Sunday, 3 May 2015

பாதுகை - சிறுகதை

'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்..." கோவிலில் பாட்டுக் கேட்கத் தொடங்கிவிட்டது. நேற்றுத்தான் ஒரு சோடி புதுச்செருப்பு வாங்கியிருந்தேன். நங்கூரம் படம் போட்டது. அதைப் போட்டுக்கொண்டு மடைக்குப் போய் ஒரு 'ஷோக்' காட்டவேணும். போனமுறை மடைக்கு வரேக்கை உமாசுதன் புதுச்செருப்புப் போட்டுக் கொண்டு வந்தவன். அவனை ஒருத்தரும் கண்டுகொள்ளேல்லை. மண்ணை உதறிக் கொட்டுமாப்போல, பத்துப் பதினைஞ்சுதரம் நிலத்தோடை செருப்பைத் தாளம் போட்டு, அடிச்சு அடிச்சுக் காட்டினவன். இந்த முறை நானும் போட்டுக் காட்ட வேணும்.

கோவிலிலை செருப்பைச் சும்மா கழட்டி வைக்கப்படாது. ஆராவது அடிச்சுக் கொண்டு போடுவான்கள். செருப்புக்கு காவல் இருக்கிறவரிட்டைக் காசைக் குடுத்து கவனமாக வைக்க வேணும். செருப்புக் கொஞ்சம் பெரிசாப் போச்சுதோ? எனக்கு ஆறாம் நம்பர்தான் சரிவரும் போல. பரவாயில்லை! ஆர் உதைக் கவனிக்கிறான்கள்.

"கணேஷ்! இஞ்சை ஒருக்கா வந்திட்டுப் போ" அப்பா கடைக்குள்ளிருந்து கூப்பிட்டார். வீட்டிற்கு முன்பாக எங்களது பலசரக்குக்கடை இருந்தது. காலையில்தான் நாலைந்து வீடுகளுக்குப் போய் பழைய கடன் வருவாயைக் கறந்து வந்திருந்தேன். திரும்பவும் எதற்காகக் கூப்பிடுகின்றார்.
"ஆச்சாரியார் 160 ரூபா தரவேணும். வாங்கி வா."
"அப்பா! நான் இப்ப வளந்திட்டன். 'செக்கண்டரி' படிக்கிறன். வீடு வீடாப் போய் காசு கேட்க வெட்கமா இருக்கப்பா"
"சரி இதுதான் கடைசி" சொல்லிவிட்டு கணக்குவழக்கு எழுதின துண்டை என் கைகளுக்குள் திணித்துவிட்டுப் போகிறார் அப்பா.
"எந்த ஆச்சாரியப்பா?"
"அதுதான் கமக்கட்டுக்கை ஒரு 'பாக்'கும் கையிலை தளபாடங்களுமாக வெறும்மேலோடை பாக்குச் சப்பியபடி போவாரே அவர்தான்."
"ஐயய்யோ நான் அங்கை போக மாட்டன்!"
"ஏன்ரா?"
"அந்தாள் நல்ல மனிசன்தான். அவற்ரை மகன் யோகன்தான் மகா அலுப்பன்."
"அவன் உன்னை ஒண்டும் பிடிச்சு விழுங்க மாட்டான். கெதியிலை போட்டு வா. கோயிலிலை ஐஞ்சு மணிக்கு தீ மிதிப்புத் தொடங்கி விடும்."

கோவிலில் மடை நடத்துவதில் அப்பாவுக்கும் பெரும் பங்குண்டு. நிறையக் காசு செலவழிச்சு சித்திரை மாசம் செய்யிற திருவிழா. வருஷத்திலை ஒரு தடவைதான் கடன்காரர்களின் வீடுகளுக்குச் சென்று பணத்தை வாங்கிவரச் சொல்லுவார் அப்பா.
"சரி போட்டு வாறன் அப்பா!"

திடீரென்று என் மனக்கண் முன்னே தாமரை தோன்றினாள்.

அவளின் வீட்டைக் கடந்துதான் ஆச்சாரியாரின் வீட்டிற்குப் போக வேண்டும். நேரத்தைப் பார்த்தேன். மணி இரண்டு. உச்சி வெயில். அப்பாவும் பாவம். ஒரு பெட்டிக்கடையிலையிருந்து வாற வருமானத்தைக் கொண்டுதானே குடும்பத்தை நடத்துகின்றார்.

சைக்கிளை மெதுவாக எடுத்தேன். பக்திப்பாடல்கள் முடிந்து 'பாவாடைத் தாவணியில்' தொடங்கியிருந்தது. வடக்குப் பக்கமாக சைக்கிள் விரைகிறது. முன்பு ஆங்கில மகாவித்தியாலத்திலை படிக்கேக்கை ஒவ்வொருநாளும் இந்தப்பக்கமாகத்தானே போறது! ஏழாம் வகுப்பிற்கு யூனியன் கொலிச்சுக்கு மாறினாப் போல எப்பவாகிலும் கோயிலுக்கெண்டு இந்தப் பக்கம் வந்தால் சரிதான்.

கோவிலுக்கு எதிராகக் கிழம்பும் தெருவில் போனால் தச்சுவேலை செய்பவர்கள் இருக்கும் குடிமனை வரும். சைக்கிளை முதலில் கோவில் பக்கமாகச் செலுத்தினேன். ஒருக்கா கோயில் நடப்புகளை என்னண்டு பாப்பம்.

மடைப்பள்ளியருகே கிராமபோனில் தட்டை மாற்றிக் கொண்டிருந்தார் 'குணம் சவுண்ட் சேர்விஸ்' உரிமையாளர் நற்குணம். அவர் ஒவ்வொரு தட்டையும் பக்குவமாக எடுத்து வைத்து, அடுத்ததைப் போடுவதற்கிடையில் குறைந்தது பத்து நிமிட அவகாசமாவது எடுத்தார்.

அரசமரத்திற்கு எதிராக நீண்ட அகழி ஒன்று வெட்டி மரக்குற்றிகளை அடுக்கிக் கொண்டு இருந்தார்கள். தீ மிதிப்பதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன. போனமுறை நடந்த தீ மிதிப்பின் போது வேதக்காரர்களும் தீ மிதிச்சவை. நான் நினைச்சன் அவையளின்ர கால்கள் அள்ளுப்பட்டுப்போம் எண்டு. ஆனால் அவைக்கு ஒண்டும் நடக்கேல்லை. மாலைக் கருக்கலில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புப் பாளங்கள் மீது நடப்பதைப் பார்க்க பக்தியுடன் பயமாகவும் இருக்கும்.

இரவு மடை முடிய 'சங்குவேலிப் பெத்தாச்சியின்' உரு நடக்கும். சினிமாக்காரர்கள் தோற்றுப் போவார்கள். அந்தமாதிரி இருக்கும் உரு ஆட்டம். உரு தொடங்க கனபேர் பயத்திலை ஓடி ஒழிச்சிடுவினம். உரு எண்ட போர்வையிலை அவரவற்ரை ஒழிப்பு மறைப்புகளை புட்டுக் காட்டுறதுதான் அவவின்ர வேலை. உச்சக்கட்ட உருவிலை அந்த வருஷம் அட்டூழியம் செய்தவர்களிலை ஒரு புண்ணியவானைத் தெரிஞ்செடுத்து அடி அடியெண்டு அடிச்சு தண்டனையும் வழங்கிப் போடுவா.

போனமுறை நடந்த மடைக்கு தாமரை வரேல்லை. மாவிட்டபுரத்துக்கு அங்காலையிருந்து என்னோடை முந்திப் படிச்ச பாலசுந்தரி, உமைபாலன் கூட வந்தவை.

'கண்ணெதிரே தோன்றினாள்' பாட்டுப் போய் கொண்டிருக்க, தாமரை மனதினில் வந்தாள்.

கோயிலுக்கு எதிரே வீதியைக் கடந்தால் ஒருபுறம் பனம் தோப்பும் மறுபுறம் அனிச்சமரங்களும். அதற்கு எதிர்த்தாப்போல் ஒரு இலந்தை மரம் சடை விரித்திருந்தது. அனிச்சமரத்தில் கொவ்வைச் செடி படர்ந்திருக்கிறது. அனிச்சம் பூக்களும் நிறையப் பூத்திருக்கு. அனிச்சமரத்தில தாவி ஏறிய குரங்கு மனம் இறங்கிவர மாட்டேனென அடம் பிடித்தது.

xxx
இரண்டு வருடங்களுக்கு முன்பு மாவிட்டபுரம் மகாவித்தியாலத்தில் படித்துக் கொண்டிருந்த நேரம் - ஆறாம் வகுப்புத் தொடக்கம். அப்பவெல்லாம் எல்லாரது றிப்போட்டிலும் 'வகுப்பேற்றமுண்டு' என எழுதி விடுவதால் - எல்லாரும் வகுப்பு மட்டுமே மாறுவோம். ஆக்கள் அப்படியே இருப்போம். ஆனால் அதிசயமாக எமது வகுப்பில் ஒரு புதுப்பெண் வித்தியாசமான ஆடை அணிவகுப்பில் வந்திருந்தாள். ஸ்கூலுக்கு என்று ஒரு பிரத்தியேக யூனிபோம் இல்லை. யாரும் எதையும் போடலாம். விடலாம். வரலாம் .போகலாம். அந்தப் புதுப்பெண் வெள்ளை ஆடையில் மல்லிகைப்பூக்கள் படம் போட்ட சட்டை அணிந்திருந்தாள். எல்லாவற்றிலுமே அதிகமாகவே இருந்தாள். வயதிலும், தோற்றத்திலும், அழகிலும் மிச்சம் அதிகமாகவே. அறிவைப் பற்றி என்னால் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு தடவைப்படி - ஐயிரண்டு பத்து; பத்தோடை ஆறு; பதினாறைத் தாண்டிய அக்கா முறை அவள் எனக்கு. ஆடைக்குள் பருவத்தின் பூரிப்பு போட்டிக்குத் தயாராகும் காளைகள் போல் நின்றன. அவள் வகுப்பின் கடைசி பெஞ்சின் கரையில் 'திரு திரு'வென விழித்தபடி இருந்தாள்.

அன்று மதியம் எல்லாரும் தாமரையைச் சூழ்ந்து கொண்டார்கள்.
"அது என்ன தாமரை? ஆம்பல் அல்லி இல்லையோ?" கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். அவள் எல்லாவற்றிற்கும் 'உம்மாண்டி' போல பதில் சொல்லாது நின்றாள்.

பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும்போது, என் பின்னாலே வந்தாள். நான் நடையை நிறுத்தினேன். அவள் என்னைக் கடந்து போனாள்.
"தாமரை இவ்வளவு காலமும் எங்கே படித்தாய்?"
என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள்.
"முல்லைத்தீவில்"
"இங்கே ஏன் வந்தாய்?"
அவள் அங்குமிங்கும் பார்த்துவிட்டு "என் அண்ணா இங்கேதான் திருமணம் செய்தார்" என்றாள்.
"அதுக்கு?"
"அம்மாதான் அங்கை இருந்தால் நான் படிக்கமாட்டன் எண்டு சொல்லி அண்ணாவோடை அனுப்பி வைச்சவா"
"அப்ப நீயும் இங்கேதான் திருமணம் செய்வியா?"
அவள் வெட்கித்து தலை குனிந்து குறுநகை புரிந்தாள்.
"தாமரை நீ ரொம்ப அழகு"
"தாங்ஸ்சுங்கோ" ஒட்டியிருந்த உதடுகளைப் பிரித்து சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள். இருக்கின்ற மார்பு போதாதென்று அதை வேறு தள்ளிக்கொண்டு போனாள் அவள். தொங்கல் நடையில் போகும் போது அவளது இரட்டைப்பின்னல் ஆடி என்னை விரைந்து வா என்றது. போனவள் திரும்பி என்னை ஒருதடவை பார்த்துச் சிரித்தாள்.

அதன்பிறகு பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது அனேகமாக நாங்கள் இருவரும் ஒன்றாகவே திரும்புவோம்.

அவளால் வகுப்பு என்றுமே கலகலப்புதான். 'ஹோம் வேர்க்' செய்து கொண்டு வரமாட்டாள். ஒழுங்காக செய்து கொண்டு வந்திருந்தால், அவள் இப்ப எல்லா வகுப்புகளையும் தாண்டி 'ஹோம்'இல் இருந்திருப்பாள்.
கடந்த வருட முடிவில் எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பத்தாம் வகுப்புப் பரீட்சையில் ஏழு பேர் பாஸ் பண்ணியிருந்தார்கள். ஐந்து பேருக்கு மேல் பாஸ் பண்ணினால் பதினொராம் வகுப்பு ஆரம்பிப்பேன் என்று கங்கணம் கட்டியிருந்தார் அதிபர். அந்த ஏழு பேரும் தாங்கள்தான் 'ஹீரோ' என நினைத்து தலை கால் தெரியாமல் தவிண்டடித்தார்கள். மமதையில் வகுப்பு வகுப்பாகச் சென்று அட்டகாசம் செய்தார்கள். அந்தக் கூட்டத்தில்தான் முதன்முதலாக அந்தக் காவாலியைக் கண்டேன். அவன்தான் யோகன்.

கரும்பலகையில் சில கெட்ட வார்த்தைகளை எழுதி எழுதி அழித்தான். அவற்றில் பெரும்பாலான சொற்களுக்கு எனக்கு பொருள் தெரியவில்லை. அந்த பாஷையில் Phd முடித்துவிட்டேன் என்றான் யோகன். ஒவ்வொருமுறை எழுதி அழிக்கும்போதும் தாமரையைப் பார்த்தான். ஒருவேளை அவள்கூட இவற்றில் அறிவாளியோவகுப்பறையை விட்டுப் போகும்போது தாமரையின் காதிற்குள் ஏதோ குசுகுசுத்தான். அவளும் வெட்கம் தாளாமல் சிரித்தாள். எனக்குக் கோபம்தான் வந்தது. தாமரையின் அண்ணா திருமணம் செய்த வழியில் அவன் உறவு என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்.

ஒருமுறை 'I wants to be' class நடந்தது. 'நீங்கள் எல்லாரும் வருங்காலத்தில் என்னவாக வந்து தொலைக்கப் போகின்றீர்கள்?' என்பது அதன் தமிழ் அர்த்தமாகும். ஆசிரியர் கேட்கின்றார், "என்னவாக வந்து தொலைக்கப் போகின்றீர்கள்?"
"வேறை என்ன? உங்களைப் போலத்தான்" என்றார்கள் பெரும்பான்மையோர். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுமாப்போல் அடி அகோரத்தின் ருஷி அறிந்தவர்கள் அவர்கள்.
"I wants to be an Engineer" என்றேன் நான். "I wants to be a Doctor" என்றாள் பாலசுந்தரி. "I wants" "I wants" என்று மூன்று முறை முழுங்கிவிட்டு தமிழில் 'டாக்குத்தர்' என்றாள் தாமரை. அதன் பிறகு ஆசிரியர் வகுப்பு நடத்தவில்லை. வாயைத் திறந்தால் சிரிப்புத்தான் வந்தது அவருக்கு.

எவ்வளவுதான் அழகும் தோற்றமும் கொண்டாலும் அவளிடம் கெட்டித்தனம் இருக்கவில்லை. தாமரை அழகாக இருந்தது அங்குள்ள ஆசிரியர்களில் பலருக்கும் பிடிக்கவில்லை. ஒரு முறை சமூகக்கல்வி படிப்பிக்கும் ஆசிரியர் அவளைச் 'சோத்துமாடு' என்று திட்டினார். என்னதான் பேசினாலும் அவற்றைக் கணக்கில் எடுக்கமாட்டாள் அவள். இரண்டொரு தடவைகள் வகுப்பில் தன்னை மறந்து தூங்கியும் இருக்கிறாள்.

பாடசாலைக்கு வந்து மூன்று நான்கு மாதங்கள் இருக்கலாம். ஒருநாள் வகுப்பறையில் வாந்தி எடுத்தாள். தலையைச் சுற்றுகிறது எனப் படுத்து விட்டாள். எங்கள் வகுப்பு ரீச்சர் அவளைத் தனியே கூட்டிச் சென்று ஒபிஸ் றூமில் படுக்க வைத்தார். டாக்குத்தருக்கே வருத்தம் வந்துவிட்டது என்று நாங்கள் ஜோக் விட்டோம். அதன் பிறகு பாடசாலைக்கு வருவதை தாமரை நிறுத்தி விட்டாள்.
"தாமரை ஏன் பள்ளிகூடம் வருவதில்லை?" என ஆசிரியரிடம் கேட்டோம்.
"தாமரை டாக்குத்தருக்குப் படிக்கப் போறதாகச் சொன்னாள் அல்லவா? அதாலை பெரிய பள்ளிக்கூடத்துக்கு மாறிப் போய் விட்டாள்." என்றார் ரீச்சர். ஒருவேளை பாலசுந்தரியும் பள்ளிகூடம் மாறிப் போய்விடுவாளோ எனப் பயந்தேன். ஆனால் அவள் அங்கிருந்தே மருத்துவராவது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அதன்பிறகு இரண்டொரு மாதங்கள் கழிந்து பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அனிச்சமரத்தில் நிறையப் பழங்கள் இருப்பதைக் கண்டு அணில்கள் போல மரத்துக்கு மரம் தாவினோம். "யாரோ பனை வடலிக்குப் பின்னால் ஒழித்திருந்து எங்களைப் பார்ப்பதாக  உமாசுதன் சொன்னான். "அது தாமரை போல இருக்கு" என்றான் நாகநாதன். அவள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததாக நாகநாதன் சொன்னான். மரத்திலிருந்து குதித்து பார்க்கும்போது தாமரை பனைக்குப் பனை ஒழித்துப் பதுங்கிப் போவது தெரிந்தது.

ஏதோ எங்களைப் பார்பதற்காகத்தான் அவள் வந்திருக்க வேண்டும்; பின் ஏதோ தயக்கத்தால் ஓடியிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அப்புறம் நானும் உமாசுதனும் வேறு பாடசாலைக்கு மாறி விட்டோம்.

x

தாமரையின் வீடு வந்ததும் சைக்கிள் சில்லுகள் உருள அடம் பிடித்தன. வீடு மண்டிக் கிடந்தது. கோழியொன்று அடைகாத்த தன் குஞ்சுகளுடன் உல்லாசமாக விரைகின்றது. பூனையொன்று வெப்பை தாளாது வீட்டிற்குள்லிருந்து கிழம்பி பதுங்கிப் பதுங்கி புளியமரம் பக்கம் போகிறது. அங்கு ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை. எனது அசுமாத்தம் அறிந்து தெருநாய்கள் குரைக்கத் தொடங்கின. பயம் போக சைக்கிள் பெல்லை அடித்தேன். ஆச்சாரியார் வீட்டிற்கு வரும் வரைக்கும் தெருநாய்கள் மூச்சிரைக்கத் துரத்தின.

சாரத்துடன் வெறும் மேலுடன் குடிசைக்குள்ளிருந்து துள்ளி வெளியே வந்தான் யோகன். நானும் சைக்கிளிலிருந்து துள்ளிக் கீழே குதித்தேன். காசுத்துண்டை நீட்டி, "காசு வாங்கி வரட்டாம்" என்றேன்.
"அப்பா நாலைஞ்சு வீடு தள்ளி வேலை செய்கிறார். கேட்டு வாறன்" துண்டைப் பறித்தான் யோகன்.
"நானும் வாறன்."
"குச்சொழுங்கை நிறைய நெருஞ்சி முள்ளு இருக்கு. சைக்கிள் காத்துப் போயிடும். நான் போய் வாங்கி வாறன். நீர் இதிலை நில்லும்."
போனவன் திரும்பி வந்தான். என்னை மேலும் கீழும் பார்த்தான். "செருப்பை ஒருக்காக் கழட்டித் தாரும். நிலம் ஒரே சூடாக்கிடக்கு. முள்ளும் வேறை குத்தும். உடனை வந்திடுவன்"
"அது மட்டும் நான் என்ன செய்யிறது?"
"வீட்டுத் திண்ணையிலை வந்து இரும்!"
"பரவாயில்லை. நான் இதிலையே சைக்கிளிலை நிக்கிறன்."
குச்சொழுங்கைக்குள்ளாலை ஆடி அசைந்து போனவன் போனதுதான். பிறகு வரவில்லை. அரைமணி நேரமாகியும் அவனைக் காணவில்லை. காசும் வரவில்லை. இருந்த செருப்பும் போய் விட்டது. செருப்பு என்ன பாடுபட்டு வரப் போகிறதோ என நினைக்க பயமாக இருந்தது. அந்தப் பயத்தில் கால்கள் வியர்வை கோர்த்து பிசுபிசுத்தன.

கோயில் மணி மூன்று முறை அடித்து ஓய்ந்தது. பூசை ஆரம்பமாவற்கு அறிகுறி. நானும் எனது சைக்கிள் பெல்லை மூன்று தடவைகள் அடித்தேன்.
"வீட்டிலை யாரும் இல்லையா?" குரல் எழுப்பினேன். ஜன்னல் சீலைக்குப் பின்புறம் ஒரு பெண் கையில் குழந்தையுடன் நிற்பது தெரிகிறது. அவளின் வயிறு பூசணிக்காய் போல் பெருத்திருக்கின்றது. இன்னொரு குழந்தையோ?
"வீட்டிலை யாராவது..." மீண்டும் குரல் கொடுத்தேன். காசு வாங்காவிட்டாலும் பரவாயில்லை. பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஆனா செருப்பு வந்தாகணுமே!
"என்ன வேண்டும்?" ஜன்னல் சீலையை விலத்தி கொஞ்சம் முகத்தைக் காட்டினாள். அதிர்ச்சி. முப்பத்தைந்து வயதுத் தோற்றத்தில் முகம் காட்டி மறைந்த அந்தப் பெண் - தாமரை.

தாமரையின் முகம் சந்தோஷமில்லாமல் வாடியிருந்தது. நான் ஒன்றுமே கதைக்காமல் திரும்பிவிட்டேன். சேற்றில செந்தாமரை முளைக்கிற மாதிரி - தாமரை இந்த சமூகத்திலை ஏன் வந்து பிறந்தாள்? என்ற கவலையில் நெஞ்சு வெடிக்க மனம் விம்முகின்றது. திரும்பி வீடு நோக்கி நடக்கின்றேன். எங்கிருந்தோ பறந்து வந்த பருந்து ஒன்று பற்றைக்குள் பதுங்கி நின்ற கோழிக்குஞ்சுகளில் ஒன்றைக் கொத்திக் கொண்டு போனது.

ஓடிக்கொண்டிருந்த கிராமபோன் தட்டு சாவிக் குறைவினால் அவல ஒலி எழுப்பியது. அதுவே கடைசிப் பாட்டாக இருக்க வேண்டும்.உயிரோசை (12.03.2012) ; ஜீவநதி (ஆடி, 2013)No comments:

Post a Comment