Monday, 7 September 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 13 - ஸ்கொற்லன்ட்  யாட்

                ஜீவிதா தனது காரை ஒரு இருபது மாடிக் கட்டடத்தின் முன் நிறுத்தி இறங்கித் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அவள் கண்களை ஸ்கொற்லன்ட் யாட் பொலிஸ் தலைமை அலுவலகம்என்ற பெயர்ப் பலகை வார்த்தைகள் நிறைத்தன.    

                பூமாவைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கால்கள் உதற கண்கள் பிதுங்க ஜீவிதாவை நோக்கித் தலை அசைத்தாள். அவளுடைய கத்தரித்த கருங்கூந்தல் தோள்களில் தவழ்ந்து முன்னும் பின்னும் அசைந்து அவள் பயணத்தைத் தொடரவிரும்பவில்லை என்பதைத் தெரிவித்தது. ஆனால் அவள் திரும்பிப்போக விரும்புகிறாள் என்பது ஜீவிதாவுக்குப் விளங்கவில்லை.

                ஸ்கொற்லன்ட் யாட்டின் 171 ஆண்டு வரலாற்றிலே சேலை அணிந்த ஒரு பெட்டையும், சுடிதார் அணிந்த ஒரு பெட்டையும் அதன் எல்லைகளுக்குள் துணிந்து காலடி வைப்பது அன்றுதான் முதன்முதலில் நிகழும் சம்பவம்.

                 அமிரின் கைது பற்றிய செய்தியை நதியா பூமாவுக்குக் கூறி இன்னும் மூன்று மணி நேரம்கூட முழுமையாக முடியவில்லை.

                அவர்கள் அதன் வாயிலை நோக்கி சீமெந்து நடைபாதை வழியே நடக்கத் தொடங்கினர். இரு பக்கமும் ஆளளவு உயர அடர்த்தியான பூஞ்செடிகள் அழகாக ஒரே மட்டத்துக்கு கத்தரிகப்பட்டு இருந்தன. 

                யாரும் முன் அனுமதி இன்றி ஸ்கொற்லன்ட் யாட் எல்லைக்குள் காலடி வைக்க முடியாது. வெள்ளை பரிஸ்ரர்களுக்குக்கூட அச்சலுகை இல்லை.

                பதினெட்டாவது இருபதாவது மாடிகளில் இருந்து நான்கு கண்கள் கீழே முன் அனுமதியின்றி நகர்ந்து கொண்டிருந்த இரு பெட்டைகளையும் அவதானிக்கத் தொடங்கின. 

ஜீவிதா எனக்குப் பயமாக இருக்கிறது."
வீணாகப் பயப்படாதை வா."
வேண்டாம் ஜீவிதா. வா திரும்பிப் போய் ஒரு நல்ல வெள்ளை பரிஸ்ரராக ஓழுங்கு செய்வோம்."
உனக்குப் பயமாக இருந்தால் நீ திரும்பிப் போடி." ஜீவிதா உறுமினாள்.
சிநேகிதியை அபாயத்தில் விட்டுப்போட்டுப் போக பூமாவின் மனம் சம்மதிக்க வில்லை. 'சிநேகித துரோகத்துக்கு கோவில் சந்நிதானத்திலேகூட பரிகாரம் கிடைக்காதுஎன்று அவளின் சமைய பாட ஆசிரியர் சுண்டிக்குளி பெண்கள் பாடசாலையில் கூறிய சொற்கள் அவள் எண்ணத்தில் புத்துயிர் பெற்றன.

சரி நட." பூமா கூறினாள்.
நீ பயப்படாதை. வா."
N;தா ஒரு வெள்ளை வருகிறான். பயமாக இருக்கிறது ஜீவிதா."
அவனும் ஏதோ அலுவலை முடித்துக் கொண்டு திரும்புகிறான் போல. நீ பேசாமல் வா பூமா."

                காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. ஜீவிதாவின் இளம் பச்சைச் சேலையின் முந்தானை மூன்றடிவரை நீண்டு பறந்து படபடத்தது. பூமா சுடிதாரின் தொங்கல்களை கெட்டியாகப் பிடித்திருந்தாள்.

                பூமாவின் பயத்தைத் தெளிவிக்க ஜீவிதா விரும்பினாள்.
பூமா, ஸ்கொற்லன்ட் எங்கே உள்ளது தெரியுமா?"
என்ன சின்னப் பிள்ளை மாதிரிக் கேள்வி. ஐக்கிய இராச்சியத்தின் வடபகுதியில்."
அதெப்படி இங்கிலாந்தின் பொலிஸ் தலைமைக் காரியால யத்துக்கு இப்படி ஒரு பெயர் வந்தது. தெரியுமா?"
தெரியாது."
இதற்கே ஒரு வரலாறு இருக்கிறது பூமா" என்று சொல்லிவிட்டு ஜீவிதா காற்றிலே அள்ளுப்பட்ட தனது சேலையின் தொங்கலை இழுத்துப் பிடித்தபடி நடந்தாள்.
சொல்லேன்" என்று கூறியபடி பூமா அந்தக் கட்டடத்தை நோக்கி ஜீவிதாவுக்கு அருகே நடந்தாள்.

மத்திய வரலாற்றுக் காலப் பகுதியிலே ஸகொற்லன்ட் அரசனும் அரசியும் லண்டனுக்கு விசயம் செய்த சமயங்களில் அவர்கள் தங்கிய ஒரு மாளிகைக்குப்; பெயர்தான் ஸ்கொற்லன்ட் யாட்."
அதுதான் இந்த இடமா?"
இல்லை. அந்த இடத்தில் 1829ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கும்  ஸ்கொற்லன்ட் யாட் என்ற பெயரே நிலைத்துவிட்டது. பிறகு தேம்ஸ் நதி ஓரத்திற்கு மாற்றப்பட்டது. 1967ல்தான் இந்த இடத்துக்கு வந்தது."
இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்?"
கிணற்றுத் தவளைக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?" என்று கூறிய ஜீவிதா வாய்விட்டுச் சிரித்தாள்.
எடியே பேச்சி. சிரியாதை. பிறகும் யாரோ ஓருத்தன் வருகிறான்."

                அவர்கள் கட்டட வாயிலை அடைந்தனர். ஒரு கதவு திறந்தது. அவர்கள் உள்ளே புகுந்தார்கள். 

                'விசாரணைக் கந்தோர்என்ற பெயர்ப் பலகை அவர்கள் நகர்வை நிறுத்தியது. அந்த விசேட அறையை நோக்கினார்கள்.

                நெஞ்சளவுச் சுவருக்கு மேலே கண்ணாடி பொருத்திய ஓர் அறை. அதற்குள் பெரிய மூக்குக் கண்ணாடி அணிந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதன். முகத்துக்கு முன்னே நீண்டு வரவேற்புக் கூறிய சுவர் மூக்கையுடைய ஒரு வெள்ளைப் பொலிஸ்க்காரன். அவன் கண்ணாடி ஊடாகத் தங்களை முறைத்து  நோக்குவதைக் கண்டார்கள்.

                இளம் பச்சைச் சேலை அணிந்த ஒரு பெட்டையும், மண்நிற சுடிதார் அணிந்த ஒரு பெட்டையும், ஏசியன்கள், தன்னை நோக்கி வருவதை அவதானித்த அந்த மனிதன் மூக்கைச் சுழித்தான்.

                அந்த மூக்கு முன்னே நின்று வரவேற்ற மனிதரைக் கண்ணாடி ஊடாகப் பார்த்து மிஸ்ரர்; அமிர் என்பவர் கைதாகி இங்கு உள்ளார் என்று அறிகிறேன். அவரைப் பார்க்க வேண்டும்" என்று ஜீவிதா தெரிவித்தாள்.
உன் பெயரென்ன?"
ஜீவிதா சிவபாலன்."
நீ அவருக்கு என்ன முறை?" 
ஜீவிதா திடுக்கிட்டாள். பூமாவைப் பார்த்தாள். அவன் சற்று குரலை உயர்த்தி,
நீ அவருக்கு என்ன முறை?" என்றான் மீண்டும்.
நான் அவருடைய கேள் பிரண்ட்" என்றாள்.
நீ விசாரிப்பவரின் முழுப் பெயர் என்ன?"
சிவகுரு அமிர்."
என்ன காரணத்துக்காகக் கைதாகினார்?"

ஜீவிதா எதிர்பார்க்காத கேள்வி. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைப்போடு பூமாவைப் பார்த்தாள். பூமாவும் துரு துரு வென்று விழித்தாள்.
மூக்கு மின்னியையும் குங்குமப் பொட்டையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்த அந்த பொலிஸ் உத்தியோகத்தன் தான் கேட்டது புரிய வில்லையோ என்ற எண்ணத்தில,;
களவா அல்லது கொலையா அல்லது போதைப் பொருள் கடத்தலா" என்று கேட்டான்.          
ஜீவிதாவுக்குத் தொண்டையை அடைத்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
போதைப் பொருள் சம்பந்தப்பட்;டது" என்றாள்.

விசாரணையாளன் மேலும் கீழும் தலையை ஆட்டியபின், அருகே இருந்த ஒரு சிவப்புப் பொத்தானை அழுத்திவிட்டு, அதன் பின்னர் கொம்பியூட்டருக்குத் தகவலைக் கொடுத்து சிவகுரு அமிர் என்ற பெயரைத் தேடினான். பின்னர் அப்படி ஒரு ஆள் போதைப் பொருள் தொடர்பாகக் கைதாகவில்லை" என்றான்.

                அதே சமயம் போதைப் பொருள் என்று கூறியதுமே, அந்த விசாரணையாளன் சிவப்புப் பொத்தானை அழுத்தியதும், வேறும் ஏதோ ஒரு பிரிவுக்குத் தகவல் போயிருக்க வேண்டும். உடன் ஒரு ஊதிப்புடைத்த பொலிஸ் அதிகாரி அவர்கள் இருவரையும் நோட்டம் பார்க்க, பதினெட்டாவது மாடியிலிருந்து லிஃவ்ற் மூலம் அந்த இடத்தை நோக்கிக் கீழிறங்கி வந்தான்.

                அந்த விசாரணையாளன் அப்படி ஒரு ஆள் கைதாகவில்லை" என்று கூறிய பதிலைக் கேட்டதும் ஜீவிதாவும் பூமாவும் ஆளை ஆள் மாறி மாறிப் பார்த்தனர். ஒருவேளை உண்மையான பெயரைக் கொடுத்திருப்பானோ என்ற ஐயத்தில் சிவகுரு அமிர்தன்" என்ற பெயரைப் பார்க்கும்படி ஜீவிதா கூறியது அந்த உத்தியோகத்தனின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. அவன் மீண்டும் கொம்பியூட்டருக்குப் புதிய தகவலை கொடுத்துவிட்டு அப்படி ஒரு ஆள் தன்னுடைய பிரிவில் கைதாக வில்லை" என்று அவர்களுக்குக் கூறியகையோடு 'சிவகுரு அமிர் அல்லது அமிர்தன் என்ற பெயர் உடையவன்போதைப் பொருள் கடத்துபவன் அல்லது விற்பவன் என்ற செய்தியை உரிய உளவுப் பிரிவுக்கு இரகசிய பாசையில் அனுப்பத் தொடங்கினான்.

                அச்சமயம் அங்கு அவர்களை நோட்டம் பார்க்க வந்த வெள்ளைச் சேட்டும் கருநீல கழுத்துப்பட்டியும் அணிந்த ஊதிப்புடைத்த வெள்ளைக்காரன் ஒருவன், விசாரணையாளனின் அறைக் கதவைத் திறந்து தலையை நீட்டி, அங்கு நின்ற பூமாவையும் ஜீவிதாவையும் ஊன்றிக் கவனித்து விட்டு, அந்த விசாரணை அதிகாரியை அழைத்து அவர்களை வேறு ஒரு பிரிவுக்கு அனுப்பும்படி கூறிவிட்டுப் போனான்.

                அவன் திரும்பிய சமயம் பூமா உற்று அந்தத் தகவல் கூறிய ஊதிப்புடைத்த மனிதனைப் பார்த்தாள். 'இன்று காலை  வீட்டுக்கு வந்து தகவல் சேகரித்தவன் போலிருக்கே. அவன்தானா?” அப்படி ஒரு கேள்வி அவள் மனதில் புயலை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து அவன் வீட்டைவிட்டு வெளியேறிய சமயம் எச்சரித்த வார்த்தைகள் அவள் காதுகளில் கணீரெனக் கேட்டன. 'மிஸ் பூமா. நான் உன்னைச் சந்தித்ததையோ வாய்ப்பிறப்பு வாங்கியதையோ எந்தக் காரணம் கொண்;டும் யாருக்கும் வெளியிடக் கூடாது. அதனால் எதிர்காலத்தில் வீண் துன்பங்களை நீ சந்திக்கவேண்டி வரும்.

                தாவி வந்த பயம் அவளைக் கட்டியணைத்தது. ஜீவிதாவுக்கு அதுபற்றி எதுவும் கூறாது ஆழமாக யோசித்துக் கொண்டு நின்றாள்.

                அச்சமயம் அந்தக் கவுன்டரில்இருந்த பொலிஸ் உத்தியோகத்தன் கூறினான்.
 
உங்களைப் பதினெட்டாவது மாடிக்கு அழைத்துச் செல்ல ஒரு உத்தியோகத்தர் இப்பொழுது வருவார். அது வரை போய் அந்த ஆசனங்களில் இருங்கள்" என்றான்.

                ஜீவிதாவுக்கு அவளது இதயத்தைப் பிடுங்கி கொதிக்கும் எண்ணெயில் பொரிப்பது போல இருந்தது.

அமிரைக் கைது செய்யவில்லை என்றால் நாங்கள் போகலாந்தானே?" பூமா கேட்டாள்.
அதுதான் எனக்கும் புரியவில்லை. ஏன் நாம் பதினெட்டாம் மாடிக்குப் போக வேண்டும்.?" ஜீவிதாவின் குரலில் நடுக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.
நான் உனக்குச் சொன்னனான் ஒரு வெள்ளை பரிஸ்ரரைப் பிடிப்பமென்று. என்ன கோதாரிக்குக் கொண்டு போகப் போகிறான்களோ?"

                பூமாவின் உள்ளத்தை, அவளின் பாடசாலைச் சிநேகிதி கிரிசாந்தி இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்ட ஞாபகம் வருத்தியது. ஆகவேதான் 'என்ன கோதாரிக்குக் கொண்டு போகப் போகிறான்களோ?” என்று சொன்னாள்.

அந்தத் தேவடியாள் நதியாவின் பேச்சை நம்பி மோசம்போயிட்டோம்." ஜீவிதா முனங்கினாள்.
திரும்பிப் போவாமா?" பூமா கேட்டாள்.
கட்டளையை மீறிப் போனால் எங்களையும் கூட்டுக்குள் அடைத்துவிடுவார்கள்."

                அவவ்வேளை அவ்விடம் ஒரு நீண்ட தலைக் குண்டன் வந்துகொண்டிருந்தான்.
உவன்தான் எங்களைப் பதினெட்டாவது மாடிக்குக் கொண்டு செல்லப்போகிறான் போல." ஜீவிதா சொன்னாள்.
மரண தண்டனைக் கைதியை தூக்கிலிடுகிற அலுகோஸ் மாதிரி இருக்கிறான்." பூமா மெதுவாக காதுக்குள் கூறினாள். 

நீங்கள் இரண்டு பேரும் என்னைப் பின்தொடருங்கள்" என்று அந்த நீளத் தலைக் குண்டன் கத்தினான். அவனது சொற்கள் விட்டு விட்டு எதிரொலித்தன.

                அவன் அவர்களை லிஃவ்ற் மூலம் அழைத்துச் சென்று பதினெட்டாவது மாடியில் ஒரு விசாரணைக் கவுண்டரின்முன் உள்ள தங்குமிடத்தில் விட்டபின், “இங்கே இருங்கள். திரும்ப வருகிறேன்" என்று கூறியபடி வேகமாகப் போனான்.

                அங்குள்ள கண்ணாடி அறைக்குள் இருந்த பச்சைக்கண் பொலிஸ்காரி அவர்களை உற்றுப் பார்த்தாள்.

                மீண்டும் அந்த நீள்தலைக் குண்டன் அவ்விடம் வந்தான். இதோ சாப்பாட்டுப் பார்சல்" என்று இரண்டு பொட்டலங்களை நீட்டினான்
                பூமா அவற்றை வாங்கினாள். அந்த நீள்தலை வேறு ஒன்றும் பேசவேயில்லை. 

                சாப்பாட்டுப் பொட்டலங்கள் அவர்கள் அவ்விடத்தைவிட்டு விரைவில் அசையமுடியாது என்ற செய்தியைச் கூறின. அந்த மொழி ஜீவிதாவுக்கு நன்கு புரிந்தது. 

                கண்ணாடிக்கு மறுபுறத்தில் இருந்த இளம் வெள்ளைக்காரப் பெண் பொலிஸ் தனது பச்சைக்கண் மடல்களை விரித்து, கண்ணாடி ஊடாக  ஜீவிதாவையும் பூமாவையும் கவனமாகப் பார்த்தாள். அவள் அந்த  அலுவலகத்தில் சேலையும், சுடிதாரும் அணிந்த இரண்டு ஏசிய கண்டத்துப் பெட்டைகளைப் பார்ப்பது அதுவே முதல்தடவை. ஜீவிதாவின் இளம்பச்சைச் சேலை மார்புவழியாக குறுக்காகச் சென்று தோளைத் தழுவி முதுகுப்புறத்தில் குதிக்கால் வரை சென்றுள்ள முந்தானை அழகு அவள் கண்களுக்கு இனிமை கொடுப்பதை அவள் கண்கள் தெரிவித்தன. தொடர்ந்து அவள் கண்கள் பூமாவின் வெள்ளைக் கல் மூக்குத்தியில் நிலைகொண்டன.

                அவள் தவறுதலாகத் தன்னிடம் ஏதோ விசாரிக்க வந்ததாக எண்ணித் தன் வழமையான கடமையைத் தொடங்க சைகை காட்டி அவர்களைத் தனது யன்னலுக்கு அழைத்தாள்.

                அவர்கள் இருவரும் ஏன் அழைக்கிறாள் என்பது புரியாமல் சென்று அவள் முன் பயபக்தியோடு நின்றார்கள்.

ஏன் வந்தீர்கள்?"
அமிர் இங்குள்ளதாக அறிகிறோம். தயவு செய்து அவரைப் பார்க்க உதவி செய்யவும்." ஜீவிதா கூறினாள்.
உன் பெயரென்ன?"
ஜீவிதா சிவபாலன்."
யாரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாய்?"
அமிரை."
முழுப்பெயர்?"
சிவகுரு அமிர்."
நீ அவருக்கு என்ன முறை?"

                ஜீவிதா திடுக்கிட்டாள். மீண்டும் அதே கேள்வி. என்ன சொல்வது என்று புரியாமல் பூமாவைப் பார்த்தாள். விசாரணை செய்த பச்சைக்கண்ணி சற்று குரலை உயர்த்தி, “நான் சொன்னது உனக்கு விளங்கவில்லையா? நீ அவருக்கு என்ன முறை?"

                அப்பொழுது அவளின் அருகே இருந்த ரெலிபோன் கணீரென ஒலித்தது. அவள் றிசீவரை எடுத்தாள்.
ஆம். ஆம். எனக்கு அறிவிக்கவில்லை. மன்னிக்கவும். சரி. செய்கிறேன். ஆம். ஆம்" என்ற வார்த்தைகள் அவள் பதிலாக இருப்பதை ஜீவிதாவும் பூமாவும் அவதானித்தார்கள். அந்த உரையாடல் அவர்களைப் பற்றியதே என்பது அவர்களுக்குத் தெரியாது.

                அந்த பச்சைக்கண் பொலிஸ்காரி றிசீவரை வைத்தாள். ஜீவிதாவையும் பூமாவையும் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை பார்த்தாள். பின் கொடுப்புக்குள் சிரித்தபடி, “பயங்கரவாத எதிர்ப்பிரிவு தலைவர் உங்களைச் சந்திக்கவிருக்கிறார். அவர் வருமட்டும் போய் அங்கு இருங்கள்" என்றாள்.


                அவளின் சிரிப்பு அவர்களின் குடல்களைக் கலக்கமடையச் செய்தது. ஜீவிதா புலம்பினாள், “ஏன் வருகிறான்? ஏன் பயங்கரவாதப் எதிர்ப்பிரிவுத் தலைவன் எங்களைச் சந்திக்கவேண்டும்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லைப் பூமா. என்ன இழவு நடக்கப் போகுதோ?" 

தொடரும்...

1 comment: