கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 12 - நீலக் கண் வீமன்
பல் கிடுகிடுக்கின்ற குளிர். அதனையும்
பொருட்படுத்தாமல் நதியா வீட்டுக் கோடிப்புறத் தோட்டத்தில் இருண்டுகிடந்த வானத்தைப்
பார்த்து முறையிட்டாள்: 'ஐந்து
நாட்களாகின்றன. அமிர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று மொட்டையாகச் சொல்கிறார்கள்.
ஏன் கைது செய்யப்பட்டார்? எங்கே
கைது செய்யப்பட்டார்? யாருமே
சொல்கிறார்கள் இல்லை. முருகா?” கண்களிலிருந்து
நீர் தாரை தாரையாக வழிய தோட்ட அந்தத்தில் உள்ள மேப்பிள் மரத்தைப் பார்த்தாள்.
அம்மரத்தின் வெற்றுக் கிளைகளில் அரும்பியிருந்த வசந்த காலக் குருத்துக்கள் அவளைப்
பார்த்து நான்கு வாரங்களின் முன்னர் பூப்பெய்திய குமரைப் போல ஒன்றும் புரியாமல்
விழித்தன.
லிவர்பூலில் அமிர் கைது செய்யப்பட்டு ஐந்து
நாட்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அவனைப் பற்றிய தகவல் எதுவும் கில்லாடி குழுவில்
எவருக்கும் தெரியாது. அவர்கள் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பது
நதியாவுக்கு வெளிச்சமாகியது.