Monday, 5 October 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 17 - சுவர்க்கத்தில் நிட்சயமாகும் கலியாணங்கள்

 


நான்கு வாரங்களின் முன்னர் அன்ரி வீட்டில் பட்ட கசப்பான அனுபவம் இன்னும் நதியாவைவிட்டு அகலவில்லை. அது அவளுக்கு ஓர் அற்ப விடயம். அதைவிடப் பெரிய கலாச்சாரப் புனிதத்தை உதைக்கின்ற சுமையை அவள் தலைக்குள் காவுவதுதான் அமிருக்கும் பிடிபடவில்லை.

                நதியாவின் போக்கை உணரமுடியாத அமிர் அவளின் கடவைச் சீட்டையும் விமான ரிக்கற்றையும் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி, அன்ரியின் வரவேற்பறையில் குரங்கு-பொம்மையைப் பார்த்து யோசித்தபடி இருந்தான். நதியாவை எண்ணும் பொழுதெல்லாம் கூடவே கில்லாடியின் உச்சி மொட்டந்தலை, அதன் அடிப்பாகத்தில் கிடக்கும் கத்தை கத்தையான மயிர், அவனது சிவந்து வெறிக்கும் கண்கள், அவனது யாழ்ப்பாணக் கொலைகள் கொடூரங்கள் - அவைகளே அமிருக்குத் தெரிந்தன. எனினும் நக்கினார் நாவிழந்தார் போல நதியா வா என்றால் வாய்திறவாது வாலாட்டுவதும், செய்யென்று சொல்லிமுடிக்க முன்னே பாய்ந்து எழுவதுமான ஒரு மந்திரக் கூட்டுக்குள் அவன் சிக்கியிருந்தான்.

                 இன்னொரு புறத்தில் கடந்த ஒரு மாதமாக ஜீவிதா பட்டும் படாமலும் நடந்து கொள்வதும், முதல் நாள் பிளெசற் பூங்காவில் சந்திப்பதாகக் கூறிவிட்டு சந்திக்காமல் விட்டதும் அவனின் அமைதியைக் குலைத்தன. இது அவள் சொன்னபடி சந்திக்காமல் விட்டது மூன்றாவது தடவை. அவனுக்கு அது ஏனென்று புரிய மறுத்தது.

                அப்பொழுது ரெலிபோன் மணி கிறீங் கிறீங் என்று கூவி அழைத்தது. அமிர் றிசீவரை எடுத்து ஹலோ அமிர் பேசுகிறேன். யார் பேசுகிறது?" என்றான்.
ஹலோ, நதியா பேசுகிறேன். பதினொன்றரை மணி ஆகிவிட்டது. அந்தக் கிழட்டுக் கழுகு இப்போ வீட்டில் நிற்காதே? கோவிலுக்குப் போயிருக்குமே?" அவள் ரெலிபோனின் மறுபக்கத்தில் நின்று கூறினாள்.

                அவள் கிழட்டுக் கழுகு என்று குறிப்பிட்டது அன்ரியை என்பது அமிருக்கு விளங்கியது. அவன் சிரித்தபடி சொன்னான்.

ஹலோ நதியா, நீ சொன்னமாதிரியேதான். அன்ரி கோவிலுக்கு உண்டியலோடு போய்விட்டார்."
நல்லது. அமிரண்ணா, இந்தியாவுக்கு விமானப் பயணத் திகதியை உறுதிசெய்து போட்டீங்களோ?"
ஓம். பிளைய்ற்நாளை மாலை 3.30க்கு. மும்பாய் போய் அங்கிருந்து சென்னைக்கு வேறு பிளேன்எடுக்கவேண்டும்."
சரி. நீங்கள் வீணாக மண்டையைப் போட்டு உடைக்காதையுங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும். கலவரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துப் போடாதையுங்கள். உங்கள் முகம் காட்டிக் கொடுத்திடும். கவனம் அமிரண்ணா."
ஹலோ நதியா."
ஹலோ, நான் லைனிலே நிற்கிறேன். சொல்லுங்கோ."
எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது. கில்லாடியும் கூட்டாளிகளும் எப்போ அயர்லாந்திலிருந்து திரும்புகிறார்கள்? தெரியுமா உனக்கு?"
நேற்றுக் காலையில் போனவர்கள். நாங்கள் பயப்படத்தேவை இல்லை. நாளைக்கு நள்ளிரவுக்கு முன்னர் அவர்களால் திரும்பி வரவேமுடியாது. ........... ஹலோ. ஹலோ அமிரண்ணா நான் லைனிலே நிற்கிறேன்."
ஹலோ நதியா. நிட்சயமாகத் தெரியுமா நாளை இரவுக்கு முன்பு வரமாட்டார்கள் என்று?"
ஓம். நீங்கள் வீணாகப் பயப்படுகிறீர்கள். நீங்கள் வீட்டில் நில்லுங்கள். உங்களோடு நேரே கதைக்கவேண்டும். நான் அங்கே வருகிறேன்."
இப்பவே வரப் போகிறாயா?"
ஓம். நான் பதினைந்து நிமிடத்திலே அன்ரி வீட்டில் நிற்பேன். எல்லாம் நேரே சொல்கிறேன்."

                நதியா தடம் தப்பி ஓடுகிறாள் என்பது அமிருக்குப் புரியத் தொடங்கியது. அது ஏன் என்பதும், அவள் அதுபற்றி எதையும் சொல்லாது தவிர்ப்பதும் அவனுக்கு மனதில் கிலேசத்தை உருவாக்கியது. தன்னோடு அவ்வளவு நெருக்கமாகப் பழகியும் அவள் தான் இந்தியாவுக்குப் போவதற்கான காரணத்தைச் சொல்லாமல் இருப்பதை அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவளுடைய தவறான நோக்கத்துக்குத் தானும் உடந்தையாக இருப்பது போல அவனுக்குப்பட்டது. ஆனால் அவளுக்கு எதிராகச் செயற்படவோ பேசவோ முடியாதளவுக்கு அவன் அவளுக்குக் கடமைப்பட்டிருந்தான். கர்ணனைப் போல செஞ்சோற்றுக் கடனை மறக்க அவனது இரத்தம் மறுத்தது. மேலும் அடிக்கடி கில்லாடியும் அவன் கூட்டாளிகளும் அவனது புறக்கண்களில் நின்று வெறித்துப் பார்த்து துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினர். அவன் மனம் 'நாம் தற்செயலாக அவர்களிடம் சிக்கினால்?” என்று மீண்டும் மீண்டும் உச்சாடனம் பண்ணி நடுங்கியது. பயந்து மிரண்ட அமிரைக் கதவு மணிச் சத்தம் அழைக்க, அவன் எழுந்து சென்று கதவைத் திறக்க நதியா வேகமாக உட்புகுந்தாள்.

                அவளது தோளில் ஒரு பை தொங்கியது.

                நதியா அணிந்து வந்த, மார்புப் பக்கத்தில் பின்னல் வேலைப்பாடமைந்த சிவப்பு ரி-சேட்டும், தேகத்தோடு ஒட்டிய கருநீல ரவுசரும் மட்டுமல்லாமல் அவளின் தங்க மாலையில் பிடித்து அசைந்த பதக்கத்தின் சிவப்பு இரத்தினக் கல்லின் மாயப் புன்னகையும் அமிரின் கண்களை நிறைத்தன. அந்தக் கலவரச் சூழலுக்குள்ளும் அவளின் சுந்தர ரூபம் அவனை அதற்கு முன்னரிலும் வெகுவாகக் கவர்ந்தது. 'அழகு வழிகிறது. கவர்ச்சி பொங்குகிறது. தேவதை மாதிரி இருக்கிறாள். ஜீவிதா பிச்சைவாங்கவேண்டும்என்று மனம் எடைபோட்டது.
               
                அப்பொழுது நதியாவின் தோள்பை கதவோடு நசிய அதன் உள்ளிருந்த புலிப் பொம்மை உறுமியது. இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

புலி பாயப் போகிறது நதியா?”
இன்னும் வேட்டை ஆடத் தொடங்கவில்லை. களத்தில் இறங்கியதும் பாயும்.
என்ன மிருகத்தை வேட்டை ஆடும்? மானையா மரையையா?”
இல்லை. சிங்கத்தை.

                அமிர் ஓவென்று சிரித்தான். நதியா சிரிக்கவில்லை. ஏன்?
 
                வரவேற்பறைக்குள் சென்று இருவரும் சோபாவில் அமர்ந்தனர். நீண்ட சோபாவில் அமிரின் அருகே இருந்த நதியா கண்வாங்காமல் அவனது நடு உச்சி பிரித்து வாரிய கேசத்தையும், எடுப்பான மூக்கையும் பார்த்தாள். பின்னர் அவனது கம்பீர தோற்றத்தில் அவள் தன்னை மறப்பது அமிருக்குப் புரிந்தது. மேலும் நெருக்கமாக இருந்தபடி அவள் சொன்னாள்.
அமிரண்ணா, நான் இன்றைக்கு உங்களோடு நிரம்பக் கதைக்கவிருக்கிறேன்."

                அவளின் நடத்தையை அவனால் புரியமுடியவில்லை. தள்ளி இரு என்றும் அவனால் சொல்ல முடியாது. அவன் அவளுக்குக் கடமைப்பட்டவன்.
அன்ரி வந்தால் ஆபத்து. நாங்கள் பிளெசற் பூங்காவிற்குப் போய்க் கதைப்N;பாம்." அமிர் ஆலோசனை கூறினான்.
நீங்கள் ஒரு பயந்தான் கொள்ளி. இன்றைக்கு வெள்ளிக் கிழமை. இரண்டு மணிக்கு முன்னர் அவர் வரமாட்டார். கோவில் கிரியைகள் முடிய 1.00 மணியாகும். பிறகு உண்டியல் குலுக்க அரை மணிநேரம். தாண்டித் தாண்டிக் கிழவி வந்து சேர இரண்டரை மணியாகும். இப்ப 12.00 மணிதானே?"

                அமிருக்கு என்னவோ பயமாகவே இருந்தது. சோபாவைவிட்டு எழுந்து போய் யன்னல் சிவப்புத் திரைச் சீலையை நீக்கிக் கண்ணாடி ஊடாக வீதியைப் பார்த்து அன்ரியின் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தான். அமரும் பொழுது அவனது கால் அவளின் காலில் பட்டது. குனிந்து பார்த்தான். அவள் தன் காலை இழுக்கும் பொழுது அவளது கணுக்காலை நிறைத்த தங்கக் கொலுசுகள் மின்னிச் சிரித்தன. நதியா அவனை ஏறவிறங்கப் பார்த்தாள்.

ஏன் நதியா நீ உன்னுடைய அக்காவைப் பார்ப்பதற்காக இந்தியாவிற்குப் போவதாகச் சொல்லிப்போட்டுப் போனால் என்ன? நிட்சயமாக கில்லாடி மறுப்புச் சொல்ல மாட்டார்."
உங்களைவிட கில்லாடியை எனக்கு நன்கு தெரியும்."
அமிர் நதியாவை முறைத்துப் பார்த்தான். அவள் தனது கணவனின் பெயரைச் சொல்லக் கேட்டது அவனுக்குக் கட்டெறும்பு போலக் கடித்தது. அவள் தமிழ் கலாச்சாரக் கோலத்தைக் கொச்சைப்படுத்துவதாக ஒரு தவிப்பு.

அமிரண்ணா, நீங்கள் குழம்புகிறதோடு என்னையும் குழப்புகிறீர்கள்."
நதியா உனக்குப் புத்தி சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உனது உப்பைத் தின்றதற்காக நீ தவறான திசையில் ஓடும் பொழுது உன்னோடு சேர்ந்து நானும் ஓடுவதும் அல்லது மௌனியாக இருந்து நீ ஓடுவதை நான் பார்ப்பதும்  அதர்மத்துக்குத் துணைபோவது போன்றதுதான். கில்லாடி உன்னை நேசிக்கிறார். கில்லாடி உன்னை நம்புகிறார். அந்த மனிதர் தன் உயிரையே உன்மீது வைத்திருக்கிறார். உனது மகிழ்ச்சிக்காக அவர் மலையையும் சுமப்பார் கடலையும் தாண்டுவார்."
வேறென்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" அவள் எதுவித கலவரமும் இல்லாமல் கேட்டுவிட்டு சுவரைப் பார்த்தாள்.
நான் ஸ்கொற்லன்ட் யாட்டிலிருந்து வந்த மூன்றாம் நாள் தொடக்கம் நீ ஏன் கோலம் மாறுகிறாய் என்று தொடர்ந்து கேட்கிறேன். காரணத்தைச் சொல்லாமல் காலத்தைக் கடத்துகிறாய்."
நான் இறுதியில் எல்லாம் தெளிவாகச் சொல்கிறேன் என்று எத்தனை தடவைகள் கூறிவிட்டேன். இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் பொறுங்கள். நாளைக்கு விமானத்துள் காலடி வைக்கமுதல் எல்லாம் சொல்லி முடிக்கிறேன்."

                அவனுக்கு அவள் சொல்வது குழப்பமாக இருந்தாலும் அவளுக்காக அவன் இரங்கினான். அவளுக்குப் பதினெட்டு வயசு முடிய இன்னும் நான்கு கிழமைகள் இருந்தன. அனுபவம் போதாது. அதைவிட அவள் லண்டனில் தனி மரம். அவனுடைய ஆதங்கம் எல்லாம் தானும் அவளது பேதலிப்புக்கு உடந்தை ஆகிவிட்டோமோ என்பதுதான்.

                அவன் எண்ணம் வேறு திசையில் திரும்பியது. அவளிடம் நீண்ட காலமாக வினாவுவது சரியோ என்று தயங்கிய பிறிதொரு விடயம் தொடர்பான கேள்வியைக் கேட்க அவன் மனம் துடித்தது. ஒருவேளை அவளது மன மாற்றத்துக்கு அங்குதான் காரணம் கிடைக்குமோ என்று எண்ணினான்.

நதியா, நான் உன்;னிடம் ஒரு முக்கிய விடயம்பற்றிக் கேட்க விரும்புகிறேன். குறை நினைப்பியோ என்று பயமாக இருக்கிறது."
நான் என்றும் உங்களைக் கோபித்ததில்லை. தயங்காமல் கேளுங்கள். என்ன விடயம்?"
உன்னுடைய விவாகம் சம்பந்தமானது. அது ...... காதல் திருமணமா ....?"

                அவள் ஓவென்று சிரித்தாள். தொலைக் காட்சிப் பெட்டியின் மேலிருந்த கறுப்புக் குரங்கு-பொம்மையைப் பார்த்தாள். அதன் மூஞ்சி பதினாறு கோணங்களில் நெளிவது போல அவளுக்குப் பட்டது.

எனது கலியாணம் பேசி ஒழுங்கு செய்தது. நீங்கள் எனக்கும் கில்லாடிக்கும் எப்படி விவாகம் நடந்தது என்ற தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள், இல்லையா அமிரண்ணா?"
ஓம் நதியா.."
நீங்கள் எப்போதாவது இணுவில் கிராமப் பக்கம் போயிருக்கிறீர்களா?"
ஓம். என்னுடைய உறவினர் அங்கு வாழ்கிறார்கள். புகையிலைத் தோட்டங்கள். பெண்களுக்கென பெரிய வைத்தியசாலை. அதன் ஓரத்தே ஒரு சந்தை. அங்கு ஒரு சினிமா கொட்டகையும் இருக்கிறது. அதன் பெயர் மறந்து போய்விட்டது. வந்து ....."
காளிங்கன் தியேட்டர்" என்று நதியா சொன்னாள்.
ஓம் காளிங்கன். நான் அங்கு இரண்டோ மூன்று தடவை சினிமா பார்த்திருக்கிறேன்."
அமிர் அண்ணா ..........."
ஏன் நதியா இன்றைக்கு அடிக்கடி அமிரண்ணா அமிரண்ணா  என்று அடைமொழி வைத்துப் பேசுகிறாய்?"
நான் யார் நீங்கள் யார் என்பதில் உள்ள தூரம் நிரம்ப என்பதையும் அதேவேளை அது குறிக்கும் தூரம் நிரம்ப இல்லை என்பதையும் அது குறிக்கிறது, இல்லையா அமிரண்ணா?" என்று கூறிய நதியா சோபாவைவிட்டு எழுந்து அவன் முன்னே நின்று குனிந்து உரத்துச் சிரித்தாள். அப்பொழுது அவளின் கழுத்துத் தங்க மாலையில் தொங்கிய இலை போன்ற சிவப்பு இரத்தினக்கல் பதித்த பதக்கம் ஆனந்த நடமிட்டு அமிரைப் பார்த்தது. பின்னர் அவள் அமிரின் வெள்ளைச் சேட் பையில் பின்னல் செய்திருந்த றோசா மலரை ஆட்காட்டி விரலால் தொட்டு மெதுவாகத் தடவிப்பார்த்தாள். அந்தக் கை விரல்களில் வைரக்கல் மோதிரங்கள் மூன்று. அவை அமிரைப் பார்த்துப் புன்னகை புரிந்தன. அந்தக் குரங்கு பொம்மையைப் பார்த்தான். அது அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது. எரிச்சல் பற்றிக்கொண்டு வர மனதை அடக்கிக்கொண்டு வினாவினான்

நதியா நீ கொஞ்ச நாட்களாகத் தத்துவம் பேசுகிறாய். என்னால் வரவர உன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சரி அதைவிட்டுப் போட்டு நான் கேட்டதற்குப் பதிலைச் சொல்லு."
என்ன கேட்டீர்கள்? ஓ எங்கள் குடும்பம் பற்றி, இல்லையா?"
ஓம்."
எங்களுடைய பூர்வீகம் இணுவில். அப்பா கமக்காரர்களின் தோட்டத்திலே கூலி வேலை. வேலை நித்தமும் கிடைக்காது. கிடைக்காவிட்டால் எங்கள் வீட்டு அடுப்புக்கும் வேலை இருக்காது. அடுப்பில் பூனை தூங்கும். "
உங்கள் வீடு ......?" அவன் கேள்வியை முடிக்கவில்லை.
அது வீடில்லை. அது ஒரு ஒற்றை அறை ஓலைக் குடிசை. படுக்கை, படிப்பு, சமையல் சாப்பாடு, ஓய்வு எல்லாம் அந்த ஒரே அறையில்தான். அந்தக் குடிசை அமைந்திருந்த நிலங்கூட ஒரு கமக்காரனுக்குத்தான் சொந்தம். அரசினால் கைவிடப்பட்ட, மனிதனால் ஒதுக்கப்பட்ட நலிந்த கூட்டம் நாங்கள். அது தெரியுமோ உங்களுக்கு?"

அவன் கதையின் நெடுஞ்சாலையை மாற்றினான்.
அதைவிடு நதியா. அதெப்படி வீமன்காமக் கொலனி வாசி கில்லாடிக்கும் உனக்கும் திருமணமாகியது. முன்பின் சொந்தமோ?"
சொந்தமுமில்லைப் பந்தமுமில்லை. நாங்கள் குடியிருந்த நிலத்து கமக்காரன்தான், பாவம் பார்த்து ஒழுங்குபடுத்தினவர். கறுப்புநரிகள் இயக்க கூட்டங்கள் என்றால் எனக்கு தேன் மாதிரி. கறுப்பு நரிகளைப் போல இனவிடுதலைக்கு போராடவேண்டும் என்ற வெறி எனக்கு. நான் இயக்கத்தில் சேர்ந்து விடுவேனோ என்ற பயம் எங்கள் வீட்டில். கறுப்புநரி இயக்க மாலதி அக்காவை உங்களுக்கு தெரியுமோ? அவவுக்கு மாங்காய் என்றால் சரியான விருப்பம். அவவோடு மாங்காய் பிடுங்க நான் திரிவதையும், நான் இயக்கத்தில் சேரப் போகிறேன் என்றும் யாரோ வீட்டில் சொல்லி விட்டார்கள். அப்பா தனது பயத்தைக் கமக்காரனுக்கு சொல்ல, அவர் ஒரு தரகனைப் பிடித்து பேசிச் செய்ததுதான் என்னுடைய அவசரக்  கலியாணம்."
தரகர் கலியாணமா? அந்த நாரதர் உங்கள் வீட்டுக்கு வந்து கில்லாடியைப் பற்றி நன்றாகக் கதை அளந்திருப்பாரே?"
ஓ. மாப்பிள்ளை பெயர் கில்லாடி என்று சொல்லவில்லை. கனகன் என்றுதான் சொன்னவர். கனகன் லண்டனில் நல்ல பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார். இரண்டு வீடு, இரண்டு கார் வைத்திருக்கிறார். கோடிப் பிரபு. அவர் தனது காசிலே பெம்பிளையை லண்டனுக்குக் கூப்பிட ஆயத்தம். ஆனால் பெம்பிளை அழகாகவும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார் என்று சொன்னவர்."
                சிறிது நேரம் வரவேற்பறை வாசலைப் பார்த்துக்கொண்டிருந்த அமிர் திரும்பி நதியாவின் வெள்ளைக்கல் தோட்டில் தொற்றி அசைகின்ற தொங்கட்டானைப் பார்த்தபடி கேட்டான்,
நதியா, அந்தத் தரகர் கில்லாடியின் வயது மற்ற விடயங்கள் பற்றி எதுவும்  சொல்லவில்லையா?"
சொன்னவர். கனகனின் வயது இருபத்தைந்து. அத்தோடு அவரின் ஒரு புகைப்படமும் தந்தவர். அதில் அவர் கோட் ரவுசர் அணிந்து ரை கட்டியிருந்தார். தலை நிறைந்த முடிவேறு. அம்மா மயங்கிவிட்டார். எங்கள் கமக்காரனின் மகனைப் போல பெரிய நிருவாக உத்தியோகம் என்று நம்;பிக் கலியாணத்தை முடிக்க அவதிப்பட்டார்."
நீங்கள் விசாரிக்கவில்லையோ?"
அப்பா ஓடி ஓடிக் கனகன் என்ற பெயரைச் சொல்லி லண்டனிலே விசாரிப்பித்தார். அப்படி ஒரு ஆளைத்தெரியாதென்ற பதிலே அவருக்குக் கிடைத்தது. நாட்கள் நகர்ந்தன. தரகன் 'விருப்பமில்லாவிட்டால் சொல்லுங்கள் வேறு இடத்திலே கேட்கிறார்கள்' என்று நெருக்கினார்."
அம்மாவுக்கு கோட்டும் சூட்டும் போட்ட லண்டன் மாப்பிள்ளை தவறப் போகுது என்ற பயம் தொட்டது. விசாரித்தது போதும் ஓம் என்று சொல்லுங்கோ என்று அப்பாவை நெருக்கி ஒற்றைக் காலிலே நின்றார்."
யாழ்ப்பாணத்து அம்மாமாருக்கு தமது மகளின் வாழ்விலும் வரப் போகிற மருமகனுடைய அந்தஸ்திலேதான் அக்கறை அதிகம்."
அம்மா மட்டுமல்ல அந்தக் கமக்காரனும் சந்தர்ப்பத்தைத் தவறவிடவேண்டாம் என்று அப்பாவுக்கு ஓதினார். பிறகென்ன என்னை ஏற்றுமதி செய்கின்ற வேலை தடல்புடலாக நடந்தது. அந்தக் கமக்காரன்தான் எனக்கு ஒரு ஒன்றரைப் பவுணிலே ஒரு தங்கச் சங்சிலி தந்தார். என்னிடம் ஒரு கிலிட்டுச் சோடித் தோடு காதிலே கிடந்தது. அதைக் கழற்றி மினுக்கி அணிந்தேன். மூன்று சோடி காப்பு - எல்லாம் கண்ணாடிக் காப்புகள். மூன்று சோடி பழைய உடுப்பு. அதை வடிவாகத் துவைத்து எடுத்தேன். அம்மா ஒரு சோடி றப்பர் பாட்டா சிலிப்பர் எங்கோவிருந்து கொண்டு வந்து தந்தார். அதன் ஒரு செவி அறுந்திருந்தது. அதனை அப்பா சரிப்படுத்தித் தந்தார். பக்கத்து வீட்டார்; உபயமளித்த பழைய சிறிய பேக் எனது கையில். எனது பிரயாணம் ஆரம்பித்தது."
வழியனுப்ப அப்பா அம்மா கொழும்புக்கு வந்தார்களா?"
அவள் சிரித்துவிட்டுச் சொன்னாள்.
இல்லை."
அந்த தரகன்தான் கொழும்புவரை வந்து வழி அனுப்பினார், இல்லையா?" என்று அமிர் கேட்டான்.
இல்லை."
வேறு யார் வந்தார்கள்?"
அப்பாவுக்குக் கொழும்பில் யாரையும் தெரியாது. கொழும்புக்கு வந்து வழியனுப்ப வசதியுமில்லை. அந்தக் கமக்காரன்தான் கொழும்புக்குக் கூட்டிவந்து தனது மகனின் வீட்டில் ஒரு மாதம் தங்க வைத்திருந்து தன்னுடைய பேத்தி அணிந்த ஒரு கண்ணுக்குப் பார்வையான பழைய நீலச் சட்டையும் பச்சைப் பாவாடையும் தந்து, லண்டனுக்கு அனுப்பினவர்."

                அமிரை ஆவரங்கால் அன்ரியின் ஞாபகம் உதைத்தது. திடீரெனச் சோபாவைவிட்டு எழுந்து நீண்ட காலை எட்டி வைத்து யன்னல் ஓரம் சென்று சிவப்புத் திரைச் சீலையை நீக்கிக் கண்ணாடி ஊடாகப் பார்த்தான். நடைபாதையில் அன்ரி இல்லை. அங்கு நின்றபடியே நதியாவுக்குக் கூறினான்
நதியா, நான் இங்கே யன்னல் ஓரம் நின்று அன்ரி வருகிறாவோ என்று பார்க்கிறேன். நீ கதையைச் சொல்லு."
நான் லண்டன்-ஹீத்றோ விமான நிலையத்தில் வந்து இறங்கினேன்."
வந்ததும் கில்லாடியை அடையாளம் கண்டாயா?" யன்னல் ஓரம் நின்றபடியே அமிர் கேட்டான்.
இல்லை. அவர் என்னைக் கண்டதும் ஓடிவந்து என் முன்னே நின்று சிரித்தார். அரசநீல கோட் ரவுசர் அணிந்து ரை கட்டியிருந்தார்."
பிறகு?"
தரகன் எனக்குத் தந்த கனகனின் புகைப் படத்தைக் காட்டி 'இவரைத் தெரியுமாஎன்று நான் கேட்டேன்."
கில்லாடி என்ன சொன்னார்?"
ஒன்றும் சொல்லாமல் சிரித்தார்."
பிறகு?"
நான் இந்தப் புகைப்படத்தின் சாயல் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் அவருக்கு என்ன முறை என்று கேட்டேன்."
பதில் சொன்னாரா?"
பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்தார். அவரின் வயது நாற்பத்தைந்துக்கு மேல் தெரிந்தது. ஒரு வேளை உறவினரோ என்று எண்ணி கனகனின் சித்தப்பாவா?” என்று கேட்டேன்."
என்ன பதில் கிடைத்தது?"
அதற்கு அவர் 'நான்தான் கனகன். என்னை இங்கு எல்லோரும் கில்லாடி என்றே அழைப்பார்கள். எனக்கு லண்டனில் சொந்தபந்தம் யாரும் இல்லைஎன்று சொன்னார். அந்த வார்த்தைகளை நம்பாத நான் அங்கும் இங்கும் பார்த்தேன். அப்பொழுது கில்லாடி 'உங்களுக்குத் தரகன் எனது இரண்டு படங்களையும் தரவில்லைப்போல. நான் இரண்டு படங்கள்; கொடுத்திருந்தேன். ஓன்று அண்மையில் எடுத்தது. மற்றது இருபத்தொரு வருடங்களுக்கு முன்னர் எடுத்ததுஎன்று கூறினார். அதனைக் கேட்ட என்னால் 'நீ .....' என்ற வார்த்தைளுக்கு மேல் எதுவும்பேச முடியவில்லை. அவரை நான் மீண்டும் பார்த்தேன். கனகனின் சித்திரம் எனது முதுகெலும்புகளை அடித்து முறித்து நொருக்கியது. அவன் கண்கள் என்னை விழுங்கின. பின்னர் அவர் 'வாரும் போவோம்என்றார்."
அதன் பின்னர் கில்லாடியோடு கூடப் போயிருப்பாய், இல்லையா?"
இல்லை. நான் கில்லாடியை மேலும் கீழும் பார்த்தபின் 'உண்மையில் நீங்கள் யார்என்றேன்? அவர் தனது கோட் பையிலிருந்த ஒரு புகைப் படத்தை எடுத்து 'இதோ நீங்கள் தரகனுக்குக் கொடுத்த உங்கள் புகைப் படம்என்று சொல்லி எனது புகைப் படத்தைக் காட்டினார். என் தலை பம்பரமாகச் சுழன்றது. கண்கள் ஓவென்று மாரி மழை பொழிந்தன. நான் சற்று தூரச் சென்று ஒரு கதிரையில் அமர்ந்தேன்."

                நதியா கதையை நிறுத்திவிட்டு குரங்கு-பொம்மையைப் பார்த்தாள். அது தலையில் கைவைத்தபடி இருந்தது.

                அவள் கண்கள் குளமாகின. தழுதழுத்த குரலில் சொன்னாள். லண்டன் மோகம் என் இயக்க வெறியை மறைத்தது. நான் யாழ்ப்பாணத்திலிருந்து கட்டிச் சுமந்து வந்த மனக் கோட்டைகள் எல்லாம் இடிந்து ஹீத்றோ விமான நிலையத்தில் கூச்சல் போட்டபடி கொட்டுப்பட்டன. சற்று முன்னர் சுவர்க்கலோகம் போலத் தெரிந்த விமான நிலையம் என் ஆனந்த வாழ்வை நாசம் செய்ய வந்த நரகம் போல மாறியது. எனது இதயம் புரட்சி செய்தது. எனது கண்கள் கனகனை வெறுத்து நிராகரித்தன. எனது மனம் அடம்பிடித்தது. விடைகாண முடியாத துயரில் தலையை இருகைகளாலும் பொத்திப்பிடித்து அழுதேன்."

கில்லாடியின் கூட்டாளிகளும் வந்திருப்பார்களே?" என்று அமிர் வினாவினான்.
ஓ வந்திருந்தார்கள். ஒவ்வொருவராக வந்து கில்லாடியோடு செல்லும்படி புத்திமதி கூறினார்கள். நான் மறுத்தேன். அங்கு வேறு ஒருவன் வந்தான். இளமையாகவும் அழகாகவும் இருந்தான். ஒரு காதிலே ஜிப்சி அணிந்திருந்தான். அவன் தான் என்னை விவாகம் செய்வதாகவும் தன்னோடு வரும்படியும் கேட்டான். 'அதெப்படி ஒருவனின் பணத்தில் லண்டன் வந்து இன்னொருவனுக்கு கழுத்தை நீட்டுவது?” என்று நான் மறுத்தேன். நான்கு மணி நேரம் என் மனம் போர் நடத்தியது. போரில் நான் தோற்றேன். லண்டன் ஹீத்றோ விமான நிலையத்தில் அப்பொழுதுதான் கால் பதித்த நான் வேறு முடிவை எடுக்க முடியுமா? அம்மா அடிக்கடி கூறும் வார்த்தைகள் காதில் எதிரொலித்தன. 'கலியாணம் எம் கையில் இல்லை. அது சுவர்க்கத்தில்தான் நிட்சயிக்கப்படுகிறது. கலியாணம் சுவர்க்கத்தில்தான் நிட்சயிக்கப்படுகிறதுஎன்ற காலத்தினால் அழிக்க முடியாத மந்திர வாசகம் என் மன உறுதியை தகர்த்தெறிந்தது. நான் எழுந்து கில்லாடி இருந்த இடத்துக்குப் போய் அவர் முன் நின்றேன். அவர் சிரித்தார். எனக்குச் சிரிப்பு வரவில்லை. ஆனால் நான் சிரித்தேன். வரச் சொன்னார். எனக்குப் போகமனமில்லை. கால்கள் முரண்டுபிடிக்காமல் நடந்தன.

                கில்லாடியின் கார் ஹீத்றோ விமான நிலையத்தைவிட்டுப் புறப்பட்டது. நான் அவரின் பக்கத்தில் முன் ஆசனத்தில் இருந்தேன். புதுக் கார். புதிய அனுபவம். வாழ்க்கையில் அதன் முன்பு நான் காரில் ஏறியதில்லை. அதுவும் முன் ஆசனத்தில். எங்கும் கார்கள். பிரமிக்க வைக்கும் நெடுஞ்சாலைகள். அவை நிறைந்து வழியும் வாகனங்கள். மேம் பாலங்கள். எங்கும் பாரிய பாரிய கட்டடங்கள். கனவுலகில் மிதப்பது போலவிருந்தது. என் மனக் கனதி மெதுவாகக் குறைவதை என்னால் உணரமுடிந்தது."

                அவள் கதையை நிறுத்தினாள். யன்னல் சிவப்புத் திரைச்சீலை நீக்கல் ஊடாகப் பார்த்து அன்ரி வருகிறாவோ என்று காவல்புரிந்த அமிர் நதியாவைத் திரும்பிப் பார்த்துக் கதையைத் தொடரும்படி சைகை செய்தான். அவள் மீண்டும் தொடர்ந்தாள்.

                “அவரோடு கூடவே வீட்டுக்குள் புகுந்தேன். தெய்வலோகத்தில் கால் வைத்தது போலவிருந்தது. ஓலைக் குடிசையில் சாணி மெழுகிய தரையில் முழங்கால்களை இரு கைகளாலும் வளைத்துப் பிடித்துக் குந்தி இருந்த எனக்காக பஞ்சணை மெத்தைச் சோபாக்கள் தேவதைகளால் தரையிறக்கம் செய்யப்பட்டது போலவிருந்தது. பெரிய கலர் ரி.வி. ஒன்று. அதில் தமிழ்ப் படம். அது அவருடையது என்ற எண்ணம் எனக்குப் பெருமிதமாக இருந்தது. தினம் தினம் சொந்த ரி.வியில் சினிமாப் படம் பார்க்கக் கிடைத்த பாக்கியத்தை எண்ணியபோது உள்ளத்தில் ஒரு பேரானந்தம். அதுவரை என் உள்ளத்தை வருடிய அருவருப்புகள் எப்படி என்னைவிட்டு மறைந்தனவோ தெரியாது. நான் விமான நிலையத்தில் நடந்ததை எண்ணி என்னையே கடிந்தேன்."

                அவள் அத்தோடு நிறுத்திவிட்டு யன்னல் ஓரம் காவல் நின்ற அமிரைப் பார்த்தாள். அவன் சொன்னான். சொல் நதியா. பிறகு என்ன நடந்தது? வீட்டில் வரவேற்பு எப்படி?"
அவருடைய நண்பர்கள் பலர் வந்தார்கள், வாழ்த்தினார்கள். எனக்கும் வாழ்த்துச் சொன்னார்கள். வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். பன்னாடை வைத்து ஊதி அடுப்புப் பற்ற வைத்த நான் அங்கு ஒரு மாயாஜால உலகத்தைக் கண்டேன். அவை எல்லாம் சேர்ந்து என் கவலைக்கு வாழ்த்துச் சொல்லி வழியனுப்பின."

                நதியா தனது சிவப்பு பிளவுசின் கீழ் விளிம்மைப் பிடித்து கீழே இழுத்தபின் நிமிர்ந்து சோபாவில் இருந்தாள். அப்பொழுது அமிர்,
என்ன யோசனை? வெட்கமாக இருக்கிறதா? அடுத்து முதலிரவுக் காட்சிகள்தானே?" என்று கூறிவிட்டுச் சிரித்தான்.

                சிரிக்காத முதலிரவுகளும் உண்டு என்பது அமிருக்குத் தெரியாது. அவள் முகம் கருகியது. இருப்பினும் வாயைத் திறந்தாள்.
                “அது விசித்திரமான முதலிரவு. கேளுங்கள். படுக்கைக்குப் போனபோது நள்ளிரவாகிவிட்டது. கட்டிலில் ஒரு புதிய கமகம வாசனை. அதன் மேல் பட்டுப் போர்வைகள். தொடவே கூச்சமாக இருந்தது. செம்பாட்டுப் புழுதிபடிந்த கிழிந்த பனை ஓலைப்பாயில் கைகளைத் தலையணையாக வைத்து அடுப்போடு ஒட்டினாப் போல படுத்த என் மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது. ஆனால் என் மகிழ்ச்சி பத்து நிமிடமும் நிலைக்கவில்லை."
ஏன்?" அமிர் அந்தரப்பட்டுக் கேட்டான்.
அவர் சொன்ன பகடிக் கதையைக் கேட்டுச் சிரித்து நான் கட்டிலில்  புரண்டபொழுது அவர் தலையில் அணிந்திருந்த போலி முடி - டோபா - என் கையோடு வந்தது."
அதுவரை கில்லாடி டோபா போட்டிருக்கிறார் என்பதை நீ அவதானிக்கவில்லையா?"
இல்லை. 100 பவுண் டோபா அது. போலி என்பது தெரியவே இல்லை. நான் அவரைப் பார்த்தேன். எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. முடியில்லாத உச்சம் மொட்டந்தலை என்னை முறைத்துப் பார்த்தது. கீழ் மண்டையைச் சுற்றி கத்தை கத்தையாக நெளிந்தும் வளைந்தும் குத்தியும் நீண்டும் கிடந்த மயிர் என் குடலைப் பிடுங்கி எடுத்தது. அவர் அதை விரல்களால் கோதிக்கொண்டிருந்தார்."

                யன்னல் ஓரம் நின்ற அமிர் குரங்கு-பொம்மையைப் பார்த்தான். அது இரு கைகளாலும் கண்களைப் பொத்திக் கொண்டு இருப்பது போல அவனுக்குப் பட்டது.

                “இரவு முழுக்க அழுது கொட்டினேன். என் நெஞ்சு வெடிப்பதுபோல இருந்தது. எங்காவது ஓடிச்சென்று உயிரை மாய்த்தால் என்ன என்ற எண்ணம். விடியும் பொழுது கண்களில் வழிவதற்கு கண்ணீரே இல்லை. அம்மா அடிக்கடி மனக் கண்களில் தோன்றி 'கல்யாணம் சொர்க்கத்திலே நிட்சயிக்கப்படுகிறதுஎன்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்குத் தெளிவு பிறந்தது. நான் என் தலைவிதியை சுமக்க ஆயத்தமாகினேன்."
அமிர் யன்னல் ஓரம் நின்றபடி கில்லாடிக்கு உனது வேதனை புரியவில்லையா?" என்று வினாவினான்

                “தெரியாது. விடிந்து நீண்ட நேரம் கழித்தே படுக்கையால் எழுந்தேன். ஒரு யாழ்ப்பாணப் பெண் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமையை செய்யத் தொடங்கினேன். லண்டன் ஆடம்பரம் விரைவில் என் கவலைகளை எல்லாம் சுடடுப் பொசுக்கியது. மூன்றாம் நாள் முருகன் கோவிலில் எமது திருமணம். அவர் கார் லண்டன் நெடுஞ்சாலைகள் முழுவதும் என்னைக் காவிச் சென்றது. தினம்தினம் உடைகளும் நகைகளும் அள்ளிவந்து கொட்டினார். நான் என்னைப் போலக் கொடுத்து வைத்த வேறு பெண் இருக்க முடியாதென்ற இறுமாப்பில் இருந்தேன். சொர்க்கத்தில் என் விவாகம் பொன் எழுத்துக்களால்; செப்பமாக எழுதியிருக்கிறது என்று பூரித்தேன்."

                அவள் குரல் அடைத்தது. அவள் தன் கறுப்பு வரலாற்றை நிறுத்திவிட்டுத் தலையை இரு பக்கமும் மெதுவாக அசைத்தாள். அவள் தனக்கு ஏன் அப்படி ஒரு விதி ஏற்பட்டது என்பது புரியாமல் விம்மினாள்.

ஏன் உன் கதையை நிறுத்தி விட்டாய்? மிகுதியையும் சொல் நதியா."
நான்கு கிழமைகள் மட்டுமே நான் வானத்தில் வானம்பாடியாகப் பறந்தேன், சமுத்திரச் சந்தோசக் கடலில் ஆனந்தமாக நீந்தினேன். முடிவில் ஓர் இரவு நேரம் நடந்த கதைதான் என் இன்றைய பிரயாணத்துக்குக் கால்கோள் நாட்டியது. பிறகு ......."

                நதியா இறுதிக் கதையைச் சொல்லி முடிக்க முன்பே யன்னல் ஓரம் காவல் நின்ற அமிர்,

நதியா. அன்ரி, மகனின் காரிலிருந்து இறங்குகிறா. துலைக்கப் போகிறா," என்று பதைபதைத்துக் கூறியபடி ஓடி வந்து நதியாவின் கையைக் கெட்டியாகப் பிடித்து, அவளை இழுத்தபடி படிவழியே ஏறிச்சென்று தனது அறையில் கட்டிலில் நீட்டிப் படுக்க வைத்து, போர்வையால் மூடிச் சரியோ என்று மீண்டும் பார்த்தபின்னர் கீழிறங்கி வந்தான். அப்பொழுது அன்ரி கதவைத் திறந்து தனது வளைந்த காலை உள்ளே பக்குவமாக எடுத்துவைத்து எதிரே படிவழியே இறங்கி வந்த அமிரைப் பார்த்தார். அன்ரியின் உள் மனம் 'என்ன பெடியனின் முகம் பேயறைந்தது போலவிருக்கிறது?” என்று விசாரணை செய்ய அவரின் கண்கள் மேலே அமிரின் அறைக்கதவை நோட்டம் பார்த்தன. 

தொடரும்... 

No comments:

Post a Comment