Tuesday 24 August 2021

வாமனம் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

மாத்தளை சோமு

ந்த ரெஸ்டாரென்டை விட்டு வெளியே வந்த வனிதா கொஞ்சம் வேகமாக நடை போட்டு பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாட்ப்புக்கு வந்தபோது, அங்கு எதுவுமே இல்லாததால் கடைசி பஸ் போய்விட்டது என்பது உறுதியாகியது. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். மணி பதினொன்றரை. கடைசி பஸ் போய்த் தான் விட்டது. வக்கமாக அந்த பஸ்சில் போகும் சீனக் கிழவனையும் காணவில்லை. இனி என்ன செய்வது என்று யோசித்தாள். அப்பாவைக் காரோடு வரச் சொல்லலாமா என்று எண்ணியபோது, அவர் காரில் புறப்பட்டு இங்கே வரவே ஒரு மணியாகிவிடும் என்று தனக்குள் ஒரு கணக்கிட்டுப் பார்த்துவிட்டு வேறு முடிவு எடுக்க முயன்றாள். இனி ஒரே வழி பக்கத்தில் இருக்கின்ற ரயில்வே ஸ்டேசனுக்கு நடப்பத்துதான். அவள் எந்த தயக்கமுமில்லாமல் வீதியோரமாக நடந்தாள்.

அது ஒரு புறநகர். சிட்னி பெருநகரிலிருந்து இருபது கிலோமீட்டரில் இருக்கிற சிறிய நகர். ஆனால் சீன, மலேசிய, தாய்லாந்துகளுக்குப் பெயர்போன பல உணவு விடுதிகள், ரெஸ்ராரென்ட்கள், ஹோட்டல்கள் நிறைந்த பகுதியாகும். சிட்னியின் பல பகுதி மக்கள் உணவுக்காக இங்கே வருவார்கள். சனி, ஞாயிறு நாட்களில் அங்கு உட்கார்ந்து சாப்பிட நாற்காலி எந்தக் கடையிலாவது கிடைத்தால் அதிர்ஷ்டம்தான்.

அவள் பல உணவுக் கடைகளைத் தாண்டித்தான் போகவேண்டும். பல ரெஸ்ராரென்ட்களை முடிவிட்டார்கள். சீனனின் ரெஸ்ராரென்ட் மட்டும் திறந்து இருக்கிறது.  இந்த வெள்ளைக்காரர்கள் சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட்டு முடியும் வரை பேசுவார்கள். சாப்பிட்டுக்கொண்டே பேசுவார்கள். கூடவே வைன்னோ, பியரோ மிடறு மிடறாகக் குடித்துக் கொண்டே இருப்பார்கள். பேசுவதில்கூட சத்தம் வராது. மெதுவாக ஒரு சங்கீதம் மெல்லிசாய் இசைப்பது போலப் பேசுவார்கள். காதல் வந்துவிட்டால் காதலர்கள் பேச ஆயிரம் இருக்கும். ஆனால் வெள்ளைக்காரக் கணவன் மனைவி கூட காதலர்கள் போல் பேசிக் கொண்டிருப்பார்கள்.

வழக்கமாக பத்து நாற்பத்தைந்துக்கு ரெஸ்ராரென்ட் வேலை முடித்து வெளியே வந்துவிடுவாள். இன்று ஒரு வெள்ளைக்காரன் ஒரு கையில் காதலியோடும் இன்னொரு கையில் வைன் போத்தலோடும் பத்து முப்பதுக்குத்தான் உள்ளே வந்தான். அவன் பதினொன்றுவரை எழும்பவில்லை. அவன் சாப்பிடுவதும் வைன் குடிப்பதும் காதலியோடு பேசுவதும்புன்னைகப்பதுமாக இருந்தான். இடையிடையே அவ்வப்போது அவள் கையத் தடவுவதுமாக வேறு இருந்தான். அவன் அங்கே இருந்தபோதும் அவன் உலகம் வேறாகவே தெரிந்தது.  வைன் மீட்டுக் குடுக்கும் போதையைவிட காதல் போதை அவனுக்கு. அந்த வெள்ளைக்காரியோ வேடன் வலையில் விழுந்த மானாய்ப் புரியாது இருந்தாள். கடையில் இருந்தவர்கள் அந்த ஜோடியிடம் நேரமாகிவிட்டது என்று சொல்லப் பயந்தார்கள். ஆனால் அவளை மட்டும் பஸ்ஷுக்கு நேரமாகிறது என்று நேரமாகிய பின்தான் அனுப்பினார்கள். அந்தச் கடைக்காரர் ஒரு இத்தாலியர். அவர் மகள் யுனிவசிட்டியில் அவளுக்குத் தோழி. அவள் சொல்லித்தான் இந்த வேலையே கிடைத்தது இந்நாட்டில் யுனிவசிட்டியில் படித்தாலும் `பார்ட் டைம்’ இருந்தால்தான் மாணவனுக்கு மதிப்பு.

வீதியால் அங்கும் இங்குமாக மூன்று பேர் நடந்தார்கள். பல கார்கள் வீதியின் ஓரங்களில் நின்று கொண்டிருந்தன. வீதியில் டாக்சிகள்தான் அடுத்தடுத்து ஓடின. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இரவில் டாக்சிகள் கைகாட்டினால்கூட வராது. குடித்துவிட்டுக் கார் ஒட்டச் கூடாது என்பதால் சொந்தக் காரை வீட்டில் நிறுத்திவிட்டு டாக்சியில் பலரும் போவார்கள் எனவே டாக்சி சுலபமாய்க் கிடைக்காது.

கடையோரமாக நடந்தால் இடையில் ஒரு தெரு வரும். அந்தத் தெருவில் சிறிது தூரம் நடந்தால் ரயில்வே ஸ்டேசன் வரும். அவள் கடை வீதியை விட்டு இறங்கி அந்தத் தெருவில் நடந்தாள். தெருவின் இரு பக்கமும் வீடுகள் என்பதால் ஆழமான மெளனம் அப்பகுதியில் இருந்தன. எல்லா வீடுகளிலும் மிக மெல்லிய வெளிச்சமே இருந்தது. சில வீடுகளில் வெளிச்சத்தைக்கூட காணவில்லை. இங்கிருக்கிற அமைதி பயத்தைக் கொடுக்கும். ஆனால் வீதியோர மின் விளக்குகள் எதற்கும் பயப்படாமல் வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன.

அவள் வீடுகளுக்கும் வீதிகளுக்கும் இடையே இருந்த நடைபாதையில் நடந்தாள். மயான அமைதி. வீடுகளில் மனிதர்கள் இருக்கிறார்களா இல்லையா? அவர்கள் மூச்சு விடுகிற சத்தம் கூடக் கேட்கவில்லையே! வானொலிகள் கூட மெளன விரதமாகிவிட்டனவோ? நாய்கள் கூட அமைதி கட்சிக்குப் போய்விட்டனவோ! ஊர் தெரு நாய் மற்றும் வீட்டுநாய் என நாய்களில் கத்தல் காதைக் கிழித்திருக்கும். 'ஊரில் தனியே ஒரு பெண் இப்படி இது போன்ற இரவில் எப்ப நடக்க முடியும்?' என்று தனக்குள் அவள் கேட்டுக் கொண்டு நடந்த போது எவரோ பின் தொடர்ந்து நடப்பது போல் ஒரு சத்தம் கேட்டது. சந்தேகமில்லை. சப்பாத்தின் சத்தம் தான். அப்படியானால் எவரோ நடந்து வருகிறார்கள். ஒரு விநாடி பயந்தாள். திரும்பிப் பார்க்க தயங்கினாள். கொஞ்சம் வேகமாய் நடந்தாள். இன்னும் ஒரு பத்து நிமிஷம் நடந்தால் ஸ்டேச வரும்.

அவள் வேகமாக நடக்க நடக்கப் பின் தொடரும் காலடியின் சப்தமும் வேகமாகக் கேட்டது. எவரோ பின் தொடர்வது உறுதி தான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் திரும்பிப் பார்த்தாள். அடையாளம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு மனிதன் நடந்து வருவது மட்டும் தெரிந்தது. அவளுக்கு நடுக்கம் வந்து விட்டது. அந்த நேரத்தில் தனியே நடக்கிற பெண்களிடம் - வயதானவர்களிடம் கத்தியைக் காட்டி - ரத்தம் தோய்ந்த ஊசியைக் காட்டி - கொள்ளை அடிப்பது பற்றிய செய்தி வேறு அவள் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. இவன் எந்தக் கத்தியோடு வருகிறானோ?

அவள் கால்களில் தைரியத்தை இணைத்துக் கொண்டு, நெஞ்சினில் பயத்தைச் சுமந்து கொண்டு வேகவேகமாக நடந்தாள். இன்னும் சில நிமிடங்கள் நடந்தால் ஸ்டேசன் தெரியும். ஸ்டேசன் தெரிந்தது. வெளிச்சத்தைத் தவிர வேறு எதுவுமே ஸ்டேசனில் இல்லை. மனிதர்களையே காணவில்லையே. இங்கு மனிதர்கள்கூடப் பறவைகளாகிப் போனார்கள். இரை தேடப் பக லில் வருகிற பறவைகள் இருட்டியதும் மெளனமாகி விடுவதைப் போல் இந்த மனிதர்களும் இருட்டியதும் மெளனமாகிப் போனார்களா?

ஒலிம்பிக்குக்காகக் கட்டப்பட்ட புதிய ரயில்வே ஸ்டேசன். பத்துச் சூரியனைக் கொண்டு வந்ததுபோல் வெளிச்சம். மனிதர்களைக் காணவில்லை. மனிதர்களற்ற வெளிச்சத்தைப் பார்க்கும்போது பயம் வரும்.

ஸ்டேசனருகே வந்தாள். ஸ்டேசன் வாசலில் திடீரென வந்து நின்றது. மறைவில் நின்ற ஒருத்தி வெளியே வந்து காரில் ஏற அந்தக் கார் வேகமாக ஓடுகிறது. அவள் இந்தக் குளிலும் பெருந் தொடைகளைக் காட்டிக் கொண்டு மார்பகத்தை நிமிர்த்தியவாறு `தொழிலுக்கு’ ஆள் தேடும் வீதி யோரப் பறவைகள். அப்படித்தான் பத்திரிகைகள் சொல்கின்றன. அவர்கள் பார்க்க அழகானவர்கள். ஆனால் அவர்கள் `தொழிலே’ வேறு. இந்நாட்டில் தொழில் இல்லாதோருக்கு அரச மான்யம் உண்டு. அதுவே ஒரு மானிடன் வாழப் போதுமானது அல்லது சமாளிக்கலாம். ஆனால் அதையும் மீறி இவ்வாறு தொழில் செய்வதை பொருள் தேடும் மதி என்பதா - அல்லது அவர்கள் அறியாமல் பிணைந்து போன விதி என்பதா?  இவர்களைப் போன்ற பல பெண்கள் பல முக்கியமான வீதிகளில் காத்து நிற்பார்கள். அவர்களைத் தேடிக் கார்கள் வரும். ஹோட்டலில் `ரூம்’ போடுகிற செலவில்லாமல் காருக்குள்ளே எல்லாம் நடந்து காசு கை மாறும். இது போன்ற கார் திருவிளையாடல்கள் இந்த நாட்டில்

அதிகம்தான்.

ஒருநாள் - ஒரு கார் பார்க் வழியாக இருட்டில் நடந்து வந்தபோது தூரத்தில் ஒரு கார் நின்ற இடத்திலேயே அசைந்ததைக் கண்டு அவள் பயந்தாள். பிறகுதான் அவளுக்குத் தெரிந்தது அந்தக் கார் சிலரின் படுக்கையாக இருப்பது.

ஸ்டேசன் படிகளில் ஏறினாள். மேலே போய்த்தான் பிளாட்பாரம் போக முடியும். மேலே ஸ்டேசனில் `மெக்னடிக் கார்டு’ போட்டால் திறக்கிற யந்திரங்கள் திறந்தே கிடந்தன. இரவு நேரங்களில் மனிதர்கள் மட்டுமல்ல. யந்திரங்கள் கூட முடங்கித்தான் போகின்றன. வழக்கம்போல் நாலாம் இலக்க பிளாட்பாரத்தில் போய் நின்றாள். பிளாட்பாரத்திலும் எவரும் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தவள் ஒரு பெஞ்சில் போய் அமர்ந்தாள். அப்போது ஒரு கறுப்பு நிற மனிதன் படிகளில் இறங்கி நடந்து வந்தான். அவன் ‘அபோர்ஜினி’ என்று அழைக்கப்படும் கறுப்பின ஆதிவாசி பரம்பரையைச் சார்ந்தவன். சுருக்கமாக ஆனால் விபரமாகச் சொல்லப் போனால் அவன்தான் இந்த நாட்டின் மண்ணின் மைந்தன்.

“ஹலோ” என்றவாறு அவளைக் கடந்து போன அவன் அவள் இருந்த பெஞ்சின் மறு முனையில் உட்கார்ந்தான். சந்தேகமில்லை. இவன்தான் தொடர்ந்து வந்தவன்.

அவ்ளின் கால்களில் நடுக்கம். இதயம் `படபட’த்தது. இருட்டில் நடந்தபோது மனதில் இருந்த அச்சம் இந்த வெளிச்சத்தில் பெரிதாகியது. என்ன செய்வது என்று யோசித்தபோது அந்த அபோர்ஜினி ஏதோ கேட்டது காதில் விழுந்தது.

“யூ கம் புறம் வேர்க்?”

வெற்றிலை குதப்பிய வாயால் பேசியது போல் இருந்தது. பெரிய உதடுகள். அகண்ட முகம். பெரிய விழிகள். கறுப்பும் வெள்ளையுமான தாடி. அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு. அவனைப் பார்க்காமலேயே ‘இயஸ்’ என்று சொல்லிவிட்டு ‘ஹேன்ட் பேக்’கைத் திறந்து சமீபத்திய ‘கிரேஸ் பிரதர்ஸ்’ கடையில் வாங்கிய நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினாள்.

அவன் திரும்பவும் பேசினான். ‘வட் டைம்’. அவன் கையில் கடிகாரமில்லை.

அவள் கைக்கடிகாரத்தைப் பார்க்காமல் நிமிர்ந்து பிளாட்பாரக் கூரையில் தரையை நோக்கித் தொங்க விடப்பட்ட பெரிய தொலைக்காட்சிப்பெட்டியில் மணி பார்த்துச் சொன்னாள்.

“வட் டைம் நெக்ஸ் டிரெயின்?”

அவள் காது கேட்காதவள் போல் நாவலைப் படித்தாள். மனதுக்குள் இவனோடு பெரிய தொல்லையாக இருக்கிறது என்று முணுமுணுத்தாள்.

“யூ ஸ்மோக்கிங்?" அவனும் விடுவதாய் இல்லை.

“நோ” என்றாள் அவள். குளிருக்கு சிகரெட் பிடிக்கப் பார்க்கிறான் போலும்.

“வெரி கோல்ட்' என்று சொன்ன அவன் கைகளைத் தேய்த்துக் கொண்டான்.

இவன் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் இருக்கின்றான். இவனைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்தபோது டிரெயின் வந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வேகமாக ஒரு பெட்டியில் ஏறி கதவருகே உட்கார்ந்த போதுதான் தெரிந்தது அவளுக்குப் பின்னாலேயே அந்தக் கறுப்பனும் ஏறியிருப்பது. மறுபடியும் இவன் நம்மை பின் தொடர்கிறானே என்று எண்ணியபோது அவன் அவளுக்கு முன்புறமாக அவளைப் பார்த்தவாறு உட்கார்ந்தான். இப்போது தான் வெளிச்சத்தில் நேருக்கு நேர் அவன் முகத்தைப் பார்த்தாள். முகமா அது? பார்க்கப் பயங்கரமாய் இருந்தது.

அந்தப் பெட்டியில் வேறு எவரும் இல்லை. ஸ்டேசனை விட்டு வெளியே போனால் இவன் நிச்சயம் பின் தொடர்வான். ஸ்டேசனில் இருந்து வீட்டிற்குப் பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். இவன் நிச்சயம் பின் தொடர்வான். அப்பாவை ஸ்டேசனுக்கு வரச் சொல்வோம். பக்கத்தில் அப்பா இருப்பது தைரியம்தானே?

ஹேன்ட் பேக்கில் உள்ள மொபைல் போனை எடுத்து வீட்டுக்குப் பேசினாள். “அப்பா! நான் இன்னும் பத்து நிமிடத்தில் ஆஸ்பீல்ட் ஸ்டேசனுக்கு வருவேன். நீங்க ஸ்டேசனுக்கு வாங்கோ. காரை எடுத்து வந்தா நல்லது. இங்க ஒரு கறுப்பன் ரெஸ்ட்ராரென்டில் இருந்து துரத்திக் கொண்டுவாரான்.”

அவள் தமிழில்தான் பேசினாள். வழக்கமாக ஆங்கிலத்தில்தான் பேசுவாள். ஆனால் இன்று அவள் தமிழில் பேசியதிலிருந்து அவள் ஏதோ பிரச்சனையில் இருப்பதாக உணர்ந்தார் அப்பா. மொபைல் போனை ஹேன்ட் பேக்கில் அவள் வைத்தபோது, "யூ கோயிங் டு யுவர் ஹோம்?” என்று கேட்டான். அவன். அதைக் கேட்டு அவள் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தாள். வீட்டுக்கு போன் பேசியது இவனுக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை இவனுக்குத் தமிழ் தெரியுமோ? 'கறுப்பன் துரத்திக் கொண்டு வாரான் என்று சொன்னேனே! அவள் எண்ணங்கள் பெளர்ணமி கால கடலாய் கொந்தளித்தன.

அவனைப் பார்க்கவும் அவனோடு பேசுவதை தவிர்க்கவும் மறுபடியும் அந்த ஆங்கில நாவலைப் படிக்கத் தொடங்கினாள்.

'எனக்கு வயது பதின்மூன்று. சிறிய பெண். போன ஆண்டுதான் பருவமெய்தினேன். ஆனால் எனது தந்தையார் எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகச் சொன்னார். மணமகன் வயதான பணக்காரன். நான் தாயிடம் இந்தத் திருமணம் வேண்டாம் என அழுதேன். நான் வீட்டைவிட்டு ஓடிப் போகப்போவதாகச் சொன்னேன். தாய் மறுப்புச் சொல்லவில்லை. ஒருநாள் வெப்பமான வறண்ட பாலைவனத்தில் என் பயணம் தொடங்கியது. எனக்கு பாதுகாப்பில்லை. தற்காப்பு ஆயுதமில்லை. ஏன் ஓடுவதற்கு சக்தி கூட இல்லை. ஆயினும் நான் ஓடுகிறேன். அல்லா காப்பாற்றுவான்...

அது சோமாலிய நாட்டுப் பெண்ணின் கதை. நாடு வேறானாலும் பெண்களின் கதை ஒன்று தான் போலும்.

அந்த நாவலை ஆழ்ந்து அவள் படித்த போது இந்தக் கறுப்பனோடு எவரோ பேசுகிற சத்தம் கேட்டது. அவர்கள் இரவில் ஒடுகிற டிரெயினில் பாதுகாப்பு வேலையில் ஈடுபடுகிற தனியார் காவலர்கள். ஒரு விநாடி யோசித்தாள். அவர்களிடம் அவனைப் பற்றி சொல்லலாமா? பிறகு நினைத்தாள் என்ன சொல்வது? பின்னால் தொடர்ந்து வந்தான் - ரெயிலிலும் வருகின்றான். இதை ஒரு முறைப்பாடாக காவலர்கள் ஏற்பார்களா என்ன?

பாதுகாவலர்கள் அடுத்த பெட்டிக்குப் போய் விட்டார்கள். அவள் மெளனமாய் எதிர்ப் பக்கம் பார்த்தாள். அந்தக் கறுப்பன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றான். முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினாள். ஸ்டேசன் வந்தது. அவள் ரெயிலை விட்டு இறங்கினாள். அவனும் இறங்கினான். பிளாட்பாராத்தில் அவளுக்காக அப்பா நின்றார். அப்பாவைக் கண்டதும் அவளுக்குப் பத்துப் பேர் நிற்பது போல ஒரு தைரியம் தோன்றியது.

“யாரம்மா அவன்?” என்று மெதுவாய் தமிழில் கேட்டார் அவள் தனக்கு முன்னால் நடந்துபோன அந்தக்கறுப்பனை கண்ணால்

அடையாளம் காட்டினாள்.

“அவனா?” அவனைப் பார்த்தாலே காட்டுமிரான்டி போல் இருக்கே! என்றவாறு மகளோடு சேர்ந்து நடந்தார் அவர். அவன் நிறமே அவருக்குப் பிடிக்காது. உயர்ந்த மனிதர்கள் இந்த நிறத்தில் பிறப்பதில்லை என்பது அவரின் சித்தாந்தம். ஊரில் தனது நிறத்தாலும் பதவியாலும் அந்தஸ்தாலும் உயர்ந்தவர்கள் என்று நினைப்பதிலும் பார்க்க சாதியால் உயர்ந்தவன் என்ற தடிப்பு வேறு அவருக்கு. சாதி மேன்மைக்காக மறைமுக வியூகங்களை ஊரில் நிகழ்த்தியவர்.

அவர்கள் இருவரும் படியேறி மேலே வந்து ஸ்டேசனுக்கு வெளியே வந்தார்கள். வெளியே அந்தக் கறுப்பன் அவர்களை எதிர்பார்த்தது போல் நின்று கொண்டிருந்தான். அவளின் முகம் சுழித்துப் போனது. மறுபடியும் இவனா? அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டாள் அவள். அவன் காவி படிந்த பற்களை காட்டிச் சிரித்து விட்டு பேசத் தொடங்கினான்.

“என் பெயர் ஜோன். நான் என் பாதுகாப்பு கருதித்தான் இந்தப் பெண்ணின் பின்னே வந்தேன். எனக்குத் தனியே போக பயம்தான். போன மாதம் என்னையும் அடித்துப் பத்து டொலரை, கடிகாரத்தை கொள்ளையடித்து விட்டார்கள். என்ன செய்வது? இது எங்கள் நாடு. ஆனால் நாடு பறிபோய் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இன்று நாங்கள் சிறிய தொகை. என் வீடு பக்கத்தில் தான். இனிமேல் அந்தப் பெண்ணைத் தனியே அனுப்ப வேண்டாம்.”

அவள் முகத்தில் அறைந்ததைப் போல் இருந்தன அந்த வார்த்தைகள். அவளின் அப்பா சப்த நாடியும் ஒடுங்கிப் போய் நின்றார். அவள் “தெங்கியூ தெங்கியூ” என்று மட்டும் வெளியே சொன்னாள். ஆனால் அவளின் மனம் “உன்னைத் தவறாக நினைத்தேன் மன்னித்துவிடு” என்று உச்சரித்தது.

அவர் அவன் கையைத் தொட்டு கைகுலுக்கக் கரங்களை நீட்டுவதற்கு முன் அவன் “குட் நைட்” என்று சொல்லிவிட்டு நடந்தான். அவன் நடந்த போது விளக்குத் தூண் வெளிச்சத்தில் அவன் நிழல் நீண்டு விழுந்தது. அவரின் நிழலோ விளக்குத் தூணுக்கு கீழேயே நின்றதால் சிறுத்துக் குறுகிப் போய் கிடந்தது.

மல்லிகை - அவுஸ்திரேலியா சிறப்பு மலர்

நவம்பர் 2000

 

 

No comments:

Post a Comment