வளர் காதல் இன்பம் - குறுநாவலுக்கான அணிந்துரை
குரு அரவிந்தன்
இலங்கையில் 1983 ஆண்டு நடந்த இனக்கலவரத்தாலும், அதைத் தொடர்ந்து நடந்த போரினாலும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர் தங்கள் சொந்த மண்ணிலேயே இடம் பெயர்ந்தார்கள். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். அப்படிப் புலம்பெயர்ந்தவர்களில் கலை, இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட எங்களில் சிலர் மேற்கு நோக்கிக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்தோம், அதேசமயம் சிலர் கிழக்குநோக்கி அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தனர். அவுஸ்ரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில், தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட நண்பர் கே.எஸ்.சுதாகரும் ஒருவராவார். புலம்பெயர் தமிழர்களின் இலக்கிய வளர்ச்சியில், தமிழ் இலக்கியவானில் கிழக்கில் இருந்து ஒளிதரும் நட்சத்திரமாக அவர் இன்று மிளிர்வது ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றது.
உள்மனதில் ஏற்படும்
உணர்வு மோதல்களை அடிக்கடி நினைவூட்டக்கூடிய படைப்புக்களே அழியாத காவியங்களாய் நிலைக்கின்றன.
என் இனியநண்பர் கே. எஸ்.சுதாகரின் உயிரோட்டமுள்ள படைப்புக்களான சிறுகதைகள், குறுநாவல்கள்
சில போட்டிகளில் பங்குபற்றிப் பரிசுகளும்,
விருதுகளும் பெற்றிருப்பதில் இருந்தே அதை உறுதி செய்யமுடிகின்றது. இவர் இலங்கையில்
தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நான்
மகாஜனாக்கல்லூரியில் கல்வி கற்றகாலத்தில் இவர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கல்விகற்றார்.
பேராதனைபல்கலைக் கழகப் பொறியியல் பட்டதாரியான இவர், பட்டப்படிப்பை முடித்தபின் காங்கேசந்துறை
சீமெந்துதொழிற்சாலையில் சிறிதுகாலம் தொழில் புரிந்தார். சிறந்த நற்பண்புகளைக் கொண்ட
இவர், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
`வளர்காதல்
இன்பம்’ என்ற இந்தப் புதினம் இவரது எழுத்து நடைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
ஒரு நாவலுக்குரிய அத்தனை பண்புகளையும் கொண்டிருந்தாலும், ஆசிரியர் எண்ணிக்கையில் பக்கங்கள்
போதாமையால், இதைக் குறுநாவல் என்றே குறிப்பிட்டிருக்கின்றார். ‘சிங்கப்பூர் மாயா இலக்கியவட்டம்’
நடத்திய குறுநாவல் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றிருக்கும் இந்த நாவல் இப்போது நூல்
வடிவம் பெற்றிருக்கின்றது.
காதல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை, ஒருதலைக் காதலாக இருந்தாலும் அது வாழ்க்கையில் ஒருஅனுபவமே! சிலருக்குக்
காதல் கசப்பாக இருக்கலாம், சிலருக்கு இனிப்பாக இருக்கலாம், எல்லாமே அவரவர் மனநிலையைப்
பொறுத்தது. காதல் திருமணமாக இருந்தாலும், விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வும் இல்லாவிட்டால்
வாழ்க்கை என்றுமே இனிக்காது. இந்தக் குறுநாவலின் கதைக்களம் புலம்பெயர்ந்த மண் என்பதால்
வாழ்க்கைமுறை எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டிருப்பதை, உபதலைப்புகளில் இருந்தே அறிய முடிகின்றது.
காந்தர்வம், தேன்நிலவு, திருமணம், அனுபவம் புதுமை, வளைகாப்பு, லிவ்விங் ருகெதர் என்று
கதையின் தலைப்புக்கள் தொடருகின்றது. ஹனிமூன், சீரியல், லிவிங்டுகெதர், சேர்ப்பிரைஸ்
விசிட் போன்ற, அந்த மண்ணின் பேச்சுவழக்கில் உள்ள சொற்களையும் ஆசிரியர் கதையின் ஓட்டத்திற்கேற்ப
அப்படியே உள்வாங்கி இருக்கின்றார். புலம்பெயர்ந்த மக்களின் யதார்த்த வாழ்க்கையைக் காதலர்களான
சிந்து, விசாகன் மூலமும், சிந்துவின் சகோதரி காவியா மூலமும் அழகாகச் சித்தரித்திருக்கின்றார்
கதையாசிரியர். சிந்துவின் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்திருந்தாலும், மகளின் விடயத்தில்
தடைபோடும்போது, சராசரி பெற்றோராக மாறிவிடுகின்றார்கள். காதல், இன்பம், துன்பம், சோகம்,
விருப்பு, வெறுப்பு, பொறாமை என்று கதையில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவரின் மாறுபட்ட
மனநிலையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் ஆசிரியர். கொரோனா இடர்
காலத்தில், வீட்டுக்குள் அடைந்து கிடப்பவர்களுக்குப் பொழுதுபோக்குவதற்கு ஏற்றதொரு குறுநாவல்
இது என்றால் மிகையாகாது.
அவுஸ்ரேலிய தமிழ்
இலக்கிய உலகிற்கு மக்களின் வாழ்வியலோடு இணைந்த சிறந்த நல்லபடைப்புக்களைத் தந்துகொண்டிருக்கும்
கே.எஸ்.சுதாகர் அவர்களைப் பாராட்டும் இச்சந்தர்ப்பத்தில் மேலும் பலஆக்கங்களை வெளியிட்டுத்
தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் சேர்க்கவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
குரு அரவிந்தன்
தலைவர்: கனடா தமிழ்
எழுத்தாளர் இணையம்.
20-10-2020.
வாழ்த்துகள்.
ReplyDelete