Friday, 7 August 2015

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

தொகுப்பில் உள்ள சிறுகதைகளை முன்னிட்டு எழுத்தாளர்கள் / வாசகர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள்

விளக்கின் இருள்
நவீன உலகம் சுயநலமாக மாறிவிட்டதையும், நவீன மனிதன் அதிலும் அதிக சுயநலமிக்கவனாக வாழ்ந்து வருவதையும், ஒரு நவீன நகரப் பின்னணியில் விவரிக்கும் கதை. பிரச்சாரம் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும், எவ்விடத்திலும் அதன் நெடி அடிக்காமல் மனதின் அடிவாரத்தில் கூரான ஊசிகளைச் சொருகிச் செல்கிறது. ஒரு நகரின் பெருந்துயரை இதைவிட அழுத்தமாகச் சொல்லிவிட முடியாது என்ற எண்ணம் வருகிறது இறுதியில்.
இது ஒரு மிகத் தேர்ந்த கதை சொல்லியின் கதை  
-  பாலு மணிமாறன்,  சிங்கப்பூர், ஜனவரி 2014.
இரண்டு சம்பவங்கள்
புதுசு இதழில் வந்த அந்தப் படம் புறாவை இரும்புக் குண்டில் கட்‌டியது தான் என்றாலும், தரம் குறைந்த நியூஸ் பிறின்ற்றில் தெளிவற்ற கறுப்பு வெள்ளைப் பதிப்பில் அது குண்டும் புகையுமாகவும் தோற்றம் கொண்டிருந்தது. "நாடகம் நடத்த்துவியளோ" தொடப்பட்டிருந்தாலும், இன்னமும் மேலே போயிருக்கலாம். பேராதனைத் தமிழ்ச் சங்கத்‌தினால் நடாத்தப்பட்ட நாடகங்களை வழங்கிய திருவிழா நாடகக் குழுவும் காங்கேசன்துறைக் கல்வி வட்டார மாணவர்களுடன் ஹில்டாவில் தங்கியிருந்ததும் இவர்களும் இவர்களது அறைகளும் அடையாளம் காணப்பட்டமைக்கு ஒரு பின்னணி, இல்லையா? பேராசிரியர் சிவசேகரத்துடன் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஆஷ்லி ஹல்பே மிகவும் அனுசரணையாக இருந்தார் என்பதையும் பதிவு செய்தல் பொருத்தம்.
-          பாலா விக்னேஸ்வரன், சிட்னி, முகநூல் (facebook) மார்கழி 1, 2013.


காட்சிப்பிழை
தற்காலத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்கள் தேடியது அநேகம். வீடு, தொழில், வருமானம், வாகனம் இப்படி அனைத்தும் தேடிவிட்டு சொந்த ஊரிலில்லாத வசதி வாய்ப்புகளையெல்லாம் பெற்றபின்பும் தொலைத்துவிட்ட ஒரு விடயம் இருக்கிறது. எங்கே...சொல்லுங்கள்...? நாம் தொலைத்த  பல விடயங்களில் மிகவும் முக்கியமானது.
மகிழ்ச்சி.
பாலகிருஷ்ணனும் தெமட்டகொட அங்கிளும் மாத்திரமல்ல இக்கதையில் வருபவர்கள் அனைவரும் தொலைத்துவிட்ட மகிழ்ச்சி பற்றித்தான் காட்சிப்பிழை சொல்கிறது. மகிழ்ச்சி தொலைவதற்கு அடிப்படை ஆணவம். அதாவது ஈகோ.
காட்சிப்பிழை பொருத்தமான தலைப்பு. மனிதர்களின் உள்ளத்தை உளவியல் சார்ந்து எழுதுகிறார். இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் எந்த நாட்டிலும் எந்த இனத்திலும் நடக்கலாம். இக்கதை இலங்கை வாழ்வுக்கும் புகலிட வாழ்வுக்கும் முடிச்சுப்போடுகிறது. வந்தவர்கள் தமது உடை உடைமைகளுடன் மட்டும் வரவில்லை ஈகோ சார்ந்த இயல்புகளுடனும் வருகிறார்கள் என்ற தொனி இக்கதையில் கேட்கிறது  லெ.ருகபூபதி (மெல்பன் சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வு, 07.12.2013)

வேறுபட்டதோர் மனநிலையை நுட்பமாகச் சொல்லும் சிறுகதை – நாஞ்சில் நாடன் (வல்லமைச் சிறுகதைகள், அக்டோபர் 2013)

நாடு இழந்தாலும், வாழ்க்கை சிதைந்தாலும், மனித சுபாவம் மாறுவதில்லை. அது நாடு கடந்தாலும், வாழ்க்கையின் கடைசிப் படியில் இருந்தாலும், வெறுப்பையும் தன் ego- ஐயும் துறக்கத் தயாராயில்லை. இது வாழ்க்கையின் யதார்த்தம். மன்னிக்கத் தயாராக இருக்கும் அமீரும், தன்னை அவமானப்படுத்திய மாமாவை மன்னிக்கத் தயாராக இல்லாத பாலாவும், அப்பாவுக்காகவாவது எல்லாத்தையும் மறந்து ஒரு வார்த்தை சொல்லலாமே என்னும் செல்வியும், மரணப் படுக்கையிலும் தன் வீராப்பை மறக்காத தெமெட்டகொட மாமாவும் அவரவர் இயல்புப்படி நம் முன் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அனாவசிய வார்த்தைகள் இல்லை. செயற்கையாக சித்தரிக்கப்பட்ட லட்சிய நோக்கு இல்லை. உணர்ச்சிக் கொப்பளிப்பு இல்லை. மனித சுபாவம் சிலரது மாறுவதே இல்லை, சூழலும் வாழ்க்கையும் என்ன மாற்றம் பெற்றாலும். சிக்கனமான எழுத்து. இயல்பான மனிதர்கள் – வெங்கட் சாமிநாதன் (வல்லமை, செப்ரெம்பர் 2012)

ஒரு கடிதத்தின் விலை
இடையிடையே நகைச்சுவையுடன் மிளிர்ந்தாலும் இறுதியில் கண்களில் நீரை வரவழைத்தது. இலங்கைவாழ் தமிழ் மக்களின் துயரமும், துன்பமும் நாளடைவில் மறைந்துவிடாமல் நினைவூட்ட இது போன்ற கதைகளே உதாரணம். பிறந்த மண்ணை விட்டுத் தொலைதூரம் சென்றாலும் அம்மண்ணின் மைந்தர்கள் படும் அவலம் ஆறாத ரணமாக ஆழ்கடல் நீரோட்டம் போல உறுத்திக் கொண்டே இருக்கிறது – சுபத்ரா பெருமாள், கலிஃபோர்னியா (தென்றல், ஜூலை 2012)

சேர்ப்பிறைஸ் விசிட்
சிரித்துச் சிரித்து வயிறே புண்ணாகிவிட்டது. அந்தப் பெண்மணி நம்மிடையே உலவும் பலரின் உருவமாகத் திகழ்கிறாள் – அம்புஜவல்லி தேசிகாச்சாரி (தென்றல், பெப்ரவரி 2012)

பறக்காத பறவைகள்
எழுத்துநடை அருமை. பல வரிகள் மனதில் வலியுடன் இறங்கியது,
குறிப்பாக... சொந்த நாட்டை விட்டிட்டு வந்திட்டோம். அப்ப இருந்த சோகத்தை விடவா? இனி எங்கை போனால்தான் என்ன! போகக்கூடிய இட்த்துக்குப் போக வேண்டியதுதான்பறக்காத பறவைகள் நிச்சயமற்ற வாழ்க்கையின் சோக வரிகள் தேமொழி (திண்ணை, பெப்ரவரி 1, 2013)

கற்றுக் கொள்வதற்கு
புலம்பெயர் அனுபவத்தின் வித்தியாசமான ஓர் அத்தியாயத்தைக் கற்றுக் கொள்வதற்கு வழி சமைத்திருக்கின்றது... வாசகர்களுக்கு அந்நியமான சூழலில், புரியாத மொழி பேசும் பாத்திரங்களுடன் கதையினை மிகவும் அவதானமாகவே நகர்த்திச் சென்றுள்ளார் இக்கதாசிரியர், அ.முத்துலிங்கம் பாணியில்... மொழி மீதான அக்கறையுடனும் மிகுந்த கலைப்பிரக்ஞையுடனும் புதிய களத்தில் புதிய அனுபவங்களைப் பெய்தவாறே சுதாகர் கதை கூறும் முறைமை வாசகர்களை வியக்க வைக்கின்றது... இத்தகு வியப்பிலாழ்த்தும் அந்நியமான அனுபவங்களைப் பதிவு செய்வதில்தான் புலம்பெயர் கவனம் பெறுவதோடு முக்கியத்துவமும் பெறுகிறது புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் (தினக்குரல், 04.10.2009)

கதை கற்றுக்கொள்ளவேண்டிய கதை. எமது நாட்டிலும் சுமுகம் ஏற்படின் நம்மவர் இதையே செய்ய வேண்டும். இப்போது முடியாது. கருவுக்கு அப்பால் கதையின் உத்தியும் நன்று. எனினும் கதையோட்டம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் ச.முருகானந்தன் (வன்னியன், ஞானம், பெப்ரவரி 2008)

எதிர்கொள்ளுதல்
இன்றைய ஈழமக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை – அடங்கிய குரலில் – ஆனால் மிக நுட்பமாகச் சொல்லும் அருமையான கதை. எழுத்து நடையும் உறுத்தாமல் கதையை நிகழ்ச்சிப் போக்கில் கொண்டு சென்ற உத்தியும் அருமை. படித்து முடிக்கும்போது முற்றுப்புள்ளியாக ஒரு சொட்டுக் கண்ணீர் விழுந்தது என்பதைவிட வேறென்ன நான் சொல்ல – நா.முத்து நிலவன் (த.மு.எ.ச)

தாய் ஸ்தானத்தில் இருந்து ஒரு குடும்பத்தையே ஆளாக்கிய அக்காவைப் பற்றிய தம்பியின் நனவோட்டமாக விரிகிறது. அந்நினைவோட்டம் சகோதர பந்தத்தை அது சார்ந்த உறவுப் பின்னலை முன்வைப்பதோடு ஈழத்தமிழர் வாழ்வின் பலதரப்பட்ட இருப்பியல் சிக்கல்களை, புலம் பெயர்ந்து ஓடும் அவலங்களை, புற்றுநோய் வந்தும் புலம் பெயர்ந்து ஓட மனமின்றிச் சொந்த மண்ணிலேயே மடியும் சோகங்களை... இவ்வாறு பலவற்றையும் முன் வைக்கிறது. சிறுகதைக்கான திரையில் ஒரு நாவலுக்கான சம்பவங்கள் விரிந்து கொண்டு செல்வதைப் போன்ற பிரமையை அச்சிறுகதை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிடுவதில் தவறில்லை – எம்.ஏ.சுசீலா ‘எச்சங்கள்சிறுகதைத் தொகுப்பு விமர்சனத்தில் (sify tamil , March 2008)

இலங்கைத் தமிழர் வாழ்வை, நம் மனம் நெகிழச் சொல்கிறது. வாசித்து முடித்த பின்னரும், அக்கா கதாபாத்திரம் நம்மோடு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வு நீடிக்கிறது – ச.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், த.மு.எ.ச, 2007)

யுத்தம் என்பது நமக்கு அருகே நடக்காதவரை மிகச் சுவாரசியமான விஷயமேஎன்பார் பெர்ட்ரண்டு ரஸ்ஸல். இலங்கையின் நீண்ட கொடூரமான உள்நாட்டுப் போர், சுவாரசியத்தையும் கடந்த சாதாரண விஷயமாகிப் போய்விட்டது, தமிழ்நாட்டின் பெரும்பாலான தமிழர்களுக்கு. அந்தநாட்டுத் தலைநகரில் இருந்து, அந்த நாட்டுக் குடிமக்கள், தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக விரட்டப்பட்டார்கள். அதுகூட நமக்கு உறைக்கவில்லை. மனிதமனம் மரத்துப் போனதாகத் தெரிகிறது. ‘எதிர்கொள்ளுதல்கதையின் மூலம் சூகை பிடிச்ச மனசைத் தேய்த்து விடுகிறார் படைப்பாளி – அருணன் (தலைவர், த.மு.எ.ச, 2007)

விளக்கின் இருள்
முதலில் முதல் பரிசு பெற்றதற்கு நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இதனை இங்கு பிரசுரம் செய்ததன் மூலம் பலரும் அறியும் வாய்ப்பும் கிட்டியது.தமிழ் முரசு அவுஸ்திரேலியாவுக்கும் இச் சந்தர்ப்பத்தில் நன்றி.
நல்ல கதைக்கரு. புலம்பெயர்ந்தோரின் தொங்கு நிலைகதைகளில் இருந்து எழுத்திலக்கியம் அடுத்த படி நோக்கி நகருவதை புது நிலத்தில் வேரூன்றி அது துளிர்க்கத் தொடங்குவதை காண மகிழ்ச்சியாய் பூரிப்பாய் மனநிறைவாய் இருக்கிறது.

இடை இடையே விவரண வாடை கதைப்போக்கை சற்றே சோர்வுறச் செய்வது போலிருந்தாலும் முற்றிலும் புதிய தொரு கரு முடிவு வரை வாசகரை களைப்பில்லாமல் தன்னோடு அழைத்துச் செல்கிறது.

சுதாகர் என்ற கதாசிரியர் ஒரு கருவை இந்த விதமாக பிரசன்னப்படுத்தி இருக்கிறார். இதே கதைக்கரு இன்னொருவருக்கு சூழல் மாசடைவதன் எதிர்காலம்குறித்துச் சொல்வதைப் போலவும்; வேறு சிலருக்கோ பிரபஞ்சச் சட்டங்கள் மெளனமாக அமுல்படுத்தப்படுவதன் சூட்சுமம்தெரிவதைப் போலவும் தோன்றலாம்.
இவ்வாறான சிந்தனையைக் கிளர்த்துவது இந்தக் கதையின் வெற்றியாகவும் அமையலாம். 

கதாசிரியர் சுதாகருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.மேலும் பல கதைகளை தருவீர்களாக!
மணிமேகலா – தமிழ்முரசு/ 13.01.2015

இன்று அதிகாலை உங்கள் *விளக்கின் இருள்* சிறுகதை படித்தேன்.மானிட வாழ்வின் பல நியாங்களை,நியமங்களை கதை பேசுவதோடு தொய்வற்று நகர்கிறது.மீதேன் வாயுவைப்பற்றியும், மிருகங்களின் சரணாலயங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றமடைவது பற்றியும்,மலையில் கட்டிய வீடு, பண நட்டம் இப்படி பலவற்றை கதை சொல்லியுள்ளது. இந்த மீதேன் வாயு இலங்கையில் சதுப்பு நிலங்களின் ஏற்படுவது.அதைப்பார்த்து கொள்ளிவால் பேய் என நம்பப்பட்ட காலமும் உண்டு.டாக்டர் கோவூரின் கோர இரவுகள் நூலில் இவற்றுக்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்த்தது.அத்தோடு மலையில் வைத்தியசாலை,வீடுகள் கட்டுவது சுத்தமான காற்றோட்டத்தை (பிராணவாயு சுவாசிக்கும் அடிப்படையில்) என பல விஞ்ஞான விளக்கங்களை உள்ளடக்கி கதை நகர்ந்துள்ளது செல்லத்துரை ஐயா.அருமை. பாராட்டுக்கள்.

பொலிகை ஜெயா – சுவிர்சலாந்து / 14.01.2015 - முகநூல்


No comments:

Post a comment