Sunday, 19 July 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 6 - எச்சில்  நக்கும்  மரநாய் 
                  
                                             
                                சால்வை மூத்தான் முதல்நாள் நள்ளிரவு விபரித்த யாழ்ப்பாணம் புத்தூரில் நடந்த கோரக் காட்சிகள் இன்னும் அமிரின் நினைவில் நின்று அச்சுறுத்தின. சாவீடுகளில் எழும்  சாபங்களும் ஓலக்குரல்களும், காதைப் பிளக்கும் பறைமேளங்களின் இடி ஓசைகளும் அவனுக்குக் கேட்டன, உற்றார் உறவினர் பூமியில் அடித்து அழுது புழுதியில் உருண்டு புரளும் காட்சிகள் அவன் மனக்கண்களை வாட்டி வருத்தின. 

                அந்த அனர்த்த உணர்வுகள் மனதை உறுத்த, ஜீவிதா இரண்டு தினங்களுக்கு முன்னர் சொல்லிய வீதியோர நடைபாதை வழியே நடந்து சென்று எதிரே பிளெசற்  பூங்காவைக் கண்ட அமிர், அந்த பூங்கா கிழக்கிலும் தெற்கிலும் வீதிகளை எல்லைகளாக உடைய ஒரு பெரு நிலப் பரப்பில் அமைந்திருப்பதைக் கண்டான். அங்கே, அந்த மாலைப் பொழுதில் அவனைச் சந்திக்க வருவதாக ஜீவிதா தொலை பேசியில் கூறியிருந்தாள்.

                 சொலிசிற்றர் நாகப்பனின் கந்தோரில் அவளைப் பார்த்த நாட் தொடக்கம் அந்த அழகு தேவதை அவனது எண்ணத்தி;ல் அடிக்கடி  தோன்றிமார்பில் படரும் கூந்தலை வீசி முதுகில் படியவிடுவதும் தன்னையே கண்வெட்டாமல் பார்ப்பதும் போன்ற மன நிறைவுக்கு மத்தியில் ஏன் அங்கு வரச்சொல்லி யிருப்பாள் என்று எண்ணியபடிஅங்கிருந்து வலப்பக்கமாகத் திரும்பிப் பிளெசற் பூங்காவின் வெளி வீதியோரச் சீமெந்து நடைபாதை வழியே நடந்தபடி, நாலு அங்குலத்துக்கு ஒன்றாக முக்கால் இஞ்சி மொத்த சதுர இரும்புக் கம்பிகளை நட்டுவைத்த வேலியினூடாகப் பூங்காவினுள் கூர்ந்து பார்த்து ஜீவிதாவைத் தேடியபடி, கிட்டத்தட்ட கால் கிலோ மீற்றர் நடந்து முடிந்த பின்னர்தான் ஜீவிதா குறிப்பிட்ட பிளெசற் பூங்காவின் மூன்றாவது நுழை வாயில் வந்தது. 

                அந்த நுழை வாயில் வந்ததும்; பிளெசற்; பூங்காவினுள் நுழைந்து, சீமெந்தாலான வீதி நீளத்துக்கு நடந்தபடியே கண்களை ஏவி ஜீவிதாவைத் தேடி அவள் குறிப்பிட்ட குழந்தைகளுக்கான சிறிய மிருகக் சாட்சிச் சாலை, அந்த பிளெசற் பூங்காவில் எந்தப் பகுதியில் அமைந்து இருக்கிறது என்று நோட்டம் பார்த்தான்.

                 'ஓ அவைதான் ஜீவிதா சொன்ன ரெனிஸ் மைதானங்கள். அங்கு வெள்ளைகள் ரெனிஸ் விளையாடுகிறார்கள். அது சிறுவர் விளையாடும் பகுதி. ஓ அதற்குப் பக்கத்தில் கிறிக்கெற் விளை யாடுபவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் போல் தெரிகிறது. அது தேநீர்ச் சாலை. தூரத்தே ஒரு சிறு கட்டடம். அதன் முன்னே வெள்ளைகள் ஏதோ விளையாடுகிறார்கள். ஓ அதோ தெரிகிறது ஜீவிதா சொன்ன மிருகக் காட்சிச்சாலை.  அதற்கு முன்னால் கறுப்பர்கள் உதைபந்தாட்டம் விளையாடுகிறார்கள்என்று மனதுள் வர்ணனை செய்தபடி 'ஏன் அவள் வர இத்தனை தாமதம்?” என்று தடுமாறியபோது முதுகுப் புறத்திலிருந்து வந்த சிரிப்பொலியைக் கேட்டுத் திரும்பிய சமயம், ஜீவிதாவின் புன்னகையும் அவள் கன்னங்களின் சுழிகளும் அவனுக்கு மாயஜால வித்தை காட்ட,    “நீங்கள் உள்ளே வரமுன்னரே நான் வந்து விட்டேன்." என்று கூறி மீண்டும் சிரித்தாள், ஜீவிதா.
மிஸ,; நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்று தேடிக்கொண்டு இருந்தேன்."
நானும் அப்படித்தான் எண்ணினேன்."
எவ்வளவு பெரிய பூங்கா. இலங்கையிலே இவ்வளவு பெரிய பூங்கா எங்குமில்லை. எவ்வளவு பெரிய பெரிய மரங்கள். வெப்ப வலய காடுகள் மாதிரிப் பச்சை மயமாக இருக்கிறது."
குளிர் காலம் வந்தால் எல்லாமரங்களும் பூவும் பொட்டுமிழந்துவிடும். தலை சிலுப்பிய பேய்கள் போலக் காட்சி யளிக்கும்."

                நீண்ட நாட் பழகியவளைப் போல அமிரைச் சுற்றிச் சுற்றி வந்து தலையையும் கூந்தலையும் ஆட்டி ஆட்டிக் கதைத்த ஜீவிதா அவனை அழைத்துக் கொண்டு தென் அரைப் பக்க பூங்காவில், இரு பக்கமும் பாரிய விருச்சங்கள் நின்ற வட்டமாக அமைந்த வீதி வழியே அவனோடு நெருங்கியும் நெருங்காமலும் நடந்து, ஆரம்பித்த இடத்துக்கு வந்து சேர நாற்பது நிமிடங்கள் வரை எடுத்தன. ஆனால் அவளால் தான் நினைத்து வந்த எதனையும் அவனுக்குச் சொல்ல முடியவில்லை என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது. எனினும் பேசாமல் இருப்பது நாகரிகமல்ல என்பதற்காக நடந்தபடியே, “சாப்பாடும் கில்லாடி வீட்டில்தானா?" என்று கேட்டாள்.
ஓம் அங்குதான். நதியாவின் சமயல், அம்மாவின் சமயலைப் போலவே நன்றாக இருக்கிறது."
அம்மாவின் சமையல் மட்டம் என்றாலும் வாய்க்கு ருசியாகவே இருக்கும், இல்லையா?" இவ்வாறு கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
அவள் பொடிவைத்துப் பேசுகிறாளோ என்ற ஐயம் அமரின் உள்ளத்தில் பட்டும்படாமலும் குத்தியது. காட்டிக் கொள்ளாமல், “அதுதானே உண்மையுங்கூட" என்றான்.
நதியா எப்படி? கண்டமாதிரியும் ஆண்களோடு கதைக்க மாட்டாளே?"
அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாத அமிர் மேலே மரக்கிளைகளைப் பார்த்தான்.
ஏன் நான் ஏதாவது தவறுதலாகக் கேட்டுவிட்டேனா?"
இல்லை. நதியா ஒரு தனி ரகம் போல. இன்னும் அவள் போக்கு எனக்குச் சரிவரப் புரியவில்லை."
அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். ஏதோ பெரிய சுமையைத் தலையிலே சுமப்பவள் போல எப்பொழுதும் ஏதோ சிந்தனையில் இருப்பாள். கோவிலுக்கு வருவாள். சுவாமியைப் பார்க்கிற நேரத்திலும் மேலே முகட்டைப் பார்த்து யோசிக்கிற நேரம்தான் அதிகம்."
அப்படித் தெரியவில்லையே. எப்பொழுதும் துள்ளி ஓடிச் சிரித்தபடிதானே இருக்கிறாள்."
என்ன திடீர்த் திருப்பம்? உங்கள் வருகையோடு ஆளே மாறிவிட்டாளா?" என்று கேட்டுவிட்டு ஜீவிதா விழுந்து விழுந்து சிரித்தாள்.

                ஜீவிதா கண்களைச் சுழற்றித் தலையை ஓயாமல் ஆட்டிக் கூந்தலை அடிக்கடி வீசிப் பறக்கவிட்டுச் சிரித்துக் கதைத்தது அமிருக்கு அதற்கு முன் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிராத அனுபவம். அவள் சிறிது நேரம் தோளோடு மிக நெருங்கி நடந்து சிரித்துக் கதைப்பதும், பின்னர் சிறிது எட்டவே நடந்து சிரிக்காமலே தலையைத் தொங்கப் போட்டு மௌனம் சாதிப்பதும் விந்தையாக இருந்தை அவன் உணர்ந்தான். அதை அவன் முக்கியமாக எடுத்திருக்க வேண்டும் என்பதைக் காலங்கடந்துதான் தெரிந்து கொண்டான்.

                தொடர்ந்தும் அவர்கள் இருவரும் இரண்டாவது வட்டத்தை ஆரம்பித்து நூறு மீற்றர்வரை நடக்க முன்னர் பிளசற் பூங்காவின் மத்திய பகுதியில் ஆங்காங்கு நிறைந்த மக்கள் கூட்டங்களை ஊடறுத்து தன் சிநேகிதி மண் நிற சுரிதாரில் பூமா வருவதை ஜீவிதா அவதானித்தாள்.

                வீதியை விட்டு இறங்கி ஒரு பெரிய விருச்சத்தின் கீழ் நின்ற ஜீவிதா, பூமா வந்ததும் அவளுக்கு இவர் மிஸ்ரர்; சிவகுரு அமிர்தன். அமிரென்றே அழைக்கலாம். இவ மிஸ் பூமா தங்கராசா. சொந்தவூர் நெடுந்தீவு. சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் படித்து மருத்துவம் படிக்க தெரிவானவா" என்று அமிருக்கு அறிமுகப் படுத்தினாள்.

ஹலோஎன்று பூமாவுக்குப் பதில் கூறிய அமிர் பொப் கூந்தல் அழகாக அசைகிறது. கவர்ச்சியான முகம். அதில் சோகத்தின் சரித்திரம் நிரந்தரமாகப் பரந்திருக்கிறதா அல்லது அது வெஞ்சினத்தின் வலைப் பின்னலாஎன்று தெரியாமல் மீண்டும் அவளின் முகத்தை உற்றுப்பார்த்தான்.

ஹலோ" என்று சொன்ன பூமா ஆணழகன் என்று ஜீவிதா முந்தநாள் சொன்னது முற்றிலும் சரிதான். நடு உச்சி பிரித்து தலை மயிரை வாரியிருப்பது கவர்ச்சியாகவே இருக்கிறதுஎன்று நினைத்தாள்.

                மூவரும் பூங்காவின் மத்தியில் புற் தரையில் அமர்ந்தனர். ஊர்ப் புதினங்கள் நாட்டு நடப்பு சினிமா என்று கதை இலக்கில்லாமல் சுற்றிச் சுழன்றது.

                ஏறக்குறைய ஒரு மணி நேரத்தின் பின்னர் திடீரென ஜீவிதா நான் அவசரமாக ரெலிபோனில் கதைக்கவேண்டும். நீங்கள் இரண்டுபேரும் இருந்து கதையுங்கள். நான் ஐந்து நிமிடத்தில் வந்திடுவேன்" என்று கூறி எழும்பியவள், மீண்டும் அமிரைப்பார்த்து பூமா உங்களுடைய ஆள் தான்" என்று கூறிக் கூந்தலை வீசி எறிந்து சிரித்தபடி சென்றாள்.

                அதன் அர்த்தம் புரியாத அமிர் பூமாவைப் பார்த்தான். அப்பொழுது தனது சிகப்புச் சிலைட்டைக்கழற்றித் தலையை அசைத்துத் தனது பொப்கூந்தலை ஒழுங்கு செய்து கொண்டிருந்த பூமா அமிரைப் பார்த்துச் சிரித்துவிட்டு ஜீவிதா சொன்னது விளங்கவில்லையா?" என்றாள்.

                அமிரின் கண்களில் பூமாவின் வலது மூக்கில் மின்னிய வெள்ளைக் கல் மூக்குத்தியும், அவளது இடக் கழுத்தில் இருந்த காய அடையாளமும் பளீரெனப்; பட்டன. அதனால் அவன் மனதில் மின் வெட்டிய கேள்வியைக் காட்டிக் கொள்ளாமல் 'இல்லைஎன்று தலையைப் பக்கவாட்டில் ஆட்டினான்.

                பூமாவும் பொடி வைத்து ஆம் நானும் உங்களுடைய ஆள்தான்" என்று சொல்லித் தலையை அசைத்துச் சிரித்தபொழுது அவளது கூந்தல் தோள்களில் பட்டும் படாமலும் நர்த்தனமாடியது. 

ஆம் நானும் உங்களுடைய ஆள்தான்" என்றது அமிருக்கு விளங்கவில்லை. அவனுக்கு மேலும் சங்கடமாக இருந்தது. அவனது பார்வையில் அப்பாவித்தனமும் அங்கலாய்ப்பும் வெளிப்படுவதைப் பூமா அவதானித்துவிட்டு,
ஜீவிதா குறிப்பிட்டது, உங்களுடைய அரசியல் அணுகு முறையைத்தான்" என்று சொன்னதும் அமிரின் இதயத்தில் ஆனந்தம் ஏறிச் சவாரிவிட்டது.

மிஸ் பூமா, நீங்களும் என்னைப் போல ஜனநாயக சித்தாந்தவாதியாக - எங்கள் அரசியல் தமிழ் அரசுக் கட்சி ஆதரவாளராக - இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்"  என்று கூறியவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

மன்னிக்கவும் மிஸ்ரர்; அமிர். எனக்கு எந்த அரசியல் சித்தாந்தத்திலும் ஈடுபாடில்லை. நான் உங்கள் மிதவாதக் கட்சி ஆதரவாளர் இல்லை. ஜீவிதா குறிப்பிட்டது உங்களது அரசியல் சித்தாந்தத்தை அல்ல. அவள் குறிப்பிட்டது தமிழ் ஈழ விடுதலைக்கு ஆயுதம் ஏந்திய போராளிகள், தொப்புள்கொடி உடன் பிறப்புகளுக்கு, செய்யும் அக்கிரமங்களை உங்களைப் போல நானும் மூர்க்கமாக எதிர்ப்பதையே" என்று பூமா சொன்னதைக் கேட்டபோது அமிர் தனது அவசர புத்தியைத் தானே கடிந்தபடி, மேலே மரக் கிளைகள் ஊடாக வானத்தைப் பார்த்தான்.

                வானம் மிக மேலெழுந்து நீலமாகத் தெரிந்தது. ஆகாய விமானங்கள் பல வானத்தில் நீள் வெள்ளை வால் அடையாளங்களைச் சிலந்தி வலைபோலப் பதித்து லண்டன் வானம் தமது தனியுரிமை என்று கூறுவதுபோல அமிருக்குப்பட்டது.

                அப்பொழுது யாரோ அடித்த பந்து ஒன்று அமிரின் முதுகில் பட்டுத் தெறித்துச் சென்றது. அவ்வேளை பூமா தனது கைப் பையிலிருந்து இரண்டு சுவிங்கங்களை எடுத்து அதில் ஒன்றை அமிரின் கையில் வைத்து விட்டு அவனைப் பார்த்த சமயம், அவன் நடு உச்சி பிரித்து வாரிய தனது கேசத்தை வலது கையால் கோதி உயர்த்தியபோது, அவனது காய அடையாளத்தைக் கண்ட பூமா,
உங்கள் தலையில் உள்ள தழும்பு பற்றி எல்லாம் விரிவாக ஜீவிதா சொன்னவள்" என்றவள் தலையைப் பக்கவாட்டில் ஆட்டி தான் அவ்வாறு சொன்னது முறையோ என்று தன்னையே வினாவி, தன்னையே கண்டித்துக்கொண்டு தரையைப் பார்த்தாள்.

                பூமா கூறியதைக் கேட்ட அமிர், தான் லண்டனுக்கு வந்த தினத்தன்று  சொலிசிற்றர் நாகப்பனின் கந்தோரில் வைத்து ஜீவிதாவுக்குக் கூறிய சம்பவங்களை எல்லாம் அவள் பூமாவுக்குச் செல்லிவிட்டாள் என்று ஊகித்துக்கொண்டு, நெற்றியின் இருபக்கங்களையும் மூடி தோள்களில் முட்டியும் முட்டாமலும் அசைந்தாடிக் கொண்டிருந்த பூமாவின் கூந்தலைப் பார்த்தபடி,
உங்கள் கழுத்திலும் ஒரு காயம்.  விபத்தா?" என்று கேட்டான்.
இல்லை."
நான் தெரிந்து கொள்ளலாமா?"

                அந்தக் கேள்வி பூமாவின் சிந்தனைக்கு வெறியூட்டி, அவளைச் சூழ்ந்த அந்தகாரத்தை நோக்கி இழுத்தது. அதனால் உள்ளம் வெந்த பூமா,
நீங்கள் ஆண் மகன். உங்கள் காயத் தழும்பு வெளியே தெரிந்தாலும் அதனால் உங்கள் கலாச்சார கோலங்கள் மாசுபட மாட்டா. சமூகம் அதற்காகப் பரிதாபப்படுமே தவிர உங்களைத் துடக்குப் பிடித்தவராக நடத்தாது. ஆனால் ஓர் இளம் பெண்ணுக்கு ஒரு தவறான காயம் ஏற்பட்டால், அவளின் வாழ்க்கையை அன்றோடு காரிருள் சூழ்ந்து விடுகிறது. அதன் தாக்கம் எனக்குப் புரிந்த அளவுக்கு ஏனையவர்களுக்குப் புரியமுடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றாள்.

                பூமாவின் சொற்களின் அர்த்தத்தைத்  தெளிவாக உணரமுடியாத பொழுதிலும்,

மன்னிக்கவும் பூமா. நான் உங்கள் மனதை நோகக் கூடியதாக ஏதாவது  ...... " என்று இழுத்தபடி மீண்டும் அமிர் பூமாவைப் பார்த்தான். அவளது இடது கழுத்தின் காயம் ஊமைக் கதை கூறியது.

                பூமாவின் கண்களில் தீயின் பொறிகள் தெறிப்பது அமிருக்குத் தெரிந்ததோடு, அவளின் வதனத்தில் கொலை வெறியின் கோலங்கள் படர்வதாக அவனுக்கு ஒரு பிரமை. அப்பொழுது பூமா கடுகடுத்த குரலில்,

                “தமிழ் ஈழ விடுதலைப் போராளிகள் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற நடந்த பஞ்சமா பாதகங்கள் உங்களை வெகுவாகப் பாதித்திருப்பதாக ஜீவிதா சொன்னாள். அதற்கு மேலும் உண்டு. சேர் பொன்னம்பலம் இராமநாதன் காலம் தொடக்கம் தமிழர் பெருந்தலைவர் பெருமகன் அமிர்தலிங்கம் வரை யாழ்ப்பாணத்தில் பேணப்பட்டு வந்த அரசியல் தூய்மை, புனிதம் என்பன ஆயுதம் ஏந்திய கொலைகார காமவெறி பிடித்த மரநாய் இயக்கத்தவர்களின் பாராளுமன்றப் பிரவேசத்தால் அசிங்கம் ஆக்கப்பட்டுள்ளது. அப்பேற்பட்ட அசிங்கத் தலைன் ஒருவனும், அவனுடைய உதவியாள்  ஒருவனும் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரைக் கொன்ற கதை, மூன்று இளம் தலைகளைக் கொய்து புதைத்துவிட்டு உடல்களை மட்டும் கடலில் வீசிய கோரத்தனம், செய்த பாலியல் அட்டூழியங்கள், வாயிருந்தும் ஊமைகளாக நெடுந்தீவில் வாழும் மக்களுக்குத் தான் தெரியும்.
                அவ்வகையான ஒரு தலைவனின் மரநாய்க் கூட்டந்தான் இன்று, யாழ்ப்பாணத்தின் பெரிய மனிதர்களாக உள்ளனர். வெட்கம் நிறைந்த இந்த வரலாற்றை எந்த வரலாற்று ஆசிரியனாலும் மறைக்க முடியாது. ஒக்ஸ்போட் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் ரொயின்பீ ஆர்னோல்ட் ஜோசப் இப்பேற்பட்ட முண்டங்களை நாகரிகத்தின் கன்னக் கோல்கள் என்று முத்திரை குத்தியுள்ளார்.
                அந்த அயோக்கியர்களின் முண்டங்களிலிருந்து வெட்டி எடுத்த அவர்களது தலைகளை நகரச் சந்திகளில் நட்டுக் காட்சிக்கு வைத்துக் காறித்துப்ப வேண்டும் என்ற வெறி எனக்கு" என்று தலையை அசைத்துத் சினந்து வெம்பினாள். 

                அமிரின் நரம்பு வழியாகச் சீறிச் சென்று உச்சந் தலையை உலுக்கிய அவளின் சொற்கள், அவனை ஊமை ஆக்கியது. இத்தாலிய மிலான் நகரச் சந்தி ஒன்றில் சுட்டுப் போட்டிருந்த சர்வாதிகாரி முசோலினியின் தலையில் மக்கள் எச்சில் துப்பிய சரித்திர பாடக் காட்சி அவனது நினைவுக்கு வந்தது. அவனது முகத்தில் கேள்விக் குறிகள் தாண்டவமிட்டன. தன்னையே, தனது வாயையே பார்த்தவண்ணம் இருந்த அவளுக்குப் பதில் சொல்ல அமிருக்குச் சிறிது நேரம் பிடித்தது. அமிருக்கு ஓரளவுக்கு அவளின் காயப்பட்ட உள்ளத்தின் உணர்வு புரிந்தது. அவளை அமைதிப்படுத்த விரும்பி,

                “பூமா, உங்கள் உள்ளம் கடுமையாப் புண்படுத்தப் பட்டுள்ளது. நான் அதற்காக மிகமிக வருந்துகின்றேன். எனினும் பதிலுக்கு வன்முறையைப் பயன்படுத்தாமல் வேறு வழிமுறைகளில் அவர்களுக்கு நாம் தகுந்த பாடம் புகட்டவேண்டும்" என்று அமிர் கூறிய வார்த்தைகளால் அவளை அமைதிப்படுத்த முடியவில்லை.

                “நீங்கள் எனக்கு நடந்த மிருகத்தனமான சம்பவங்களைத் அறிந்தால் ..... " என்று தொடங்கியவள் வார்த்தைகளை நிறைவு செய்யாமல் நிலத்தைப் பார்த்தாள். அது அவள் தனக்கு நேர்ந்த அனர்த்தங்களுக்கும் அவலங்களுக்கும் நீதி கேட்டுப் பூமி தேவியிடம் முறையிடுவது போன்று தோன்றியது. 

                அச்சமயம் மேலே உள்ள ஒரு மரக் கிளையிலிருந்து ஒரு புறா போட்ட எச்சம் பூமாவின் தோளில் விழுந்து, அவளது மண் நிற சுரிதார் ஆடையை அழுக்குப்படுத்தியது. அமிர் தன் சாம்பல் கலர் டவுசர் பையிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து அந்த எச்சத்தைத் துடைத்தான். அவள் எதுவித உணர்ச்சியுமில்லாமல் அவன் செய்கையை அவதானித்தாள்.

                வாய் திறவாது மௌனியாகப் பூமா இருப்பதைக் கண்ட அமிர், அவளின் உள்ளக் குமுறலைத் தணிப்பதற்காக தமிழ் ஈழ விடுதலைக்குப் புறப்பட்ட சிலர் திசை மாறி, குணம் மாறி, கோலம் மாறி, வாழையடி வாழையாக வந்த கலாச்சார பாரம்பரியங்களைக் கொச்சைப்படுத்தி உடன் பிறப்புகளின் குருதியிலே வேள்வி செய்வார்கள் என்று ஐயப் பட்டிருந்தால், மக்கள் 'சோற்றுப் பொதியும் பணமும் பொன்னும் கொடுத்து அவர்களை வளர்த்து இருக்கமாட்டார்கள்" என்ற ஒரு கருத்தை முன்வைத்து விட்டுப்; பூமாவைப் பார்த்தான்.

                பூமா 'ஆம்என்று சொல்லாமல் தலை அசைத்துச் சிறிது நேரம் யோசித்துவிட்டு,
மரநாய் இயக்கம் இருக்கே, அந்த இயக்கப் போராளிகள் நெடுந்தீவிலே செய்த இரத்த வேள்விகள் அக்கிரமங்கள் - இப்போ நினைத்தாலும் இதயம் முறையோ தருமமோ என்று கதறுகிறது" என்று கூறியவள் தொடர்ந்து கூறுவதா இல்லையா என்று யோசித்தாள்.

                அமிர் ஏதோ மனதுள் கூறியபடி பூமாவைப் பார்த்து என்ன யோசிக்கிறீர்கள்? எனக்குப் புரிகிறது. சொல்லுங்கள்" என்று தூண்டினான். அவள் தனக்கு எதிரே சிறிது தூரத்தில் வெள்ளைக்காரப் பெடியள் சிலர், சிறுவர்களின் ஊஞ்சல்களுக்கு அப்பால் உதைபந்தாட்டம் விளையாடுவதைப் பார்த்து யோசித்தபின் தன் கதையைத் தொடர்ந்தாள்.

அந்தத் துர்ப்பாக்கிய சரித்திர காலத்தில் மரநாய் இயக்கந்தான் தீவுப் பகுதி முழுவதிலும் அதிகாரம் செலுத்தியது. ஒரு நாள் நள்ளிரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த சமயம் மரநாய் இயக்க ஒரு கறுவல் போராளி எங்கள் வீட்டுக்கு வந்து மாமாவுக்குக் கடும் வருத்தம் என்று அவசரப்படுத்தி அம்மாவை மோட்டார் சைக்கிலில் ஏற்றிக்கொண்டு போனான்.
                ஒரு மணிநேரம் கழித்து வாசலில் ஒரு ஜீப் சத்தம் கேட்டது. அம்மா திரும்பி வந்தவிட்டதாக எண்ணி நான் படுக்கையை விட்டு எழுந்து கதவைத் திறந்தேன்.
                ஓருவன் அம்மா அழைத்து வரச் சொன்னதாக என்னை ஜீப்பில் ஏற்றிக் கொண்டுபோய் ஆலங்கேணிப் பொட்டல் வெளியில் விட, அங்கு நின்ற மரநாய் இயக்கப் பெரிய மனிதன் ஒருவன் சுடலை அருகே உள்ள பாழடைந்த வீட்டில் வைத்துக் கதறக் கதற பலாத்காரமாக என் வாழ்க்கையைப் பாழாக்கி என் எதிர்காலத்தை அந்தகாரத்துள் உதைத்துத் தள்ளிவிட்டான். 

                அதன் பின்னர் அந்த ஜீப்பை ஓட்டி வந்தவன்  - இப்பொழுது லண்டனிலே படித்த பெரிய மனித வேசத்தில் வாழ்பவன் - என்னை வீட்டில் சேர்ப்பதாகச் சொல்லி ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்த பாதி வழியில் ஒரு பனை அடைப்புக்குள் இழுத்துச் சென்று என்னைப் பலாத்காரமாகக் கெடுத்தான் ........" என்று விக்கி விக்கி அழுதழுது கதை சொன்னவள், தனது செய்தியைக் கூறி முடிக்காமலே தொடர்ந்தும் பூமாதேவியைப் பார்த்தவண்ணமே இருந்தாள். 

                அமிரின் மனம் உடைந்து நொருங்கி அவனை அக்கினிக் கிடங்கில் பொசுக்கி  வதைத்தது. லண்டனில் வசிக்கும் அந்தக் காதகனின் பெயரை அறிய அமிர் ஆவல் கொண்ட பொழுதிலும் அவளிடம் கேட்பது முறையல்ல என்று எண்ணி மௌனமாக - சற்று அப்பால் ஒரு மரத்தின் ஓரமாக நெருங்கி அணைத்தபடி நின்ற வெள்ளைப் பெட்டையையும் பெடியனையும் ஒரக்கண்ணால் பார்த்தபடி இருந்தான். சிறிது நேரத்தால் பூமா கூறினாள்.

                “நான் லண்டனில் வசிக்கும் அந்த மிருகத்தைப் பழி வாங்கவேண்டும். அப்போதுதான் எனது எஞ்சிய வாழ் நாளாவது கொஞ்சம் வேதனைகுறைந்த நாட்களாக அமையும். நான் அந்த மிருகத்தின் குருதி சீறிப்பாய்வதைப் பார்க்கவேண்டும். அவனை நான் கட்டாரி கொண்டு குத்திக் கொல்லவேண்டும். என் கற்பைச் சூறையாடியவனைக் கொல்வதில் என்ன கொலைக் குற்றம் உள்ளது?" என்று கூறி முடித்ததும் தனது கைப் பையைத் திறந்து ஒரு பளபளவென்று மின்னிய பத்தங்குல கட்டாரியை வெளியே எடுத்து அமிருக்குக் காட்டினாள்.

                அமிர் மலைத்தான். பூமா காட்டிய கட்டாரியைப் பார்த்தபடி மௌனமாக இருந்தான்.

                “கனவான் வேசத்திலே லண்டனிலே வாழ்கிற அந்த மிருகத்துக்காகவே தகுந்த வேளை பார்த்து இந்தக் கட்டாரியைக் கொண்டு திரிகிறேன்" என்று ஆத்திரம் அலைமோதக் கூறிவிட்டு, அவள் மேலும் கீழும் தலையை ஆட்டியபொழுது அவளின் கண்கள் சிவந்து குளமாகி ஏதோ விபரீதமான கதை கூறின.

                'பெண் ஆனவள் பேதைதான். ஆனால் அவளின் பெண்மையின் சின்னத்தை அக்கிரமங்கள் பலி எடுத்தால் அதன்பின் விடிவில்லாத வேதனை நரகத்துள் வதையும் அவள் தீக்குழம்பைக் கக்கக் காலவேளை பார்த்திருக்கும் எரிமலையாகி விடுகிறாள். யாழ்ப்பாணத்தில் பலர் கக்காத எரிமலைகளாகவே மரணிக்கிறார்கள். வெங்கனலைக் கொட்டிப் பலி எடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சி பகர்கிறாள் பூமா,” என்று அமிர் தன்னுள் காரணம் கற்பித்துக்கொண்டு,
                மனித குலத்தின் கவனிக்கப்படாத கடமை ஒன்று தன்னை அழைப்பதாக அவன் எண்ணினான். தனது லண்டன் வருகையின் நோக்கத்தோடு பூமாவின் பாரத்தையும் சுமக்கத் திடசங்கற்பங் கொண்டான். ஆகவே அவசரப்படாமல்,
                “பூமா, அப்படியான அயோக்கியர்களை கொன்றால் ஒரு நிமிடத்தில் அவர்களது உயிர் போய்விடும். அவர்கள் செய்த பாவத்திற்குப் பலன் அனுபவிக்க மாட்டார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தாம் செய்த அதர்மத்துக்குக் கண்ணீர்விடச் செய்யவேண்டும். அது ஏனைய பாலியல் வன்முறையாளர்களுக்கும் ஒரு பாடம் கற்பிக்கும். நீங்கள் உங்கள் கட்டாரியை என்னிடம் தருவாதானால் நானே அந்த மிருகத்துக்குப் பாடம் கற்பிப்பேன்" என்று கூறிய அமிர் பூமாவின் வதனத்தைப் பார்த்தான்.

                அவள் வதனத்தில் சிறிது இறுக்கம் குறைந்து வருவது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவன் தேடிய அவளது புன்னகை அங்கு தரிசனம் கொடுக்கவில்லை.

                அவளுடைய கட்டாரி கைமாறியிருந்தது. தங்களுக்கிடையே நடந்த சம்பாசனையை ஜீவிதாவுக்கோ மற்றும் எவருக்குமோ சொல்வதில்லை என்ற ஏற்பாட்டோடு இருவரும் பிரிந்தனர்.

                பாரம் குறைந்தது போலவும், தனது பாரத்தைச் சுமக்க ஒரு வண்டி காத்திருப்பது போலவும் எழுந்த நினைவோடு பிளெசற் பூங்காவின் சந்தடி நிறைந்த சூழலைவிட்டு பூமா விடைபெற்றாள்.

                அதேவேளை அமிர் அந்த லண்டன் மரநாய் விலங்கை வேட்டையாடும் பொறுப்பைச் சுமந்துகொண்டு அவ்விடத்தை விட்டு நீங்கினான்.             

தொடரும்...

No comments:

Post a Comment