Monday, 25 May 2015

இராஜகாந்தன் கவிதைகள்       தெல்லிப்பழை யூனியன், புத்தூர் ஸ்ரீசோமாஸ் கந்தா கல்லூரிகளில் கல்விச்செல்வத்தை வளர்த்துக்கொண்ட சின்னராசா இராஜகாந்தன் இதுவரை முப்பத்தாறு கவிதைகள் எழுதியுள்ளபொழுதிலும், அச்சுவாகனம் ஏற்றுவது பற்றிய ஆர்வம் அவர் மனதில் எழுந்ததில்லை. அவரது இல்லத்தரசி அவருக்குத் தெரியாமல் அவற்றை அச்சில் பதிவு செய்து அவரது பொன்விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கியுள்ளார். அதில் ஆரம்பத்தில் எழுதிப் பழகிய கவிதைகளையும் பதிவு செய்திருந்தமை இராஜகாந்தனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது போலும்.

                        *
      கவிதைகளை வாசித்த வேளை அவருள் கவிஞனுக்குரிய வித்துவங்கள் அழகியல் அம்சங்கள் நிறைந்துவழிவதைத் தரிசனம் செய்ய முடிந்தது. பெரும்பாலும் இயற்கையின் திருவிளையாடல்களை பல்வேறு கோணங்களிலும் வைத்துக் கவிதை புனையும் இராஜகாந்தனுக்கு, தற்குறிப்பேற்ற அணி மாலை ஏந்தி, இளம் நங்கையரின் நடையுடை நளினங்களை கண்முன் நிழலாட வைத்துக் கவிதை செய்வது கைவந்த கலையாய்ப் பிரகாசம் தருகின்றது. மனித இயல்புகள்-பண்புகள்-குணநலன்களை இயற்கையில் ஏற்றிச் சவாரிப்பது கவிதைகளுக்கு ஜொலிக்கும் அணிகலன்களாக அமைகின்றன.
      அகதியாகத் தஞ்சமடைந்து லண்டனில் வாழும் இவர் புலம் பெயர்ந்தவர்களின் அபிலாசைகளையும் நவீன சிந்தனை-வாழ்வினையும் கிள்ளி நுள்ளிப் பார்க்கும் தொனியில் சில கவிதைகளில் தொட்டுச் செல்லும் அதே வேளை, ஏனைய புலம்பெயர்ந்த கவிஞர்களைப் போலவே பிறந்து வளர்ந்த ஊர் கோலங்கள் இவரையும் ஆழமாக ஆகார்சித்திருப்பதை நீண்டு நீண்டு செல்லும் ’அது ஒரு கனாக்காலம்’ கவிதையில் காணலாம்.
        சில ஆக்கங்களில் பயின்றுவரும் சந்தங்களும் ஓசையின்பங்களும் மனம் சலியாது அக்கவிதைகளை ரசிக்க வைக்கின்றன --- வான் வெளியில் விண்மீன்கள்
                இருளுக்காய் காத்திருக்கும்.
                தேய்ந்து வரும் வெண்ணிலவு
                பௌர்ணமிக்காய் காத்திருக்கும்.
       சிறுகதையில் அதன் உச்சமாக அமையும் அந்தம் போல, பொதுவாக கவிதைகளின் அந்தங்கள் அவற்றிற்கு உயிரூட்டிநின்று வாசகனின் சிந்தனைக்கும் ரசனைக்கும் விருந்தளிக்கின்றன.
     பேசுபொருளை சிக்கலில்லாமல் இனிக்கும் இலகு நடையில் பளிச்சென மின்னிச் சுவைக்க வைக்கும் கவிஞர் இராஜகாந்தனின் எளிமையான கவிதைகள் மேலும் தொடரும்.
                                


                                              நதியே! நதியே!

                     நதியே நதியே,
                     கள்ளங் கபடமில்லா
                     வெள்ளைச் சிரிப்போடு
                      தத்தித் தவளும்
                     சிறு பிள்ளையோ நீ?

                     மெல்ல வளர்ந்து
                     எழுந்து நடந்து
                     எங்கே பரதம் பயின்றாய்?
                     கல்லுப் பாறையிலே நீ
                     துள்ளிக் குதிக்கையிலே
                     கால் வலிக்காதோ?
                     வெள்ளிக் கொலுசுகள்
                     வெட்கிச் சிரிக்குதே.
                     புல்லும் பூச்செடியும் உன்
                     கொடியிடை கிள்ளிக்
                     கீச்சம் மூட்டுதோ நீ
                     மலையிடை வருகையில்
                     இள நங்கையின்
       ஈரப்புடவை போல்
       விழுந்தும் எழுந்தும்
       வளைந்தும் நெளிந்தும்
       அங்கும் இங்கும்
        யாரைத் தேடிப் போகிறாய்?

        பருவம் வந்ததோ
       பதுங்கிப் பதுங்கி
        மரங்கள் பின்னால்
        எதற்கு ஒளிக்கிறாய்?

         குறும்பும் குறைந்ததே
          குளிர்காயும் காதலன்
          நினைவு வந்ததோ?

           நதியாய் தவழ்ந்து நடந்து
          காதல் கடலில் சங்கமித்தபின்
         உன்னைத் தனியாகப் பிரிக்க
        யாரால்தான் முடியும்?
         உங்கள் காதலில்
         உலகிற்கே பொறாமைதான்.

No comments:

Post a Comment