Monday, 23 November 2015

வெள்ளைப்புகை - குறும்கதைசேகரும் வசந்தியும் வாடகை வீட்டிலிருந்து - சொந்தமாக வீடு ஒன்று வாங்கிப் போனார்கள்.

இவர்களுக்கு அயலவர்களிடம் வரவேற்பு நன்றாக இருக்கவில்லை. வீட்டின் இடது புறக்காரரான 'அசல்' வெள்ளை மாத்திரம் தோழமையுடன் பழகினார். வலது புற வீட்டுக்காரரை யாரென்று இனம் கண்டு கொள்ள முடியவில்லை. மதிலை உயர்த்தி தங்களையும் வீட்டையும் மறைத்திருந்தார்கள். எதிர்வீட்டுக்கார கிரேக்க நாட்டவன் (Greek) முகம் சுழித்தான். அவன் மனைவியின் முகம் இவர்களைக் காணும் போதெல்லாம் குதிரை போல நீண்டுவிடும். இவர்களுக்குப் பக்கத்து வீடான சீனாக்காரரின் உதட்டிற்குள் புன்னகை. அவுஸ்திரேலியா பல்லினங்களையும் கொண்டது
என்பதைப் பறை சாற்றியது கிராமம்.

புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்த அடுத்தநாள் வீட்டின் முன்புறமாக நாயொன்று மலம் கழித்திருந்தது. நாய்தான் - மிருகம்! போகட்டும். ஆனால் அது தொடர்ந்தது. உறைபனிக்காலமாதலால் இவர்கள் விழித்தெழுவதற்கு முன்பாகவே இந்த நாடகம் நடைபெறத் தொடங்கியது. அவர்கள் அந்தக்காட்சியைக் காணும்போதெல்லாம், எதிர்ப்புறமாக முன்வீட்டு கிரேக்க தேசக்காரி தனது நாயை உலாவிற்கு கூட்டிச் சென்று திரும்பி வந்து கொண்டிருப்பாள். பெரும்பாலானவர்கள் நாயை நடைபவனிக்குக் கூட்டிச் செல்லும்போது கையுடன் ஒரு 'ஷொப்பிங் பாக்'கையும் எடுத்துச் செல்வார்கள். அவளது கையில் அது இருக்கவில்லை. அவளது செய்கைக்கு எந்தவொரு எதிர்ப்பும் இவர்களிடமிருந்து கிழம்பாததால் - ஒருநாள் இரவு கிரேக்க தேசக்காரி இவர்களது தண்ணீர்ப் பைப்பைத் திறந்து விட்டாள். தண்ணீர் இரவு முழுவதும் ஓடியது. 'கவுன்சில்' (council) சென்று முறையிட்டார்கள். அப்போது பாடசாலை விடுமுறைக்காலமாகையால் கவுன்சில் 'பழி'யை மாணவர்கள் தலையில் போட்டார்கள்.

வீட்டிற்கு முன்பாக மூன்றடி உயரத்தில் ஒரு மதில். பெயருக்குத்தான் அது மதில். வீட்டிற்குள்ளிருந்து வெளியே என்ன நடக்கிறதென்பதை பார்க்கவும், மாறாக வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கவும் அது உதவுகின்றது.

இப்பொழுதெல்லாம் குளிர்காலத்தில் 'சிம்னி'க்குள் (chimney) விறகையோ நிலக்கரியையோ போட்டு எரிக்கும் வழக்கம் மாறி வருகிறது. பழமைவாதிகளும் வசதியற்றவர்களும் இன்னமும் அதைப் பாவிக்கிறார்கள். இதற்குப் பதிலாக gas heater, central heating போன்றவை வந்துவிட்டன. தங்களை நாகரீகமானவர்கள் போல் காட்டிக் கொள்ளும் கிரேக்க தேசத்தவர்களது வீட்டிலிருந்து புக்குப் புக்கு என்று சிம்னிக்குள்ளால் 'கரிய' நிறத்தில் புகை வருகிறது.

இங்குள்ளவர்கள், நகரசபை அறிவுரைப்படி வருஷத்திற்கு இரண்டு தடவைகள் தமது வீட்டிற்கு முன்பாக தமக்குத் தேவையில்லாத பொருட்களை              வைப்பார்கள். ஒரு தடவை 'பச்சைக் கழிவுகள்' - மரம் சார்ந்த கழிவுகளும் (Green Waste); மறுதடவை ஏனைய கழிவுகளையும் (Hard Waste) வைக்க முடியும்.

மரக்குற்றிகளை வெளியே வைக்கும் காலம் வந்தது. சேகரின் வீட்டின் பின்புறம் நிறைய மரக்குற்றிகள் இருந்தன. இவர்களுக்கு விறகு எரிக்கும்போது வரும் தூசு ஒத்து வரவில்லை. அவற்றை வெளியே வைப்பதென்று முடிவு செய்தார்கள். அன்றைய பகல் முழுவதும் அவற்றை வெளியே எடுத்து, வீட்டிற்கு முன்பாகவிருந்த 'கவுன்சில்' நிலத்தில் போட்டார்கள். பெரியமரக்குற்றிகள் பாரமாக இருந்தன.
"இண்டைக்கு இரவைக்கே ஆரேன் இதை எடுத்துக் கொண்டு போயிடுவினம் நல்ல காய்ஞ்ச விறகு" என்றான் சேகர்.
"ஓமோம்! உங்கடை விறகைத்தான் இஞ்சை பாத்துக் கொண்டிருக்கினம்" என்று நையாண்டி செய்தாள் வசந்தி.

பெருயதொரு வேலையை முடித்துவிட்ட அசதியில் உறங்கினார்கள் அவர்கள். நள்ளிரவு கடந்த குளிர் வேளையில் வெளியே சத்தம் கேட்டது. வசந்தி சேகரை நித்திரையில் இருந்து எழுப்பினாள்.
"ஏதோ சத்தம் கேட்குது!"
இருவரும் படுக்கையில் இருந்து எழுந்தார்கள்.
கொஞ்ச நேரமாக விறகுக் குற்றிகள் தரையிலும் தகரத்திலும் விழும் சத்தம். பின் சில்லுகள் உருளும் சத்தம். ஜன்னல் சீலையை நீக்கி வெளியே நோட்டம் விட்டார்கள். ஒரு குடும்பமே அந்தப் பனியில் குளித்துக் கொண்டிருந்தது. எதிர்வீட்டு கிரேக்க நாட்டு மனிதரும் மனைவி பிள்ளைகளும் ஒரு 'வீல் பொறோவரி'ற்குள் விறகுக் குற்றிகளைப் போட்டு இழுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் தங்களைப் பார்ப்பதும் தெரியாமல் அந்த வீல் பொறோவரை தெருமீது இழுத்து, வளவிற்குள் ஏற்றி - சில்லுகள் ஏறாத இடங்களில் சில்லுகளைத் தூக்கி வைத்து ஒரு வேடிக்கையே காட்டிக் கொண்டிருந்தார்கள்.

விடியும்போது நிலத்தில் ஒரு விறகுக் குற்றிகளும் இருக்கவில்லை. சுத்தமாக வழித்துத் துடைக்கப்பட்டிருந்தது. எதிர்வீட்டின் புகை போக்கிக்குள்ளால் புகை வெளித்தள்ளிக் கொண்டிருந்தது. 'கிறீக்' நாகரீகத்தின் சுவடுகள் என அது வானில் கோடு கிழித்துப் பரவின.


No comments:

Post a comment