Tuesday 5 October 2021

புத்தகங்கள் மத்தியில் வாழ்வு - பத்மநாப ஐயர்

 

இன்று நாம் ஈழத் தமிழர்களின் புத்தகம் ஒன்று தேவைப்படும் போது, உடனே நாடிச் செல்வது இணைய நூலகம் (noolaham.org) ஆகும். உலகின் எப்பகுதியில் இருந்தாலும் ஒரு நொடிப்பொழுதில் இந்த நூலகத்தை அணுகிவிடலாம். இந்த நூலகம் திட்டத்தின் ஒரு முன்னோடியாகத் திகழ்பவர்---சமீபத்தில் அமுதவிழாக் கண்ட நாயகர்---பத்மநாப ஐயர்.

1981 ஆம் ஆண்டு இலங்கைப் பேரினவாத அரசு மேற்கொண்ட யாழ் பொதுநூலக எரிப்பில், ஏறக்குறைய ஒரு இலட்சம் புத்தகங்கள், ஆவணங்கள் எரியுண்டன. இந்தப் பண்பாட்டு அழிப்புத் தான் நூலகம் திட்டத்திற்கு வித்திட்டது.

ஆரம்பத்தில் மதுரைத் திட்டத்தினூடாக செயற்பட்டு வந்த இவர், பின்னர் ஈழத்தமிழர்களுக்கு என ஒரு தனியான எண்ணிமைப்படுத்தல் செயற்திட்டம் தேவை என்று கருதி நூலகம் திட்டத்தை ஆரம்பித்தார். இளவயது முதல் நூல்களினால் ஈர்க்கப்பட்ட இவரது உலகத்தில், இந்த நூலகம் திட்டம் - இதில் இவரின் பங்கு பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது.

பேராதனைப் பல்கலைக்கழக பெளதீக விஞ்ஞானப் பட்டதாரியான இவர், ஆரம்பத்தில் அறிவியல் கட்டுரைகள் போன்ற சில எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். கணையாழியில் பல விமர்சனக் கடிதங்கள் எழுதியிருக்கின்றார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் நூலுருவில் வருவதற்குக் காரணமாக இருந்திருக்கின்றார். சஞ்சிகைகள் வெளிவருவதற்கும் உதவி புரிந்திருக்கின்றார். பொதுவாகப் பதிப்புத்துறையில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன.

1968 இல் சென்னை வாசகர் வட்டம் `அக்கரை இலக்கியம்’ என்றொரு தொகுப்பை வெளியிட்டிருந்தது. அதில் ஈழத்துப்படைப்புகள் பலவற்றை தொகுப்பதற்கு உதவி செய்திருக்கின்றார்.  தாயகத்தில் இருக்கும்போது -`பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ , `மரணத்துள் வாழ்வோம்’, `தேடலும் படைப்புலகமும்’ போன்ற தொகுப்புக்களின் வெளியீட்டுக்கு உதவி புரிந்த இவர், 1990 ஆண்டு இலண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் `கிழக்கும் மேற்கும்’, `யுகம் மாறும்’, `கண்ணில் தெரியுது வானம்’, `இன்னுமொரு காலடி’ போன்றவற்றை வெளியிட்டார்.

ஆரம்பத்தில் தமிழ்நாட்டிற்கும் ஈழத்துக்குமிடையே இலக்கியப்பாலம் அமைத்த அவர், பின்னர் இலண்டன் சென்றதும் சர்வதேசமெங்கும் அதைப் பரலாக்கினார்.

அவரால் பலருக்கும் நன்மைகள் கிட்டின என்பதை விட, அவரால் தமிழுக்கு நன்மைகள் கிட்டின என்பது பொருத்தம் கூடியது. இவர் வெளிப்படையாகச் செய்தவற்றைக் காட்டிலும், மறைமுகமாகச் செய்தவை பல. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறன்ரோ பல்கலைக்கழகத் தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் `இயல் விருது’ - 2004ஆம் ஆண்டு திரு பத்மநாப ஐயருக்குக் கிடைத்திருக்கின்றது.

தம் வாழ்நாளை தமிழுக்கு அர்ப்பணித்த உ.வே.சாமிநாதையரின் இன்றைய வடிவமான இவர், வெற்றிமணி, சிவத்தமிழ் என்பவற்றையும் நூலகத்தில் இணைத்து எம்மையும் மகிழ்விக்கின்றார். புத்தகங்களின் மத்தியில் வாழும் இவரை பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

நன்றி: வெற்றிமணி (Oct 2021)


No comments:

Post a Comment