Sunday, 17 June 2018

பொன்சொரிந்த பொற்காலம்(பகுதி 2)


யூனியன்கல்லூரி நினைவுகள் பதிவுகள்

அந்தக் காலத்தில், ஒரே நேரத்தில் பல மாணவர்கள் நீர் அருந்த முடியாமல் இருந்தது. இதனால் பல மாணவர்கள் தெருவைக் கடந்து அப்பால் இருந்த தேநீர்க்கடைகளிலும், சாப்பாட்டுக் கடைகளிலும் நீர் பருகினார்கள். சிலர் அருகில் இருந்த வீடுகளிற்கும் சென்றார்கள். இந்தச் சிக்கலை நிவர்த்தி செய்ய 1980 ஆண்டில் ஏறக்குறைய 3000 மாணவர்கள் பாவிக்கக்கூடியவாறு பெரியதொரு தண்ணீர்த்தொட்டியை அதிபர் அமைத்துத் தந்தார். மேலும் இதே ஆண்டில் மாணவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. கனிஷ்ட பிரிவு ஆண்கள் நீல காற்சட்டையும் வெள்ளை சேட்டும், ஏனையவர்கள் யாவரும் வெள்ளை ஆடையும் காலணியும் அணிந்து வந்தார்கள்.

 
 யூனியன் கல்லூரி அமெரிக்க மிஷனரிமார்களால் கட்டப்பட்டதால் அங்கே ஒரு தேவாலயம் இருந்தது. பதினைந்து வரையான  கிறீத்தவ மாணவர்கள் காலை நேரம் அங்கு சென்று வாங்குகளில் இருந்து வழிபாடு செய்வார்கள்.   ஆனால் யூனியனில் படிக்கும் மாணவர்களில் 95% ஆனவர்கள் இந்து மாணவர்கள். அவர்கள் வழிபாடு செய்வதற்கு ஏற்ற வசதி  வாய்ப்பு இருக்கவில்லை. இந்து மாணவர்கள் வழிபாடு செய்வதற்காக 1986 ஆம் ஆண்டு தை மாதம் யூனியன்கல்லூரி வளாகத்திற்குள் புவனேஸ்வரி அம்பாள் ஆலயக் கட்டுமானப் பணியை ஆரம்பித்து வைத்தார். ஆனால் அத்திபாரம் இடும் வேளை மாணவ தலைவர் சுகந்தன் அழைக்கப்பட்டபோது ஆசிரியர்கள் மாணவர்கள் யாவரும் பிரமித்துப்போனோம். ஏன்? ஒருவருக்கும் அப்பொழுது புரியிவில்லை. அதிபர்தான் அத்திபாரம் முதற்கல் வைப்பார் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்தவர்கள். சிலர் மெல்லிசயாய் குறைகூறவும் செய்தனர். பின்னர்தான் விளங்கியது அதிபர் அதைச் செய்திருந்தால் அதனை விரும்பாத சின்னஞ்  சிறிய குழு பெரிய புரட்சிபண்ணியிருக்கும் என்று. கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியில் கட்டிய கோவில் அரைகுறையில் விடப்பட்டது போல யூனியனிலும் நடக்க அதிபர்  இடம் வைக்கவில்லை. இப்பொழுது அவர்கள் மெயின் கேற் வாசலில் நின்று கூய்ச்சல் போட்டால் முழு மாணவ சமூகமுமே அவர்களை துரத்தி அடித்திருப்பார்கள். அதிபரின் சாதுரிய முன்னெடுப்பால்தான் அம்பாள் ஆலயம் யூனியனில் எழுந்தருளி நிலைத்துள்ளது.

ஆவணி மாதம் கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் தலைமையில் கும்பாபிசேகம் நடந்தது. நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசார்ய சுவாமிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கினார். மேலும் மகாஜனா, நடேஸ்வரா, வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகள் மாவிட்டபுரம் கோவிலில் திருவிழாக்கள் செய்து வந்தார்கள். 1985 ஆம் ஆண்டு முதல் யூனியன் கல்லூரியும் மாவிட்டபுரம் கோவிலில் ஒரு திருவிழாச் செய்ய (6ஆம் திருவிழா) வழிவகுத்தார்.

1981ஆம் ஆண்டு பிரதமர் கெளரவ ர.பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தார். அதற்காக யூனியன் கல்லூரி தெரிவு செய்யபட்டு, கல்லூரி மைதானத்தின் மேற்குப்புற எல்லையில் ஒரு தற்காலிக ஆனால் பலமான திறந்தவெளி அரங்கு அமைத்துத் தருமாறு கேட்கப்பட்டிருந்தார்கள். அதிபர் அந்த தற்காலிக அரங்கை மைதானத்தின் உட்புறமாக சற்று நகர்த்தி நிரந்தரமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.
w

கல்விச் செயற்பாடுகளில் மட்டுமல்லாது இணைபாட செயற்பாடுகளிலும் கல்லூரி சாதனைகள் மேல் சாதனைகள் புரிந்தது. 1978, 1979, 1980 ஆம் ஆண்டுகளில் JSSA நடாத்திய வருடாந்த சுற்றுப் போட்டியில் உதை பந்தாட்ட முதலாம் பிரிவு தொடர்ந்து சாம்பியன் கேடயத்தைக் கைப்பற்றியது. 1977, 1978, 1979 ஆகிய ஆண்டுகளில் யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹொக்கி போட்டிகளில் தொடர்ந்து சாம்பியன் கேடயத்தை வென்றது. 19 வயதிற்குக் உட்பட்ட பிரிவினர் 1978, 1979 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் சாம்பியன் கேடயத்தை வென்றனர். இலங்கை விஞ்ஞான முன்னேற்றச்சங்கம் நடத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையேயான விஞ்ஞான வினா அறிவுப்போட்டியில் 1979 ஆம் ஆண்டு யூனியன் 3வது இடம்பெற்றது. அகில இலங்கை ரீதியில் நடந்த பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில், தடியூண்டிப் பாய்தல் நிகழ்ச்சியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் மகேந்திரனும், 19 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறீநாதனும் முதலாம் இடத்தைப் பெற்றார்கள். இதில் மகேந்திரன் புதியதொரு சாதனையை நிலைநாட்டினார்.
w

யூனியன் கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல தனக்கு உதவியவர்கள் என பின்வருபவர்களை தனது பொற்காலம்என்னும் நூலில் பதிவு செய்து நினைவு கூருகின்றார். மாணவிகள் தொடர்பான முகாமைத்துவப் பணி திருமதி பத்மாவதி சந்திரசேகரி, செல்வி ஜெயரத்தினதேவி சபாரத்தினம்; புதிய மேன்மாடிக்கட்டடத்தின் கீழ்ப்பிரிவு மாணவர்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் திரு ஏ.பரமநாதன்; க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர் செ.சிவகுமாரன்; உயர்தர வர்த்தக வகுப்புகளை மேற்பார்வை செய்தவர் பொ.கமலநாதன்; க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கும், வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கும் பொறுப்பாக என்.கந்தசாமி; சைவ சமயம், நூல்நிலையம், தமிழ்த்தினப் போட்டிகளுக்குப் பொறுப்பாக திருமதி மகாதேவி பத்மநாதன்; கிறிஸ்தவ சமயம், சாரணீயம் தேவி செல்வரட்ணம்; விளையாட்டுத்துறைக்குப் (உதைபந்தாட்டம், கிரிக்கெட்) பொறுப்பாக விசுவலிங்கம் பாலசிங்கம்; ஹொக்கி திரு அல்பேட் இராசையா என்போரைக் குறிப்பிடுகின்றார்.


தனது பதவிக்காலத்தில் தான் சந்தித்த உச்சச் சிறப்பான ஆசிரியர்கள் என திருமதி பராசக்தி பரமேஸ்வரன் (சமூகக்கல்வி), திருமதி கிருபைமலர் இராசையா (தாவரவியல்), திரு ஏ.மகாதேவன் (இரசாயனவியல்) என்ற மூவரையும் குறிப்பிடுகின்றார்.
w

அதிபர் கதிர். பாலசுந்தரம் பற்றிய எனது இரண்டாவது நினைவு மனித தெய்வம்என்னும் சிரித்திரன்சஞ்சிகை சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுபெற்ற அவரது சிறுகதை. அதை அவர் பிரதான மண்டபத்தில் ஒருதடவை வாசித்தார். அப்போது பாடசாலையே மெளனமாகி அசைவற்று நின்றது. வன்னியான், மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்று பிளவுப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்தை இல்லாது ஒழிக்க முனையும் கதை. அது முதல் கொண்டு அவரின் ரசிகனாகிவிட்டேன். அதன் பின்னர் அவர் எழுதி, நெறிப்படுத்தி - பாடசாலையில் நடந்த விஞ்ஞானி என்ன கடவுளா?, சாம்பல்மேடு என்னும் நாடகங்கள் பிரசித்தி பெற்றவை. நான் நினைக்கின்றேன், பாடசாலை அதிபராக பொறுப்பேற்றபின் நேரம் போதாமையால் எழுதுவதையே நிறுத்தி விட்டார்.

நாட்டுப்பிரச்சினை, பல்வேறுபட்ட அரசியல் நெருக்கடிகள் மிகுந்த ஒரு இக்கட்டான காலகட்டத்தில் - யூனியன் கல்லூரியில் 1978 முதல் 1987 மாசி மாதம் வரை அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெறும்போது 1300 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதன் பிற்பாடு சிறிது காலம் ஓய்வுற்ற பின்னர் மீண்டும் எழுத்துலகில் பிரவேசித்துள்ளார். இதுவரை பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார். அமிர்தலிங்கம் சகாப்தம், ’சத்தியங்களின் சாட்சியம், ‘சாணக்கியன் போன்ற அரசியல் சார்ந்த புத்தகங்கள்; ’பொற்காலம்என்ற யூனியன் கல்லூரி பற்றிய நினைவுகள் பதிவுகள்; ‘அந்நிய விருந்தாளிசிறுகதைத்தொகுப்பு; ‘மறைவில் ஐந்து முகங்கள், சிவப்பு நரி, ‘வன்னி, ‘வாரிசுகள் என்ற நாவல்கள்; ‘Blood And Terror’, His Royal Highness,The Tamil Tiger’, ‘A Millitant’s Silence’ போன்ற ஆங்கில நாவல்கள்.
w

யூனியன் கல்லூரி என்னும் பயிருக்கு எல்லா அதிபர்களும் நீர் ஊற்றியிருக்கின்றார்கள். ஆனால் பசளை இட்டவர்கள் மிகச்சிலர். அவர்களுள் திரு. கதிர். பாலசுந்தரம் முதன்மையானவர். மிகக் குறுகிய காலத்தில் அவரது அயராத உழைப்பினாலும் அர்ப்பணிப்பான சேவையினாலும் யூனியன் கல்லூரி பூத்துக் குலுங்கி, காய் கனி தந்து பொலிவுடன் விளங்கியது.

1986 ஆம் ஆண்டு சுகந்தன் என்னும் மாணவன் 372 புள்ளிகள் பெற்று க.பொ.த உயர்தர தேர்வில் புதியதொரு தேசிய சாதனையை நிலை நாட்டினார். பின்னர் அதிபரின் சிபாரிசினால் கேம்பிரிஜ் பல்கலைக்கழக புலமைப்பரிசில் பெற்று படிக்கச் சென்றார். மேலும் அதே ஆண்டில் 26 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகி யூனியன் கல்லூரியில் புதியதொரு சாதனையை நிலைநாட்டினார்கள்.

1987 இல்---ஒரு தசாப்த காலத்தில்---இவர் ஓய்வு பெறும்போது ஆறாம் ஆண்டில் ஐந்து பிரிவுகள் இருந்தன. அதில் ஒரு பிரிவு மாணவர்கள் - ஏறக்குறைய 40 மாணவர்கள் - புலமைப்பரிசில் பெற்றவர்கள் ஆக இருந்தார்கள்.

யாழ் மாவட்டத்தில் முதல்நிலை வகித்த - 1963ஆம் ஆண்டு 43 மாணவர்களை பல்கலைக் கழகத்துக்கு அனுமதி பெறச் செய்த சுப்பர் கிறேட் ஸ்கந்தா கல்லூரி அதிபர்கள் திரு. ஒறேரர் சுப்பிரமணியம்-வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் பின்னர் படிப்படியாய் மங்கி மறைந்து போன பரிதாப நிலை யூனியனுக்கு வராது தளர்ச்சி நிலையில் தள்ளாடிய அதனை தூக்கி நிறுத்தி புகழின் உச்சத்துக்கு எடுத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு.

‘Saturday Review’ என்னும் ஆங்கில வார சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ். குடாநாட்டின் அதி சிறந்த அரசாங்கப் பாடசாலை அதிபர் எனப் போற்றப்பட்டார்.

இந்த அம்சங்கள்  திரு. கதிர் பாலசுந்தரம் காலத்தில் யூனியன் கண்ட வளர்ச்சியின் உச்சத்தை அதன் 200 ஆண்டுகள் வரலாற்றில் பொன்  எழுத்துக்களால் பதிவு செய்கின்ற.

No comments:

Post a Comment