Thursday 3 March 2016

படம் காட்டினம் - கங்காருப்பாய்ச்சல்கள்(10)



வேலை செய்யுமிடத்தில் நேற்று மதிய இடைவேளையின்போது, ஒரு வியட்நாமியரை---எனது முகநூல் நண்பரை--- ரொயிலற்-பாத்றூமிற்குள் சந்தித்தேன்.

அவர் சிறுநீர் கழித்துக் கொண்டு நின்றார். அவரின் ஒரு கை ‘அங்கேயும்’ மறுகை ஐ-போனிலும் இருந்தது. ஐ-போனில் அவர் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தார்.

”முதலிலை ஒரு விஷயத்தை முடி” என்று கத்தினேன்.

அவன் “ஐ லைக்’ என்றான்.

இதை நான் எனது இன்னொரு நண்பருக்குக் கூறியபோது,

“அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சும்மா படம் காட்டுறான்” என்றார். தொடர்ந்து,
“when he eat crab - up, when he eat fish – up, when he eat banana – up, when he go toilet - up“

அவர் up, up என்று சொன்னது, ஒவ்வொரு தடவையும் படங்களை upload செய்கின்றார் என்பதை.

 இதை எழுதும்போது, அவரைப்பற்றி இன்னும் சொல்லவேண்டியுள்ளது. அவர் முகநூலில் நண்பர்களைச் சேர்ப்பதில் அலாதிப் பிரியர். என்னைத் தன்னுடன் முகநூலில் சேர்க்கும்படி கேட்டபோது, ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம்.
”நீர் ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் முகநூல் விளையாடுகின்றீர்?” என்பதுதான் அந்தக் கேள்வி.

கையில் ‘கிளவ்ஸ்’ போட்டிருந்தால் மூக்கு நுனியால் ஐ போனைத் தட்டித் தட்டி ஃபேஸ்புக் விளையாடுவான்.

எப்போதும் பல பெண்களுடன் சேர்ந்து நின்று படம் போடுவார். கூடவே அவரது மனைவியும் அந்தப்படத்தில் காட்சி தருவார். மருந்துக்கும் அவரது படங்களில் ஒரு ஆண் கிடையாது.

நான் என்ன போட்டாலும் தவறாமல் வந்து லைக் போட்டுவிட்டுச் செல்வார். ‘ஏன்ரா உப்பிடிச் செய்கின்றாய்?’ என்று கேட்டால், ‘சும்மா ஒரு சப்போற் தான்’ என்பான்.

ஒருமுறை எனது தமிழ் நண்பர் ஒருவர் எனது உள் பெட்டியில் வந்து,
”உங்கள் வியட்நாமிய நண்பர் எதற்கெடுத்தாலும் லைக் போடுகின்றாரே! அவருக்குத் தமிழ் தெரியுமா?” என்று செய்தி அனுப்பியிருந்தார்.

“அவர் நன்றாகத் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த வியட்நாமியர்” என்று நான் அவருக்குப் பதிலிட்டேன். வேறு எப்படி நான் எழுதுவதாம்.

அதற்கு எனது தமிழ் நண்பர், தன்னுடைய முகநூலில்,

|தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த வியட்நாமியர்| என்று ஏதேதோவெல்லாம் எழுதி, அவனுடைய படத்தையும் போட்டு, அதில் ஒரு இணைப்பை எனக்கும் செருகியிருந்தார்.

வியட்நாமிய நண்பன் தன்னுடைய படத்தை எனது முகநூலில் கண்ட புளுகத்தில் அதற்கும் ஒரு லைக் போட்டுவிட்டுச் சென்றான்.



No comments:

Post a Comment