Thursday 22 October 2015

தாமரைக்கு ஒரு செல்வி - வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.


 


திரும்பிப்பார்க்கின்றேன்.

ஈழத்து  இலக்கிய  வளர்ச்சியில்  போர்க்கால இடப்பெயர்வு  வாழ்வை   அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை

' முள்ளும்  மலரும் ' மகேந்திரனின்  இயக்கத்திலும் தாமரைச்செல்வியின்   படைப்பு  குறும்படமாகியது.
                                                  முருகபூபதி


 எங்கள்    நீர்கொழும்பில்  நான்  அறிந்தவரையில்  இற்றைக்கு  70 ஆண்டுகளுக்கு  முன்னர்  தோன்றிய  முதலாவது  சைவஉணவகம் கணேசன்  கபேதான்  நீர்கொழும்பில்  வீரகேசரி  பத்திரிகையின் முதலாவது   ஏஜன்ட்.   வீரகேசரிக்கு தற்பொழுது 85 வயது. கணேசன் கபே   இன்றும்   இருக்குமானால்  அதன் வயது  75.

இந்த கணேசன்  கபேயில்தான்   ஆளுமையும்   ஆற்றலும்  நிரம்பப்பெற்ற  சாதனைப்பெண்மணி      தாமரைச்செல்வியின்  முதல்  நாவல் -  வீரகேசரி  பிரசுரம்  சுமைகள்  எனக்குக்  கிடைத்ததுஅதனை தாமரைச்செல்வி   எழுதியகாலத்தில்   அவருக்கு 24  வயதுதான்  என்ற தகவல்   நண்பர்  புலோலியூர்   ரத்தினவேலோன்  எழுதிய குறிப்பிலிருந்து   தெரிகிறது.

சுமைகள்   நாவலுக்கு   பின்னாலும்  ஒரு  கதை  இருக்கிறது. அதனைப்பின்னர்  சொல்கின்றேன்.


1970 களில்   ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து அரசாங்கம் அமைத்தபொழுது , இந்தியாவிலிருந்து புற்றீசலாக   வந்து  குவிந்த  தரமற்ற  வணிக  இதழ்கள்  மீது கட்டுப்பாடு  வந்ததை  வீரகேசரி  நிறுவனம்தான்  தக்கமுறையில் பயன்படுத்திக்கொண்டு  வீரகேசரி  பிரசுரங்களை  வெளியிட்டது.

முதலில்  திருகோணமலையிலிருந்து  எழுதிக்கொண்டிருந்த  நா. பாலேஸ்வரியின்  பூஜைக்கு  வந்த  மலர்  வெளியானதாக  நினைவு. அதனைத்தொடர்ந்து  இலங்கையின்  முன்னணி  எழுத்தாளர்கள் பலரின்  நாவல்கள்  வீரகேசரி  பிரசுரமாக  வந்தன.   செங்கை ஆழியான்,   டானியல்,  பால மனோகரன்  (நிலக்கிளி)  தெணியான், அருள். சுப்பிரமணியம்,   செ. கதிர்காமநாதன்,  ..இராசரத்தினம், யாழ்நங்கை,  செம்பியன் செல்வன்,   தெளிவத்தை ஜோசப்.... இவ்வாறு சுமார் 60  இற்கும்  மேற்பட்ட  படைப்பாளிகளின்  நாவல்கள் வெளியானது.

இந்தியாவிலிருந்து  வந்து  இலங்கையில்  மலையகத்தில்  முன்னர் வாழ்ந்த  கோகிலம்  சுப்பையாவின்  தூரத்துப்பச்சை    நாவலும் வெளியிடப்பட்டது.    இந்த  வரிசையில்  நான்   பார்த்த  நாவல் தாமரைச்செல்வி   எழுதியிருந்த  சுமைகள்.

நான்    எழுதத்தொடங்கிய  1972  ஆம்  ஆண்டு  காலத்தில்  பல  புதிய படைப்பாளிகள்   தோன்றினர்.   அவர்களில்  சில  பெண்   படைப்பாளிகள்  - இலங்கை  வானொலியில்  இசையும்  கதையும் எழுதிக்கொண்டிருந்தார்கள்.    மாலை வேளைகளில்  ஒலிபரப்பாகும் இந்த  நிகழ்ச்சியில்,  சில  கதைகளை  தாமரைச்செல்வி எழுதியிருந்தார்.    கதைக்குப்பொருத்தமான  சில  சினிமா   பாடல்களும் ஒலிக்கும்.    இந்த  நிகழ்ச்சிக்கு  அக்கால  கட்டத்தில்  சிறந்த வரவேற்பிருந்தது.    நேயர்களின்  கடிதங்களிலிருந்து  அந்த வரவேற்பை  தெரிந்துகொள்ளமுடியும்.

ஆனால்,  சினிமா  பாடல்களுடன்  அச்சிறுகதைகள் ஒலிபரப்பப்பட்டதால்   அவற்றின்  தரம்  குறைந்துவிடுகிறதோ...என்றும்  நான்  எண்ணியதனால்,  இசையும் கதையும்  நிகழ்ச்சியில்  எனக்கு  ஆர்வம்  இருக்கவில்லை.    ஆயினும்   பல  எழுத்தாளர்கள்,   குறிப்பாக  பெண்கள்  பலர் இலக்கியத்துறைக்கு  அறிமுகமானார்கள்.   அவர்களில் குறிப்பிடத்தகுந்த  ஒருவர்  தாமரைச்செல்வி.   காரணம்   அவர் இசையும்   கதையும்  நிகழ்ச்சிக்கு  எழுத  ஆரம்பித்து  சுமார்  ஒரு வருடகாலத்திலேயே   அதிலிருந்து  மீண்டுவிட்டார்.

இவருடைய  முதல்  சிறுகதை  ஒரு  கோபுரம்  சரிகிறது  வீரகேசரியில்    வெளியானபொழுது,  1974  ஆம்  ஆண்டு பிறந்துவிட்டது.    அதனைத்தொடர்ந்து  இலங்கையிலும் தமிழ்நாட்டிலும்   வெளியான  இதழ்களில்  தாமரைச்செல்வியின் சிறுகதைகள்   வெளிவரத்தொடங்கின.

ஆனந்தவிகடன்,   குங்குமம்,   மங்கை   முதலான  இதழ்களிலும் அவருடைய  படைப்புகளை   காண  முடிந்தது.

இவ்வாறு  கடந்த  நான்கு  தசாப்த  காலமாக  எழுதிக்கொண்டிருக்கும் தாமரைச்செல்வியை   அமைதியான  சாதனையாளர்  என்றுதான் குறிப்பிடவிரும்புகின்றேன்.    கவிதை,  சிறுகதை,  நாவல்,  குறுநாவல் எழுதியிருக்கும்  இவர் , ஓவியத்துறையிலும்  ஈடுபாடுள்ளவர்.  சில இதழ்களில்   இவர்  எழுதிய  கதைகளுக்கு  இவரே  ஓவியமும் வரைந்திருப்பார்.

இருநூறுக்கும்  மேற்பட்ட  சிறுகதைகள்,  ஆறு  நாவல்கள்,  மூன்று குறுநாவல்கள்   எழுதியிருக்கும்  தாமரைச்செல்வியின்  20 சிறுகதைகள்   பல   இலக்கியப்போட்டிகளில்  பரிசுபெற்றுள்ளன.

அத்துடன்  தமது  நூல்களுக்கு  அரச  மற்றும்  அமைப்புகளின் விருதுகளும்    தங்கப்பதக்கமும்  பெற்றிருப்பவர்.   அந்த  விபரங்களே தனியான  ஒரு  பட்டியல்.

அவருடைய   சிறுகதைகள்,   நாவல்களில்  வன்னிமண்ணின்  மணம் கமழும்.    பிரதேச  இலக்கியத்தில்  வன்னி   மண்ணின்  மகிமையை எழுதிய  படைப்பாளிகளின்  வரிசையில்  இவருக்கும்  தனியிடம் இருக்கிறது.

தமிழகத்தில்   கரிசல்  இலக்கியம்  என  அழைக்கப்படும்  விவசாய மக்களின்   ஆத்மாவை   பிரதிபலிக்கும்   ஏராளமான  சிறுகதைகள், நாவல்கள்   படித்திருக்கின்றோம்.    அவற்றுக்கு  ஈடான  ஈழத்து  தமிழ் விவசாய   மக்களின்  குரலை  தமது  படைப்புகளில் ஒலிக்கச்செய்தவர்கள்,    செங்கை  ஆழியான்,   பாலமனோகரன், தாமரைச்செல்வி   ஆகியோர்.   இவர்களுக்குப்பின்னர்  தோன்றிய  புதிய தலைமுறை   வன்னிப்பிரதேச  எழுத்தாளர்கள்  பலர்  அம்மக்களின் வாழ்வை  இலக்கியமாக்கிவருகின்றனர்.   அவர்கள்  பற்றியும்  ஒரு பட்டியல்  இருக்கிறது.

சுயமாக   தமது  துறைகளில்    முன்னேறி   சாதனை   புரிந்து  தமது  ஆளுமைப்பண்பை   காண்பித்த  ஆண்கள்   குறித்து  ஆங்கிலத்தில்  Self made man  என்பார்கள்.  தாமரைச்செல்வியின்  வாழ்வையும் பணிகளையும்  பார்த்தால்  அவரை   ஒரு  Self made woman  என்றுதான்  சொல்லவேண்டும்.

பாடசாலையில்   படிக்கும்  காலத்திலேயே   மாணவர்  இலக்கிய மன்றத்திற்கு   நாடகங்கள்  எழுதிக்கொடுத்திருக்கும்  இவர்,  பின்னர் இலங்கை   வானொலிக்கு  இசையும்  கதையும்  எழுதினார். அதிலிருந்து   மீண்டு வந்து  இ லங்கைப்பத்திரிகைகள் - இலக்கிய இதழ்கள்   ஈழநாடு,  வீரகேசரி,  சுடர்  மற்றும்  தமிழக  இதழ்களில் எழுதினார்.   ஆயினும்,  ஒரு  விவசாயக்குடும்பத்தில்  பிறந்திருக்கும் இவருக்கு  பரந்தன்  குமர புரத்திற்கு  அப்பால்  வெளியுலகம் தெரியாமலேயே  வானொலி,  பத்திரிகைகள்,  இதழ்கள்  என்று அறிமுகமாகிவிட்டார்.

தமது  ஆரம்பக்கல்வியை  பரந்தன்  இந்து  மகா  வித்தியாலயத்திலும் அதன்   பின்னர்  யாழ். இந்து  மகளிர்  கல்லூரியிலும் தொடர்ந்திருக்கும்   இவர்,   இலக்கியப்பிரதிகளை  எழுதத்தொடங்கிய காலகட்டத்தில்   வீரகேசரி  பிரசுரங்கள்  வெளியாகத்தொடங்கிவிட்டன.

தமது  முதல்  நாவலுக்கு  தீக்குளிப்பு  என்ற  தலைப்பிட்டு  அதன் மூலப்பிரதியை  வீரகேசரி  அலுவலகத்திற்கு  தபாலில் அனுப்பிவைத்துள்ளார்.    வீரகேசரியின்  Administrative  officer  ஆகவும் வீரகேசரி  பிரசுரங்களின்  பதிப்பாளராகவும்  பணியாற்றிய                    திரு. (அமரர்) பாலச்சந்திரன்   இலக்கிய  ஆர்வம்  மிக்கவர்.   பிரசுரத்துக்கு  வரும்   நாவல்களை  படித்து  தெரிவுசெய்வார்.   அங்கு  விளம்பரப்பிரிவு -விநியோகப்பிரிவு  முகாமையாளராக   பணியாற்றிய  இவருடைய நீண்ட கால  நண்பர்  திரு. து. சிவப்பிரகாசம்   அவர்களும்  நாவல்  தெரிவில்  உடனிருந்தவர்.

தாமரைச்செல்வியின்  முதல்  நாவலான  தீக்குளிப்பை  படித்த பாலச்சந்திரன்   வளர்ந்து  வரும்  ஒரு  பெண்  படைப்பாளியின் ஆற்றலை  இனம்  கண்டு,  அதில்   மேலும் செம்மைப்படுத்துவதற்கான   தேவை   இருப்பதை  தெரிந்துகொண்டு பரந்தனில்  வசித்த  தாமரைச்செல்விக்கு  கடிதம்  எழுதி வசதிப்படும்பொழுது   கொழும்பில்  வீரகேசரி  அலுவலகம்  வந்து சந்திக்குமாறு  கோரியிருந்தார்.

அந்தக்கடிதம்   தாமரைச்செல்விக்கு  ஊக்கமாத்திரைதான்.  ஒரு  பெரிய நிறுவனத்திடமிருந்து   வந்துள்ள  அழைப்பை  ஏற்றுக்கொண்டு  தமது தந்தையாருடன்   வீரகேசரி  அலுவலகம்  வந்திருக்கிறார்.  ஆனால்,  இச்சந்தர்ப்பத்திலும்   நான்   அவரை  பார்க்கவில்லை.  அச்சமயம்  நான் நீர்கொழும்பு   பிரதேச   நிருபராக   இருந்தேன்.

தீக்குளிப்பு  நாவல்  தொடர்பாக  தம்மைச்சந்திக்கவந்த தாமரைச்செல்வியிடம்   ஒரு  நாவல்  எவ்வாறு  அமையவேண்டும், வாசகர்களை   ஆர்வமுடன்  படிக்கத்தூண்டும்  அம்சங்கள்  யாவை முதலான  சில  ஆலோசனைகளை   தமது  நீண்ட  கால  வாசிப்பு அனுபவத்திலிருந்து  பாலச்சந்திரன்  தெரிவித்திருக்கிறார்.

சுயமாக  சிறுகதைகள்,  கவிதைகள்  எழுதிக்கொண்டிருந்த   இவருக்கு அந்த   சந்திப்பு  வித்தியாசமான  அனுபவம்தான்.   தன்னை  எவ்வாறு இலக்கியத்துறையில்   வளர்த்துக்கொள்ளவேண்டும்  என்பதை  தாம்  அன்றைய   அந்தச்சந்திப்பில்  பெற்றுக்கொண்டதாக   சமீபத்தில்  அவர் தெரிவித்தார்.

தீக்குளிப்பு   என்ற  நாவல்தான்  பின்னர்  சுமைகள்    நாவலாக  வீரகேசரி   பிரசுரமாக  வெளியானதா...?  என்பது  தெரியவில்லை.

நான்  எழுதத்தொடங்கிய  காலம்  முதல்  நூற்றுக்கணக்கான  தமிழ், சிங்கள, முஸ்லிம்  எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் தாமரைச்செல்வியை கடந்த 2013 ஆம் ஆண்டுதான்  முதல்  முதலில் அதுவும்  அவுஸ்திரேலியாவில்  சிட்னியில்  எதிர்பாராதவிதமாக சந்தித்தேன்.  இதுபற்றியும்  முன்னர்  ஒரு  பதிவில்  குறிப்பிட்டுள்ளேன்.

அவுஸ்திரேலியாவில் 2001  முதல்  தமிழ்  எழுத்தாளர்  விழாவை நடத்திவருகின்றோம்.   2002  ஆம்  ஆண்டு  சிட்னியில்  நடந்தபொழுது அங்கு   வதியும்  இலக்கியவாதி  செல்வி  யசோதா  பத்மநாதன் எனக்கு   தாமரைச்செல்வியின்  தங்கை  கௌரியை அறிமுகப்படுத்தினார்.    அந்த  அறிமுகத்தினால்  சில  வருடங்களின் பின்னர்   தாமரைச்செல்வியின்  மற்றும்  ஒரு  நாவலான பச்சைவயல்கனவு    படிக்கக்கிடைத்தது.
அதனை   மெல்பனில்  2006  ஆம்  ஆண்டு   நடந்த  ஆறாவது எழுத்தாளர்   விழாவில்  விமர்சன  அரங்கில் இணைத்துக்கொண்டோம்.   கிளிநொச்சி  பிரதேசத்தில்  குடியேறிய மூதாதையர்களின்    வாழ்வுக்கோலங்களை  இயல்பாகச்சித்திரித்திருந்த  அந்த  நாவல்  பற்றி  விமர்சிப்பதற்கு எட்வர்ட்  பிலிப்  மரியதாசன்  மாஸ்டர்   என்ற   அன்பர்  முன்வந்தார். இவரும்  கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்.  இவ்வாறெல்லாம் தாமரைச்செல்வியின்  படைப்புகள்  எனக்கு  அறிமுகமானபோதிலும் அவரை   நேரில்  சந்திக்கும்  சந்தர்ப்பம்  2013  ஆம்  ஆண்டளவில்தான் கிடைத்தது.

சிட்னியில்  அந்த வருடத்தின் கோடை காலத்தில் செல்வி யசோதா பத்மநாதன் பரமட்டா என்ற   இடத்தில் அமைந்துள்ள  பூங்காவில் உயர்திணை   இலக்கிய  சந்திப்பை   ஒழுங்குசெய்துவிட்டு  அதற்கு வந்தால்  தாமரைச்செல்வியை  சந்திக்கலாம்  என்றார்

நீண்டகாலமாக  நான்  சந்திக்கவிரும்பியிருந்த   தாமரைச்செல்வியை  இன்னமும்   காணமுடியவில்லையே  என்றிருந்த  எனது  குறையை அன்றையதினம்  போக்கியவர்  யசோதா.

ஈழத்து   இலக்கியத்தில்  தலித்   மக்களின்    ஆத்மா,    மற்றும்   மீனவ மக்களின்   கடல்   சார்ந்த  வாழ்வு,   மலையக    மக்களின்  துயரம் கப்பிய   நாடற்ற  ஏக்கம் -  கிழக்கிலும்    தென்னிலங்கையிலும் முஸ்லிம்களின்  பண்பாட்டுக்கோலங்கள்   என்பன  சித்திரித்த  பல படைப்புகளையும்   படித்து   அவற்றை    எழுதியிருப்பவர்களையும் சந்தித்திருந்தாலும்,    கிளிநொச்சி,    பரந்தன்   முதலான பிரதேசங்களில்     தீப்பெட்டிக்கும்  எரிபொருள்,   உப்பு,   சீனி, தேயிலைக்கும்  தேங்காய்  எண்ணெய்க்கும்   மாத்திரம்   கடைகளை நம்பியிருந்த   மக்கள்,  பருவ மழை   பொய்த்தாலும்  -  மண்ணை  நம்பி வாழ்ந்தவர்கள்.

1984 ஆம் ஆண்டளவில்   திருநெல்வேலி  கோவில்பட்டிக்கு அருகாமையில்   இடைசெவல்  விவசாய  கிராமத்தில்  நான்  சந்தித்த மூத்த   படைப்பாளி  கி.ராஜநாரயணன்   இலங்கையில்  கரிசல் இலக்கியம்   பற்றி  விசாரித்தபொழுது  எனக்கு   உடனடியாக நினைவுக்கு   வந்தவர்கள்  தாமரைச்செல்வியும்   நிலக்கிளி பாலமனோகரனும்தான்.

அவர்களை   சந்தித்திருக்கிறீர்களா ...? என்ற   மற்றும்  ஒரு  கேள்வியை அவர்  கேட்டார்.    இல்லை  என்றதும்  என்னை ஆச்சரியமாகப்பார்த்தார்.   நான்  கடல்  சார்ந்த  பிரதேசத்திலும் அவர்கள்  விவசாயம்  சார்ந்த   பிரதேசத்திலும்   இருப்பதாகச்சொல்லி இலங்கையின்   வரை  படம்  கீறிக்காண்பித்தேன்.

1983 வன்செயல்  பற்றியும்   அறிந்திருந்த   கி.ரா.வுக்கு    எங்கெங்கு வன்செயல்கள்   நடந்தன  என்பது   பற்றியும்   குறிப்பிட்டதுடன்இலங்கையில்    வன்செயல்கள்    மழைமேகம்    போன்றது  என்றும் சொன்னேன்.

பின்னாளில்   அந்த   வன்னி   பெருநிலப்பரப்பில்    மழைமேகம் மறைந்து   - நெருப்பும்  கந்தகமும்தான்  சீறிப்பாய்ந்தது. தாமரைச்செல்வியின்    போர்க்காலக்கதைகள்    மக்களின்  வலியை பேசியவை.    இடப்பெயர்வை    சித்திரித்தவை.

சுமைகள்    முதல்  பச்சைவயல்  கனவு   வரையில்  படித்திருந்தாலும் இவருடைய    இறுதியாக  வெளியான  வன்னியாச்சி சிறுகதைத்தொகுதி   பார்க்கக்கிடைக்கவில்லை.   அவற்றின் படைப்பாளியை   அவருடைய  அருமைக்கணவர்  கந்தசாமியுடனும் அன்புத்தங்கை   கௌரியுடனும்  சந்திக்கும்  சந்தர்ப்பம்  சிட்னியில்தான்    கிடைத்தது.

கிளிநொச்சி     போர்க்காலத்தில்  கேந்திர  முக்கியத்துவம் வாய்ந்திருந்ததை    அறிவோம்.     உயிரைக்கையில்  பிடித்துக்கொண்டு இடம்பெயர்ந்து...இடம்பெயர்ந்து    ஓடிய  மக்கள்   திரளில்  தாமரைச்செல்வியின்   குடும்பமும்   இணைந்திருந்தது.    அந்தப் போர் அவலச்சூழலிலும்   அவர்   இலக்கிய   பிரதிகள்  படித்தார் , எழுதினார். தற்காலிக   குடிசைகள்  அமைத்து  அங்கிருந்து   ஜெனரேட்டரின் உதவியுடன்   பாரதி   படத்தை  பார்த்தையும்  அகிரா  குரேசேவாவின் படங்களை   ரசித்ததையும் -   ஸ்கந்தபுரம்   என்ற  பிரதேசத்துக்கு அப்பால்   காட்டுப்பகுதியில்   கொட்டில்கள்  அமைத்து  வன்னிப்பிரதேச    இலக்கியவாதிகளுடன்  கலந்துரையாடியதையும் நினைவுகூர்ந்தார்.

நெருக்கடி மிக்க   போர்க்காலச்சூழலிலும்  காலச்சுவடு,   முன்றாவது மனிதன்,  சரிநிகர்  முதலான  கையில்  கிடைக்கும்  இதழ்கள்,  நூல்கள்    பற்றியெல்லாம்    இலக்கிய   நண்பர்கள்    மத்தியில் கலந்துரையாடியிருக்கிறார்.    இயற்கையுடன்   இணைந்து  காட்டுப்பிரதேசத்தில்    இலக்கிய  சந்திப்புகள்  நடத்தியதையும் நினைவுபடுத்தினார்.

தாமரைச்செல்வியின்    கணவரும்  எழுத்தாளர்தான்.   சிறுகதைகள் எழுதியிருப்பவர்.    எனினும்  அவர்  குடும்பத்தலைவனாக  வீட்டையும்   குடும்பத்தையும்    கவனித்தார்.   மனைவியோ   குடும்பத்தையும் கவனித்து    இலக்கியத்திலும்  தனது  ஆளுமையை   பதிவுசெய்தார்.

இந்த  இலக்கிய  தம்பதியரின்  இரண்டு   பெண்செல்வங்களும் அவுஸ்திரேலியாவில்  மருத்துவர்களாக  பணியாற்றுகின்றனர்.

தாமரைச்செல்வியின்  சில  படைப்புகள்  குறும்படங்களாக வெளியாகியிருக்கின்றன.   வன்னிக்கு  வந்துள்ள  இயக்குநர்  முள்ளும் மலரும்   மகேந்திரன்   இவருடைய   இடைவெளி   என்ற  சிறு கதையை '  1996 '  என்ற  பெயரில்   குறும்படமாக்கியுள்ளார்.   அத்துடன் மகேந்திரனின்  மகன்  ஜோன்  மகேந்திரன்  இவருடைய  மற்றும்  ஒரு   சிறுகதையான  பாதணியை  குறும்படமாக   எடுத்துள்ளார்.

 முள்ளும் மலரும்   மகேந்திரன்  ஏற்கனவே,   புதுமைப்பித்தன், கந்தர்வன்,   உமாசந்திரன்,    பொன்னீலன்   முதலான  தமிழக படைப்பாளிகளின்   நாவல்களை   திரைப்படமாக்கியிருப்பவர்.

தமிழகத்தைச்சேர்ந்த   இமையவரம்பன்,    தாமரைச்செல்வியின்  பசி என்ற  சிறுகதையை  குறும்படமாக்கியிருக்கிறார்.   இப்படம் லண்டனில்   நடந்த   விம்பம்   குறும்பட விழாவில்  காண்பிக்கப்பட்டு பார்வையாளர்  விருது   கிடைத்திருக்கிறது.    இவை  தவிர  மேலும் இவருடைய   சில  சிறுகதைகள் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தப்பத்தியின்  தொடக்கத்தில்   தாமரைச்செல்வியை  ஆளுமைமிக்க சாதனையாளர்  என்று  குறிப்பிட்டதற்கான   காரணங்களை   இங்கே பதிவுசெய்கின்றேன்.

ஒரு  மழைக்கால  இரவு - சிறுகதைகள்   ( வடக்கு - கிழக்கு மாகாண சபையின் 1998 ஆம்  ஆண்டிற்குரிய  விருது.

விண்ணில்  அல்ல  விடிவெள்ளி ( யாழ். இலக்கியப்பேரவையின்  பரிசு)

தாகம் - நாவல்  ( கொழும்பு  சுதந்திர   இலக்கிய  அமைப்பின்  சிறந்த நாவல்  விருது  மற்றும்  யாழ். இலக்கியப்பேரவையின்  பரிசு)

வேள்வித்தீ - குறுநாவல்   ( முரசொலி  பத்திரிகையின்  முதல்  பரிசு)

வீதியெல்லாம்  தோரணங்கள் - நாவல் ( வடமாகாண  சபையின்  விருது   மற்றும்  இரசிகமணி   கனகசெந்தி நாதன்   நினைவுப்போட்டியில்   இரண்டாம்  பரிசு)

பச்சை வயல்  கனவு - நாவல்  ( இலங்கை  அரச  சாகித்திய விருது மற்றும்  யாழ். இலக்கியப்பேரவையின் விருது. )

இவை   தவிர வட - கிழக்கு ஆளுனர்  விருதும்  வேறும்   சில  பிரதேச அமைப்புகளின்   இலக்கியத்திற்கான  விருதுகளும்    பெற்றவர். சில சிறுகதைகள்  ஆங்கிலத்திலும்   மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மல்லிகை  2002  மார்ச்  மாத   இதழில்  தாமரைச்செல்வி   அட்டைப்பட அதிதியாக  கௌரவிக்கப்பட்டுள்ளார்.  . இரத்தினசிங்கம்    என்பவர் இவர்   பற்றி    எழுதியிருக்கும்    கட்டுரையில்,   1982  ஆம்  ஆண்டு பரந்தன்   தொழிற்சாலை  விளையாட்டு   அரங்கில்   நடந்த  கவிஞர் செவ்வந்தி  மகாலிங்கம்  எழுதிய  முத்துக்குவியல்   நூல்   வெளியீட்டு  விழாவில்   அந்த  நூலின்   அட்டையை   வரைந்திருக்கும் தாமரைச்செல்விக்கு   பரிசும்   பாராட்டுப்பத்திரமும்  வழங்கப்பட்டதாக  பதிவுசெய்கிறார்.

தனது  கதைகளுக்கும்   படம்    வரைந்துள்ள  தாமரைச்செல்வி தமிழ்ப்பிரியா  எழுதிய  சில   சிறுகதைகளுக்கும்  படம்   வரைந்தவர். கனடா  பதிவுகள்   இணையத்தளம்  நடத்தும்  எழுத்தாளர்   .. கிரிதரன்,   மு.பொன்னம்பலம்,    செங்கை ஆழியான்,   கருணாகரன், புலோலியூர்  இரத்தினவேலோன்   ஆகியோரும்    தாமரைச்செல்வி பற்றி  ஏற்கனவே  எழுதியிருக்கிறார்கள்.   இன்று    அவர்களின் வரிசையில்   நானும்    இணைந்து    இந்த    இலக்கிய   சகோதரியை வாழ்த்துகின்றேன்.

போரினால்    பாதிக்கப்பட்டவர்கள்   பற்றி  எழுதியதுடன்  அவர் நின்றுவிடாமல்,  போர்  தந்த  பரிசுகளான  பெற்றவர்களை  இழந்த குழந்தைகளின்   கல்வி  வளர்ச்சிக்கும்  இவர்  உதவிவருகிறார். இந்தப்பணியில்  இவருடைய  கணவரும்  மகள்மாரும் பக்கத்துணையாக  விளங்குகிறார்கள்.

இவ்வளவு   பெருமைகளும்  பெற்றுள்ள  தாமரைச்செல்வியிடத்தே நிரந்தரமாக   தங்கிவிட்ட  சோகம்  பற்றியும்  இங்கு  மிகுந்த மனவலியுடன்   பதிவுசெய்கின்றேன்.   போரின்  அநர்த்தம்  வன்னி பெருநிலப்பரப்பில்  உயிர்களை  மாத்திரம்  பறிக்கவில்லை. அந்தப்பிரதேசத்து   இலக்கியவாதிகளின்  சேகரிப்பிலிருந்த பெறுமதியான    நூல்களும்    இதழ்களும்   எரிந்து   சாம்பராகியுள்ளன. தாமரைச்செல்வியும்    தனது    இலக்கிய படைப்புகளுக்கு   பெற்ற நற்சான்றிதழ்கள்    மற்றும்    பரிசுப்பொருட்களையும் கையெழுத்துப்பிரதிகளையும்    இழந்துள்ளார்.

ரதி தேவி   என்ற  இயற்பெயர்    கொண்ட    இவர்  வன்னி  நிலத்தின் குளங்களில்   மலரும்  தாமரைகளை  தினம்தினம்  ரசித்தமையின் பலன்தான்  ஈழத்து  இலக்கிய  உலகிற்கு   ஒரு   தாமரைச்செல்வி கிடைத்தார்   என்றும்   நான்  நினைத்திருக்கின்றேன்.

 தாமரைச்செல்வியின்   எளிமையான  இயல்புகள்  போற்றத்தக்கவை. அதிர்ந்து  பேசத்தெரியாதவர்.    விவசாய  மக்களினதும் போர்க்காலத்தில்    இடம்பெயர்ந்தவர்களினதும்    வாழ்வை  அருகிருந்து   பார்த்துஅவரவர்  இயல்புகளுடனேயே   உயிர்ப்புடன் படைப்பிலக்கியமாக்கியவர்    இந்த  வன்னியாச்சி.

வன்னி  மக்களின்  ஆத்மாவை   பிரதிபலித்ததால்  மாத்திரமன்றி தற்பொழுது  பேரக்குழந்தைகளையும்  அவர்  கண்டுவிட்டதால் அவரை  எமது  ஈழத்து  இலக்கிய  உலகின்  வன்னியாச்சி  என்றே அழைக்கின்றேன்.

letchumananm@gmail.com




No comments:

Post a Comment