Monday, 15 June 2020

பிராப்தம் - சிறுகதை

முருகன் கோவில். பூசை முடிந்து உபயகாரர்கள் பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதைப் பெற்றுக் கொள்வதற்காக பக்தர்கள் வரிசையில் நிற்கின்றார்கள்.

தூரத்தில் அவர்களை நோக்கியபடி வெண்ணிற வேட்டி நஷனலில் பொன்னம்பலம். முதுமையின் தேடலில் காட்சி மங்கலாக, சந்தேகம் வலுக்கின்றது. அவர்களை நோக்கி விரைகின்றார். அண்மையாக நின்று நடப்பதை அவதானிக்கின்றார்.

வழக்கத்திற்கு மாறாக, புலம்பெயர்ந்த நாட்டில் பக்தர்கள் பிரசாதத்தை 'வெறுங்கை'யில் வாங்கிச் செல்வதைப் பார்க்க அவர் மனம் பொறுக்கவில்லை. கோவிலிற்குள் அமைந்திருந்த காரியாலயத்தை நோக்குகின்றார். காரியாலயம் இன்னமும் பூட்டப்படவில்லை.
"ஒஃபிசில் ஐந்து டொலர்கள் குடுத்தால் நிறையக் 'கப்ஸ்'சும் 'ஸ்பூனும்' தருவார்கள். பிரசாதத்தைக் கொடுக்க இலகுவாக இருக்கும்." பொன்னம்பலம் சொல்ல நினைத்தது இதுதான்.

உபயகாரர்களுக்கு தமிழ் தெரியாது. பொன்னம்பலத்தாருக்கு அதை விளக்கிச் சொல்வதற்கு ஆங்கில அறிவு போதாது. அவர்களுக்கு அதைப் புரிய வைப்பதற்கு அவர் சங்கடப்பட்டுக் பட்டுக் கொண்டிருக்கும் போது - கோவிலில் சரீர உதவிகள் செய்துவிட்டு, வீட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த இராசலிங்கத்தின் பார்வையில் அந்தக் காட்சி பட்டது. இராசலிங்கம் அதை ஆங்கிலத்தில் உபயகாரர்களுக்கு விளக்கினார்.

உபயகாரர்கள் இவர்களது பேச்சைக் கேட்டார்களேயொழிய செயலில் இறங்குவதாக இல்லை.

"ஊரிலை நீங்கள் அப்படித்தான் கொடுப்பீர்களோ?" அவர்களில் ஒருவர் கேட்டார்.

ஆண்டவனுக்கு செலவு செய்ய தீர்மானித்திருந்த 'கோட்டா'விலிருந்து ஒரு சதமேனும் கூட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

"ஐயா! இந்த விஷயத்திலை தலையிடுவது நல்லதல்ல" பொன்னம்பலத்தை தனியே அழைத்துச் சொன்னான் இராசலிங்கம்.

பொன்னம்பலம் சிறிது நேரம் ஜோசித்துவிட்டு விறு விறு என்று காரியாலயம் நோக்கி நடந்தார். தயங்கியபடியே நஷனல் பொக்கற்றில் கையை நுழைத்தார். இரண்டு டொலர்களும் எண்பது சதமும் இருந்தன.

இராசலிங்கம் பின்னாலே நின்று நடப்பதை அவதானித்தான். மனம் கேட்கவில்லை. அவனும் காரியாலயம் நோக்கி விரைந்தான்.

"என்ன ஐயா! உங்கடை காசிலை வாங்கிக் குடுக்கப் போறியள் போல."

"ஓமடா தம்பி! ஆனா ஒரு பிரச்சினை. இரண்டு டொலர் இருபது சதம் குறையுது மோனை."

"ஐயா, உதை வையுங்கோ. நான் வாங்கிறன்" இராசலிங்கத்தின் கண்கள் பனிக்கின்றன. தனது பொக்கற்றினில் இருந்து ஐந்து டொலர் நோட்டொன்றை உருவி எடுத்தான்.

"தம்பி. பொறு ... பொறு.... இந்த பிரச்சினையை தொடக்கினது நான்தான். ஆளுக்குப் பாதி பாதி போட்டு வாங்குவம். நீ பாதி - நான் பாதி. அதுதான் சரி."

இருவரும் ஆளுக்கு இரண்டரை டொலர்களைப் போட்டு வாங்க முடிவு செய்தார்கள். காரியாலயத்துள் நுழைந்தார்கள். காசை மேசையில் வைத்தார்கள். இந்த வேடிக்கையை உள் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் முகாமையாளர்.

"எங்களுக்கு ஒரு செற் கப்ஸ்சும் ஒரு செற் ஸ்பூனும் தாங்கோ."

காரியாலய முகாமையாளர் அவர்கள் கேட்டதற்கும் மேலாக, ஒவ்வொன்றிலும் இவ்விரண்டு 'செற்' எடுத்து மேசை மீது வைத்தார். இருவரையும் மேலும் கீழும் பார்த்தார். சிரித்துக் கொண்டே காசைத் திருப்பி மேசையில் வைத்தார்.

பொன்னம்பலமும் இராசலிங்கமும் திகைத்தபடியே முகாமையாளரைப் பார்த்தார்கள். அவர் "பரவாயில்லை... கொண்டு போங்கோ" என்று முடிந்த முடிவாகச் சொல்லிவிட்டார். அவர்கள் இருவரும் உபயகாரர்களை நோக்கிச் சென்றார்கள். அவற்றை அவர்களிடம் கொடுத்து விட்டுத் திரும்புகையில்,

"பாத்தியேடா தம்பி, அவன்ரை செயலை! என்னையும் கொடுக்க விடவில்லை. உன்னையும் கொடுக்க விடவில்லை. அதுவும் ஒன்றுக்கு இரண்டு... இதைத்தான் கொடுப்பினை எண்டு சொல்லிறது. எல்லாம் அவன் செயல். அவன் விருப்பு. ஆண்டவனுடைய செயலும் பண்பும் நம் அறிவுக்கு எட்டாதது" கண்கள் குளமாக, நெகிழ்ச்சியில் பொன்னம்பலத்தின் குரல் தழுதழத்தது.







1 comment:

  1. சிறப்பு. அது தானே மனிதத்தின் மதிப்பு?

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    ReplyDelete