Wednesday 8 January 2020

வேர்களைத் தேடும் விழுதின் பயணம்


பகுதி (2)

இப்படித்தான் மலைக் கிராமமான ஜுஃப்பூரில் இயல்பு  வாழ்க்கை நடத்தி வந்த குண்டா கிண்டே தனது பதினேழாவது வயதில் பிடிபடுகின்றான். காடொன்றில் தனது தம்பிக்கு முரசு செய்வதற்கு மரம் வெட்டிக்கொண்டிருந்த வேளை ஆப்பிரிக்கக் கைக்கூலிகளிடம் அகப்பட்டுக் கொள்கின்றான். ஆண் பெண் பேதமின்றி அடிமையாகப் பிடிக்கப்பட்டவர்களை அம்மணமாக்கி - உடல் உறுப்புக்களைப் பரிசோதித்து – மாட்டுக்கு குறி சுடுவது போல நெருப்பினால் அடையாளமிட்டு கப்பலில் ஏற்றினார்கள். சொற்ப உணவு, சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட வாழ்க்கை. பாலியல் வல்லுறவு, தமது மலசலத்தின் மேலே இருப்பு. மனதைப் பதற வைக்கும் நான்கரை மாதங்கள் கடல் பயணம். கப்பல் அமெரிக்காவில் உள்ள நேப்பிள்ஸ் என்ற இடத்தைச் சென்றடைந்ததும், அவர்கள். உடல்வாகுக்கு ஏற்றபடி ஏலம் கோரப்பட்டார்கள்.

அங்கே குண்டா கிண்டேயை ஜான் வேல்லர் என்பவர்          வாங்கிக் கொள்கின்றார். `டோபி’ என அவனுக்குப் பெயரிட்டு - வெர்ஜீனியாவில், ஸ்பாட்சில்வேனியா ஊரகத்திலிருந்த பண்ணையில் அடிமை வேலைக்கு அமர்த்துகின்றான். டோபி என அவனைப் பெயர் சொல்லி அழைக்கும் போதெல்லாம் கொதித்துக் குமுறுகின்றான். தனது பெயர் குண்டா கிண்டே எனத் திரும்பத் திரும்பச் சொல்கின்றான். அவனால் ஆப்பிரிக்க வாழ்க்கையை என்றுமே மறக்க முடிவதில்லை. தனது வயதைக் கணித்துக் கொள்ள ஒரு குடுவைக்குள் கற்களைப் போட்டுக் கொள்கின்றான். பண்ணையில் வேலை செய்யும் நாட்களில் பல முறைகள் தப்பியோட முயற்சி செய்கின்றான். தண்டனையாக ஆண்மைச்சிதைவா பாதம் துண்டிக்கப்படுவதா என்ற கேள்வி எழுந்தபோது பாதம் துண்டிக்கப்படுவதை குண்டா கிண்டே ஏற்றுக்கொள்கின்றான். பாதம் துண்டிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜான் வேல்லரின் சகோதரரான மருத்துவர் வில்லியம் வேல்லரினால் காப்பாற்றப்பட்டு அவரது காய்கறித் தோட்டத்தில் வேலை செய்கின்றான். ஓரளவிற்கு நல்ல குணம் படைத்த முதலாளிக்கு வண்டியோட்டியாக வேலை பார்க்கின்றான். பண்ணை வீட்டில் சமையல் வேலை செய்த, தன்னைவிட வயதில் மூத்த பெல் என்ற அடிமைப் பெண்ணை மணந்து கொள்கின்றான். அவர்களுக்குப் பிறந்த கிஸ்ஸி என்ற பெண்குழந்தைக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மாண்டிங்கா இனத்து சொற்களை கற்றுக் கொடுக்கின்றான்.

குழப்படி செய்பவர்களுக்கும் தப்பியோட முயற்சிப்பவர்களுக்கும் சவுக்கடி முதற்கொண்டு இன்னொரு முதலாளிக்கு விற்பது வரை அப்போது நடைமுறையில் இருந்தது. அடிமைகள் அறிவை வளர்த்துக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. பதினாறு வயது நிரம்பிய கிஸ்ஸி, தனது காதலன் தப்பி ஓடுவதற்காக அனுமதிப் பத்திரம் நிரப்பிக் குடுத்ததில் பிடிபட்டுக் கொள்கின்றாள். அதனால் கோபம் கொண்ட வில்லியம் வேல்லர் அவளை வடகரோலினாவில் உள்ள டாம் லியா என்ற முதலாளிக்கு விற்றுவிடுகின்றார். டாம் லியாவினால் வன்புணர்வுக்கு ஆளாகின்றாள் கிஸ்ஸி. ஜார்ஜ் என்ற மகன் பிறக்கின்றான். கிஸ்ஸி தனது தந்தை சொல்லிக்கொடுத்த ஆப்பிரிக்கச் சொற்களையும் ஒலிக்குறிப்புகளையும் தனது மகன் ஜார்ஜிற்குச் சொல்லிக் கொடுக்கின்றாள்.

டாம் லியா சேவல் சண்டைகள் மீது ஆர்வம் கொண்டவன். அந்த வித்தைகளை ஜார்ஜிற்கு பயிற்றுவிக்க அவன் `கட்டுச்சேவல் ஜார்ஜ்’ எனப் புகழ் பெறுகின்றான். மெடில்லா என்ற பெண்ணை மணந்து எட்டுப் பிள்ளைகளுக்கு தந்தையாகின்றான் ஜார்ஜ். பின் அந்த எட்டுப்பேரும் மணம் முடித்து தமக்கென பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். ஜார்ஜ் – மெடில்லா தம்பதியினரின் நான்காவது பிள்ளையான டாம் என்பவனின் வழித்தோன்றலாக இந்த நாவலின் ஆசிரியர் இருக்கின்றார்.

டாம், கருமான் (கொல்லன்) தொழிலில் புகழ் பெறுகின்றான். முதலாளி டாம் லியா தனது சேவல் சண்டைகளில் தோல்வியுற்று கையறு நிலை வந்தபோது – எல்லோரையும் வடகரோலினாவில் அலமான்ஸ் ஊரகத்தில் உள்ள புகையிலைத்தோட்ட முதலாளி முர்ரேயிடம் விற்று விடுகின்றார். கட்டுசேவல் ஜார்ஜை, சேவல்சண்டையில் வென்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதலாளியிடம் இரண்டு வருடங்களுக்கு வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கின்றார்.

டாம்- ஐரீன் தம்பதிகளின் எட்டுக்குழந்தைகளில் சிந்தியா கடைசி. அவளுக்கு இரண்டு வயதானபோது, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் இருந்தார். அவரது முயற்சியினால் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அப்போது கட்டுச்சேவல் ஜார்ஜ் இங்கிலாந்திலிருந்து திரும்பிவிட்டான். அவனது தலைமையில் எல்லோரும் மேற்குப்பகுதியில் இருந்த டென்னசே மாநிலத்தின் ஹென்னிங் பகுதிக்குச் சென்றார்கள்.

சிந்தியா, வில் பாமெர் என்பவரை மணந்துகொள்ள, அவர்களுக்கு பெர்த்தா பிறக்கின்றாள். அவள் இசையில் நாட்டம் கொண்டவளாக இருந்தாள். குண்டா கிண்டேயின் தலைமுறையில் முதலில் கல்லூரிக்குச் சென்றவள் அவள் தான். கல்லூரி இசைக்குழுவில் சந்தித்த சைமன் அலெக்‌ஷாண்டர் ஹேலி என்பவரை மணந்து கொள்கின்றாள். அவர் பின்னாளில் வேளாண்மைப் பேராசிரியராகினார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் `வேர்கள்’ நாவலாசிரியர் அலெக்ஸ் ஹேலி.

அமெரிக்காவில் குண்டா கிண்டேயின் வழித்தோன்றல்களான ஏழு தலைமுறைகள் : குண்டா கிண்டே – கிஸ்ஸி/மகள் – ஜார்ஜ் – டாம் – சிந்தியா/மகள் – பெர்த்தா/மகள் – ஹேலி/நூல் ஆசிரியர். அதற்கு முந்திய ஆப்பிரிக்கத் தலைமுறையினர் : கைரபா குண்டா கிண்டே – ஒமோரோ - குண்டா கிண்டே.

ஆப்பிரிக்காவில் மாண்டிங்கோ இனத்தவரின் வாழ்க்கை முறை – கூலிகளிடம் பிடிபடுதல்/கொடுமையான கடற்பயணம் - அமெரிக்காவில் அடிமை/பண்ணை வாழ்க்கை – சேவல் விளையாட்டு/கருமான் தொழில் – விடுதலை பெறல் என கதை 1750 இல் ஆரம்பித்து 1992 வரை விரிந்து செல்கின்றது. கதையினூடாக அமெரிக்காவில் நடந்த அரசியல் மாற்றங்களும் சொல்லப்படுகின்றன. ஆரம்பத்தில் இருந்து வேகமெடுத்துச்சென்ற நாவல், கட்டுச்சேவல் ஜார்ஜின் பின்னர் சிறிது தளர்வடைந்ததை வாசிப்பின்போது உணர்ந்து கொண்டேன். தலைமுறையின் ஒவ்வொரு அங்கத்தினரும்,  தங்கள் வாழ்வை தொடர்ச்சியாகச் சொல்லிச் சென்றிராவிடில், அவர்களின் அடிமை வாழ்வும் அமெரிக்க வெள்ளையர்களின் சுரண்டலும் எமக்குத் தெரியாமல் போயிருக்கும். புலம்பெயர் நாட்டில் இரண்டாம் தலைமுறையினருக்கே தமிழையும் கலாசாரத்தையும் கடத்துவதற்கு திண்டாடும் நிலையில் இந்த நாவல் வியப்பைத் தருகின்றது. நாவலை வாசிக்கும்போது மனதில் உண்டாகும் உணர்வுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மொழிபெயர்ப்பாளர் பொன். சின்னத்தம்பி முருகேசன் குறிப்பிடுவது போல `உறக்கம் பிடிக்காத நள்ளிரவு வேளைகளில், கணினித்திரையைக் கண்களில் ததும்பிய நீர் மறைக்க, அவர் பட்ட பாட்டிற்கு’ பலன் கிடைத்ததை நான் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள். அனைத்து வரலாறுகளும் வெற்றியாளர்களால் மட்டுமே எழுதப்படுவதில்லை என நிரூபிக்கும் முக்கிய புத்தகம் இது.

நன்றி : ஈழநாடு (28.12.2019)

No comments:

Post a Comment