Monday, 3 August 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 8 - 
திசை மாறும் குருவி

                சால்வை மூத்தானுக்கு நதியாவின் நடத்தைமீது சந்தேகம் எரிச்சல் பொறாமை. கில்லாடி வீட்டில் இல்லாத வேளைகளில் அவள் அமிருக்குச் செய்யும் இராசமரியாதையும், அவனோடு ஒட்டி நின்று சல்லாபம் செய்யும் நளினமும் பாங்கும் அவனின் உள்ளத்துக்கு உருப்போட்டது.

                “எனக்குத் தேநீர் வேண்டாம். சொலிசிற்றர் கந்தோருக்குப் போய் ஜீவிதாவை அவசரமாகச் சந்திக்க வேண்டும்" என்று அமிர் நதியாவுக்குக் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியதைத் தனது முதல்மாடி அறைக் கதவிடுக்கின் ஊடாக மறைந்திருந்து அவதானித்த மூத்தான், வெளியே சென்ற அமிர் வருகிறநேரத்தை எதிர்பார்த்து வரவேற்பறையில் இருந்து ரி.வியில் தமிழ்ப் படம் பார்ப்பது போலப் பாசாங்கு செய்தான் - அவன் வந்ததும் சின்ன வடிவு நதியா என்ன செய்கிறாள் என்பதை வேவு பார்க்கும் உள்நோக்கத்தோடு.

                 அழைப்பு-மணி கீதம் இசைத்த சத்தத்தைக் கேட்டு நதியா துள்ளிச் சென்று கதவைத் திறந்தாள். அவள் ஆவலோடு எதிர்பார்த்த அமிர், சொலிசிற்றர் நாகப்பனிடம் அலுவலை முடித்துக்கொண்டு வந்திருந்தான். அவள் தேடிய அந்தக் காந்தக் கவர்ச்சியும் களையும் அவனது முகத்தின் கறுப்புத் திரைக்குள் ஒளிந்திருந்தது அவளுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.

                “என்ன அமிர் அண்ணைமுகம் வாடியிருக்கு? சுகமில்லையா? பனடோல் தரவா" என்று கேட்ட நதியாவின் சிவப்பு சட்டையும் பிங்நிற பாவாடையும் அவன் கண்களை ஈர்த்தன. உடையை உற்றுப் பார்த்தபின்னர் பனடோல் வேண்டாம். தேநீர் தந்தால் போதும்" என்று சொல்லியபடி அமிர் வரவேற்பு அறைக்குள் செல்ல நதியா நகர்ஓடை வழியாகச் சமயலறைக்குப் போனாள். ரி.வி. ஓரமாக பளிச்சிடும் ஆளளவுயர குத்து விளக்னின் அருகேயிருந்த குங்குமப் பொம்மை வரவேற்பறையின் உள்ளே வரும் அமிரைப் பார்த்துக் கண் சிமிட்டியது.

என்ன தம்பி முகம் வாடியிருக்கு, என்ன விசயம்?" என்றான் அங்கு சோபாவில் இருந்த சால்வை மூத்தான்.
அமிர் ஒன்றும் பேசாமல் இன்னொரு சோபாவில் அமர்ந்தான். சங்கடமான நேரங்களில் அவன் அப்படித்தான் என்பது மூத்தானுக்குத் தெரியாது.
சொல்லு தம்பி அமிர். என்ன கஷ்டம் வந்தாலும் நான் இருக்கிறன்" என்றபடி சால்வை மூத்தான் அமிரின் முகத்தை உற்றுப் பார்த்தான்.
அமிர் ரி.வியின் ஓரமாகப் பிரகாசித்த குத்துவிளக்குகளைப் பார்த்தபடி மௌனம் சாதித்தான். 
என்ன பெடியா பேசாமல் இருக்கிறாய்?" மீண்டும் சால்வை மூத்தான் கேட்டான்.
என்னுடைய அகதி விண்ணப்பத்தை நிராகரித்துப் போட்டார்கள்."
மூத்தான் ஆஊவென்று சிரித்துவிட்டுச் சொன்னான்.
அகதிகளுக்கு உது ஒன்றும் புதிதல்ல தம்பி. குடிவரவு அலுவலகம் அகதி விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டு உண்மையான அகதிக்கும் பொய்யான அகதிக்கும் ஒரே காரணந்தான் சொல்லும்."
ஏன் அப்படிச் செய்கிறார்கள்?" என்று கேட்டபடி அமிர் மூத்தானது தலை உச்சியில் குத்திநின்ற முடியின் கோலத்தைப் பார்த்தான்.
உப்படிக் கரைச்சலும் தொல்லையும் கொடுத்தால் அகதி அந்தஸ்து கேட்டுவாற சனத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற தப்புக் கணக்கு."
மூத்தான் அண்ணை, நாடு கடத்தப் போகிறார்கள். அப்பீல் செய்ய வேண்டும். சொலிசிற்றர் நாகப்பன் 700 பவுண் கேட்கிறார். என்ன செய்கிற தென்று தெரியவில்லை" என்று இரண்டு நாள் உணவு சாப்பிடாதவன் போல அனுங்கினான். 
தம்பி அமிர், ஒன்றுக்கும் பயப்படாதையும். எல்லாவற்றுக்கும் நான் மூத்தான் இருக்கிறன். கில்லாடி அண்ணை இருக்கிறார்."
நீங்கள் உதவுவீங்களோ?"
வேறை யார் உமக்கு இருக்கினம்?"
மூத்தான் அண்ணை நான் உங்கள் உதவியை என்றும் மறக்கமாட்டேன்." கடன் தரப்போகிறான் என்ற நினைப்பில் அமிர் கூறினான்.
இன்றைக்கே நீ ஒரு பகுதிக் காசை உழைக்கலாம்."
சொல்லுங்கோ அண்ணை" ஏமாற்றத்தோடு அமிர் கேட்டான்.
நாங்கள் எல்லாம் உங்கை எங்களின் ஆட்கள் செய்கிற இழிய எடுபிடி வேலைகளுக்குப் போகிறதில்லை. டாக்டர், எக்கவுன்டனைத்தவிர மற்ற எல்லாப் படித்தவையும் சின்ன சின்ன வேலைதான், படிக்காதவையும் அதே வேலைதான். பெரிய வேலை என்றால் கல்லாவிலை - பெரிசா ரில் என்று சொல்லுவினம் - நின்று பற்றுச்சீ;ட்டுப் போட்டுப் பணம் வாங்கிறதுதான். பத்து மணித்தியாலம் பதினைந்து மணித்தியாலம் என்று பம்பரமாக வேலை செய்யவேண்டும். இலங்கையில் மாதிரி லண்டனில் ஆறஅமரத் தூங்கியெழுந்து காசு உழைக்க ஏலாது. வேலைக்குப் போனால் ஆளை முறிச்சுப் போட்டுத்தான் விடுவான்கள்."
என்ன வேலை அண்ணை?"

                “பெடியா, பொழுதுபடுகிற நேரம் ஒரு சின்ன வேலை செய்யவேண்டும். என்னுடைய வேலையை உனக்குத்தருகிறன். ஒரு மணித்தியாலம் போதும். பேருந்திலே போய்க் கொடுத்திட்டு வருகிறதுதான். நான் பேருந்திலே கூடவருகிறன். அந்த வேலைக்குக் கில்லாடி அண்ணை 150 பவுண் தருவார். அதிலே என்னுடைய வேலையை உனக்குத் தந்ததற்கு எனக்கு 50 பவுண். 100 பவுண் உனக்குக் கிடைக்கும். பொழுதுபட்டாப்போல போக ஆயத்தமாக இரு. நான் வெளியாலே போயிட்டு வாறன.;"

                மூத்தான் அறையை விட்டு வெளியேறினான். அமிர் மௌனமாக குங்குமப் பொம்மையைப் பார்த்தான். அது கண் சிமிட்டியது. 

                வெளிக் கதவோரம்வரை போன சால்வை மூத்தான் திரும்பி வந்து, வெளியில் வீதியில் போவோரைப் பார்க்கக் கூடியதாகக் கண்ணாடி யன்னல் திரைச் சீலையை சிறிதே நீக்கிவிட்டுத் திரும்பும்போது.
தம்;பி டே, சரியாக ஐந்தரை மணிக்கு ஆயத்தமாகவிரு. போக்கு வரத்து நெரிசலாக இருக்கும். பொலிஸ் கெடுபிடி இராது" என்று கூறியவாறு வெளிக் கதவைத் திறந்து சென்ற அவனை அப்போது சமயலறைக்குச் செல்லும் நகர்ஓடையில் நின்ற நதியா அவதானித்தாள்.

                காது மேல் மட்டத்துக்குக் கீழே உள்ள மயிர் மீண்டும் புதிதாக மழிக்கப்பட்டு இருப்பதையும், தலையின் உச்சிப் பகுதியில் இருந்த மயிர் நட்டுக்கொண்டு நின்றதையும் கவனித்த நதியா வாயைப் பொத்திச் சிரிக்க அவளது போனி ரெயில்எழுந்து விழுந்து குதித்தது. அவளின் கையில் இருந்த புலிக்குட்டிப் பொம்மை நசுங்கி உறுமியது.

                அமிருக்கு வேறு மார்க்கம் தெரியவில்லை. கில்லாடியின் பாதாள உலக கூட்டாளிகளோடு ஒட்டுவதைப் பற்றிய எண்ணம் அவனை ஆட்கொண்டது.

                சால்வை மூத்தான் வெளியே போன கையோடு நதியா ஒரு கோப்பை தேநீரோடு வரவேற்பறைக்குள் அடிபதித்து அமிரின் முன் குனிந்து நின்று கூறினாள்,
இதைக் குடியுங்கள். இஞ்சி போட்ட தேநீர். சூடாற முதல் குடியுங்கோ."
நதியா, என்னால் உனக்கு வீண் சிரமம்."
அதுவொன்றும் சிரமமில்லை."
                நதியாவுக்கு இப்பொழுது எதுவும் சிரமமாகவே இல்லை என்பது மூத்தானுக்கு விளங்கிய அளவுக்குக் கில்லாடிக்கு விளங்கவில்லை. அமிர் அந்த வீட்டுக்குப் போன நாள் தொடக்கம் அவள் நடைமுறைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதையும், இப்பொழுது பின் தோட்டத்தில் மினைக்கெட அவளுக்கு நேரமே இல்லாததையும் மூத்தான் அவதானித்து வைத்திருக்கிறான் என்பது நதியாவுக்குத் தெரியாது.

                அமிர் தேநீர்க் கோப்பையைக் கையில் தாங்கியபடி மேலே சீலிங்கில்தொங்கிய பிரமாண்டமான மின்சார விளக்குக் கண்ணாடிக் குமிழ்க் கொத்துக்களைப் பார்த்தான்;

                “அமிர் அண்ணா, ஏன் தேநீரைக் குடியாமல் வைத்திருக்கிறீர்கள். குடியுங்கள்" என்று கூறிய நதியா அவனின் நடு உச்சி பிரித்து வாரிய முடியின் அழகில் சொக்கிப்போயிருந்தாள். அவள் அவனின் எடுப்பான கிளி மூக்கபை; பார்க்கும் வேளை அவனது மூக்கின் அழகில் மயங்குவதும், அவன் கண்களைப் பார்க்கும் வேளை அவற்றின் கவர்ச்சிக்குள் தன்வயம் இழப்பதும், இப்படியே ஒவ்வொரு அங்கத்தையும் ஓவியத்தைப் பார்ப்பதுபோல மாறி மாறிப் பாhத்துச் சொக்குவது இப்பொழுது அவளால் தவிர்க்க முடியாத சுகமான கணங்களாக மாறியிருந்தன. அந்த நினைவுகளுக்கு மத்தியில் இடைக்கிடை கில்லாடிக் கிழத்தின் மொட்டந் தலையும், தலை அடிவாரக் கத்தை மயிரும் மனக் கண்களில் புகுந்து அவளுக்கு அருவருப்பு ஊட்டின. 

                அதே வேளை வீட்டுக்கு வெயியே வாசற் கதவோரம் உள்ள யன்னலடியில் இருந்த குப்பை வாளி மறைவில் நின்ற சால்வை மூத்தான், கண்ணாடியினூடாகத் தங்களை வேவு பார்த்துக்கொண்டு நிற்பதை நதியாவோ அமிரோ அவதானிக்க வில்லை. அமிருக்கு எதிரே மிகமிக நெருக்கமாக நதியா நின்றாள். சால்வை மூத்தானுக்கு நதியாவின் முதுகுதான் தெரிந்தது. அமிர் தெரிய வில்லை.
உவ்வளவு நெருக்கமாக நின்று என்ன பண்ணுறாள் நதியா? ஓ! அந்த வேலை ………." என்று யன்னலுக்கு வெளியே நின்ற சால்வை மூத்தான் கற்பனை செய்தான்.

                அமிர் தேநீர் குடித்து முடிந்ததும், “என்ன முகம் வாடியிருக்கு, சுகமில்லையோ என்று யோசித்தேன். நீங்கள் சால்வை மூத்தானோடு கதைத்தது எல்லாம் எனக்கு நல்லாகக் கேட்டது."
சொலிசிற்றர் கனக்க காசு கேட்கிறார்."
“700 பவுண்தானே. உந்தக் கூட்டத்தை நம்பி உவையோடு வேலைக்குப் போகாதையுங்கோ. உவை செய்கிற தொழில் தெரியுந்தானே?"
போகாமல் என்ன செய்கிறது?"
பொலிசிலே பிடிபட நேர்ந்தால் உங்களை மாட்டிவிட்டு உவர் தப்பிவிடுவார்."
நான் அப்படி நினைக்கவில்லை. மூத்தான் அண்ணையைப் பார்த்தால் நல்லவராகத் தெரிகிறது."
உவற்றை பேச்சை நம்பினால் அரோகராத்தான். போன வருசம் வரணி சங்கீத வாத்தியார் துரையின் மகன் உவரோடு மிடிள்செக்ஸ் நகருக்கு காரில் போனவர்."
உவையின் தொழிலுக்கோ?"
இல்லை. ஊர் காட்டவென்று கூட்டிப் போனவர். போன பாதையிலே பொலிஸ் மறித்துச் சோதனை செய்த பொழுது டாஸ்போட்டில்இருந்த ஒரு பொதியை எடுத்து விரித்துப் பார்த்தது. பொதியில் என்ன இருந்தது தெரியுமே?"
தெரியாது."
ஹெரோயின் போதைப் பொருள்."
பிறகு என்ன நடந்தது?"
வழமையைப் போலத்தான். பொலிஸ்காரன் சாரதி ஆசனத்திலே இருந்த பச்சைத் தொப்பியும், பச்சைக் கழுத்துப்பட்டியும் தூயவெள்ளைச் சேட்டும் அணிந்த மூத்தானிடம் அது யாருடைய பொதி என்று கேட்டது. மூத்தான் என்ன சொன்னவர் தெரியுமோ?"
சொல்லு நதியா."
முன் ஆசனத்தில் தனக்கு அருகில் இருந்த சங்கீத வாத்தியாரின் மகனைக்காட்டி உவருடையதுஎன்றவர்."
அந்தப் பையன் உண்மை சொல்லவில்லையா?"
சொல்லாமலா விட்டிருப்பார்? பொலிஸ் மூத்தான் சொன்னதையே நம்பியது."
இப்போ எங்கே அந்தப் பயைன்?"
சிறையில்."

                “நதியா, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதுதான் ஒரே யோசனையாயிருக்கு. ஜீவிதாவைக் கடன் கேட்கலாம் என்று யோசிக்கிறன். அவவும் உவ்வளவு காசு கையிலே வைத்திருக்கிறாவோ என்னவோ தெரியாது" என்று சொல்லிமுடிய முன்னர்,

அமிர் அண்ணா, அங்கை இங்கை என்று காசுக்கு அலையாதையுங்கோ.  யார் என்ன சாட்டுச் சொல்லுவினமோ தெரியாது. கையிலே இருந்தால்தானே தருவினம்" என்று கூறியபடி நதியா ஒரு உறையை அவனது கையில் திணித்தாள்.
என்ன? கடிதமா?"
திறந்து பாருங்கள்."
அமிர் திறந்து பார்த்தான். 50 பவுண் தாள்கள் பதினெட்டு அவனைப் பார்த்துச் சிரித்தன.

                அமிர் நதியாவின் கருணைக்குள் திக்குமுக்காடினான். அவனுக்கு எதுவுமே பேச வரவில்லை. அவன் எதிரே ரி.வி. ஓரம் இருந்த ஐந்தடிவுயர குங்குமப் பொம்மையைப் பார்த்தான். அது கண்ணைச் சிமிட்டியது.

                நதியாவின் சுந்தரச் சின்ன வட்ட முகத்தை உற்றுப்பார்த்தான்.  அவளின் சிரிப்பு அவளது கண்களிலிருந்து மலர்கிறதா அல்லது வாயோரக் கன்னங்களிலிருந்து வழிகிறதா என்பது புரியாமல் அசந்துபோயிருந்தான்.

ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? அமிர் அண்ணா நான் காசு தந்தது மூன்றாம் ஆளுக்குந் தெரியக்கூடாது. ஜீவிதாவுக்கும் சொல்ல வேண்டாம்" என்று சொல்லியதைக் கேட்ட அமிர் திடுக்கிட்டு
சரி நான் சொல்ல வில்லை. இந்தக் காசாலே உங்கள் குடும்பத்துக்குள் வீண் சண்டை சச்சரவு வருமோ என்று பயமாயிருக்கிறது. கில்லாடியும் பொல்லாத மனுசன்" என்று கூறிவிட்டு நதியாவின் பதிலை ஆவலோடு ஏதிர்பார்த்தான்.
                மந்திர சக்தி நிறைந்த நதியாவின் புன்னகையில் மூழ்கி வெளியேறிய அமிருக்கு உள்ளுர ஒரு பயம். கில்லாடியின் பணத்தைத்தான் அவனுக்குத் தெரியாமல் தனக்குத் தந்ததாக எண்ணி நதியா, நான் கேட்டதுக்கு மறுமொழி சொல்லாமல் ஏன் சிரிக்கிறாய்?" என்றான்.

                நதியா நிதானமாகப் பதில் சொன்னாள். அது என்னுடைய பணம். எனக்கு வீட்டு வாடகையாக கிழமைக்கு 110 பவுணும், வாழ்க்கை உதவிப் பணமாக கிழமைக்கு 45 பவுணும் பிரிட்டிஷ் அரசு தருகிறது. நான் அதை அப்படியே வைத்திருக்கிறேன். அது கில்லாடிக்குத் தெரியும். ஆனால் அதை நான் என்ன செய்கிறேன் என்று கேட்பதில்லை. அம்மாவுக்கு யாழ்ப்பாணம் அனுப்புவதாக நினைக்கிறார்" என்ற நதியாவின் வார்த்தைகளைக் கேட்டபின்னர்தான் அமிருக்குச் சுமை குறைந்தது மாதிரி இருந்தது.

நதியா, நான் உன்னுடைய காசை உழைக்கத் தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடித்துவிடுவேன்" என்ற அமிரின் வார்த்தைகளைக் கேட்ட நதியா
அதற்காக எங்காவது போய் மாட்டுப்படாதீர்கள். அவசரம் வேண்டாம். இன்சூரன்ஸ் நம்பர்வந்ததும் வேலை செய்யலாம். உங்கள் வழக்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கிற அன்றைக்கு வழக்குப் பேசுகிற பரிஸ்ரருக்கு கொடுக்க, சொலிசிற்றர் 1200 பவுணுக்கு மேலே கேட்பார். நீங்கள் எங்கேயும் போய் வாய் நனைக்க வேண்டாம். நான் தருகிறேன்" என்று நதியா கூறியதைக் கேட்ட அமிரின் முகம் தொட்டாச் சிணுங்கி போலத் திடீரென மாறியது. 
                “சொலிசிற்றருக்கு வழக்குப் பேசத்தானே 700 பவுண் கொடுக்கப் போகிறேன். அவர்தானே நீதிமன்றத்தில் பேசப்போகிறார்? ஏன் மீண்டும் காசு கொடுக்க வேண்டும்?" என்று கொஞ்சம் படபடப்போடு அமிர் நதியாவை வினாவினான்.

                அவன் கூறிய சொற்களைக் கேட்டு நதியா தனது தலையை ஆட்டி மீண்டும் உரத்துச் சிரித்தபொழுது அவளின் போனி ரெயில்துள்ளியது, தொங்கிட்டான்கள் நர்த்தனமிட்டன, மூக்குமின்னி சிரித்தது. 

அமிர் அண்ணாஉங்களுக்கு லண்டன் பிடிபட இன்னும் கன நாள் இருக்கிறது. லண்டனைப் புத்தகத்திலே படித்துப் புரியேலாது. பட்டு அனுபவித்துத்தான் லண்டனைப் புரியவேண்டும். சொலிசிற்றர் நாகப்பன் லண்டன் நீதிமன்றப் பக்கம் தலை காட்டேலாது. உவருடைய வேலை லண்டன் நீதிமன்றங்களில் வழக்குப் பேசுகிற பரிஸ்ரருக்கு ஆள் பிடித்துக் கொடுக்கிறதுதான். யாழ்ப்பாணத்திலே சட்டத்தரணிகளுக்குப் பின்னாலே கைகட்டிக்கொண்டு சில லிகிதர்கள் வேலை பார்ப்பினமே அப்பிடி வேலைதான் செய்கிறார். பரிஸ்ரருக்குக் கொடுக்கத்தான் 1200 கேட்பார். உண்மையிலே பரிஸ்ரருக்கு கொடுக்கிறது 250 பவுண்தான். மிச்சத்தை சொலிசிற்றர் நாகப்பன் அமுக்கிவிடுவார்" என்ற வார்த்தைகளைக் கேட்ட அமிர் உசாராகினான்.  
அப்படியானால் நானே ஒரு பரிஸ்ரரை ஏற்படுத்தினால் என்ன?" என்றான் அமிர்.
அது முடியாதே. சொலிசிற்றர் மூலந்தான் பரிஸ்ரரைப் பிடிக்க வேண்டும். அதுதான் லண்டன் சட்டம்" என்ற பதிலைக் கேட்ட அமிர் பெரிய பிரிட்டனில் இப்படி ஒரு சின்ன நடைமுறையா வென்று அதிசயப்பட்டான்.


                தற்செயலாகத் திரும்பிய நதியா, கண்ணாடி யன்னல் ஊடாக சால்வை மூத்தான் தங்களைப் பாhத்துக்கொண்டு நிற்பதைக் கண்டு துணுக்குற்றாள்.

தொடரும்...

No comments:

Post a comment