியாக வந்தது. பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் தபாற்கந்தோருக்கு எதிரே உள்ள முற்றவெளி மைதானத்தில் கடவுளை வேண்டியபடி அழுது கொண்டிருந்தனர்.

முதலாவது ஒரு நல்ல செய்தி எனது வகுப்புச் சிநேகிதி நித்தியாவுக்குக் கிடைத்தது. அவளுடைய தந்தை, மனைவி, பிள்ளைகள் இருவர் கலகக்காரர்களிடம் பிடிபடாமல், ஒரு சிங்களவனின் உதவியோடு பம்பலபிட்டி இந்துக் கல்லூரி அகதி முகாமை அடைந்து விட்டதாக. அவளுடைய தந்தை, மிகப் பெரிய வணிகர், பொலிஸ் மூலம் செய்தியை மகளுக்கு அனுப்பியிருந்தார். உயிர் வந்து மகிழ்ந்த பொழுதும் ஏனையவர்களுக்காக நித்தியா அழுதுகொண்டிருந்தாள்.
*** தொடரும் ***

No comments:

Post a Comment