Thursday, 1 August 2019

வட இந்தியப் பயணம் (5)5.
ஆக்ரா கோட்டையில் (செங்கோட்டை) மொகலாயப்பேரரசர்கள் பாபர், ஹிமாயுன், அக்பர், ஜஹாங்கிர், சாஜகான், ஒளரங்கசீப் போன்றோர் வாழ்ந்தார்கள்.

இங்கேதான் சாஜஹான் இறக்கும் வரையும் (1666) தனது மகன் ஒளரங்கசீப் இனால் வீட்டுச்சிறை வைக்கப்பட்டிருந்தார். அங்கேயிருந்தபடியே தான் தனது காதல் மனைவிக்காகக் கட்டிய தாஜ்மகாலைப் பார்த்து கொண்டே இருந்து மரித்துப் போனார் சாஜஹான். அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அறையைப் பார்வையிட்டோம். அங்கிருந்தபடியே தூரத்தில் பனிப்புகார்களுக்கிடையே தெரியும் தாஜ்மகாலையும் பார்த்துக் கொண்டோம்.

 

மதியத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஆக்ரா கோட்டையில் இருந்து 60 கி. மீ தொலைவில் இருக்கும் உலக அதிசயமான தாஜ்மகால் நோக்கிப் புறப்பட்டோம்.

(இங்கே குறிப்பிடப்படும் தகவல்கள் – சுற்றுலா வழிகாட்டி மற்றும் இணையத்திலிருந்து பெறப்பட்டவை)

 

v குறிப்புகள்

ஒரு காலத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் வங்காளதேசம் என்பவை சேர்ந்து பாரதம் என அழைக்கப்பட்டது.

துருக்கிய-பாரசீக / துருக்கிய மங்கோலிய தெமூரித் தலைவனான பாபர் கி.பி 1526 இல் மொகலாய அரசைத் தோற்றுவித்தார். முகல் என்பது மங்கோலியர் என்பதன் பாரசீகச் சொல். அவர்கள் இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி. 1526 தொடக்கம் 1712 வரை இந்த நாடுகளின் பெரும்பகுதிகள் மொகலாயப் பேரரசின் கீழ் இருந்தது.

பாபரின் பின்னர் முறையே ஹூமாயயூன், அக்பர், ஜஹாங்கீர், சாஜகான், ஒளரங்கசீப், முகம்மது ஆசம் ஷா, முதலாம் பகதூர் ஷா என்போர் பேரரசை ஆண்டார்கள்.

பாபர் (இவரின் ஆட்சிக்காலம் 1526 முதல் 1530 வரை) நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த காலத்தில், அவரது தங்கையின் கணவர் மாது காஜ்வா தான் அரசாளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது.

ஹூமாயூனின் (இவரின் ஆட்சிக்காலம் 1530 முதல் 1556 வரை) ஆட்சிக்காலத்தில் மொகலாயப் பேரரசை, ஆப்கானிய மன்னர் சேர் சா சூரியிடம் இழந்து, பின்னர் மீண்டும் போரிட்டுப் பெற்றுக் கொண்டார்.

அக்பர் (ஆட்சிக்காலம் 1556 முதல் இறப்பு வரை/1605) ஹுமாயுன், ஹமீதா பானு என்பவர்களுக்கு மகனாக (இப்போதைய பாகிஸ்தானில், சிந்து மாநிலத்தில்) பிறந்தார். இவர் ஹூமாயுனின் இறப்பின் பின்னர், தனது 13வயதில் ஆட்சிபீடம் ஏறினார். அக்பருக்கு குறித்த வயது வரும்வரைக்கும், அவரது படைத்தளபதி பைராம் கான் ஆட்சிப் பொறுப்பை வழிநடத்தினார். அக்பரின் மனைவிமார்கள் மரியம் உசு சமானி (Mariam – Uz -Zamani, மூன்றாவது மனைவி), Salima Sultan Begum (4வது மனைவி, பைரான் கான் இறப்பின் பின் அவர் மனைவியை மணந்தார்), Ruqaiya Sultan Begum (முதல் மனைவி) உட்பட 30 மனைவிமார்கள்.


ஜஹாங்கிர் (Jahangir) அக்பரின் மூன்றாவது மகன். தாயார் ஜோதாபாய். இவர் 1605 முதல் இறக்கும் வரை (1627) மொகலாயப் பேரரசராக இருந்தார். ஜஹாங்கிரின் மனைவி மேன்பாவதி – அக்பரின் மனைவியான மரியம் ஜமானின் (ஹீரா குன்வாரி) சகோதரர் ராஜா பக்வந்த் தாஷின் மகளாவார். அதன் பின்னர் ஜஹாங்கிர் பல பெண்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திருமணம் செய்தார். அவர்களில் இளவரசி மன்மதியின் மகனாக சாஜகான் பிறந்தார். அதன் பின்னர் 1611 இல் ஜஹாங்கிர் நூர்ஜகானை மணந்தார்.

சாஜகான் பாகிஸ்தான் லாகூரில் 1592 இல் பிறந்தார். இவர் மொகலாயப் பேரரசின் 5வது மன்னர். ஆட்சிக்காலம் 1627 -1658. இவரின் ஆட்சிக்காலம் மொகலாயர்களின் பொற்காலம் என்று கூறுவார்கள். தனது 15 வயதில் அர்ஜுமண்ட் பானு பேகம் (மும்தாஜ் மஹால்) என்பவரைத் திருமணம் செய்தார். அக்பராதி மஹால், ஹந்தாஹரி மஹால் போன்ற மனைவிமார்களும் உண்டு. மும்தாஜ் அவரின் மூன்றாவது மனைவி. மும்தாஜ் மஹால் 14 பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அவருடைய நினைவாகத்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டது. சாஜஹானின் காலத்தில் கட்டடகக்லை உச்சம் பெற்றிருந்தது. தில்லியில் செங்கோட்டை, ஜமா மஸ்ஜித் (பெரிய பள்ளிவாசல்) என்பவை இவர் கட்டியவை. சாஜஹான் தனக்காக ஒரு கறுப்பு தாஜ் மஹாலைக் கட்டிக்கொள்ள எண்ணியிருந்ததாகவும் ஒரு தகவல் இருக்கின்றது.

ஒளரங்கசீப் (1658 - 1707) சாஜகான் – மும்தாஜ் தம்பதியினரின் 5வது வாரிசு. இவரது காலத்தில் மொகலாய அரசு காபுலில் இருந்து தமிழ்நாடு வரை பரந்திருந்தது. இவரும் அக்பரும் 49 ஆண்டுகள் சாகும்வரை மொகலாயப் பேரரசை ஆண்டவர்கள். இவரது காலத்தில் ராஜபுத்திரர்களுக்கும் (ராஜஸ்தான்) மொகலாயர்களுக்குமிடையே பெரும்பகை மூண்டது. மத வழிபாட்டு இடங்கள் maஅறி மாறி இடிக்கப்பட்டன. இவரது சமகாலத்து மராட்டிய மன்னர் சிவாஜி இறந்ததன்பின்னர் மராட்டியர் நாட்டையும் பிடித்தார். ஏறத்தாள 25 வருடங்கள் தென் இந்தியாவில் மராட்டியரோடு போர்களைச் சந்தித்தார். மராட்டிய அரசின் பல கோட்டைகளைப் வெற்றிகொள்ள முடியாத மனவருத்தத்தால் இறந்து போனார் ஒளரங்கப். இவர் தெற்கே மராட்டியரோடு அதிகம் நேரத்தைச் செலவளித்ததால் வட இந்தியாவில் மொகலாயப்பேரரசு சிதைய ஆரம்பித்து நாளடைவில் மறைந்தது.

முகமது ஆசம் ஷா என்பவர் ஒளரங்கசீப்பின் மூத்த மகன். இவரது ஆட்சிக்காலம் 1707 பங்குனியிலிருந்து ஆடி வரையுமாகும். இவரின் ஒன்றுவிட்ட சகோதரன் முதலாம் பகதூர் ஷா, இவரையும் இவரது மூன்று மகன்களையும் போரில் கொன்று 1707 இல் டில்லியில் மொகலாய அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.

முதலாம் பகதூர் ஷா, ஒளரங்கசீப்பிற்கும் ராஜகெளரியின் அரசரின் மகளான நவாப் பாய் பேகம் சகேபாவிற்கும் பிறந்த 2வது மகன். இவரது ஆட்சிக்காலம் 1707 – 1712.


No comments:

Post a Comment