Friday 12 June 2020

உறவுகளின் இடைவெளி


சனிக்கிழமை காலை பத்துமணி. சிவநாதன் ஓய்வாக கதிரையில் அமர்ந்திருக்கின்றார். அருகே ஃபான் ஒன்று மெல்பேர்ண் வெதருக்கு ஈடு கொடுக்கும் வகையில் சுற்றிச் சுழல்கிறது. மனைவி மலர் மகளை ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். ரெலிபோன் ஓசை எழுப்பியது.

“ஹலோ... மலர் நிற்கின்றாவா?எதிர்ப்புறத்தில் ஒருபெண்குரல் தயங்கியபடியே கேட்டார்.

“இல்லை....!சிவநாதனும் தயங்கியபடியே பதில் சொன்னார்.

“எத்தனை மணிக்கு வருவா?

“மகளை ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டா. இன்னும் இரண்டு மணித்தியாலத்திலை வந்திடுவா.

“ஆடி அமாவாசை விரதம் எப்ப வருகுது எண்டு கேட்போமெண்டு எடுத்தனான்.”

நாளைக்கு!

“சரி அப்ப வைக்கிறன்.

சரி.

இவள் ஒருத்தி…. மச்ச மாமிசச் சாப்பாட்டுக்கு வேட்டு வைக்க நினைக்கிறாள். செத்த ஆவியள் எல்லாம் அட்டகாசமாக மேலுக்கு `என் ஜொய்’ பண்ணிக்கொண்டு இருக்கேக்கை, நாங்கள் ஏன் விரதம் பிடிக்கவேணும்?” தாய் தந்தையை இழந்த சிவநாதன் அங்கலாய்ந்தார். இதை மனைவி அறிந்தால் நாளை சாமியாராகி விடுவாள் என்பது உறுதி.

இருந்தாலும் கடவுளுக்குப் பயப்பட்டார் சிவநாதன். தெரியாமல் சாப்பிட்டால் பரவாயில்லை. தெரிந்துகொண்டு சாப்பிடலாமா?

மனைவி வந்ததும் வராததுமாக, ரெலிபோன் வந்த விஷயத்தைச் சொன்னார் சிவநாதன். ரெலிபோன் செய்தது யாராக இருக்கும் என்று இருவரும் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டார்கள்.

“ஒரு மனிசர் ரெலிபோன் செய்தா, ஆர் எண்டு விசாரிக்கிறதில்லையோ?” மனைவி மலர் புறுபுறுத்தாள்.

எடுக்கிறவர்தானே தன்ரை பெயரைச் சொல்லவேணும்! ஒருவேளை மலர்..... உம்முடைய தங்கைச்சியாக இருக்குமோ?

என்ரை தங்கைச்சியெண்டா உங்களோடை வடிவாக் கதைச்சிருப்பாள். நித்தமும் வந்து போறவள். டக்கெண்டு வேற ரெலிபோனை வைச்சிட்டதாகச் சொல்லுறியள்.

அப்ப.... உம்முடைய தங்கைச்சியின்ரை வீட்டிலை சந்திப்போம் ஒரு பிள்ளை... அந்தப்பிள்ளையாக இருக்குமோ?

“அவள் ஏன் இஞ்சை எடுக்கப்போறாள்? என்ரை தங்கச்சியையல்லவோ ரெலிபோன் செய்து கேட்பாள்.

இருவரும் அந்தப்பெண் குரலினால் நாள் முழுவதும் குழம்பிவிட்டார்கள்.

இரவு எட்டுமணி இருக்கும், கன்பராவில் இருந்து மலரின் சினேகிதி ரமா ரெலிபோன் செய்தாள்.

“மலர்... உங்கடை வீட்டிலை ஆரோ விசிற்றேஸ் வந்திருக்கினமாமே...! ஆர் அது?

அப்பிடி ஒருத்தரும் இஞ்சை வரேல்லையே! ஆர் உமக்குச் சொன்னது?

“ஒருத்தரும் சொல்லேல்லை... காலமை உம்முடைய ஹஸ்பன்ரை தங்கைச்சி உங்கட வீட்டுக்கு ரெலிபோன் செய்தவாவாம். அப்ப ஒரு வித்தியாசமான ஆம்பிளக்குரல் கதைச்சதாம்... அதுதான் கேட்டன். விசிற்றேஸ் வாறதுபற்றி தனக்கொண்டும் சொல்லேல்லையெண்டு அவள் கவலைப்படுகிறாள்...

ரெலிபோனை கையில் தூக்கிப்பிடித்தபடியே மலர் சிவநாதனைக் கூப்பிட்டாள்.

“இஞ்சாருங்கோ... காலமை உங்களோடை கதைச்சது கன்பராவிலை இருக்கிற உங்கடை தங்கச்சியாமே!

“என்ன... கன்பராவிலை இருக்கிற என்ரை தங்கைச்சியோ... அவள் அப்பிடியொண்டும் சொல்லேல்லையே....

மறுமுனையிலிருந்து இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ரமாவிற்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. தங்கைச்சிக்கு அண்ணனைத் தெரியேல்லை. அண்ணனுக்கு தங்கைச்சியைத் தெரியவில்லை. காலத்தின் கோலத்தை நினைத்து அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். அவளின் அந்தச்சிரிப்பு ரெலிபோன் இணைப்பினூடாக வெளியே வந்து இவர்களையும் சிரிக்க வைத்தது.

சிரிப்பினூடாக உறவுகளுக்கிடையேயுள்ள இடைவெளி பற்றியும் சிந்திக்கத் தூண்டியது.


No comments:

Post a Comment