Thursday 18 March 2021

அற்பனுக்குப் பவிசு வந்தால் - கங்காருப் பாய்ச்சல்கள் (35)

ஒருமுறை நான் எனது நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பனின் அப்பா நெஞ்சுவலி வந்தது என்று படுத்திருந்தார். நண்பன் தனது தந்தையையிட்டுக் கவலை கொண்டிருந்தான். ‘ஹாற் அற்றாக்’ மைனராக வந்திருக்கும் எனச் சந்தேகம் கொண்டிருந்தான். “வைச்சிருக்காதை… உடனை ஹொஸ்பிற்றலுக்குக் கூட்டிப் போ” என்றேன் நான். நான் அவனுக்குச் சொன்னதை அவனின் அம்மா உள்ளேயிருந்து கேட்டிருக்க வேண்டும்.

“நானும் பல தடவைகள் சொல்லிவிட்டேன். கேட்கின்றார் இல்லை. ஹொஸ்பிற்றல் போனால் காசை உருவி விடுவார்கள்” எனப் பயப்படுகின்றார்.

அவர்கள் குடும்பம் ஏழ்மையானதுதான். நான் அறிவேன். அதற்காக?

சில வருடங்கள் உருண்டோடி விட்டன. நண்பனின் குடும்பத்தினருக்கு பணம் எங்கிருந்தோ வந்துவிட்டது. இரண்டுமாடி கொண்ட புதுவீடு, வசதி வாய்ப்புகளுடன் இருந்தார்கள். அவனின் அப்பாவிற்கு பிறிதொருநாளும் நெஞ்சுவலி வந்திருக்கவில்லை. அன்று நண்பனின் அம்மாவைக் காணக் கிடைக்கவில்லை. தானாகவே அவன் சிரித்துக் கொண்டு சொன்னான். “அம்மாவுக்கு முகத்தில ஒரு சின்னப் பரு. சூட்டுக்கு வந்ததோ தெரியாது, அவ இப்ப பிறைவேற் டொக்ரரைப் பார்க்கப் போய்விட்டார்.”

அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பார்கள் என்பது இதுதான்.

காசு இல்லாவிட்டால் ‘ஹாற் அற்றாக்’ வந்தாலும் வைத்தியரைப் பார்க்க மாட்டார்கள். காசு கொட்டோ கொட்டென்று கொட்டிவிட்டால் ’சூட்டுப் பருவுக்கும்’ பிறைவேற் ஹொஸ்பிற்றல் தான். சிலரது வாழ்வில் இப்படியும் ஒருபக்கம்.

 

No comments:

Post a Comment