Sunday 15 November 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்



கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 21 - பாவச்  சுமை

             கில்லாடியும் கூட்டாளிகளும் கைதாகி இரண்டு மாதங்களாகி விட்டன. சொலிசிற்றர் நாகப்பனுக்கே அவர்களை எங்கே பொலிஸ் சிறை வைத்திருக்கிறது என்பது தெரியாது.

            வானம் மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. மழை பொழியப் போகும் அறிகுறிகளே
முனைப்பாகத் தெரிந்தன. குளிர் காற்றின் கொடுமை லேசாகத் தலையை விரித்தது.

      சொலிசிற்றர் நாகப்பனின் அலுவலகத்துக்கு எதிர்ப்பக்கத்தில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்தில் பூமா நின்றாள். வீதியில் வாகனங்கள் நெருக்கமாக இரு பக்கமும் விரைந்துகொண்டு இருந்தன. அவள் சொலிசிற்றர் நாகப்பனின் அலுவலக வாயிலை நோட்டம் பார்த்தபடி நின்றாள். நண்பகலாகப் போகிறது. ஜீவிதா கடையில் உணவு வாங்க வெளியே வருவாள். ஏதாவது அவளிடம் பிடுங்கக்கூடிய இரகசியங்களை வழமைபோல அவள் கறக்கத் துடித்துக் கொண்டு நின்றாள். ஜீவிதா வேலைக்கு வரவில்லை. அது பூமாவுக்குத் தெரியாது. ஜீவிதாவுக்குத் தெரியாது பூமா தன்னிடமிருந்து நாகப்பனைப் பற்றியகிறிமினல்செய்திகளைச் சேரிக்கவே அங்கு அடிக்கடி வந்து போகிறாள் என்பது. இன்னும் பூமாவை அலுவலகத்துக்கு உள்ளே வரும்படி அழைத்தாலும் அங்கு செல்லாமல் ஏதாவது சாட்டுச் சொல்லி அவள் ஏன் தட்டிக் கழிக்கவேண்டும் என்பதை ஜீவிதா யோசித்துப் பார்த்ததில்லை.

             நாகப்பனின் அலுவலக வாயிலைப் பார்த்துக்கொண்டு நின்ற பூமாவின் கண்கள் வீதியின் மறுபக்கத்தில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்தில், ஒரு சிவப்பு இரட்டைத்தட்டுப் பேருந்து நிற்பதை அவதானித்தன. அந்த பேருந்து நகர்ந்த பொழுது அங்கு மூத்தானின் மனைவி, முப்பத்து மூன்று வயதுக் கொழுத்த மனுசி, வேகமாக சொலிசிற்றர் நாகப்பனின் அலுவலகத்தை நோக்கிப் போவதைக் கண்டாள். வழமையில் கொண்டையில் பூச் சுற்றிப் பட்டுச் சேலை கட்டியிருப்பாள். பூ இல்லை. ஒரு கசங்கிய நீலச் சேலை தெரிந்தது. அவளின் பின்னே அவளது கடைக்குட்டி மகள். கறுப்பு வெள்ளைக் கோடுபோட்ட கசங்கிய சட்டையில். அக்குழந்தை 'அம்மா அம்மாஎன்று அழுதபடி தாயின் பின்னே ஓடுவதை அவதானித்தாள். குழந்தையின் சிலும்பிய பொப் கூந்தல் துள்ளிவிழுவதைப் பார்த்தபொழுது அவளுக்குச் சிரிப்பு வந்தது. தானும் வேகமாக நடந்தால் தனது பொப் கூந்தலும் அப்படித்தான் துள்ளும் என்று நினைத்துச் சிரித்தவள், தனது தலையை ஆட்டினாள். அவளது கூந்தல் அவளின் தோள்களைத் தழுவி நடனமிட்டது.

            பூமாவுக்கு மூத்தான் மனைவி ஏன் சொலிசிற்றர் நாகப்பனின் அலுவலகத்துக்கு விரைகிறாள் என்பது  தெரியும். 'உவ நதியாவுக்கு நேர் எதிர்மாறுஎன்று அவள் வாய் முணுமுணுத்தது.

            மூத்தானின் மனைவி வரவேற்பறைக்குள் கால் வைத்தாள். அவள் மனம் சலித்தது. ஏராளமானவர்கள் சொலிசிற்றரைப் பார்க்க அங்கு தங்கள் முறைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். இருக்க ஆசனமில்லை. சுவரோடு சாய்ந்து நின்று அடிக்கடி தலையை நீட்டி நாகப்பனின் கண்ணாடிக் கதவைப் பார்த்தாள்.

            ரெலிபோன்கள் ஒன்றுமாறி ஒன்று கிலுகிலுத்தன. கண்ணாடிக் கதவுகள் அடிக்கடி திறந்து மூடின. வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். எதுவும் மூத்தான் மனைவியைக் கவரவில்லை.

            அவளது மூன்று வயது மகள் தாயோடு ஒட்டியபடி விரலைச் சூப்பிக்கொண்டு யோசித்தது. கடந்த இரண்டு மாதக் காட்சிகள் அதன் மனக் கண்ணில் வந்து போயின. அதற்கு எதுவுமே புரியவில்லை. அதன் மனக் கேள்வியெல்லாம் 'ஏன்? ஏன்? ஏன் அந்த ஊதிப்புடைத்த நீலக்கண்ணன் அப்பாவைக் கொண்டு போனான்? சொலிசிற்றர் நாகப்பன் அப்பாவைக் கொண்டு வருவாரா? அந்த சொலிசிற்றர் எப்படி இருப்பான்? இதென்ன தினம் தினம்; ஒரே துன்பம்? பேருந்திலே ஏற வந்திட்டுதே. அப்பாவின் இரண்டு காரையும் கொண்டு போய்விட்டார்கள். அப்பாவின் காரில் முன் சீட்டில் எவ்வளவு ஆனந்தமாகப் பிரயாணம் செய்தனான். அம்மா கோலாகூட வாங்கித்தர மறுக்கிறாவே. ஏன் எனக்கு இப்படி ஒரு பேரிடி? நான் என்ன குற்றம் செய்தேன்? அம்மா என்ன குற்றம் செய்தார்? கடவுள் கடவுள் என்று அம்மா கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறா. கடவுளுக்கு அம்மாவைப் போட்டு அழவைப்பதில் அவ்வளவு சந்தோசமா? நான் கடவுளாக இருந்தால் யாரையும் அழ வைக்கமாட்டேன்.”

குழந்தைக்குப் பசியெடுத்தது.
வாம்மா. கடைக்குப் போய் கோலா வாங்குவம்."
அம்மா ஒன்றுமே பேசவில்லை.
அம்மா பசிக்குதம்மா."
என் அச்சா பிள்ளையெல்லே. இன்னும் கொஞ்சநேரம் பொறு."
வந்து எவ்வளவு நேரம்? தாகம் அம்மா. கோலா."

            அவளுக்குக் கோலா வாங்கிக் கொடுக்க விருப்பம். ஆனால் அவளிடம் வீட்டுக்குப் பேருந்தில் திரும்பிச் செல்லவே எழுபது பென்ஸ் காசு மட்டும் மேலதிகமாக இருந்தது. அவளிடம் பேக்கில் இருக்கும் அந்தப் பணம் சொலிசிற்றர் நாகப்பனுக்கு.

            இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைவிலங்கிட்ட மூத்தானோடு வந்து வீட்டைச் சல்லடை போட்டுத் தேடிய பொலிசார், வீட்டில் இருந்த பணம் முழுவதையும் மட்டுமல்லாமல் அணியாமல் அலமாரியில் வைத்திருந்த நகைகளையும் அள்ளிக் கொண்டு வீட்டுக்குச் சீல்வைத்துப் போட்டுப் போய்விட்டார்கள்.

            அப்பொழுதே மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஒரு பேக்கோடு போறஸ்ற்கேற் நகரைவிட்டு வெளியேறியவள் யார் யாரிடமோ எல்லாம் உதவி கோரிப் போனாள். வீட்டுக்குத் தினந் தினம் வந்து கணவனோடு மது அருந்தி நல்லாக உண்டு குடித்துக் கும்மாளம் அடித்தவர்களே தெரியாதவர்கள் போல நழுவினார்கள். இறுதியில் ஈஸ்ற்ஹம் நகரில் ஒரு சிநேகிதி வீட்டில் இப்போது வசிக்கிறாள். அவள் ஒரு குட்டி அறை கொடுத்திருக்கிறாள். அதற்குள் கட்டில் கிடையாது. தரையில் போர்வையை விரித்து இரண்டு மாதமாகப் பொழுது போகிறது. மாத முடிவோடு வீட்டைக் காலி செய்யச் சொல்லிவிட்டாள் சிநேகிதி. அவள் ஒரு வெளவால். தனது தாய் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறார், அறை தேவை என்று பொய் நியாயமும் சொல்லிவிட்டாள்.

            குழந்தை தாயின் நீலச் சேலைத் தொங்கலில் பிடித்தபடி வரவேற்பறைச் சனத்தை ஒரு சுற்றுப் பார்த்தது. தாயின் மனமோ எண்ணெய்த் தாச்சியால் அப்போதுதான் எடுத்த முறுகிய பப்படம் போல உடைந்து நொருங்கிக்கொண்டு இருந்தது. அப்பொழுது ஒரு தமிழ்ப் பெண் அவளை நெருங்கி மெதுவாக,
சேலைத் தொங்கல் நழுவி விட்டது" என்று காதோடு காதாகச் சொன்னாள். மூத்தான் மனைவி பொருட்படுத்த வில்லை.
நெஞ்சு தெரியுது. தொங்கலை இழுத்து நெஞ்சை மறை."
            அவள் வேண்டா வெறுப்பாகச் சேலைத் தொங்கலை இழுத்து நெஞ்சை மறைத்தாள்.

அம்மா பசிக்கிறது. தண்ணி" என்று கேட்டது குழந்தை. அதற்கே புரிந்திருந்தது தாயின் மனம் தவித்து தடுமாறுவது.

            தாய் தனது சின்ன வாயைத் திறக்கவில்லை. குழந்தையை அழைத்துச் சென்று குளியல் அறையில் குடிக்க வைத்தாள்.

            திரும்பிய பொழுது அவளது பெயர் அழைக்கப்பட்டது. மகளை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சொலிசிற்றர் நாகப்பனின் அறைக்குள் கடவுளின் சந்நிதானத்துள் செல்லும் பயபக்தியோடு புகுந்தாள்.

            குழந்தை நாகப்பனை உற்றுப் பார்த்தது. நாடியில் நரைக்கத் தொடங்கிவிட்ட ஆட்டுத் தாடி. பெரிய ஆந்தைக் கண்கள். கறுப்புக் கோட். சிவப்புக் கழுத்துப் பட்டி. தொலைக் காட்சித் தொடரில் வரும் மந்திரவாதி போலப்பட்டார். தந்தையை மந்திரத்தால் நாகப்பன் கொண்டுவரப் போகிறாரோ என்ற வினா குழந்தை மனதில் அரும்பியது.

            மூத்தான் மனைவி கடவுளை நம்பினதுபோல நாகப்பனையும் நம்பினாள். அவளுக்குத் தெரியாது மூத்தான் எங்கே தடுத்து வைத்திருக்கப்படுகிறான் என்பது நாகப்பனுக்குத் தெரியாதென்று. ஒன்று மட்டும் நாகப்பனுக்குத் தெரியும். போதைப்பொருள் கடத்தல் குற்றத்தைத் தவிர, கறுப்புநரி தீவிரவாத இயக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தபொழுது புரிந்; அக்கிரமங்களும் அவனுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட விருப்பதும், பயங்கரவாதி என்ற காரணத்தால் அவனை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென்பதும் நாகப்பனுக்கு நன்கு தெரிந்த விடயம். எனவேதான் இதுவரையில் நாகப்பன் மூத்தான் தொடர்பாக எந்த பரிஸ்ரரையும் அணுகவில்லை. அதில் அக்கறை காட்டவும் இல்லை. பணங் கறப்பதற்கு வாய்த்த சந்தர்ப்த்தை நழுவவிட்ட  சரிதம் நாகப்பனுக்கு இல்லை.

            மூத்தான் மனைவியின் கையில் இருந்த தோற் பையை நாகப்பன் உற்றுப்பார்த்தான். பின்னர் அவளின் முகத்தை வாசித்தான். முகத்தில் கலவரக் கோடுகளை அதானித்த நாகப்பன் மூளையில், மூத்தான் மனைவி தான் சொன்ன தொகைப் பணத்தோடு வரவில்லையோ என்ற ஐயம் முளைவிட்டது.  
வாருங்கள் மூத்தான் அம்மா. எப்படிச் சுகம்? இன்றைக்கு என்ன குட்டி மகளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறியள்?" என்று கேட்ட நாகப்பன் தனது சிவப்புக் கழுத்துப் பட்டியை வருடிக்கொண்டு பெரிய வட்டக் கண்களை அவளது தோற் பை மீது மீண்டும் ஏவினார்.
மற்ற இரண்டு பிள்ளைகளும்; பாடசாலைக்குப் போய் விட்டார்கள். நெடுநாட்கள் பாடசாலைக்குப் போகவில்லை. இப்பதான் போகத் தொடங்கினவை. தனிய விட்டுப்போட்டு வரப் பயம். அதுதான் கூட்டிக்கொண்டு வந்தனான்."

            குழந்தை சொலிசிற்றரின் மேசையில் இருந்த ரெலிபோனில் கைவைத்தது. தாய் அதனை இழுத்துத் தனது மடியில் வைத்துக் கொண்டாள்.

சொலிசிற்றர் ஐயா, அவரைப் பற்றி ஏதாவது செய்தி?"
            அவளின் கேள்வி நாகப்பனின் களவைப் பிடிக்கக் கேட்டது போல நாகப்பனுக்குப் பட்டது. உள்ளுர மனம் கறுவிக்கொண்டு, “எல்லாம் இனி வெற்றிதான் அம்மா. அந்த வெள்ளை பரிஸ்ரர் மூத்தானைச் சந்திக்க ஸ்கொற்லாந்து யாட்டில் அனுமதி பெற்றுவிட்டார். அவருக்கு உள்ளேயும் ஆள் இருக்கிறது. அதைவிட அவருக்கு ஆளும் தொழிற் கட்சியிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. விரைவிலே மூத்தானை வெளியிலே கொண்டுவரலாம். ஒன்றுக்கும் பயப்படத் தேவை இல்லை என்று அந்த வெள்ளை பரிஸ்ரர் சொல்லுகிறார்."

            யாழ்ப்பாண அகதிகளை ஏமாற்றிப்பிழைப்பது இரத்தத்தோடு ஊறிப்போன சங்கதி. நாகப்பன் தனது பாவங்களைக் கிரமமாகக் கடவுளை வணங்கிக் கழுவிக்கொள்கிறான் என்பது மூத்தான் மனைவிக்குத் தெரியாது.

கட்டாயம் எடுக்கலாம் என்று சொன்னவரோ?" என்று அவள் கேட்டாள்.
ஓம். அவர். பெரிய ஆள். எங்கடை சோணைச் சொலிசிற்றமாராலே அவரைப் பிடிக்கேலாது. நாகப்பன் என்றபடியால்தான் முடிந்தது."
சனம் வேறுவிதாமாகக் கதைக்குதுகள்."

            தனது நீட்டு முடக்குத் தெரிந்தவன் யாராவது அள்ளி வைத்திட்டானோ என்ற பயம் நாகப்னை மிரட்டியது. அதைக் காட்டிக் கொள்ளாமல் தனது பெரிய கண்களை உருட்டி ஆட்டுத் தாடியை வருடி உரத்துக் கெக்கட்டம் போட்டுச் சிரித்துவிட்டு, “என்ன விதமாகக் கதைக்குதுகள்? விளக்கமாகச் சொல்லுங்கோ அம்மா?" என்றார்.
போதைப் பொருள் சம்பந்தப் பட்டது. அத்தோடு யாழ்ப்பாணக் கதையும் கதைக்கினம். வெளியாலே இனி விடமாட்டினமாம். செலவழிக்கிற பணம் வீண். சொலிசிற்றமார் தங்களின் உழைப்பிற்காகச் சுத்துமாத்துச் செய்வினமாம்."

            நாகப்பன் கெக்கட்டம் போட்டுச் சிரித்துவிட்டுக் கதிரையைப் பின்னுக்குத் தள்ளியபின் உடம்பை நிமிர்த்தி அறுத்து உறுத்துச் சொன்னான்.

மூத்தான் அம்மா, லண்டனிலே சிக்காராக வாடி போட்டுவிட்ட எங்கள் யாழ்ப்பாணச் சனம் - நரம்பில்லாத நாக்கால் எல்லாம் சொல்லும். மூக்கைப் பிடித்தால் வாயால் மூச்சுவிடத் தெரியாத மண்டூகங்கள்கூட லண்டனிலே கோட்டுப் போட்டு ரையும் கட்டிக்கொண்டு படித்த மனிதர்போலப் பேசுகினம். இந்த நாகப்பன், மூத்தானை வெளியாலே கொண்டுவர முடியாது என்றால், வெறெந்தச்  சொலிசிற்றர் விண்ணனாலும் அது முடியாது. இந்த நாகப்பன் உப்படி எத்தனை வழக்குகளை கண்டவன். நான் இன்றைக்குப் பின்னேரம் அந்த வெள்ளை பரிஸ்ரரை சந்திக்கவிருக்கிறன்."
நல்லது ஐயா. கெதியாக அவரை வெளியே எடுக்கச் சொல்லுங்கோ."

அவர் கேட்ட முழுப்பணத்தையும் கொடாமல் நெருக்கேலாது. வெள்ளைக்காரர் எங்களின் ஆட்களைப்போல இல்லை. காசு விசயத்திலே அவை கறார். முற்பணமாகக் கட்டினால்தான் வேலையிலே இறங்குவார்கள்."
நான் இப்ப மிச்சத்திலே ஒரு பகுதி தாறன்."
முழுக் காசும் கொண்டுவர வில்லையோ?"
இல்லை 700 பவுண் மட்டும். முந்தி நகை எல்லாம் விற்று 2000 பவுண் தந்தனான். மிச்ச நகையை எடுக்க அந்த நீலக் கண் பொலிஸ்காரன் விடவில்லை. அலுமாரியிலிருந்த எல்லா நகைகளையும் கொண்டு போய்விட்டான். அவன் கொண்டு போயிருக்காவிட்டால் இதுவரையிலே நீங்கள் கேட்ட பணத்தைத் தந்திருப்பேன். அவரையும் வெளியாலே கொண்டு வந்திருக்கலாம். மிச்சம் ... "

            அவள் தோற் பையைத் திறந்து காசை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு நாகப்பனைப் பார்த்தாள்.

என்ன மூத்தான் அம்மா. நான் 3500 பவுண் மிச்சம் எல்லே கேட்டனான். 700 எந்த மூலைக்குப் போதும்?"
இந்தக் காசும் நான் பிச்சை எடுத்தமாதிரித் தெரிந்த ஆட்களிடம் கெஞ்சிச் சேர்த்தது."
அம்மா, நீங்கள் மிகுதியைத் தந்தால்தான் என்னால் அந்த வெள்ளை பரிஸ்ரருடன் பேச முடியும்."
என்ன ஐயா  சொல்கிறீர்கள்?"
பரிஸ்ரருடைய முழுத்தொகையையும் நான் செலுத்தினால்தான் அவர் ......" நாகப்பனுக்கு வாதாட நல்ல சாட்டுக் கிடைத்தது. அதை அவர் இறுக்கிப் பிடித்தார்.
ஐயா நான் உங்களை மலைபோல நம்புகிறேன். என்னைக் கைவிட்டு விடாதேயுங்கள். கண்கண்ட கடவுள் நீங்கள்."
மூத்தான் அம்மா, நான் ஒருநாளும் உம்மைக் கைவிடமாட்டேன். நான் இந்த அலுவலகத்தை நடத்துவதே எனது யாழ்ப்பாண மக்களுக்குச் சேவை செய்யவே. அது உங்களுக்குத் தெரியுமெல்லே?"
ஐயா உங்கள் கூலியை நான் எங்கென்றாலும் கடன்பட்டுப் பிறகு தாறன். இப்ப .........."
அம்மா உங்களுடைய அவர் மூத்தான் என்னுடைய நெருங்கிய நண்பர். அது உங்களுக்கும் தெரியும். நான் எனக்குக் கூலி கேட்பனே? அது மகா பாவம் அம்மா. அது பிரமகத்தி பாவம். பரிஸ்ரருடைய கூலியைத்தான் கேட்கிறேன்."

            நாகப்பன் தனது தந்தையைக் கொண்டு வருவார் என நம்பிய குழந்தையை அவரின் பேச்சுத் தொனி ஏமாற்றியது. நாகப்பனைப் பார்த்து,
அப்பா?" என்றது.
நான் கொண்டுவருவேன்."
எப்போ?" குழந்நை கேட்டது.
           
            நாகப்பனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. பெரிய உருண்டைக் கண்களை உருட்டிக் குழந்தையைப் பார்த்துவிட்டுத் தாயின் கையில் இருந்த பணத்தைப் பிடுங்கி எடுத்தான்.

            குழந்தைக்கு நாகப்பனின் பார்வையோ செயலோ பிடிக்க வில்லை. நாகப்பன் பேசிய தொனியும் அதற்கு  வெறுப்பை ஊட்டியது. அத்தோடு தாகத்துக்கு ஒரு கோலா வாங்க முடியவில்லை. நாகப்பன் அவ்வளவு பணத்தையும் பிடுங்கி எடுத்ததைப் பார்த்துக்கொண்டு தாயின் மடியில்  இருந்த குழந்தைக்குப் பொறுக்க முடியவில்லை. அது அவருடைய நரைத்த ஆட்டுத் தாடியைப் பார்த்து முறைத்தது. அதற்கு நெருப்பு வைக்கவேண்டும் போல அதன் எண்ணத்தில் தெறித்தது.

            அப்பொழுது பொலிஸ் வாகனங்கள் கூவும் சைரன் ஓசை நாகப்பனுக்கு எங்கோ தொலைவில் கேட்டது. அந்த ஓசை அவன் காதுகளுள் விர் என்று ஏறிக்கொண்டிருந்தது

            சில நிமிடங்களே ஓடி மறைந்தன. பொலிசார் பலர் தனது அலுவலகத்தின் உள்ளே புகுந்து சப்பாத்துக்களின் கிடுகிடு ஓசை அதிர தன்னை நோக்கி வேட்டை நாய்கள் போலப் பாய்ந்து வருவதை நாகப்பன் கவனித்தான்.

            “என்ன இழவுக்கு தாவிப் பாய்ந்து இங்கே வருகிறார்கள்?"

            நாகப்பனின் மேசை ஓரத்தில் இரண்டு பொலிசார். நீல ரவசரும் வெள்ளை சேட்டும் சட்டித் தொப்பியும். அவர்களது பார்வைச் சன்னங்கள் நாகப்பனின் முகத்தைச் சல்லடைபோட்டன.

என்ன வேண்டும்?"
சொலிசிற்றர் நாகப்பன்?" ஒரு பொலிஸ் கூறினான்.
நான்தான். என்ன வேண்டும்?"
நீதான் வேண்டும்."

            ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் தஞ்சம் கோரிய உடன் பிறப்புகளை ஏமாற்றியதற்கு மட்டுமல்லாமல், அரசுக்குக் கள்ளக் கணக்குக் காட்டிப் பணம் பெற்றதற்காகவும் தன்னைக் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என்பது அப்போது நாகப்பனுக்குத் தெரியாது.

            அங்கு ஒரு நீலக்கண் பொலிஸ் அதிகாரி வந்து சேர்ந்தான். குழந்தை குறிப்பாக அவனை விடாமல் பார்த்தது. கையில் விலங்கிட்ட தனது அப்பாவோடு வந்து தங்களைத் துரத்தி விட்டு வீட்டுக்குச் சீல் வைத்த அதே ஊதிப்புடைத்த நீலக்கண்ணன். அவனை அடையாளம் கண்டுகொள்ள அதற்குச் சிரமம் இருக்கவில்லை.

            அந்த நீலக்கண் பொலிஸ் அதிகாரி நாகப்பனைப் பார்த்து, “உன்னைக் கைது செய்கிறேன். வா பொலிஸ் நிலையத்துக்கு" என்றான்.
உங்களிடம் பிடி ஆணை இருக்கிறதா?"
ஓம் சுப்பையா நாகப்பன். புறப்படும்."

            நாகப்பனுக்கு கையில் விலங்கு.

            அப்பொழுது குழந்தை தாயைக் கேட்டது,
அம்மா உந்த நீலக்கண் மனுசனைக் கேளம்மா, அப்பா எங்கே என்று."

            தாய் தலையை நிமிர்த்தி அந்த மனுசனைப் பார்த்தாள். அவளால் சரியாக அடையாளங் காணமுடியவில்லை. ஏதோ சின்னத் தொடர்பு போலப்பட்டது. எங்கோ பார்த்தது போலவும் இருந்தது. எப்பவும் பார்க்காதது போலவும் இருந்தது. எதுவும் தெளிவாக இல்லை.

அம்மா கேளம்மா, அப்பா எங்கே என்று."
எனக்கு இங்கிலீஸ் தெரியாது மகளே."
நான் கேட்கட்டோ'ம்மா?"
வேண்டாம் பிள்ளை. பிடிப்பான்."
ஏன்?"
அவன் பொல்லாத பொலிஸ்."

            குழந்தை நீலக்கண் பொலிஸின் கறுப்பு ரவுசரில் பிடித்து இழுத்து மேலே பார்த்தது. அவன் குழந்தையையும் மூத்தான் மனைவியையும் அடையாளம் கண்டுகொண்டான். ஆனால் முன்பின் தெரியாதது போல ரவுசரைப் பிடித்து இழுத்த குழந்தையைக் குனிந்து பார்த்தான்.
குழந்தை கையை நீட்டி அசைத்து, “என்னுடைய அப்பா. நீ கொண்டுபோனாய். எங்கே?" என்று கேட்டது.

            அந்தப் பொலிஸ் அதிகாரி அதிர்ந்து போனான். ஐந்தடி தடிப்புடைய பனிநுரைப் படலத்துள் தலை குப்புற அமிழ்த்திப் பிடிப்பது போல இருந்தது. தாய் குழந்தையை இழுக்க அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீரென்று வெளியேறினான், அந்த நீலக்கண் வீமன் அதிகாரி.

            பொலிசார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களையும், வாடிக்கையாளரையும் வெளி யேற்றினர். மூத்தானின் மனைவிக்கு நடப்பது எல்லாம் ஒரே மயக்கமாக இருந்தது. அவள்  மலைபோல நம்பிய நாகப்பனைப் பொலிஸ் கொண்டு செல்வதைக்கண்ட பொழுது அவளது இதயம் துடிக்க, தலைக்குள் பூகம்பம் வெடித்துச் சிதற உலகமே இருண்டு அவளைக் கௌவிப் பிடித்தது.

            அலுவலகத்தில் ஒரு மூலையில் உள்ள கதிரையில் அமர்ந்தாள். அவளும் குழந்தையும் மட்டுமே அலுவலகத்தில். அதனைப் பூட்டிச் சீல் வைக்கப் பொலிசார் துடித்தனர். பொலிசார் சொன்னதைப் புரிவது மங்கிவிட்ட மனோநிலை. பொலிசார் பொலிஸ் போலவே அவளுக்குத் தெரியவில்லை. அசையாமல் அங்கேயே இருந்தாள்.

            ஒரு பெண் பொலிஸ் சாதுரியமாக அவளை அழைத்து வந்து அலுவலகத்தின் வாயிலில் விட்டாள். அவளுக்குச் சனம் அவ்விடத்தை மொய்ப்பது விளங்கவில்லை. குழந்தையின் ஞாபகம் அறுந்து போய்விட்டது.

            வீதியில் வாகனங்கள் தடைப்பட்டு நின்றன. சனம் முண்டி அடித்து என்ன ஏது என்ற விசாரணையில் இறங்கியது

            ஒரு வெள்ளை வான் வாகனத்தோரம் நின்ற நீலக்கண் அதிகாரி அலுவலகத்தின் கதவுகளில் சீல் வைக்கப்படுவதைக் கண்காணித்துக்கொண்டு நின்றான். அப்பொழுது தற்செயலாக கதவின் அருகே சுவரில் சாய்ந்துகொண்டு நின்ற பூமாவைப் பார்த்தான். பார்த்ததும் தலை அசைத்தான். அவனையே பார்த்துக்கொண்டு நின்ற மூத்தான் மனைவி யாரை நீலக்கண் அதிகாரி பார்க்கிறான் என்று திரும்பிப் பார்த்தாள். அங்கே பூமா நிற்பதைக் கண்ட அவள் பல்லை நெருமினாள். அவளுக்குச் செருப்பைக் கழற்றி அடிக்க வேண்டும் போன்ற துடிப்பு.

            கையில் விலங்கோடு ஒரு பொலிஸ் வாகனத்தினுள் இருந்த நாகப்பன், வாகனக் கண்ணாடி யன்னல் ஊடாகத் தனது அலுவலகக் கதவு சீல்வைக்கப்படுவதைப் பார்த்தபொழுது அவனது நெஞ்சு ஊதி உலர்ந்து ஊதியது. அச்சமயம் தற்செயலாகக் கதவோரம் நின்ற அழகிய இளம் குமரைக் கண்டதும் அதிர்ந்தான். கண் இமைகள் படபடத்தன. அவனை அச்சம் பற்றிப் பிடித்து ஆட்டியது. 'உவள் எப்போது லண்டனுக்கு வந்தவள்? உவள் எப்போது லண்டனுக்கு வந்தவள்?' என்று மீண்டும் மீண்டும் தன்னைத்தானே வினாவினான், சொலிசிற்றர் நாகப்பன்.

            குழந்தை நீலக்கண் பொலிஸ் அதிகாரி நின்ற இடத்தை நோக்கிச் சென்றது. அவன் குழந்தை வருவதைக் கண்டதும் அவசர அவசரமாகப் பொலிஸ் வாகனத்தில் ஏறினான். சைரன் கூவத்தொடங்கியது. அவன் பின்னே எனைய பொலிஸ் வாகனங்களும் கூவிக்கொண்டு பறந்தன.
 
            சற்று நேரம் போய்விட்டது. மூத்தான் மனைவி வீடு திரும்ப வீதியின் மறுபக்கத்தில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்தில் நின்றாள். நாகப்பனைக் கைது செய்த நேரம் தொடக்கம் அவள் எதிர்பார்ப்புகள், விடிவு வரும் என்ற நம்பிக்கைகள் எல்லாம் அவளைவிட்டுப் போனமாதிரி ஒரு மனோநிலை. அவள் தான் தனது கடைக்குட்டி மகளோடு வந்தமையை முற்றாக மறந்தேவிட்டாள்.

            குழந்தை வீதியின் மறு பக்கத்தில். வீதியைக் கடக்கப் பயம். வாகனங்கள் எதிரும் புதிரும் பறந்தன. குழந்தை எதிர்ப்பக்கப் பேருந்து தரிப்பில் நின்ற தாயைப் பார்த்து அழுது கொண்டு நின்றது. அதனைக் கண்ட ஒரு வெள்ளைக்காரப் பெட்டை குழந்தையை விசாரித்து, அதனை வீதியின் மறுபக்கம் கொண்டு போய்த் தாயருகே விட்டாள். தாயோடு கதைத்துப் பார்த்தாள். பாசை தெரியாதது மட்டுமல்ல அவளுடைய பார்வை அவளது மனோ நிலையை அந்த வெள்ளைக்காரப் பெட்டைக்குச் சாடையாகச் சொல்லியிருக்க வேண்டும். அந்தப் பெட்டை தனது பேக்கில் இருந்த ஒரு சொக்கலேட் துண்டை எடுத்துக் குழந்தையிடம் கொடுத்துவிட்டுப் போனாள்.

            வீதியில் வாகனங்கள் இருபக்கமும் நெரிசலாக ஓடிக்கொண்டு இருந்தன. ஈஸ்ற்ஹம் நகர் செல்லும் ஒரு பேருந்து அந்த தரிப்பு நிலையத்தில் நின்றது. மூத்தான் மனைவி அதனைப் பொருட்படுத்தவில்லை. பேருந்து புறப்பட்டுவிட்டது.
அம்மா பஸ்" என்றது குழந்தை. அதற்குப் புரியவில்லை ஏன் தாய் பேருந்தில் ஏறவில்லை என்று. அது தாயின் முகத்தைப் பார்த்து 'அம்மாவுக்கு என்ன ஆயிற்று? பசியோ?” என்று யோசித்தது. பேருந்து போய்விட்டது.

            மூத்தான் மனைவியின் எண்ணங்களில் யாழ்ப்பாணம் மிதந்தது.

     பெற்றாரின் சொல்லை மீறித் தான் சற்றே குறைந்த மூத்தானைக் காதலித்ததும், பின்னர் தனித்துக் கொழும்பு சென்றதும், மூத்தான் அச்சுவேலி லொறிச் சொந்தக்காரர்களிடம் துப்பாக்கி முனையில் லட்சக் கணக்கில் பணம் கறந்துகொண்டு, கறுப்பு நரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, ஒரு கொழும்பு சென்ற லொறியில் இருந்த வெற்று மண்ணெண்ணெய் பீப்பாவுள் ஒளித்து, இந்திய சமாதானப் படைகளின் கண்களிலும் பீத்தல் இயக்கங்களின் கண்களிலும் படாமல் தப்பி வந்து, கொழும்பு நாலாம் குறுக்குத் தெருவில் ஒரு ஆவரங்கால் வாசியின் கடையில் ஒளித்து நின்று, பிரயாண முகவரின் உதவியோடு தன்னையும் அழைத்துக்கொண்டு லண்டன் வந்ததும் ஒழுங்கு முறை இல்லாமல் அவள் மனதில் தோன்றி மறைந்தன.

            “அம்மா பஸ்" என்றபடி குழந்தை தாயின் சேலையில் பிடித்து இழுத்தது. அது இரண்டாவது பேருந்து. தாய் அதைப் பொருட்படுத்த வில்லை. அவள் சிந்தனை பனைகளும் கள்ளிகளும் கலட்டிகளும் உப்புத் தரைவைகளும் மலிந்த யாழ்பாணத்தை மொய்த்திருந்தது.

            மூத்தான் கறுப்பு நரிகளின் அச்சுவேலிப் பிரதேசப் பொறுப்பாளியாக இருந்த காலம் அவள் கண் முன்னே வந்து தரிசனம் கொடுத்தது. மூத்தான் கடத்திச் சென்று சுட்டுக் கொலை செய்து அச்சுவேலி பேருந்து நிலையத்தில் வீசிய ஓவசியர் மகளின் பிரேதம் இரத்த வெள்ளத்தில் கிடந்து அவளை முறைத்துப் பார்த்தது. அவள் சுடப்படமுன்னர் மூத்தானையும் அவனது சந்ததியையும் சபித்துச் சாபமிட்ட காட்சிகள் அவள் கண்களை ஊடறுத்தன. 'தமிழர் விடுதலைக்காக நீங்கள் தூக்கிய துப்பாக்கி போர்க்களத்தில் கொன்ற பகைவர்களிலும் பார்க்க, அது கொன்ற இரத்த உறவுகளின் எண்ணிக்கைதான் அதிகம்என்று சுடப்படமுன் ஓவசியர் மகள் சொரிந்த வார்த்தைகள் மூத்தான் மனைவியைக் குடைந் தெடுத்தன. அத்தோடு ஓவசியர் மகளின் தொப்புள்கொடி உறவுகள் போட்ட சாபங்கள் வேறு அவளை நியாயங் கேட்டன. அந்தச் சாபங்களே தன்னையும் பிள்ளைகளையும் தேடிச் சுற்றிச் சூழ்ந்து பிடித்து வருத்துகின்றன என்ற பேரச்சம் அவளைத் திருகிப் பிழிந்தது.

            'நான் ஒரு பாவமும் செய்யவில்லை. ஒரே ஒரு பாவம். எனது பெற்றார் விருப்பத்துக்கு மாறாக என் குலத்தவன் அல்லாத ஒருவனை விரும்பி அவனோடு ஓடியதுதான். அவர் புரிந்த பாவங்களுக்காக, இறந்தோரின் உற்றார் உறவினர் போட்ட சாபங்களே என்னையும் பிள்ளைகளையும் சூழ்ந்து பிடித்துள்ளன. அந்தச் சாபங்களுக்கு என் சின்னக் குருத்துக்களும் பலியாக வேண்டுமா? நீதிதேவதையின் தராசு தப்புப் பண்ணுகிறதா?” அந்த விசாரணை அவள் உள்ளத்தில் உருவம் பெற முயல்கிறது.

'எல்லாம் வல்ல இறைவனுக்கே
தண்ணி காட்டும் சாபங்கள்.
அவை மறப்பதுமில்லை மன்னிப்பதுமில்லை
மரணிப்பதுமில்லை.
இன்று இல்லையேல்
நாளை வந்து சேர்ந்து
தொடரும் சாபங்கள்.

சாப மன்றங்களில் சட்ட நூல்கள் இல்லை
சட்டத்தரணிகளும் யூரிகளும் இல்லை
நீதிமான்களும் இல்லை.
சாபங்களே சட்டங்கள்
சாபங்களே நீபதிகள்

நெஞ்சில் ஈரமில்லாச் சாபங்கள்
சொறி சிரங்கன்ன
வருத்த மட்டும் தெரிந்த சாபங்கள்.
எவருக்கும் சாபவிமோசனம் ஈர்ந்த
சரித்திரம் இல்லாச் சாபங்கள்.
அரசனென்ன
ஆண்டி என்ன

சாபங்களின் அறுவடையைப்
புசித்தே ஆகவேண்டும்.

கொடிவழியே சென்று
கிழைவழியே பரந்து
வெஞ்சம் தீர்க்கும்
கொடிய சாபங்களே!
குழந்தைகளைச் சப்பித்
துப்பாதீகள்?'

            அவள் இரந்து வேண்டினாலும் விதைக்கப்பட்ட சாபங்கள் முளைக்காமல் விடப் போவதில்லை. அதைப் பற்றி அக்கறை காட்டும் நிலையை அவள் கடந்துவிட்டாள்.  

            மீண்டும் ஒரு பேருந்து அந்த இடத்தில் நின்று புறப்பட்டது. அவளுக்குத் தான் பேருந்திற்காக அங்கு நிற்பதே மறந்து போய்விட்டது. குழந்தை சேலையை இழுத்துஅம்மா பஸ். அம்மா பஸ்" என்று மீண்டும் மீண்டும் அழுதது.

            மூத்தான் மனைவி மேலே பார்த்தாள். வானம் கறுத்து மழை தூறத் தொடங்கியது. அவளுக்கு மழை தலையை நனைப்பதே தெரியவில்லை. அவளின் மனக் கண்ணில் அப்பொழுது புத்தூர்ச் சந்தியில் தந்தித்தூணில் சால்வை மூத்தான் கட்டிச் சுட்ட நவகிரி பாலமூர்த்தியின் மகளின் இரத்தந் தோய்ந்த சடலமே தெரிந்தது. அக்காட்சி வேறு அவள் மனக் கண்களை அழுத்தியது.

            குழந்தைக்குப் பசி. காலையில் ஒரு பணிஸ். அவ்வளவுதான். பசிக் கொடுமை குடலைப் பிடுங்கஅம்மா பசிக்குது. வாம்மா அந்தக் கடையிலே கோலா வாங்குவம்" என்று சேலையில் பிடித்து இழுத்தது.

            அச்சமயம் மூத்தான் மனைவியின் கண்கள் கூர்மை அடைந்தன. மழைத்தூறலில் இருந்து தப்ப பேருந்து தரிப்பு நிலையத்தை நோக்கி மண்ணிற சுடிதார் உடையில் ஓடிவரும் உருவத்தை வெறித்துப் பார்த்தன. மனம் திசை மாறியது. பல்லை நெருமிப் பார்த்தாள். அந்த உருவம் அருகே வந்ததும், “ஹலோ பூமா, அந்த நாய் எப்படி இருக்கிறான்?" என்றாள்.
பூமா திகைத்துப் போனாள். அதனைக் காட்டிக்கொள்ளாது,
ஹலோ மூத்தான் அக்கா. உங்களுக்கு இப்ப மனம் சரியில்லைப் போல" என்றாள்.
மனஞ் சரியில்லையோ? எல்லாம் அந்த எளியவனால் வந்த வினைதான்."
என்ன அக்கா சொல்லுகிறியள்? எனக்கு ஒன்றும் விளங்க வில்லை."
நீ சின்ன பவா. உனக்கு ஒன்றும் தெரியாது. அவன் ஒரு துரோகி. அந்த நாய்தான் காட்டிக் கொடுத்தவன்."
என்ன சொல்லுறியள் அக்கா? யாரைச் சொல்லுறியள்?"
யாரையோ? ஊன்னுடைய முந்தானைக் கூட்டாளி அமிரைத்தான்."
நீங்கள் அக்கா, எல்லை மீறிக் கதைக்கிறீர்கள்."
பூமா, நான் எல்லைமீறிக் கதைக்கவில்லை. அமிர்தான் எல்லைமீறி எங்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்திட்டான்."
அவர் என்ன செய்தவர்?"
என்ன செய்தவனோ? பொலிசுக்கு என்னுடைய மனுசனும் கூட்டாளிகளும் போதைப் பொருள் வியாபாரம் என்று சொல்லிக் கொடுத்து எல்லாரையும் பொலிஸ் கொண்டு போய்விட்டது. நாங்கள் தெருவிலே நிற்கிறோம். கடவுளும் கைவிட்டிட்டார்."
அமிரோ சொல்லிக் கொடுத்தவர்? அவர் அப்படியான ஆளில்லை அக்கா. அவர் தங்கமானவர்."
நல்லாய் ஒத்தூதுவாய். கில்லாடியின் ஆட்கள் எல்லாம் உவனைத் தங்களின் சகோதரம் மாதிரிப் பார்த்தவை. பெரிய இடத்துப் பையன், படித்தவர் என்று சொல்லி எவ்வளவு கௌரவமாக நடத்தினவை? ஆனால் கடைசியிலே என்ன செய்தவன் தெரியுமே? தனக்கு இருக்க இடம் கொடுத்து, சப்ப உருசியாகச் சாப்பாடு கொடுத்து, லண்டனிலே தேவையான இடத்துக்கெல்லாம் தங்களுடைய காரிலே ஏற்றி இறக்கி, சினிமாவுக்குக் கூட்டிக்கொண்டுபோய் - தேவையான உதவி எல்லாம் செய்துவிட கடைசியிலே நன்றி கெட்ட வடுவா, நாய் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்து போட்டான்."

            குழந்தைக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. பூமாவை நிமிர்ந்து பார்த்தது. பூமா கதைக்கும் பொழுது அவளது பொப் கூந்தல் தோள்களில் பட்டு ஆடுவது குழந்தையைக் கவர்ந்தது. குழந்தை தானும் தனது பொப் கூந்தலை ஆட்டிப் பார்த்தது.

            மூத்தான் மனைவி அமிர்மீது கொட்டிய சுடுசொற்களைப் பூமாவால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தாலும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி லண்டன் வீதியிலே யாழ்ப்பாணத்து அழுக்கு மூட்டைகளைக் கொட்ட மனம் ஒருப்படவில்லை. அவள் ஆத்திரத்தோடு தன்னை நோக்கும் மூத்தான் மனைவியை அமைதிப்படுத்த விரும்பி, “அக்கா, நீங்கள் அமிரைப்பற்றித் தப்பாக நினைக்கிறீர்கள். நீங்கள் சொல்கிறமாதிரி உந்த எளிய வேலைகளுக்கெல்லாம் அவர் போக மாட்டாhர். அவர் பெருந்தன்மை நிறைந்த நல்ல மனிதர்."
அந்தப் பெட்டைக் கள்ளனோ? அந்தப் பெம்பிளைப் பொறுக்கியைப் பற்றி இதுவும் சொல்லுவாய் இன்னமும் சொல்லுவாய்."
கடவுளே! உண்மை தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லாம் மனிதரைத் திட்டக்கூடாது அக்கா."
திட்டக் கூடாதோ? எல்லாருக்கும் தெரியும் உவன்தான் நதியாவின் வாழ்க்கையைப் பாழாக்கினவன் என்பது. அது மட்டுமே? பிளெசற் பூங்காவிலே நாகப்பன் கந்தோரிலே வேலை செய்கிற அந்த உயரமான பெட்டையோடு என்ன கூத்தடிக்கிறான் தெரியுமே?"
அக்கா, அது ஜீவிதா. அவர் விவாகம் செய்யப்போகிற பெட்டை."
! அவவை அவர் கலியாணம் பண்ணப் போகிறாரோ? நல்லாயிருக்குக் கதை. ஜீவிதாவோ? அவ இன்னும் ஒரு கறுப்புச் சட்டை நெட்டையனோடும் தொடுப்பு. அது உனக்குத் தெரியாதே? அந்தக் கறுப்புச் சட்டை இப்பவும் கறுப்பு நரி இயக்கத்திலே இருக்கிறான். அவர் சொன்னவர். ஆருக்கோ மண்டையிலே போடத்தான் லண்டன் வந்திருக்கிறான் என்றவர். அது தெரியாதே உனக்கு? இன்று காலையும் இரண்டு பேரையும் நான் ஸ்ரேசனில் கண்டனான். லண்டன் கூதலுக்கு ஒட்டி நிற்கினம்."

            பூமாவால் அவளின் வாயிலிருந்து பொரிந்த துர்நாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுடைய தலை விண் விண் என்று கூவியது. கண்கள் எரிந்தன. குரல் தழுதழுத்தது. பூமாவால் அவள் சொரியும் அபாண்டங்களை உள்வாங்கிக் கொண்டு அவ்விடம் நிற்க முடியவில்லை. “அக்கா எனக்கு ஒரு அவசர வேலை இருக்கிறது. நான் வருகிறேன்."
எனக்குத் தெரியும் என்ன அவசர வேலை என்று. அன்ரி வீட்டிலேதானே அந்தப் பொறுக்கியும் இருக்கிறான். அன்ரி இப்ப வீட்டிலே நிற்க மாட்டா. கோவிலுக்குப் போயிருப்பா. அவனோடு ஒரு பாட்டம் போட்டால் இனிக்கும், இல்லையே?"

            வாழ்க்கையில் விழுந்து தவிக்கிறபொழுது கையில் கிடைத்தது நரகல் என்றாலும் அதனைப் பற்றி திருப்பி எறிய பெரிய மனிதன்கூடத் தயங்குகிறான் இல்லை. மூத்தான் மனைவி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா, என்ன?

            பூமாவால் சோனாவாரியாகக் கொட்டுப்படுகிற அவமானத்தைப் பொறுக்க முடியவில்லை. அவ்விடத்தை விட்டுப் போக அடி எடுத்து வைத்து விட்டாள். ஆனால் அவளால் மேலும் நகர முடியவில்லை. பூமாவின் சுடிதாரின் தொங்கல் மூத்தான் மனைவியின் கையில். அவள் அதை இழுத்துப் பிடித்து குட்டிபோட்ட நாய் போல பல்லைக் காட்டி வெறித்துப் பார்த்துச் சொன்னாள்.

அந்த நாய்ப் பயல் என்ன செய்திருக்கிறான் தெரியுமா? கில்லாடியின் குடும்பத்தை ஆணி வேரோடு சரித்துப் போட்டான். நதியா ஒரு சின்னப் பெட்டை. அவளை ஏமாற்றி அவளின் வாழ்க்கையிலும் நெருப்பை அள்ளிக் கொட்டிப்போட்டான். அவளைத் திட்டமிட்டு இந்தியாவுக்கு ஏன் அனுப்பினவன் தெரியுமே? அங்கே போய் அவளைக் கலியாணம் செய்யது அங்கேயே நிரந்தரமாக வசிக்கப் போகிறானாம்;. இப்ப அவனுக்கு விசா கிடைத்திட்டுதாம். இந்தியாவுக்குப் போய் நதியாவைக் கலியாணம் பண்ணப்போறானாம். சனம் கதைக்கிறது. அதற்காகத்தான் அந்தப் பொறுக்கி கில்லாடியையும் மற்றவையையும் காட்டிக் கொடுத்தவன். அவை வெளியே இருந்தால் இடைஞ்சல் என்று உள்ளுக்குத்; தள்ளிப் போட்டான். அறுவான். பற்றி எரிவான். அந்தப் பெட்டைக் கள்ளனைக் கண்டால் நான் அவனுக்குப் பாடம் படிப்பிக்காமல் விடமாட்டேன்."

            குழந்தை எப்போது வீதியின் மறுபக்கம் போனது? அது அங்கு கோலா குடிக்கும் ஒரு மொட்டை வெள்ளையனின் வாயை அண்ணாந்து  பார்த்துக்கொண்டு நின்றது.


            அந்தத் தரிப்பு நிலையத்தைவிட்டு ஒரு பேருந்து புறப்பட்டது. இப்போது பேருந்து தரிப்பு நிலையத்தில் எவருமே இல்லை.


இன்னமும் வரும் ...

No comments:

Post a Comment