Sunday 12 July 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 5 - கரி பூசிய கறுப்பு நரி


                கில்லாடி ஆனந்தத் தேன் மழையில் நீராடினான். பொலிசிலிருந்து மீண்ட மூத்தானைத்; தாவியணைத்து வரவேற்பு அறைக்குக் கூட்டிச் சென்ற பொழுது, “கில்லாடி அண்ணை, நாய்ப் பொலிஸ்காரன் வழக்குத் தொடுக்கப் போகிறானாம்" என்று பொரிந்தான் மூத்தான்.
பயப்படாதே மூத்தான். வழக்கு வெல்கிறது இந்தக் கில்லாடிக்குச் சின்ன விடயம். நல்ல வெள்ளைக்கார பரிஸ்ரராகப் பிடிப்பம். அது சரி, என்ன நடந்தது?"
கோட்டானோ ஊத்தைவாளியோ சைகை தந்திருந்தால் பொட்டலங்களை தூக்கி  வீசி எறிந்துபோட்டு மாயமாக மறைந்திருப்பேன்."
இரண்டு பேரும் என்ன செய்தவன்கள்?"
கோட்டான் வழமையைப் போலத்தான். வெள்ளைப் பெட்டையளிலே சொக்கிப் போய் நின்றான். ஊத்தைவாளி கண்ணிலேயே படவில்லை."
வரட்டும் அவைக்கு நல்ல பாடம் படிப்பிக்கிறன். உவன்களை இனி எங்கள் கூட்டத்தாலே கலைக்கவேணும்."
கில்லாடி அண்ணை. அப்படிச் செய்து போடாதையுங்கோ. அவன்கள் போய் எங்களின் தொழிலை பொலிசுக்குக் காட்டிக் கொடுத்துப் போடுவான்கள்."
பொலிசுக்குக் காட்டிக் கொடுத்தால், பிறகுதான் இந்தக் கில்லாடியைப் பற்றி அவைக்கு விளங்கும். அவைக்கு விளங்கயில்லை நான், கழுதைப்புலி, எத்தனை பேரைச் சுட்டுப் பொசுக்கி வீமன்காமம் கொலனிக்குள்ளே வீசினனான் என்று." இவ்வாறு கத்திய கில்லாடியின் கண்களில் கொலை வெறி தெறித்தது.
அவன்களும் யாழ்ப்பாணத்தில் உந்தத் தொழில் செய்துபோட்டுத்தான் லண்டனுக்கு வந்தவன்கள். அவன்களோடு கொளுவ வேண்டாம் அண்ணை."

                 வரவேற்பறைக்குள் புகுந்த மூத்தான், நதியா அமிரோடு சமிக்கைப் பாசையில் புன்னகை சொரியப் பேசுவதை கடைக்கண்ணால் அவதானித்தான். அவனைப் பொறாமை நெருடித் தழுவி உலுக்கியது. எத்தனையோ தடவை அவளோடு சிரித்துக் கதைக்க முயன்று மூக்கறுபட்ட ஆத்திரத்தோடு அவளையும் அமிரையும் மாறிமாறிப் பார்த்தான். கில்லாடி சமையல் அறையிலிருந்து ஒரு பிரெண்டிப் போத்தலோடு வந்து, “மூத்தான், இரு, ஒரு றவுன்ட்அடிப்பம்" என்றான்.

கில்லாடியும் சால்வை மூத்தானும் உற்சாக பானமருந்தி, உரத்துச் சிரித்து உரையாடி வீரம்வேறு பேசி வெற்றி விழாக் கொண்டாடினார்கள். சால்வை மூத்தான் மது போதையில்,

தம்பி அமிர் டே, ஒரு தம்பிளர்அடி. சொர்க்கத்தின் வாயில் வலியவே வந்து வாடா தம்பி, வாடா தம்பி ராசா என்று அழைக்கும்."
எங்கள் வீட்டில் எவருமே குடிப்பதில்லை. தயவு செய்து வேண்டாம் அண்ணை."
குடியாதவன் வீடு விடியாது. நீ படித்தவன். உனக்கு அது புரியவில்லைப் போல."

                கில்லாடி, மனைவி நதியாவை அழைத்துக்கொண்டு மாடியிலுள்ள தங்கள் படுக்கை அறைக்குப் புறப்பட்டான். கணவன் பின்னே சென்ற நதியா மூத்தானைத் திரும்பிப் பார்த்து கையில் இருந்த புலிப் பொம்மையை அழுத்தினாள். அது உறுமியது. அது ஏன் என்று அமிருக்கு விளங்கவில்லை.

                அமிரும் மூத்தானும் மாத்திரம் வரவேற்பறையில் இருந்தனர்.

                சால்வை மூத்தானின் தலையில் மதுபோதை குந்தியிருந்து அவனைச் சிப்பிலி ஆட்ட, அவனது இடது காதில் தொங்கிய தொங்கிட்டானும் போதையில் ஆடியது. 

                அமிருக்குச் சால்வை மூத்தான் எப்படிப் பொலிசிலிருந்து தப்பி வெளியே வந்தான் என்பதை அறிய ஆவல் உந்தியது. அதை அறிவதற்காகவே அவன் தனது அறைக்குப் போகாமல் நள்ளிரவுக்குப் பின்னரும் அந்த வரவேற்பறையில் வேளை பார்த்துக் காத்திருந்தான்.

                கிறேற் பிரிட்டனில் பொலிஸில் அடித்து உதைத்துச் சித்திரவதை செய்வார்களா என்று கேட்பதும் அவனுக்கு நாகரிகமாகப் படவில்லை. ஆவல் விடாமல் தூண்டியதால், வலது கையால் நடு உச்சி பிரித்து வாரிய தனது தலைமுடியைக் கோதியபடி,

அண்ணை, பொலிசிலே என்ன கேட்டவர்கள்? இலங்கை மாதிரித்தானா  இங்கும்?” என்றான்.
இல்லையடா தம்பி. இங்கை எல்லாம் புதுமாதிரி."
புதுமாதிரி யென்றால்?"
சொல்லுறன் பெடியா. நீயும் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். உனக்கும் அது உதவும்" என்று கூறிய சால்வை மூத்தான் 'அடுத்த முறை உவரைக் கூட்டிக்கொண்டு போய் உவரைத்தான் பொட்டலம் காவ வைக்கவேணும் என்று மனதுக்குள் திட்டமிட்டபடி,
பொலிஸ் நிலயத்திலே இப்படியான செயல்களுக்கெல்லாம் அடித்துக் குத்த மாட்டாhன்கள்."
மெய்தானே? அப்போ எப்படி நடத்துவார்கள்?"
பிடித்ததும் கைகள் இரண்டையும் பின்னுக்குப் பிணைத்து விலங்கிடுவார்கள். பொலிஸ் நிலையத்துக்குப் போனதும் முதல் வேலையாகப் புகைப் படம் எடுப்பார்கள். பின்னர் கைரேகை அடையாளம் எடுப்பார்கள். அதன் பின்னர் பெயர் வயது விலாசம் பெறுவார்கள். பின்னர் ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டுவார்கள்."
அண்ணை, அதற்குப் பிறகுதான் விசாரணை செய்வார்களோ?"
ஏன் தம்பி அவசரப்படுறாய்? பார்த்தால் நீயும் எங்கள் கூட்டத்தோடு ஒட்டப் பார்க்கிறாய் போல."
அப்படியில்லை அண்ணை சும்மா கேட்டனான்."

                அமிர் தங்கள் பாதாள உலகத் தொழிலில் ஈடுபடத் துடிக்கிறான் என்று மூத்தான் ஒரு கணிப்பு வைத்துக்கொண்டு கூறத் தொடங்கினான்.

கூட்டுள் தள்ளிப் பூட்டிய பின்னர் பெயர் வயது இரண்டையும் கொம்பியூட்டரில் பதிவுசெய்து, கைது செய்த நபருக்கு முன்னைய குற்றங்கள் ஏதாவது இருக்கிறதா என்று தேடுவார்கள். முன்னர் ஏதாவது குற்றத்தில் அகப்பட்டிருந்தால் கொம்பியூட்டர் அந்த விபரம் முழுவதையும் காட்டும்."
உதெல்லாம் கொம்பியூட்டர் காட்டுமே?" என்று கொம்பியூட்டர் பற்றி ஒன்றும் தெரியாதவன்போல அமிர் பாசாங்கு செய்தான்.
ஓம் தம்பி. உன்னை நாளைக்கு கையும் களவுமாகப் பொலிஸ் பிடிக்குது என்று வைத்துக்கொள். என்ன நடக்கும்?"
தெரியாதண்ணை. நீங்கள்தான் சொல்லவேண்டும்."
கொம்பியூட்டருக்கு உமது பெயரையும் பிறந்த திகதியையும் கொடுத்தால் அது சொல்லும் உமக்குப் பழைய குற்றம் இல்லை என்று. உடன் சுணக்காமல் விட்டுவிடுவார்கள்."
அப்படியே அண்ணை? சரி மிச்சத்தைச் சொல்லுங்கோ."
அமிரின் வதனத்தின் கோல மாற்றத்தைக் கடைக் கண்ணால் அவதானித்து விட்டு, “இறுதியாக என்ன சொன்னனான்? ஓ விசாரணைக்கு முன்னர் இலவச சட்ட உதவி பெற ஆலோசனை கூறுவார்கள். குற்றவாளிக்கு வழமையான பரிஸ்டர் இருந்தால் அவரைக்கூப்பிட வழிசெய்து தருவார்கள். அல்லது தான் விரும்பிய வேறு பரிஸ்டரைக் கூப்பிட தொலைபேசி  வசதிசெய்து கொடுப்பார்கள். இல்லாவிட்டால் ஒரு சட்டத்தரணிகள் பட்டியல் தந்து அதில் ஒருவரைத் தெரிந்து கொள்ளச் சொல்லுவார்கள். அழைக்கும் சட்டத்தரணிக்கு தமிழ் தெரியாவிட்டால் மொழி பெயர்ப்பாளரை ஒழுங்கு செய்து தருவார்கள்."
அண்ணை, இலங்கையிலே உப்படி எல்லாம் இல்லை. கைது செய்ததும் பொலிசார் அடித்து உதைத்துச் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்கு மூலம் பெறுவதிலேயே கண்ணாய் இருப்பார்கள். இங்கே எல்லாம் வித்தியாசம், இல்லையே அண்ணை?" அவ்வாறு கூறியவன் சற்று நேரம் தரைக் கம்பளத்தைப் பார்த்துக் கடுமையாக யோசித்தான். 

                அப்பொழுது கதிரையைவிட்டு எழுந்த சால்வை மூத்தான் டேய் தம்பி அமிர். இந்தா ஒரு றவுன்ட்அடி" என்று ஒரு தம்பிளர் நிறைந்த பிரெண்டியைக் கொடுக்க அமிர் மீண்டும் குடித்துப் பழக்கமில்லை அண்ணை" என்று மறுத்த பின்னர் கதிரையால் எழும்பி ரி.வியை இயக்கினான்.

                அப்பொழுது பி.பி.சி. ஆங்கிலச் செய்தி நடந்தது. பயங்கர வாதிகள் ஒரு ஆகாய விமானத்தைக் கடத்தி 326 பயணிகளை பணயக் கைதிகளாக வைத்திருப்பதாகச் செய்தி சொல்லப் பட்டது.

                சால்வை மூத்தான் தள்ளாடியபடி பியராவது குடிக்கிறாயா?” என்று அமிரைக் வினாவினான்.
வேண்டாம் அண்ணை. மன்னித்துக் கொள்ளுங்கோ."
டே தம்பி அமிர். புதிதாய் லண்டனுக்கு வருகிறவை எல்லோரும் உன்னைப் போலத்தான் குடிப்பதில்லை என்று பெருமை காட்டுகிறவை. பிறகு அவைதான் தண்ணியே சரணமென்று - உலகமென்று வாழ்கிறவை" என்று சால்வை மூத்தான் கூறிவிட்டு மது போதையில் மீண்டும்,
டே தம்மி அமிர். என்னை உவன் சூட்டி குகன் போல சின்னத்தரவளி என்று நினையாதை. கோட்டான், ஊத்தைவாழி---உவையும் முந்திப் போராளிகள்தான். பீத்தல்---டுபிளிகேட் இயக்க போராளிகள். நான் ஒறிஜினல்போராளி---கறுப்புநரி---தெரியுமே? நான் யாழ்ப்பாணத்திலே இருந்த சமயம் என்னுடைய பெயரை - கறுப்பு நரி சால்வை மூத்தான் என்ற பெயரை - கேட்டால் முழு யாழ்ப்பாணமுமே  நடுங்கினது."
ஏன் அண்ணை?" என்று கேட்டு அமிர் அவனது வாயைக் கிளறினான்.
உனக்குப் புத்தூர்ச் சந்தி தெரியுமே பெடியா?"
ஓம். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியிலே சோமாஸ்கந்தக் கல்லூரிக்கு முன்னால் உள்ள சந்தி. அதே அண்ணை?"
ஓம். ஓம் அதுதான். அதன் ஓரமாக ஒரு பெரிய கிழட்டு வாகை மரம். பார்த்திருக்கிறியே?"
                “ஓ அதைக் கேட்டால், இந்தக் கறுப்பு நரி மூத்தானின் வீரசாகசங்களைக் கதை கதையாய்ச் சொல்லும்."

                அமிர் தான் லண்டன் வந்த நோக்கத்துக்குத் தேவையான துப்பு இலகுவாகத் தன்னைத்தேடி வருவதையெண்ணி மகிழ்ந்தான். அதனை அவன் மூத்தானுக்குக் காட்டிக்கொள்ளாமல், வாய்க்குள் விரல் வைத்தால் எடுக்கத் தெரியாத குழந்தை போல கதை கேட்டுக்கொண்டிருந்தான்.

புத்தூர்ச் சந்தியிலே உள்ள கிழட்டு வாகை மரம் - அதற்கு அருகே ஒரு தந்திக் கம்பம், அந்த தந்திக் கம்பத்தைக் கேட்டாலும் என்னுடைய கதையின் ஒரு பாதியைச் சொல்லும்."
என்ன கதை சொல்லும் அண்ணை?"
யாழ்ப்பாணத்திலே கறுப்பு நரி இயக்கத்திலே இருந்தபொழுது நான் எத்தனை ஆட்களை அந்தத் தந்திக் கம்பத்திலே கட்டிச் சுட்டனான் என்று."
நீங்கள் உவ்வளவு பெரிய ஆள் என்று உவை ஒருத்தரும் எனக்கு இதுவரை சொல்லவில்லை. பொறாமை பிடிச்ச சனம்."
எல்லாம் பொறாமையடா தம்பி. டே அமிர், உனக்குத் தெரியுமே நவக்கிரி. புத்தூருக்கு மேற்கிலே நிராவரை கேள்விப்பட்டனியே? அதுக்குக் கிழக்கு ஓரத்தில் பெரிய பெரிய அரச மரங்கள். அதுக்குப் பக்கத்தாலே கள்ளிப் பற்றைச் சுண்ணாம்புக் கலட்டி ஊடாக ஒரு செம்மண் வீதி போகுது. அந்த வீதி நீளத்துக்குப் போனால் வருகிற முடக்கில் இருக்கிற பனை அடைப்புக்குப் பக்கத்திலேதான் அச்சுவேலி வி.சி.செயர்மன்பாலமூர்த்தியின் வீடு. அந்தப் பாலமூர்த்தியின் மகளைக் கடத்திக் கொண்டு போய்ப் புத்தூர்ச் சந்தியில் உள்ள தந்திக் கம்பத்தில் கட்டிச் சுட்டது ஆர் என்று உனக்குத் தெரியுமே? என்ன நேரம் கடத்தினனான் தெரியுமே? பகல் 11.00 மணிக்கு. பகல் பகல் பதினொருமணி!"

                தொலைக் காட்சிப் பெட்டிக்குப் பக்கத்திலே இருந்த குங்குமப் பொம்மை இடைக்கிடை கண் சிமிட்டுவதைப் பார்த்தபடி அமிர் மௌனமாகக் கதையைக் கேட்டுக்கொண்டு இருந்தான். மூத்தான் தொடர்ந்து தனது வீரப்பிரதாபங்களை விளாசினான்;.

பாலமூர்த்தியின் பேத்தி பெரிய பிள்ளையாகி அன்றைக்குப் பெரிய கொண்டாட்டம் அவர்கள் வீட்டிலே. அவவுடைய ஆட்களெல்லாம் பெருந்திரளாக உடுத்துப்படுத்து தடல்புடலாக நின்றவை. அந்த நேரந்தான் துவக்கோடு போய் விசாரணை இருக்கு என்று பாலமூர்த்தியின் மகளை ரக்கிலே ஏற்றி வந்து புத்தூர்ச் சந்தியில், வாகை மரத்துக்கு அருகே உள்ள தந்திக் கம்பத்திலே கட்டிப்போட்டுச் சுட்டனான். நான் சின்ன சின்ன மனுசரை வதைக்கவில்லை. எல்லாம் பூனாபெரிசுகளை. அது உனக்குத் தெரியுமே?" என்று கேட்விட்டு சால்வை மூத்தான் அமிரைப்  பார்த்தான்.

                முகம் இருண்டுவிட்ட அமிர் கீழே கம்பளத்தைப் பார்த்தபடி தெரியாதென்று தலையைப் பக்கவாட்டில் அசைத்தான்.  பின்னர் சிறிது நேரம் யோசித்து விட்டு சால்வை மூத்தான் வெறியிலே இருக்கிறான். கேட்டால் எல்லாம் சொல்லுவான்என்று மனதுள் தீர்மானித்தபடி ஏன் அண்ணை அந்த நேரம் சுட்டீர்கள்? சாமர்த்தியச் சடங்கு வீடு முடிந்த பிறகு  ....." என்று இழுத்தான்.

உவவுக்குக் கொஞ்சம் இங்கிலீசு தெரியும் பெடியா. முதல் நாள் உவ ஐ.பி.கே.எவ்.-  அதுதான் இந்திய சமாதானப் படை - அதிகாரி ஒருத்தனோடு கடைக்குப் போன வழியிலே, நிராவரைக்குப் பக்கத்திலே உள்ள மரவள்ளித் தோட்டத்துக்குப் பக்கத்திலே நின்று கதைச்சவ. எங்களின் எதிரியோடு கதைத்தால் - கறப்பு நரிகள் நாங்கள் - விடுவமே? அதுதான் சுட்டனான். சந்தர்ப்பம் கிடைக்கிற நேரம் விடக்கூடாது. அப்பதான் சனம் நாங்கள் என்ன சொன்னாலும் செம்மரிகள் போல எதிர்ப்புக் காட்டாமல் இருப்பினம். நாங்கள்தான் பெடியா, ‘ஒறிஜினல்போராளிகள். கறுப்பு நரி சால்வை மூத்தான் என்றால் அந்தக் காலத்திலே கதிரிப்பாய் இடைக்காடு பத்தமேனி அச்சுவேலி ஒட்டகப்புலம் ஆவரங்கால் தோப்பு புத்தூர் நவக்கிரி சிறுப்பிட்டி வாதரவத்தை எல்லாம் நடுங்கும். குமருகள் கிடுகிடுக்கும். ஓ!"
    
                அமிர் சால்வை மூத்தானை உற்றுப் பார்த்தான். அவனுக்கு மூத்தான் தெரியவில்லை. தீப்பிழம்பைக் கக்குகின்ற இரத்தக் கோளக் கண்களும், இரத்தம் வழியும் நீண்ட கூரிய கொடுவாய்ப் பற்களும் வெளியே தெரியும் இருண்ட குரூர இராக்கதன் போலக் காட்சி யளித்தான்.

'யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பிரதேசப் பொறுப்பாளனாக இருந்து அக்கிரமங்கள் புரிந்து அராஜகம் நடாத்திய கறுப்பு நரி மூத்தான் உவனா?” என்று மனதுள் வினாவியபடி மீண்டும் சால்வை மூத்தானைப் பார்த்த பொழுது வழிதவறிய பொறாமை மண்டிய போராளியின் கொடுங்கோன்மை அமிரின் உச்சந் தலையை ஊடறுத்துப் போய் அவனது ஈரலைப் பிய்த்தது. 

                சால்வை மூத்தான் மீண்டும் ஒரு தம்பிளர் பிரெண்டியை மடமடவெனக் குடித்துவிட்டு, கண்கள் சொருக வரவேற் பறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான். போதையின் உந்தலில் திடீரென, “மொத்தமாக எத்தனை பேரை அந்தத் தந்திக் கம்பத்தில் கட்டிச் சுட்டனான் தெரியுமே?"
தேரியாதண்ணை. சொல்லுங்கோ."
பதினொரு பேர். எல்லாம் மேட்டுக்குடிப் பூனாக்கள்’. நான் டாபி. இந்த டாபி எத்தனை மேட்டுக்குடிப் பூனாக்களை தந்திக் கம்பத்தோடு கட்டிக் சுட்டவன் தெரியுமே? தம்பி டே அமிர். தலை உயர்த்துற மேட்டுக்குடி பூனாக்களைவிடக்கூடாது மண்டையிலே போடவேணும்" என்று வெறியில் புசத்தினான்.

                சால்வை மூத்தானுக்கு அமிர் என்ன குடி என்பது தெரியாது.  அமிரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்ததும், “அமிர் யார்" என்று கில்லாடியிடம் சால்வை மூத்தான் வினாவியபொழுது அதனைப் பெரிதாக எடுக்காமல்  எங்களின் ஆள்தான்" என்று சொன்னதால் கில்லாடியின் நலிந்த குடியாயிருக்கும் என்று எண்ணியதோடு, அமிரும் சந்தோசப்படுவான் என்று நம்பியே மேட்டுக்குடி ஆட்களைச் சுட்டுப் பொசுக்கியதை வெகு உற்சாகமாகக் கூறினான்.

                சால்வை மூத்தான் மேலும் ஒரு தம்பிளர் உசார்ப் பானம் அருந்தியபடி அடுத்த ஆட்டத்தில் என்ன வீரப்பிரதாபம் சொல்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவன், இருந்தாப் போலத் தன் உச்சந் தலையில் குத்தி நின்ற மயிரைத் தடவி, இடக் காதின் தொங்கிட்டான் ஆட்டம்போட எங்களுடைய கறுப்பு நரித் தலைவர், இந்திய சமாதானப் படை போன கையோடு யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பிரதேசப் பொறுப்பாளரைநியமித்தவர். பெடியா, ஒரு பெரிய படிச்சவனையும் நியமிக்கவில்லை.

                நான் என்ன படித்தனான் தெரியுமே? மூன்றாம் வகுப்பில் இரண்டு மாசம். அவ்வளவுதான். என்னை மூன்றாம் வகுப்பில் படிப்பித்த கரணவாய் வாத்தி கந்தப்பு ஒரு நாள் பாஸ்எடுக்க என்னுடைய அச்சுவேலிக் கந்தோருக்கு வந்தவர். என்னைக் கண்டவுடனே தோளிலே இருந்த சால்வையை எடுத்து என்னை ஐயாஎன்று கும்பிட்டவர். அந்த வாத்தியை என்ன கேட்டனான் தெரியுமே? “ஐயா வாத்தி, குடும்பத்துக்கு இரண்டு பவுண்; கொடுக்க வேண்டும் என்று எங்கள் தலைவர் போட்ட காலக்கெடு முடிந்துவிட்டது. நீ என்ன இன்னும் பவுண் கொடுக்க வில்லையாம். பவுணைக் கொடுத்துப் போட்டு இந்தக் கந்தோருக்குப் பாஸ்எடுக்க வா. இரண்டு கிழமைக்குள் பவுண் கொடுக்கவில்லை. பிறகு பங்கருக்கு உள்ளேதான் போடுவன். விளங்குதே வாத்திஎன்று வெருட்டினனான்.

                மூத்தானின் பிரசங்கம் போலிப் போராளிகள் மடிக்குள் பொத்தி வைத்திருந்த ஒரு இரகசியத்தை அமிருக்குத் திறந்து காட்டியது.

                போதை முறியமுதல் சால்வை அமுதனிடமிருந்து மேலும் பெறக்கூடிய தகவல்களைப் பெற்றுவிடுவதில் அமிர் முனைந்த பொழுது, ரி.வியின் ஆங்கிலச் செய்தி அவனைச் சுண்டி இழுத்தது.

                "விமானத்தைக் கடத்திய காஸ்மீர் தீவிரவாதிகள் கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தாயின் கண்முன்னே அவளது இரண்டு குமர்ப் பெண்களையும், அவளது கணவனையும் சுட்டு அவர்களது பிரேதங்களை விமானத்துக்கு வெளியே வீசி உள்ளார்கள். இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களது சக தீவிரவாதிகள் 47 பேரை உடன் விடுவிக்காவிட்டால் ஏனைய பயணக் கைதிகளையும் சுடப்போவதாகச் சவால்விட்டுள் ளார்கள். இச்செய்தியை அடுத்து ரி.வியில் விமானத்திலிருந்து பிரேதங்கள் வீசப்படுவதை அமிர் கண் இமை மூடாமல் பார்த்தவண்ணம் இருந்தான்.

                அந்தத் திகிலில் இருந்து விடுபட்ட அமிர,; சால்வை மூத்தானின் போதை நிலையைப் பயன்படுத்தி அவனிடமிருந்து மேலும் தகவல்களைப் பெற முயன்ற அவசரம் அவனிடமும் ஏதோ புரியாத புதிர் ஒளித்திருக்கிறது என்பதை வெளிக் காட்டியபோதிலும் அதனை மூத்தான் உணரவில்லை.

                வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஆயிரக்கணக்கான யாழ்ப்பாண மக்கள்கூட ஆறு லட்சம் ஏழு லட்சம் ரூபா பணம் பிரயாண முகவர்களுக்குக் கொடுத்து எப்படி லண்டனுக்கு வர முடிந்தது என்பது அமிருக்குப் புதிராக இருந்தது. மூத்தான் அவ்வளவு தொகையை எப்படிப் பிரயாண முகவருக்குக் கொடுத்து லண்டன் வந்தான் என்பதை அறியும் உந்தலில், “மூத்தான் அண்ணை, நீங்கள் எப்படி அண்ணை லட்சக் கணக்கிலே பணம் கொடுத்து லண்டனுக்கு வந்தனீங்கள்?" என்று கேட்டபின்னர்தான், தான் அப்படிக் கேட்டது தவறு என்று அமிருக்குப் புரிந்தது. சால்வை மூத்தான் போதையில் எக்கச் சக்கமாக ஏதும்; செய்தாலும் என்று பயந்த பொழுது, சால்வை மூத்தான் தனது கதிரையிலிருந்து எழுந்து நின்று தலையைத் தடவித் தள்ளாடியபடி, தனது கெட்டித்தனங்களை அமிருக்குச் சொல்லி முடித்துவிடத் துடித்து,
                “டே தம்பி அமிர், உந்த எழிய மேட்டுக்குடியின் காசிலேதான் நான் லண்டனுக்கு வந்தனான். என்னுடைய பிரதேச வட்டத்துள் கனக்க அவையின் ஆட்கள் லொறி வைத்து நல்லா உழைத்தவை. எல்லோருக்கும் ஒரு இறுதி எல்லைத் திகதி போட்டு அதற்கிடையில் ஆளுக்கு 25,000 ரூபா தரவேணும் என்று ஒரு அறிவித்தல் கொடுத்தேன். ஒரு லொறிச் சொந்தக்காரனைத்தவிர எல்N;லாரும் குறித்த திகதிக்குள் காசு தந்திட்டான்கள். ஒரு இடைக்காட்டான் மட்டும் தரவில்லை. அவற்றை கதை அத்தோடு சரி. அப்படிச் சேர்த்துத்தான், கறுப்புநரிகளுக்கும் டிமிக்கிகொடுத்துவிடடு, ஆவரங்கால் மனுசனின் லொறியின் கூரையில் வைத்த பீப்பாவினுள் மறைந்திருந்து கொழும்பு சென்றுபிரயாண முகவருக்கு எட்டு இலட்சம் கொடுத்து, பெற்றோருக்கு தெரியாமல் ஒழித்தோடி வந்த காதலியோடு லண்டன் வந்தனான். என் ஆசைக் காதலி என்னிலும் கொஞ்சம் உயர்ந்த குடி, தெரியுமே?" என்று கூறிவிட்டு அமிரின்  எடுப்பான மூக்கை உற்றுப் பார்த்தான்.

                அமிருக்கு வேதனையின் விம்மல் தொண்டைக்குள் திமிறியது. கண்கள் கலங்கின. மீண்டும் சால்வை மூத்தானின் வாயைக் கிளறி மேலும் துயரம் தரும் கேள்விகளைக் கேட்க விரும்பாமல் மௌனமாக  இருந்தான். அப்பொழுது மூத்தானுக்கு, வெறியிலும் தான் கூறியதில் ஏதோ சிக்கல் இருப்பதுபோலத் தோன்றி இருக்கவேண்டும். தான் கூறிய செய்திகள் தவறான இடத்தில் போய்ச் சேர்ந்திருக்குமோ என்ற எண்ணத்தில் போதையேறிச் சிவந்த கண்களால் அமிரை உற்றுப் பார்த்துப் பேந்தப் பேந்த மிரண்டான்.


                மூத்தானின் மனத்திரையில் யாழ்ப்பாணத்தில் உள்ள புத்தூர்ச் சந்தியும் அதன் அருகே உள்ள கிழட்டு வாகை மரமும் உயிர்த்தெழுந்தன. மரத்தின் ஓரமாக நட்டிருந்த தந்திக் கம்பத்தில் நிலத்திலிருந்து இரண்டு அடிக்கு மேலே உயர்த்திக் கம்பத்தோடு கயிற்றால் சுற்றிக் கட்டியிருந்த நவக்கிரி பாலமூர்த்தியின் மகள், சுட்டுக் கொல்லப்பட முன்னர், கண்களிலிருந்து தீப்பொறிகள் சீறப் போட்ட சாபங்கள் அவன் காதில் இடிமுழக்கமாகக் கேட்டன.

தொடரும்...

No comments:

Post a Comment