Sunday, 23 November 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 5) - கதிர் பாலசுந்தரம்

அகதிக் கப்பல் 

கிணற்றின் அப்பால், கிளைகள் முறிந்த மாமரம். அதன் கீழ் நின்று வீதிக்கு மறுபக்கம் அமைந்த பாட சாலையைப் பார்த்தேன். அத்திவராம் போட்டு முடிந்திருந்தது. வேலை மும்முரமாக நடந்தது.

தற்காலிக ஓலைக் கொட்டில்களில் பாடசாலை.

பாடசாலை முடிந்து மணி டாம் டாம் என்று ஓங்கி ஒலித்தது. கூய்ச்சல் காதை அடைக்க மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியேறினர். யாவரும் சீருடையில். ஆண்கள் நீல கட்டைக்காற்சட்டை வெள்ளை சேட். பெண்கள் வெள்ளை கவுன். கழுத்தில் வான் நீலரை.

கோமதி வீதியில் சென்று கொண்டிருந்தாள். கைகாட்டி அழைத்தேன். ஓடி வந்தாள். முதுகில் நீல பேக். 'அன்ரி ஏன் அழைத்தீர்கள்?"
'வருகிற பொழுது எனக்கு அரை றாத்தல் சீனி வாங்கி வரவும். இதோ பணம்."

கதை கேட்கும் பிள்ளைகள் பாயில் அமர்ந் திருந்தனர். நெற்றிகளில் திருநீறு. பெண்பிள்ளைகளின் புருவ இடைகளில் வண்ணப் பொட்டு. வதனங்கள் காலை மலர்ந்த தாமரைகளாக காட்சி தந்தன. கதை அவர்களை நன்றாகப் பற்றியிருந்தது. வெகு உற்சாகத்துடன் எனது வாயைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

இலக்கியாவுக்கு என்ன நடந்ததோ? சித்தப்பா, கல்யாணி அன்ரி, சீராளனுக்கு என்ன நடந்ததோ? என்ற பயம் என்னை  உலுப்பியது. அழுதகண்ணும் சிந்திய மூக்குமாய், கல்லூரி வாயில் பக்கம் அடிக்கடி விறைத்து நோக்கியபடி, கதிரையில் அமர்ந்திருந்தேன். நித்திரை மங்கை வாரி அணைத்துக் கொண்டாள்.

நடுநிசி அளவில் விடுதி உவாடன்வந்து 'சிவகாமி" என்று தட்டி எழுப்பினார். இலக்கியா-சித்தப்பா-சித்தி-சீராளன் பற்றிய செய்தி என்ற அங்கலாய்ப்பில் எழுந்து கல்லூரி வாயில் பக்கம் ஓடினேன். உவாடன் வாய் பேசாமல் என்னைத் தொடர்ந்தார்.
வாசலில் அப்பாவின் மறூன் வண்ண வொக்ஸ் வாகன் நின்றது. சாரதி ஆசனத்தில் அப்பா. அருகில் முன் ஆசனத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் படிக்கும் மூத்தண்ணர் வீரக்கோன், யாழ் இந்துக் கல்லூரியில் படிக்கும் ஆசை அண்ணர் சங்கிலி, தம்பி அண்ணர் யோகன் பின் ஆசனத்தில். மூவரும் என்னைப் போலவே விடுதி மாணவர்கள்.

'சிவகாமி, உவாடனிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். புறப்படு. இரண்டொரு உடுப்புகள் எடுத்துக் கொண்டுவா."
'எங்கே அப்பா, கொழும்புக்கா?"
'எல்லாம் பின்னர் சொல்கிறேன். போய் உடுப்புகளை எடுத்து வா பிள்ளை." ஒவ்வொரு சொல்லையும் விட்டு விட்டுச் சொன்னார். மனக்கவலையின் பெருஞ்சுமைகுரலில் தெளிவாகத் தெரிந்தது.
முன் ஆசனத்திலிருந்த மூத்த அண்ணர் தலையை திருப்பி, போய் எடுத்துவா என்று சைகை காட்டினார். மனமுடைந்த அப்பாவுக்குத் தொல்லை கொடுக்காதே போஎன்பதாக உணர்ந்தேன்.

இரு உடைகளுடன் திரும்பி வந்து, பின் ஆசனத்தில் அமர்ந்தேன்.ஆசைஅண்ணையும், தம்பி அண்ணையும் அழுவார் போல என்னைப் பார்த்தனர். எவரும் வாய் திறக்கவில்லை. உற்றுப் பார்த்தேன். எல்லோர் கண்களும் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தன. என்னைக் கண்டதும் கவலை அதிகரித்திருக்க வேண்டும். என்னை அறியாமல் கண்கள் நீரை இறைத்தன.

வொக்ஸ்வாகன் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென என்னை அறியாமலே 'இலக்கியா!" என்று உரத்துக் கத்தி விட்டேன்.
'சிவகாமி, நாங்கள் இப்ப கோப்பாய்க்குப் போகிறோம். கல்யாணியின் பெற்றோர் இடிந்து போயிருப்பார்கள். எம்மைப்  பார்த்தால் ஆறுதலாயிருக்கும்" என்றார் அப்பா.
 ‘எங்கே தங்கப் போகிறோம், அப்பா?"

அப்பா பேசவில்லை. அவர் குரல் தழுதழுத்து அழுகுரலாக மாறியிருந்தது. அதனை அவதானித்த மூத்தண்ணர் பேசினார். 'கொழும்பில் இருந்து அகதிகள் இந்தியா வழங்கிய கப்பல்களில் வருகிறார்கள். இருதினங்களில் காங்கேசன்துறைக்கு வருகின்றன. அவற்றில் பெரும்பாலும் வருவார்கள். நாங்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் நின்று வரவேற்க வேணும். இரவைக்குக் கோப்பாயில் சித்தி கல்யாணியின் அம்மாவீட்டில் தங்கப் போகிறோம்."

நீண்ட நேரம் வாகனத்துள் நிசப்தம்.

பிரதான வீதியில் ஒடிய வாகனம் ஒழுங்கையில் திரும்பி, சிறிது தூரம் ஓடி நின்றது.

பெரிய சிவப்பு இரும்புக் கேற் பூட்டியிருந்தது. உயரமான கொழுத்த கறுப்பு நாய், கேற்றின் மறுபுறம் நின்று 'வாள். வாள்"என்று உரத்து விடாமல் குரைத்தது.
கல்யாணிச் சித்தியின் அப்பா கையில் ரோச்லைற் வெளிச்சத்துடன் வந்தார். அவரின் பின்னே வீட்டில் உள்ள அனைவரும் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.
ஓழுங்கையிலும் ரோச்லைற் அல்லது அரிக்கன் லாம்புடன் பலர் ஓருவர் பின் ஓருவராக ஓடோடி வந்தனர். நித்திரையில்லாத இரவுகளாக யாழ்ப்பாணம் மாறு கோலம் பூண்டிருந்தது.
சித்தப்பா மனைவி பிள்ளைகள் வந்திருக்கலாம் அல்லது அவர்கள் பற்றிய செய்தி வந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில், திருகி வருத்தும் இதயங்களைச் சுமக்கும் மனிதர்கள். காதுகளை தீட்டியபடி
என்னஏதுஎன்று அங்கலாய்த்து நின்றனர்.

போட்டிக்கோவின் கீழ்க் கூடி நின்ற சனம் கலைந்து போய் நீண்ட நேரமாகிவிட்டது. இரண்டு தினங்கள் ஏக்கத்துடனும் அழுகையுடனும்காலம் கழிந்தது.
மூன்றாம் நாள். சித்தப்பாவையும் குடும்பத்தையும் பார்த்துவிடும் பேராவல். காலையிலேயே காங்கேசன்துறை போய் விட்டோம்.
நடேஸ்வராக் கல்லூரியில் மக்கள் நடமாட்டம். வாகனம் கல்லூரி வளவு முகப்பில் நின்றது.
மூத்தண்ணர் வீரக்கோன் விசாரிக்க உள்ளே சென்றார். திரும்பி வந்து புதினம் சொன்னார்:
கப்பலில் வரும் அகதிகளுக்கு உணவு வழங்க ஆயத்தம் செய்கிறார்கள். கப்பல் இன்றைக்கு வராதாம். நாளைக்குத்தான் வருமாம். கொழும்பில் பல மையங்களில் அகதி முகாம்கள். சிறுபகுதியினர்தான் வருகிறார்களாம்."

எங்கள் மனோநிலையை தொண்டர்கள் நன்கு புரிந்திருந்தனர் போலும். பெரியவர் ஒருவர்---அறுபது வயது பார்க்கலாம். சின்னக் குடுமி. சிறிய தாடி. நரை பெரிதாய் யில்லை. வெள்ளைவேட்டி. வெள்ளை பனியன்---ஒரு தட்டத்தில் வைத்து கிளாசில் ரின்பால் கலந்த கோப்பி கொண்டுவந்து வழங்கினார். காலையில் வெறும் வயிற்றோடு புறப்பட்ட நாம் நன்றியோடு பருகினோம்.

'என்னுடைய பெயர் அருணாசலம். ஏதாவது உதவி தேவை என்றால் தொண்டர்களைக் கேளுங்கள். நீங்கள் எந்த ஊர், ஐயா?" 'வன்னி. ஆயிலடி." அப்பா சொன்னார். 'தெரியும். புளியங்குளத்துக்குக் கிட்ட. நீங்கள் திரும்பிப் போய் வரமுடியாது. இங்கேயே தங்குங்கள். வேண்டிய வசதி செய்கிறோம்.உணவுதருகிறோம்."
'கோப்பாயில் உறவினர்கள் இருக்கிறார்கள். அங்கே போகிறோம்."
உங்கள் நிலை புரிகிறது. மறுக்காமல் பகல் உணவு சாப்பிட்டுவிட்டுப் போங்கள்."

அடுத்த தினம்காலைஒன்பது மணி.

நாம் துறைமுகத்தில் நின்றோம். ஜெற்றியில். எங்களைச் சூழ தீர்த்தக்கரை போலச் சனம். கப்பல் ஒன்று கருநீலக் கடலில் தூரத்தில் வருவது தெரிந்தது. நெஞ்சு டக் டக் என்று அடிக்கும் ஒசை கேட்டது. கப்பலில் கண்கள் நிலைத்தன. காலையில் தொடக்கம் எதுவும் சாப்பிடவில்லை. பசி தெரிய வில்லை. கவலை தான் ஆட்டிப் படைத்தது.

பிற்பகல் இரண்டு மணி. அகதிகள் இறங்கத் தொடங்கினர். பத்துக் கண்கள் இமை கொட்டாமல் ஒவ்வொருவரையும் சஞ்சலத்துடன் நோக்கின.
ஏக்கத்தின் சொல்லொண்ணா வேதனைகள், சோர்வுடன் கால் தூக்கி வைத்து நகரும் அகதிகள். வதனங்களில் கேள்விகள் ஆயிரம் ஆயிரம். பொலி விழந்து கிலிகொண்ட முகங்கள். பரிதாப கோலத்தில் காட்சி தரும் கசங்கிச் சுருங்கி அழுக்கு மண்டிய ஆடைகள். வாராது சிலும்பிச் சிரிக்கும் தலைமுடி. கையில் சின்ன சின்னக் கடதாசிப் பைகள். எஞ்சிய உடைமைகள். பெண்களின் கழுத்திலோ கையிலோ காதிலோ எதுவும் கிடையாது. உயிரற்ற நடைப் பிணங்களாய் நகர்ந்தனர். அழுதழுது காய்ந்துபோன கண்களில் சின்ன மகிழ்ச்சி. சிங்கள மிருகத்துக்குத் தப்பி வந்த ஆனந்தம். இனித் தென் இலங்கைக்குப் போவதில்லை என்னும் சபதத்தோடு தமிழன் பூமியில் நகர்ந்தனர்.

கண்களில் தங்கை இலக்கியா தோன்றினாள், நகரும் அகதிகள் கோலத்தில். கண்கள் தம் பாட்டில் தமது கடமையைச் செய்தன.
கப்பலில் வந்தவர்களில் பெரும் பாலானவர்கள் போய் விட்டார்கள். மட்டக்களப்பு, திருகோணமலைக் குடும்பங்கள் சிலவும் கப்பலில் வந்திருந்தன. அவர்களைத் தொண்டர்கள் நடேஸ்வராக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.
கலங்கிய கண்களுடன் துறைமுகப் பகுதியிலேயே நின்றோம். தொண்டர் பெரியவர் அருணாசலம் எங்களைக் கண்டுவிட்டு வேகமாக வந்தார். 'கவலைப் படாதீர்கள். நாளைக்கு இரண்டு கப்பல்கள் வருகின்றன. அதில் வருவார்கள். முருகன் நம்பினவர்களைக் கைவிடான். என்னுடன் வாருங்கள். சாப்பிட்டுவிட்டு கோப்பாய்க்குப் போகலாம்."

அப்பாவின் அருகே இருந்து சாப்பிட்டவர் திருகோணமலை அகதி.அவரைஅப்பா விசாரித்தார்
நீங்கள் கொழும்பில் எந்தவிடம்?"
வெள்ளவத்தை."
என்னுடைய தம்பி பெண்சாதி பிள்ளைகளும் வெள்ளவத்தைதான். நெல்சன் பிளேஸ். சொந்த வீட்டிலே வாழ்ந்தவர். திறைச்சேரியில் வேலை செய்தவர்."
நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள். திறைச்சேரியில் வேலை செய்யும் மிஸ்டர் சிவநேசனைச் சொல்கிறீர்களா? நீங்கள் அவரின் சகோதரரா?"

சோற்றுக்குள்ளால் கையை எடுத்து கண்மடல்களை அகலத் திறந்து அந்த மனிதரைப் பார்த்தோம். சுமார் நாற்பது வயது. அவரும்  பெரிய உத்தியோகத் தராகப்பட்டது.
ஓம். அவர் என்னுடைய தம்பி. அகதி முகாமில் பார்த்தீர்களா?"
நாங்கள் மாணிக்கப்பிள்ளையார் கோவில் அகதி முகாமில் இருந்தோம். அங்கு அவர் வரவில்லை.அது நிட்சயம்."
'வேறு முகாம்களும் இருந்தனவா?"

ஓம். தேஸ்டன் கல்லூரி, பெரிய முகாம் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி."

நாங்கள் கோப்பாய்க்குத் திரும்பினோம். இரவு நித்திரை வரவில்லை. ஐந்து மணிக்கெல்லாம் கண் விழித்துக் கொண்டோம். சுணங்காமல் முகங் கழுவிக்கொண்டு புறப்பட்ட சமயம், சித்தியின் அம்மா கோப்பி தந்தார்.
காலையில் ஆறு மணிக்கு முன்னரே காங்சேன்துறையை அடைந்துவிட்டோம்.

எட்டு மணியளவில் கப்பலிலிருந்து அகதிகள் இறங்கினர். நாம் ஒவ்வொருவரையும் ஆவலோடு பார்த்தோம். ஏமாற்றம். எனினும் நம்பிக்கை தளரவில்லை.

அப்பா தேஸ்டன் கல்லூரி அகதி முகாமிலிருந்த ஒருவரைத் தேடிப்பிடித்து அங்கும் சித்தப்பா செல்லவில்லை என்பதை உறுதி செய்துகொண்டார்.

மூன்றாவது கப்பலில் வந்தவர்களும் இறங்கிப் போய் விட்டார்கள். சித்தப்பா வரவில்லை. நாம் மன முடைந்து வீதியோரம் சம்மாணமிட்டு அமர்ந்திருந்தோம். எவ்வளவு நேரம் என்று தெரியாது.
நடேஸ்வராக் கல்லூரியில் தொண்டராகப் பணியாற்றுபவர் யாரோ பெரியவர் அருணாசலத்துக்குச் சொல்லியிருக்கவேண்டும். பைசிக்கிலில் அங்கு வந்து சேர்ந்தார். வில்லங்கமாக கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் தேநீர் கொடுத்தார்கள். உணவு தருவார்கள் என்று எதிர்பார்த்த எனக்குச் சிறிய ஏமாற்றம். பசி மயக்கம்உணவைஎதிர்பார்த்தது.
அரை மணி நேரத்தின் பின்னர் பாணும் கறியுந் தந்தார்கள், 'மன்னித்துக் கொள்ளுங்கள். சோறு முடிந்து விட்டது. அரிசி போடலாம். அவிய நேரம் எடுக்கும். கடையில் இருந்து பாண் வாங்கு வித்தனான்." பெரியவர் அருணாசலம் கூறினார்.
உணவு முடிந்த கையோடு பெரியவர் அருணாசலம் அப்பாவிடம் வந்தார்.
'ராசா ராம். பம்பலப்பிட்டி முகாமில் இருந்த ஒருவரைக்கண்டு பிடித்துள்ளேன். ஆசிரியர். அவர் கப்பலால் காலையில் இறங்கிவீடு போய்விட்டார்."
விலாசத்தைத் தாருங்கள். நான் போய் விசாரிக்கிறேன்."
'உங்களுக்குப் புதுவிடம். கிட்டடியில்தான் அவர் வீடு. கீரிமலையில். நானும் வருகிறேன். விசாரிப்போம்."

வாகனம் குறித்த ஆசிரியர் வீட்டின் முன்னர் நின்றது. பெரியவர் அருணாசலம் உள்ளே போய் கந்தசாமி ஆசிரியரை வெளியே அழைத்து வந்தார். அரையில் சாரம் தோளில் துண்டு. முப்பது வயதிருக்கும். அப்பாதான் விசாரித்தார். அவருக்கும் சித்தப்பாவைத் தெரிந்திருந்தது. சித்தப்பா பம்பலப்பிட்டி முகாமுக்குவர வில்லை என்று அடித்துக் கூறினார். எங்கள் நம்பிக்கைகள் யாவும் சிதறிக் காற்றில் திக்குத் திக்காய்ப் பறந்தன.

இன்னும் நாம் நம்பிக்கை வைத்திருந்தோம். சிங்கள நண்பர்கள் வீடுகளில் தங்கியிருப்பார் என்ற நம்பிக்கை பலமாக இருந்தது. ஆரியரத்தின அவரது உயிர்த் தோழர். நல்ல குடும்பத்தில் வந்தவர். மதவாச்சி நகரில் நீண்ட காலம் நீதிமானாக இருந்தவரின் மகன். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்.

கப்பலில் வர வாய்ப்புக் கிட்டாத அகதிகள் விசேட புகையிரதங்களில், பொலிஸ் இராணுவ பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் வருவதாக வானொலியில் சொல்லப்பட்ட செய்தி வேகமாய்ப் பரவியது.

நாம் மாலையில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவுக்கு முன்னர்ஆயிலடியைஅடைந்தோம்.
மறு நாள் காலை பத்து மணிக்குப் புளியங்குள புகையிரதநிலையத்துக்குப் போனோம். பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்டபுகையிரத நிலையம். பலகை கொண்டு அமைத்த மாடிக் கட்டிடம்.இந்தா வருகிறது அந்தா வருகிறது என்ற புகையிரதம் மூன்றுமணிக்கே வந்து சேர்ந்தது.
ஐவர் மட்டும் இறங்கினர். ஒருவர் தண்ணீரூற்று, ஒருவர் சின்னப்பூவரசங்குளம். மூவர் நெடுங்கேணி வாசிகள். அப்பா ஓடியோடி ஒவ்வொருவரையும் விசாரித்தார்.

அப்பாவைப் பார்க்கப் பரிதாபமாக விருந்தது. நான் நினைத்தேன் நான்தான் மிகவும் வருந்துகிறேன் என்று. 'சகோதரம் இப்பிறப்பில்தான். இன்னொரு பிறப்பில் அவர்கள் சந்திப்பதில்லை" என அடிக்கடி புலம்பினார். அம்மா காலையில் கூறியது ஞாபகம் வந்தது. 'இரவு மூன்று மணி போல கண் விழித்தேன். அப்பா தலையில் கைவைத்தபடிஅழுதுகொண்டிருந்தார்."

அடுத்த நாள் புகையிரதத்திலும் வரவில்லை. அடுத்த நாள்-- -இறுதி நாள்---புகையிரதமும் ஏமாற்றம் தந்தது.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பொழுது சர்வாதிகாரி ஹிட்லர் வதை முகாங்களில் யூதர்களை அடைத்து வைத்து இருபது இலட்சம் பேரைக் கொன்றான். எஞ்சித் தப்பியவர்கள் போர் முடிந்து விடுதலை பெற்று புகையிரதங்களில் பிரயாணம் செய்த மனித அவலக் காட்சிகளை ஒத்ததாக, அகதிகளை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் பிரயாணித்தபுகையிரதங்கள் காணப்பட்டன.

யூலை 24ந் திகதி கலகம் தொடங்கியது. அடுத்த மாதம் 14ந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி. இலக்கியாவை எண்ணியபடி வீட்டின் போட்டிக்கோவின் கீழ் நின்றேன். நீண்ட என் கேசத்தைப் பின்னுவதையே மறந் திருந்தேன். அது அலங்கோலமாய்க் கிடந்தது.

திடீரென இரண்டு வாகனங்கள் எதிரே வீதியில் வந்து நின்றன. ஒன்று சித்தப்பாவின நீல பென்ஸ். நான் வீட்டுக்குள் பாய்ந்து சென்று 'சித்தப்பா வந்து விட்டார்" என்று வீடு அதிரக் கத்தினேன்.வீட்டுக்கு வெளியே பாய்ந்து வந்தேன்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏதேதோ உரத்துச் சொல்லிக் கொண்டு கார்களை நோக்கி ஓடினர். அப்பாவின் சவரம் செய்யாத தாடியும், தலை முடியும் காற்றில் அள்ளுப்பட்டன. ஊர்ச்சனங்களும் வாகனங்களைநோக்கி ஓடிவந்தனர்.

அப்பா எல்லோரையும் முந்தி பென்ஸ் காரை அடைந்தார். எவரும் வாகனத்தால் இன்னும் இறங்கவில்லை.
அப்பா ஆவலுடன் பென்ஸ் காருக்குள் சாரதி ஆசனத்தைப் பார்த்தார். பின்னர் பின் இருக்கையைப் பார்த்தார். உற்றுப் பார்த்தார். ஒரு பெண். மூன்று பிள்ளைகள். பின்னே நின்ற வாகனத்துக்கு ஓடினார். சாரதி மட்டும் இருந்தார். சாரதியை உற்றுப் பார்த்தார். தலையை பக்கவாட்டில் வேகமாக அசைத்தார். அப்பாவுக்கு தனது தம்பியின் கதை புரிந்திருக்க வேண்டும். முகம் படபடவென கறுத்து இருண்டு மழை கொட்டியது.

'ஐயோ! தம்பி சிவநேசா!" அவர் ஓலங் கேட்டு ஆயிலடி அதிர்ந்தது. என் உள்ளம் கொய்யோ முறையோ என்று கத்தியது. 'இலக்கியா! இலக்கியா! இலக்கியா!" என்று உச்ச தொனியில் கத்தினேன். எல்லோரும் ஓலம் எழுப்பினர்.

சித்தப்பாவுக்கு ஏதோ நடந்திருக்கிறது. அது என்ன? அந்தச் செய்தியோடுதான் சித்தப்பாவின் சிங்கள நண்பர் ஆரியரத்தின வந்திருக்கிறார் என்பது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் புரிந்தது. அவர் ஆயிலடிக்குப் புதியவர் அல்ல.
எங்கும் ஒரே நிசப்தம். ஆரியரத்தின மெதுவாக கதவை திறந்து வாகனத்தால் இறங்கி அப்பாவைக் கும்பிட்டவர் ஓவென்று அழத் தொடங்கினார்.
எல்லோருக்கும் மரணந்தான் என்பது நூறு வீதம் நிட்சயமாகியது. அங்கு நின்ற அத்தனை பேரும் ஓவென்று அலறினர். கிட்டத்தட்டப் பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டன. எல்லோர் இதயங்களும் இன்னும் பதறிப் பதறிஅழுதன.

'திரு. ஆரியரத்தின, உங்கள் மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வாருங்கள் வீட்டுக்குப் போவோம்." அப்பா அழைத்தார்.

ஆரியரத்தின பென்ஸ் காரின் ட்ரங்கைத் திறந்தார்.

சூரிய ஒளியில் தகதகவென்று ஒளிபரப்பும் வெள்ளிப் பானை. பெரிய பானை. அது வெள்ளைத் துணியால் மூடப் பட்டிருந்தது. இருகைகளாலும் பக்கு வமாகத் தூக்கினார்.

வாகனத்தில் இருந்து ஆரியரத்தினவின் மனைவி நிர்மாலி, பிள்ளைகள மூவர்---இரண்டு வயது, நாலு வயது, ஆறுவயது. கண்கலங்கியபடி இறங்கினர். அனைவரும் தூய வெள்ளை ஆடை  அணிந்திருந்தனர். அப்பா அவர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

நாங்கள் அவர்களின் பின்னே வீட்டுள் அமைதியாய்ப் போனோம். எவரும் வாய் திறக்கவில்லை. ஆசனங்களில் மௌனமாகஅமர்ந்தோம். பலர் சூழ்ந்து நின்றனர்.

ஆரியரத்தின வெள்ளிப் பாத்திரத்தை அப்பாவிடம் கொடுத்து 'உங்கள் தம்பி, அவர் மனைவி, பிள்ளைகளின் அஸ்தி. இது அவருடைய பென்ஸ் திறப்பு. நான் இயன்றவரை முயன்றேன். என்னால் உங்கள் தம்பியையும், மற்றவர்களையும் காப்பாற்ற முடியவில்லை. பஞ்சசீலம் போதிக்கும் புத்த மதத்தவன் என்ற முறையில் நான் வெட்கப்படுகிறேன்." என்று கூறினார்.

ஆசனத்தில் அமர்ந்து, கலவர ஆரம்பத்திலிருந்து அஸ்தி எடுக்கும் வரையான, சித்தப்பா குடும்பத்தின் கலவர முதல் நாளன்று நடந்த இதயத்தை வெடிக்கச் செய்யும் சோக காவியத்தை ---முழுமையாக இரண்டு மணிநேரம் எடுத்து --- கனத்த உள்ளத்துடன் கரகரத்த குரலில் கூறினார்.
 இலக்கியாவை சிங்களவன் கொன்று போட்டானா?"

கோமதியின் குரலில் ஆத்திரம் கொதித்தது.

*** தொடரும் ***

No comments:

Post a Comment